ராகங்களும் சொற்களும்!
‘‘கர்நாடக சங்கீதத்தின் தனியான அம்சம் என்னவென்றால் ராகத்தைக் கண்டுபிடிப்பதுதான். நான் இந்துஸ்தானி, ஜாஸ், அரபு என்று பற்பல இசை வகைகளைக் கேட்டு ரசித்திருக்கிறேன். மேற்கத்திய இசை உள்பட. ‘ராகம் தெரியாத கொடுமை’ நிலவுவது இந்தக் கர்நாடக சங்கீதத்தில் மாத்திரம்தான்...’’ என்று திரை இசை விமரிசகரான பாரத்வாஜ் ரங்கன் ஆங்கில நாளேட்டில் ஒருமுறை எழுதியிருக்கிறார்.
முற்றிலும் உண்மை. பாடகரின் உதடு அசைந்தவுடனேயே, சில நொடிகளில் ராகத்தைச் சொல்லுகிற நிபுணர்கள் உண்டு. வேறு சிலர் ஆலாபனை முடிந்த பின்னரும் திணறுவார்கள். பிறகு வயலின்காரர் ராகத்தின் முழு வடிவத்தை (எம்.சந்திரசேகர் பாட்டையே வாசித்து விடுவார்) காண்பித்தவுடன், அவர்களுக்கு முக மலர்ச்சி ஏற்படும். ராகம் தெரிந்த மகிழ்ச்சி.
இரண்டிலுமே ‘வெற்றி’ பெற இயலாவிட்டால், பாட்டை ஆரம்பித்தவுடன் புரிந்துவிடும். அதுதான் புத்தகம் இருக்கிறதே! சில கடினமான ராகங்கள் பாட்டைத் தொடங்கின பிறகுதான் தெரியும்.எனக்கு இத்தகைய அனுபவம் நேர்ந்தது மயிலை பாரதிய வித்யா பவனில். அபிஷேக் ரகுராம் ஆலாபனை செய்தார். அடுத்து வயலின்காரர் வாசித்தார். நான் யோசித்துக்கொண்டேயிருந்தேன். ராகம் பிடிபடவேயில்லை.
பாட்டு என்ன தெரியுமோ? ‘தெலியலேது ராமா...’ தேணுகா ராகம். வழக்கமாகக் கச்சேரி போகிறவர்களுக்குப் பரிச்சயமான பாட்டுதான். ஆனால், எத்தனை பேரால் ராக ஆலாபனையை வைத்து, இந்த ராகத்தை ஊகிக்க இயலும்?இதேபோன்ற சங்கடம் தி.நகரில் சஞ்சயின் கச்சேரி கேட்கும்போது ஏற்பட்டது. அவர் விஸ்தாரமாக ராக ஆலாபனை செய்தார். எப்போதும் வாசிக்கும் வரதராஜன் அனுசரணையாக வாசித்தார். சுத்த தன்யாசி போலவும், ஆபேரி போலவும் தோன்றியது.
சரி, இது ஆபேரிதான் என முடிவு கட்டினேன். என்றாலும் மனத்துள் ஒரு மூலைக்குள் ‘இல்லை! இல்லை!’ என்று எச்சரிக்கை மணி அடித்துக் கொண்டேயிருந்தது.பாட்டைத் தொடங்கினார். ‘ஸ்ரீ வல்லி தேவசேனாபதே...’ நடபைரவி ராகம். ரொம்ப நாளைக்குப் பிறகு, சுப்புடு தர்பார் நூலைப் படித்தேன். நடபைரவிக்கும் ஆபேரிக்கும் ஒற்றுமை உண்டு எனத் தெரிந்து கொண்டேன். ‘பரவாயில்லை, நம் இசை ஞானம் ரொம்ப மோசமில்லை...’ என்று தேற்றிக் கொண்டேன்.
ஒருசில ரசிகர்கள் இருக்கிறார்கள். ராகத்தின் பெயர் சீக்கிரத்தில் ஞாபகம் வராது. ‘‘தொண்டையில் இருக்கிறது...’’ என்பார்கள். பாடகர் ஆலாபனையைத் தொடங்கியவுடன் ‘மகாலக்ஷ்மி போல் வருகிறதே...’; ‘பால் வடியும் முகம் போல் இருக்கிறதே...’ என்று மிகச் சரியாகக் கூறிவிடுவார்கள். இவர்கள் பரவாயில்லை, ‘பாஸ்மார்க் தரலாம்’ என்று எண்ணிக் கொண்டேன். அபத்தமாக வேறு ராகம் கூறுவதற்கு இது மேல்.
