ஊஞ்சல் தேநீர் 51
‘பதினாறு வயதினிலே’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘செந்தூரப்பூவே...’ பாடலைக் கேட்ட கண்ணதாசன், ‘‘நானும் இப்படித்தான் சிந்தித்திருப்பேன்’’ என கங்கை அமரனைப் பாராட்டியிருக்கிறார். 1963ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘கற்பகம்’ திரைப்படமே வாலியின் வாழ்வில் விளக்கேற்றிய திரைப்படம்.
அந்தத் திரைப்படமும், அந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. நூறு நாள் ஓடி, வெற்றி விழாவும் கண்ட அத்திரைப்படத்தை இயக்கியவர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். கூட்டுக்குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்களையும், நெருக்கடிகளையும் மிக நேர்த்தியாகப் படம்பிடித்து பாராட்டுப் பெற்றவர்.
இதனுடன் இணைத்துச் சொல்லப்பட வேண்டிய இன்னொரு செய்தி, ‘கற்பகம்’ திரைப்பட வெற்றி விழாவில், வாலிக்கான கேடயத்தை வழங்கியவர் கண்ணதாசன். இவருக்கு அவர் போட்டி, அவருக்கு இவர் போட்டி என மற்றவர்கள் பேசிக்கொண்டாலும், அவர்கள் இருவருமே அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.
வாலிக்கு நேர்ந்த நெருக்கடியான சந்தர்ப்பங்களில் கண்ணதாசனின் பாடல்களே ஆறுதலையும் தேறுதலையும் அளித்திருக்கின்றன. வாலி, கண்ணதாசனை எந்த இடத்திலும் குறைத்துச் சொன்னதே இல்லை. மாறாக, ஆசானாகவும் தோழராகவுமே போற்றியிருக்கிறார். தனக்கு எதிராக கடைவிரிக்க வந்தவர்தான் வாலியென கண்ணதாசனும் எண்ணவில்லை. வாலியும் நினைக்கவில்லை.
கால ஓட்டத்தில் சம்பவங்கள் அனைத்துமே வரலாறாகிவிடுகின்றன. கண்ணதாசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடைவெளி ஏற்பட்டிருந்த காலத்தில், தொழில்ரீதியாக தனக்கு ஏற்பட்ட சரிவை சரி செய்துகொள்ள வாலியை எம்.ஜி. ஆர். பயன்படுத்திக்கொண்டார்.
எம்.ஜி.ஆர்., வாலியைப் பல சமயங்களில் வழிமொழிந்திருக்கிறரே தவிர, முன்மொழிந்ததாகச் சொல்ல முடியாது. இன்னும் சொல்லப்போனால், ‘படகோட்டி’ திரைப்படத்திற்கு வாலி பாடல் எழுதியிருக்கும் தகவலே, இரண்டு பாடல்கள் முடிந்த நிலையில்தான் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் மாற்றங்களுக்கு ஏற்பவும் அவ்வப்போதைய மனநிலைக்கு ஏற்பவும் செயல்பட்ட எம்.ஜி.ஆர்., எத்தனையோ பாடலாசிரியர்களைத் திரைக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர் அளவுக்கு பாடல்கள் மீது அக்கறை செலுத்திய நடிகர்கள் முன்னாலும் இல்லை. பின்னாலும் இல்லை. திரைப்பட பாடல்களின் செல்வாக்கையும் அது மக்கள் மீது செலுத்திவரும் ஆதிக்கத்தையும் அவர் ஒருவர்தான் துல்லியமாக நிறுத்தவர். அவருக்கு வார்த்தை வழங்கிய கவிஞர்களை அவர் கைவிட்டதேயில்லை. பணமும் பதவியும் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார்.
ஒரு விநோதமான சம்பவம் வாலியின் வாழ்வில் நடந்திருக்கிறது. தொடர்ந்து பல படங்களுக்கு வாலி பாடல் எழுதிவந்த சமயத்தில், ‘அரச கட்டளை’ என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆரின் சகோதரர் எம்.ஜி.சக்ரபாணி இயக்கிய படத்திற்கு பாடல் எழுத வாலி அழைக்கப்பட்டிருக்கிறார்.
அப்படத்தில் எம்.ஜி.ஆர். தமிழ்க் கவியாக நடிக்கிறார். மக்களை விழிப்படையச் செய்து, அரசனுக்கு எதிராக போர்க்கொடி தூக்க வைப்பதே அக்கதாபாத்திரத்தின் பணி. இறைவனின் கட்டளைக்கு முன்னால் அரசனின் கட்டளை எம்மாத்திரம்? எனப் பாடலில் சொல்லவேண்டும்.
சூழலை உள்வாங்கிக்கொண்ட வாலி, மறுநாளே பல்லவியை எழுதிப்போய் எம்.ஜி. ஆரிடம் காட்டியிருக்கிறார். அவ்வளவுதான். எம்.ஜி.ஆருக்கு கோபம் வந்துவிடுகிறது. “என்னை அவமானப்படுத்தும் நோக்கத்தில்தானே இப்படி எழுதியிருக்கிறீர்கள்” எனக் கடிந்துகொள்கிறார். வாலிக்கு விதிர்விதிர்த்து போகிறது. தான் அவர்மீதும், அவர் தன்மீதும் அன்புகொண்டிருக்கும் வேளையில், இதென்ன அசம்பாவிதம் என யோசித்து வரிகளை திரும்பப் படித்தபோதுதான் காரணம் புரிந்திருக்கிறது.
