COFEE TABLE



முதல் ரசிகர் மன்றம்

டபுள் குஷியில் இருக்கிறார் வைபவி சாண்டில்யா. சந்தானத்தின் கண்டுபிடிப்பான மராத்தி மல்கோவா வைபவி, அவருடன் நடித்த ‘சர்வர் சுந்தரம்’, ‘சக்க போடு போடுராஜா’ ரிலீஸுக்கு முன்பே அடுத்த படத்துக்கு கமிட் ஆகிவிட்டார்.

‘ஹரஹர மஹாதேவகி’யைத் தொடர்ந்து உருவாகும் அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’வில் நடிக்கும் வைபவிக்கு, இப்போது பட்டுக்கோட்டையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்துள்ளனராம். ‘‘தமிழ்நாட்டில் அதான் என் முதல் ஃபேன் கிளப்... நன்றி பட்டுக்கோட்டை மக்கள்!’’ என சிலாகிக்கிறார் வைபவி.

உலகின் விலையுயர்ந்த காலணி!

ஆயிரக்கணக்கான வைரக்கற்கள், தங்கம், பிளாட்டினம் கொண்டு நெக்லஸ்தான் செய்வார்கள். ஆனால், இங்கிலாந்தைச் சேர்ந்த டிசைனர் ஒருவர் அழகான காலணியை வடிவமைத்திருக்கிறார்!இந்தக் காலணிக்காக பயன்படுத்தப்பட்ட தோலில் தங்கத்தை உருக்கி பெயின்டிங் செய்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க கையினாலேயே இந்த காலணியை உருவாக்கியிருக்கிறார்கள். ஹீல்ஸ் கூட வைரம்தான்.

இந்தக் காலணியை முழுமையாக உருவாக்க நூறு மணி நேரம் ஆகியிருக்கிறது. உலகிலேயே விலையுயர்ந்த காலணியாக இது கருதப்படுகிறது. விலை சுமார் ரூ.100 கோடி. மிகப்பெரிய பணக்காரர் ஒருவர் தன்னுடைய அன்புக்குரியவரின் பிறந்தநாள் பரிசுக்காக இதை ஆர்டர் செய்திருக்கிறார். அந்தப் பணக்காரர் யார் என்பது டிசைனருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

இளமையைக் காக்கும் காளான்!

நம் உடலில் சேர்கின்ற தேவையில்லாத நச்சுக் கழிவுகளை அழிக்கக்கூடிய ஆற்றல் காளானுக்கு இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த உணவு ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். காளானில் பலவகைகள் இருந்தாலும், அதன் வகைக்கு ஏற்ப நச்சுக் கழிவு களை நீக்குகின்ற சத்துக்கள் அதில் இருக்கின்றன.

‘‘நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும்போது நாம் விரைவில் முதுமையடைவது தடுக்கப்படுகிறது. மட்டுமல்ல, நம்முடைய ஆரோக்கியத்துக்கும் அது வழிவகுக்கிறது. மேலும் காளானை வேக வைத்து சாப்பிடுவதாலும் கூட, அதிலுள்ள நச்சு நீக்க சத்துக்கள் வெளியேறுவதில்லை...’’ என்கின்றனர் நிபுணர்கள்.

லைட்ஸ் எல்16 கேமரா

போட்டோகிராபி உலகில் ஒரு புரட்சி. 16 லென்ஸ்களை உள்ளடக்கிய ‘லைட்ஸ் எல்16 கேமரா’ வந்துவிட்டது. இந்த கேமராவின் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள், டி.எஸ்.எல்.ஆர் கேமராக்களையே மிஞ்சிவிடும் அளவிற்கு துல்லியமாக இருக்கிறது.

ஸ்மார்ட்போனைப் போல இதை பாக்கெட்டிலேயே வைத்துக்கொள்ள முடியும் என்பது சிறப்பு. 4K தரத்துடன் தெளிவான வீடியோக்களையும் இதில் எடுக்க முடியும். இரண்டு விதமான எல்.ஈ.டி ஃப்ளாஷ்லைட்டுகள் இதில் உள்ளன. கிட்டத்தட்ட 52 மெகா பிக்ஸல் அளவிலான படங்களை இதில் எடுக்கலாம். விலை ரூ. 74,000/-

கடலில் விழுந்த விமானம்

விஷயம் கொஞ்சம் பழசுதான். ஆனால், இப்போது வைரல் ஹிட். ஜனவரி, 2009ல் ஹட்சன் நதியில் அமெரிக்க விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்கள், ஊழியர்கள் உட்பட 155 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். படகுகள், மினி கப்பல்கள் மூலம் மீட்புப் படையினர் வந்து, மின்னல் வேகத்தில் பயணிகளை மீட்க உதவினார்கள்.

இவையெல்லாம் நாம் அறிந்ததுதான். பயணிகள் மீட்கப்பட்டதை மினி வீடியோவாக்கி ஃபேஸ்புக்கின் ‘Aviation World’ பக்கத்தில் ‘US Airways Flight 1549’ என்ற தலைப்பில் பதிவிட... ஒரு கோடி பார்வையாளர்கள், இரண்டு லட்சம் பகிர்வுகள், ஒரு லட்சம் லைக்குகள் என செம வைரலாகிவிட்டது.

குங்குமம் டீம்