தாளம் பற்றி இங்கு சில வரிகள் குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது. ரொம்ப வருஷம் வரை அது ராகத்துக்கு ஏற்ப மாறும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். 2013ல் அகில இந்திய அளவில், வாய்ப்பாட்டு, வயலின் (இதர கருவிகள்), மிருதங்கம் இவற்றைக் கற்கும் இளம் பாடகருக்கு ஒரு போட்டி வைக்கப்பட்டது. ஐந்து அல்லது ஆறு நிமிட அவகாசத்தில் ஓரிரு தாளங்களை ஆலாபனை செய்யவேண்டும். மிருதங்கம் அல்லது கடம் என்றால், இன்ன தாளத்துக்கு என வாசிக்கச் சொன்னார்கள். அப்போதுதான் தாளம் என்பது, ‘rhythm oriented’ என்று புலப்பட்டது.
எடுத்துக்காட்டாக, ‘மா ரமண’’ என்ற இந்தோள ராக கீர்த்தனை, ரூபக தாளத்தில் அமைந்தது. இதே ராகத்தில் அமைந்த ‘ராமனுக்கு மன்னன்...’ என்ற அருணாசலக் கவிராயர் கீர்த்தனை ஆதி தாளம், ‘மிஸ்ரசாபு தாளம்’ ‘தேசாதி தாளம்’ - இவற்றை இசை பயில்கிறவர்கள் புரிந்து கொள்வார்கள்.கடைசியில் ஓர் அசலான நிகழ்ச்சி: காலை ரேடியோவில் 8.45 அரங்கிசை கேட்டுக் கொண்டிருந்தேன். தற்செயலாக என் மருமாள் வீட்டுக்கு வந்திருந்தாள். ரேடியோவில் அப்போது நாட்டக் குறிஞ்சி ராகம் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.
நான் ‘‘இதை வைத்து ரஹ்மான் ஒரு பாட்டு போட்டிருக்கிறார். ‘கண்ணா நலமா...’ பாட்டு’’ என்றேன். அது முடிந்தானபின், வேறு ஒரு பாட்டு, ஒரு ராகம்.என் மருமாள் ‘‘என்ன மாமா இது? எல்லா ராகமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது’’ என்றாள். மனைவி அப்போது உள்ளே போய் பீரோவிலிருந்து புடவையை எடுத்து மருமாளிடம் காண்பித்தாள். ‘‘இது தீபாவளிக்கு! இது வெட்டிங் அன்னிவர்சரிக்கு!’’ என்றாள்.
“பிரமாதமா இருக்கு’’ என்று மருமாள் சொன்னாள். நான் உடனே சொன்னேன்... ‘‘எல்லா நிறமும் ஒன்றுபோலத்தானிருக்கிறது. கிளிப்பச்சை, இலைப் பச்சை, ரெக்ஸோனா பச்சை என்று எப்படிச் சொல்கிறார்கள்? அதுபோலத்தான் ராக லட்சணங்களும்!’’
சரி... ராகம் கண்டுபிடிப்பது எப்படி? ஆலாபனையைச் செவிமடுத்தவுடன், ‘‘இன்ன பாட்டு மாதிரி வருகிறதே!’’ என்று தோன்றும். குறிப்பிட்ட பாட்டின் ராகத்தை நினைவுக்குக் கொண்டு வந்து கண்டுபிடிக்கலாம்.
மேடைக் கச்சேரிகளில், ராகத்தை இனம் கண்டு கொள்ள பல helplineகள் உள்ளன. ஆலாபனை, வயலின், பிறகு பாட்டு, அப்புறம் ராகக் ‘கைேயடு’.ஓ... டிசம்பர் சீஸனில் பிரபல பாடகரின் கச்சேரி கேட்கப் போகிறீர்களா?ஆல் த பெஸ்ட்!
அரசியல் விமரிசனம், சினிமா விமரிசனம் போலத்தான் சங்கீத விமரிசனமும். முதலிரண்டு வகைகளும் சின்னத் திரை மூலமும், பிரபல ஏடுகள் வழியாகவும் மக்களுக்குப் பரிச்சயமாகி உள்ளன. ஆனால், சங்கீத விமரிசனம் குறிப்பிட்ட சீஸனின்போதுதான் வருகிறது.
சில விமரிசனங்கள்:-‘அன்று மணி பாடும்பொழுது யாரோ துரத்திக்கொண்டு வருபவரைப் பார்த்து பயந்து ஓடுவது போலிருந்ததே தவிர விசாலமாக சஞ்சாரம் செய்வதுபோல் காணவில்லை!’(1943, ஆனந்த விகடன்: கல்கி)‘ஆலாபனையின் கடைசியில் ஒரு இரண்டு நிமிடம் சீன வெடி மாதிரி அவர் வாண சங்கதிகளை அள்ளி வீசியிருக்கிறார் பாருங்கள்... நான் பிரமித்துப் போனேன்!’
