சினிமாவில் கதை திருட்டுப் பிரச்னை தீருமா?
அறம் முன்வைக்கும் விவாதம்
இன்று பரபரப்பாக பேசப்படுகிறது ‘அறம்’ திரைப்படம். நயன்தாரா இதில் நடித்திருக்கிறார்... மாற்று சினிமா ஜானரில் அழுத்தமாக எடுக்கப்பட்டிருக்கிறது... அடித்தட்டு மக்களின் வாழ்வியலை துல்லியமாக பதிவு செய்திருக்கிறது... என்பதையெல்லாம் தாண்டி இப்படம் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதற்கு காரணம் -இயக்குநர் கோபி நயினார்!
இவருக்கு இதுதான் முதல் படம். ஆனால், இவர் இயக்கிய, இன்னமும் வெளிவராத ‘கறுப்பர் நகரம்’ படத்தின் கதையையும் காட்சிகளையும் அப்படியே எடுத்து டைரக்டர் பா.ரஞ்சித், ‘மெட்ராஸ்’ படத்தை எடுத்தார்... போலவே கோபி நயினாரின் கதைதான் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படம்... இதற்கெல்லாம் கோபி நயினாருக்கு நியாயம் கிடைக்கவில்லை... அப்படியிருந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம்தளராமல் போராடி இப்போது ஜெயித்திருக்கிறார்... என்றெல்லாம் கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது.
இவையெல்லாம் உண்மையா இல்லையா என்பது இன்னமும் நிரூபிக்கப்படாத விஷயங்கள்.என்றாலும் ஒட்டுமொத்தமாக இப்போது உதவி இயக்குநர்களின் கவனம் திரும்பியிருப்பது ‘கதை திருட்டு’ குறித்துதான். ‘எங்கள் பிள்ளைக்கு இன்னொருவர் சொந்தம் கொண்டாடுவது சரியல்ல...’ என்ற குரல்கள் எட்டுத் திசையில் இருந்தும் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.
சினிமா போன்ற கலைப்படைப்புகளின் உரிமையைக் காக்க காப்புரிமைச் சட்டம் நம் நாட்டில் இருந்தாலும் நமது நீதிமன்றங்களைப் பொறுத்தளவில் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலிலேயே விழுந்துவிடலாம் என்ற மனோபாவம்தான் நிலவுகிறது. இதனால் இந்தப் பிரச்னைகள் இன்னும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
இதுபோன்று நிகழாமல் இருக்க என்ன செய்யலாம் என நிபுணர்களிடம் கேட்டோம். ‘‘1957லேயே இந்த காப்புரிமைச் சட்டம் வந்துவிட்டது. இந்த சட்டத்தின்படி சினிமா போன்ற ஒரு கலைப்படைப்பின் எக்ஸ்பிரஷனுக்கு அல்லது அது வெளிப்படுத்தப்படும் தன்மைக்கு ஏற்றவாறு அது காப்புரிமையை வழங்குகிறது.
கதை எழுத்து வடிவில் இருக்கவேண்டும். சினிமா மொழியில் இதை திரைக்கதை என்று சொல்லலாம். ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டதும் அது காப்புரிமைச் சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகிறது. அதனால் இதை சட்ட ரீதியாக பதிவு செய்யவேண்டும் என்று அவசியமில்லை.
ஆனால், ஒரு பிரச்னை என்று வரும்போது அந்தப் படைப்புக்கான ஆதாரம் இருக்க வேண்டும். ஆதாரம் என வரும்போது எழுத்தாக இருக்கவேண்டும் என்பது அவசியமாகிறது. இதனால்தான் பதிவு செய்ய வேண்டிய நிலையும் உருவாகிறது. சட்டப்படி பதிவு செய்யாமலேயே ஒரு படைப்பின் நம்பகத்தன்மையை ப்ரூவ் பண்ணலாம். ஆனால், அது கொஞ்சம் சிரமம்...’’ என்கிற வழக்கறிஞர் ஆர்.பார்த்தசாரதி கதையைப் பதிவு செய்வதின் அவசியத்தையும் விளக்கினார்.
‘‘ஒரு படைப்பு உருவானதுமே அதற்கான காப்புரிமை கிடைக்கிறது என்றாலும் கதையை ஏதோ ஒருமுறையில் பதிவு செய்வது நல்லதுதான். சென்னையில் இருக்கும் தென்னிந்திய திரைப்பட கதாசிரியர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தைப் போல பம்பாயில் இருக்கும் ஒரு சங்கமும் இதுமாதிரி கதைகளைப் பதிவு செய்து கொடுக்கிறது.