(1992, சுப்புடு தர்பார்)
சொற்களின் விளக்கம்
சரளி வரிசை : இசை கற்பவர்களுக்கு ஆதி தாளத்தில் அமைந்த எளிதான ஸ்வரத் தொடர். The ordering of the swaram set to the basic tala in a simple way. ஆரோகணம்: ஏழு ஸ்வரங்களைப் படிப்படியாகக் கீழிருந்து மேலாக ஒலி அளவில் உயர்த்துகிற விதம் (Ascending scale of notes). உதாரணம்: ‘சிந்து பைரவி’ படத்தில் வரும் ‘கலைவாணியே...’; பழைய பாடலான ‘முகத்தில் முகம் பார்க்கலாம்...’ - இரண்டுமே கல்யாணி. அவரோகணம்: மேற்குறிப்பிட்ட ஆரோகணத்துக்கு எதிர்மறையான சொற்றொடர். அதாவது ஏழு ஸ்வரங்களை படிப்படியாகக் குறைக்கும் விதம். ‘வீர அபிமன்யூ’வில் வரும் ‘பார்த்தேன் சிரித்தேன்...’ (சஹானா).
கமகம்: ஒரு ஸ்வரத்திலிருந்து மற்றொரு ஸ்வரத்துக்குப் போகும்போது வெளிப்படும் ஒலி அசைவு. While rendering a composition through voice modulation, the transition is being done. தோடி ராகம் பாடும்போது, கமகத்தை நீட்டிப் பாட வேண்டியது அவசியம் என்று சொல்லுவார்கள். சொல்லப்போனால் தோடி ராகத்தை நன்றாக ஆலாபனை செய்து பாடினால், அது சிறந்த பாடகருக்கு அறிகுறி.
சங்கதி: பல்லவியில் ஓர் அடியை எடுத்துக்கொண்டு பலவித கற்பனைகளுடன் பாடிக் காட்டுவது. The various ways of rendering a line of a composition to bring out the music potential. சவுக்க காலம்: பாடும்போது ஓர் அட்சரத்தைக் குறிப்பிட்ட தாளத்தில் நீட்டி மெதுவாய் இசைக்கும் தன்மை. இதையே விளம்ப காலம் என்றும் கூறுவதுண்டு. இத்தகைய வகைக்கு எம்.டி.ராமநாதன் பாடின ‘எந்தரோ மகானுபாவுலு...’ ஒரு பிரமாதமான உதாரணம். நாஞ்சில்நாடன் இதைத் தன் கட்டுரையொன்றில் புகழ்ந்திருக்கிறார்.
சஞ்சாரம்: ஒரு ராகத்தின் தனித்தன்மையைக் காட்ட ஸ்வரங்களை விரிவாக வெளிப்படுத்தும் முறை. An elaborate movement of rendering a raga by means of swarams to bring out the uniqueness.மேளகர்த்தா ராகங்கள்: கர்நாடக சங்கீதத்தின் அடிப்படையான ராகங்கள் இவை. மொத்தம் 72. இந்த ஆதாரமான (Basic) ராகங்களிலிருந்துதான், தற்போது புழங்கி வரும் பல ராகங்கள் பிறந்தன. கல்யாணி, சங்கராபரணம், வாகிதீஸ்வரி போன்றவை மேளகர்த்தா பிரிவைச் சார்ந்தவை.
ஆனந்தபைரவி, கமாஸ், சஹானா போன்றவற்றை பாசாங்க ராகம் என்று கூறுவார்கள்; அதாவது உணர்ச்சியைத் தூண்டுபவை.கிரிக்கெட் ஆட்டத்தில் on drive, square drive போன்றவற்றைத் தெரிந்து கொள்ளுகிறாற் போல, சங்கீதத்தை ரசிப்பதற்கும், விமரிசனத்தின் நயத்தை உணர்ந்து கொள்வதற்கும் இவை போதும்.
அதே சமயம் சங்கீதத்தில் சொல்லப்படுகிற ‘ரிஷபம்’, ‘அந்தர காந்தாரம்’ போன்ற அதிநுட்பமான சொற்கள் இசை கற்றுக்கொள்பவர்களுக்குத்தான் தேவைப்படும்.பாமர ரசிகர்களான நமக்கு எதற்கு?
வாதூலன்
|