ஒரு கதையின் வெறும் ஐடியாவை மட்டுமே பதிவு செய்து அதற்கு உரிமை கோருவது பிற்காலங்களில் பிரச்னையை உருவாக்கும். கதையின் ஐடியாவை மட்டும் ஒரு தயாரிப்பாளர் திருடிக்கொண்டு மற்றதை இட்டுக்கட்டிக் கொண்டார் என்று நீதிமன்றத்தில் வழக்காடமுடியாது. ஐடியா என்று சொல்லும்போது அது பூடகமான ஒரு விஷயமாக இருக்கும். ஒரே ஐடியா பலருக்கும் வரலாம்தானே?
ஒரு திரைப்படம் திருட்டுக் கதையால் எடுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டினால் அந்தப் படத்தின் மூலக்கதையில் எவ்வளவு பகுதி திருடப்பட்டிருக்கிறது என்று நிர்ணயித்தே அது திருட்டுக் கதையா அல்லது ஒரிஜினல் படைப்பா என்று நீதிமன்றம் தீர்மானிக்கும். அதனால் ஒரு கதையை ஒருவர் பதிவு செய்யும்போது அந்தக் கதையின் ஓட்டத்தை, கதை வெளிப்படும் தன்மையை தெளிவாக எழுதியிருக்க வேண்டும். இதை டீடெயிலிங் என்பார்கள்.
அப்படி எழுதியிருக்கும் பட்சத்தில் கதை திருட்டுக்கான வழக்கில் கதாசிரியர்கள் இலகுவாக வெற்றியைத் தேடலாம்...’’ என்று ஆர்.பார்த்தசாரதி முடிக்க, காப்பி ரைட்டுக்கான பல்வேறு வழக்குகளில் வாதாடி வரும் வழக்குரைஞரான எம்.வி.ஸ்வரூப்பிடம் இதைப்பற்றி மேலும் பேசினோம்.
‘‘ஒரு கதையை அரசு காப்புரிமை அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால் சுமார் 7 ஆயிரம் ரூபாய் வரைக்கும் ஆகும் என்கிறார்கள். கைக்கும் வாய்க்குமே சரியாக இருக்கும் பல கதாசிரியர்கள் இதனால்தான் கதைகளை பதிவு செய்யாமல் இருக்கின்றனர்.
ஆனால், உள்ளூரில் சில அமைப்புகள் குறைந்த கட்டணத்தில் பதிவு செய்து கொடுக்கும்போது குறைந்தபட்சம் அதிலாவது பதிவு செய்வது நல்லது. அதுவும் முடியாதபோது ஒரு திரைக்கதையை உங்கள் முகவரிக்கே ஒரு ரெஜிஸ்டர் போஸ்ட் செய்து பாதுகாத்து வரலாம். பொதுவாக கதைத் திருட்டு பற்றி குறைசொல்லும் கதாசிரியர்கள், ‘ஒரு தயாரிப்பாளரிடம் வாய்மொழியாக கதை...’ சொன்னதாக குற்றம் சொல்வார்கள்.
வாய்மொழியாக கதை சொன்னதை ஒரு காப்புரிமை மீறலாக ப்ரூவ் பண்ணுவது கடினம். அப்படியே ப்ரூவ் பண்ண வேண்டுமென்றால் கதை சொன்னபோது யாரெல்லாம் அங்கே இருந்தார்கள், என்ன கதை சொல்லப்பட்டது, அந்தக் கதைக்கும், குற்றஞ்சாட்டப்படும் கதைக்கும் எந்த ரீதியில் தொடர்பு இருக்கிறது என்றெல்லாம் கதாசிரியர் நிரூபிக்க வேண்டியிருக்கும்.
இதெல்லாம் சாத்தியப்படாது. அதனால்தான் ஒரு கதையை முறைப்படி ஏதோ ஒரு முறையில் பதிவு செய்ய வேண்டும் என்பது அவசியமாகிறது...’’ என்ற எம்.வி.ஸ்வரூப், கதாசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளையும் சொன்னார்.‘‘ஒவ்வொரு தயாரிப்பாளரிடம் ஒரு கதாசிரியர் கதை சொல்லும்போது அவரை முதன்முறையாக சந்தித்தது முதல் கடைசியாக சந்தித்தது வரையான காலத்தை, தகவல் பரிமாற்றங்களை ஒரு மின்னஞ்சல் வழியாக செய்வது நீதிமன்றத்தில் ப்ரூவ் செய்ய வசதியாக இருக்கும்.
அதேபோல வாய்மொழியாக ஒரு கதையைச் சொன்னாலும் அந்தக் கதையைப் பற்றிய முழுமையான திரைக்கதையை ஒரு கதாசிரியர் தன்னிடம் வைத்திருக்க வேண்டும். முழுமையான திரைக்கதை இல்லாமல் வெறுமனே நாலு வரியில் கதையைச் சொல்லிவிட்டு என் கதையைத் திருடிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டு வதும், அதற்கு எதிராக வழக்காட முயற்சிப்பதும் நேர, பண விரயத்தைத்தான் கொடுக்கும்.
கதையைப் பற்றிய விவாதம் என்றாலும் அதை ஆன்லைன் ரீதியாகச் செய்வது வழக்கில் ஒரு மறுக்கமுடியாத ஆதாரமாக இருக்கும். அதைவிட்டுட்டு படம் ரிலீசாகும்போது ‘என் கதையைத் திருடிவிட்டார்கள்’ என்று குற்றச்சாட்டு வைக்கும்போது இது எல்லா தரப்பினருக்கும் மனக்கசப்பைத்தான் கொண்டு வரும்...’’ என்றார் எம்.வி.ஸ்வரூப் நிறைவாக.
இசைக்கும் காபிரைட் உண்டு!
காப்புரிமைச் சட்டத்தில் கதைக்கு எழுத்து உரிமை இருப்பதுபோலவே இசை போன்ற நிகழ்த்துக் கலைக்கும் பெர்ஃபார்மிங் ஆக்ட் எனும் சட்ட விதிகள் இருக்கிறது. நிகழ்த்துக் கலை என்றால் இசை, பாடுவது, நாடகம், மற்றும் பல கலைகளைச் சொல்லலாம். 2012ல் இந்த நிகழ்த்துக்கலை சட்டத்தில் ஒரு பாடலுக்கு வாயசைத்து நடிப்பவர்களுக்கும் பாடலுக்கான உரிமை இருக்கிறது போன்ற திருத்தங்கள் வந்தது.
திரையிசையைப் பொறுத்தளவில் திரைப்பட தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் போட்டுத்தான் ஒரு பாடலுக்கான உரிமை செல்கிறது. இந்த உரிமையை, சட்டம் ஒரு பாடலுக்கான பல தரப்புக்கும் வழங்குவதால் அதை பாடல் தொடர்புடையவர்களோ அல்லது மற்றவர்களோ ஒப்பந்தத்தை மீறும்போது இந்த சட்டப்படி வழக்கு தொடரலாம்.
பொதுவாக கேசட் வடிவில் பாடல் இருந்தால் 50% ராயல்டி உரிமை பாடல் தொடர்புடையவர்களுக்கு போய்ச்சேரும். மற்றவகையான பயன்பாட்டுக்கு பாடல் தொடர்புடையவர்கள் போட்டுக்கொள்ளும் ஒப்பந்தப்படியே ராயல்டி உரிமை போய்ச்சேரும்.
இந்த ஒப்பந்தம் இல்லாமல் கமர்ஷியல் ரீதியாக ஒரு பாடலை பாடல் தொடர்புடையவர்களோ அல்லது பிறரோ பயன்படுத்தும்போது இந்த சட்டத்தைக் காட்டி வழக்கு தொடரலாம். ஒருவேளை பாடல் திருடப்பட்டிருந்தால் கிரிமினல் கேஸ் போடலாம். கமர்ஷியல் காரணமின்றி பயன்படுத்தினால் இந்த சட்டப்படி வழக்கு தொடுப்பது இயலாது.
உதாரணமாக நம் ஊரில் கல்யாண வீடுகள், திருவிழாக்களில் திரையிசைகளை ஒலிபரப்புவோம். இதற்கு எதிராக வழக்காடமுடியாது. ஆனால், கல்யாண வீட்டில் ஓர் இசைக்குழு திரையிசைப் பாடல்களை வைத்து கச்சேரி செய்கிறது என்றால் இந்த சட்டப்படி வழக்கு தொடரலாம். ஆனால், நம் இந்திய சமூகத்தில் திரையிசைப் பாடல்களை சொற்ப வருமானத்துக்காகப் பாடுபவர்கள் பலர் உண்டு. அந்த வகையான நிகழ்ச்சிகளில் வழக்கு தொடுப்பது கொஞ்சம் சிரமம்தான்.
பெரிய பிராண்ட் கேசட் கம்பெனிகள் இல்லாமல் மூன்றாம் தரமான கம்பெனிகள் எல்லாம் திரையிசையை கேசட் போட்டு கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இவற்றுக்கு எதிராக பாடலுக்கு உரிமையுடையவர்கள் நடவடிக்கை எடுப்பதும் கடினம்தான்.
ஆனால், திருட்டு டிவிடி, விசிடிக்கு எதிராக அரசு குண்டாஸ் சட்டம் மூலம் நடவடிக்கை எடுத்து கைது செய்வது போலவே இந்த கம்பெனி கேசட்டுகளை விநியோகிக்கும் கம்பெனிகள் மீதும் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
நம் இந்திய சமூகம் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமூகம். இந்த நேரத்தில் திரையிசை உரிமைக்காக இளையராஜா போராடுவது எதிர்காலத்தில் திரையிசையின் பாதுகாப்பை உறுதிசெய்யும்.
- வழக்கறிஞர் அருண் மோகன்
டி.ரஞ்சித்
|