‘ஆண்டவன் கட்டளைக்கு முன்னால் / உன் / அரச கட்டளை என்னவாகும்?’ என்பது வரி. அப்போது ‘ஆண்டவன் கட்டளை’ என்னும் பெயரில் சிவாஜி ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இறைவனின் கட்டளைக்கு முன்னால் என்று எழுதியிருந்தால் பிரச்சனையில்லை.ஆண்டவன் கட்டளை என்று எழுதியதால், வாலி ஏதோ விகல்பம் செய்வதாக விளங்கிக்கொண்டு கோபித்திருக்கிறார்.
பெரிய நடிகர்களுக்குப் பாட்டெழுதும்பொழுது என்னென்ன மாதிரியெல்லாம் சிக்கல் வருமென்று யோசிக்க முடியாது. பாட்டுக்கு யோசிப்பது பாதியென்றால், பாட்டுக்குப் பின்னால் வரக்கூடிய பாதிப்புக்கு யோசிப்பது மீதியாகிறது. நல்ல எண்ணத்தில் எழுதினாலும், அதைப் பிழையாகப் புரிந்துகொண்டு தங்கள் இஷ்டம்போல் பாடலாசிரியனிடம் நடந்துகொள்வார்கள்.
இப்போதும்கூட. அதேபோல இந்த சென்டிமென்ட் என்றொரு பிசாசு. அந்தப் பிசாசு பிடிக்காத சினிமாக்காரர்களை எண்ணிவிடலாம். ‘தா’வில் ஆரம்பித்தால் படம் ஜெயிக்கும். ‘பா’வில் ஆரம்பித்தால் படம் பட்டிதொட்டிவரை பாயும் என்பது அவர்களுடைய நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவரவருடைய தனிப்பட்ட விஷயம். அதை யாரும் கேள்வி எழுப்ப முடியாது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ஆஸ்கார் மேடையிலும் அறிவித்த ஏ.ஆர். ரஹ்மானுக்கே கூட அப்படியான நம்பிக்கைகளில் ஈடுபாடுள்ளதை வாலியே சொல்லியிருக்கிறார்.
‘ம’ வரிசையில் ஆரம்பித்து வாலி எழுதினால் அப்பாடல் மாபெரும் வெற்றி அடையும் என்பது அவர் நம்பிக்கை. அதன் காரணமாகவே ‘அன்பே வா, முன்பே வா’ என்று எழுதிய வாலியின் வரியை, ‘முன்பே வா, அன்பே வா’ என்று திரைப்படத்தில் பாட வைத்திருக்கிறார். அவர் நம்பிக்கைக்கேற்ப அப்பாடலும் பெரு வெற்றி பெற்றது.
வாலி எழுதியதால் அப்பாடல் வெற்றியடைந்ததா? இல்லை அவர் ‘மு’ வில் ஆரம்பித்து எழுதியதால் வெற்றியடைந்ததா? என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம். பாடலைக் கேட்கிற யாரும் வாலி, ‘ம’ வரிசையில் பல்லவியை ஆரம்பித்திருக்கிறா ரென்றோ ‘க’ வரிசையில் ஆரம்பித்திருக்கிறாரென்றோ பார்ப்பதில்லை.இது குறித்து வாலி சொல்லும்போது, “நானெழுதினால் ஹிட்டாகுமென்று நினைப்பது எனக்கு ஒன்றும் பாதகமில்லையே. அப்படி நினைத்துதானே என்னிடம் வருகிறார்கள்.
அதிலென்ன தவறு” என்றிருக்கிறார்.மற்றவர்களின் நம்பிக்கையைச் சந்தேகிக்கக்கூடாது. நமக்கு அவர்கள் நம்பிக்கையில் நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். அதற்காக அவர்களை கோபிப்பதோ விமர்சிப்பதோ நாகரிகமில்லை என்பார்.நம்பிக்கையில் இரண்டு வகை. ஒன்று நல்ல நம்பிக்கை, இன்னொன்று மூட நம்பிக்கை. இதில் நீங்கள் எதை ஆதரிப்பீர்கள் எனக்கேட்டதற்கு, “நம்பிக்கை என்றால் நம்பிக்கைதானே.
அதிலென்ன நல்ல நம்பிக்கை, மூட நம்பிக்கை. பகுத்தறிவினால் வருவது நல்ல நம்பிக்கையென்றால், பக்தியினால் வருவது மூட நம்பிக்கையென்று வைத்துக்கொள்ளுங்கள். அதைக்கூட பகுத்தறிவுவாதிகள்தான் சொல்கிறார்களே தவிர நானில்லை” என்றும் நழுவியிருக்கிறார்.
கர்மவிதிகளின்படிதான் எல்லாம் நடக்கின்றன எனும் நம்பிக்கையை அவர் கொண்டிருந்தார். இல்லையென்றால், பம்பாய் பிராட்வே தியேட்டர் வாசலில் ஹார்மோனியத்தை வைத்து பாட்டு பாடிக்கொண்டிருந்த நெளஷாத்தும், சென்னை பிராட்வே தியேட்டரில் வடை விற்றுக்கொண்டிருந்த சிறுவன் எம்.எஸ்.வி.யும் இசைத்துறையில் இத்தனை பெரிய சிகரத்தைத் தொட்டிருக்க முடியுமா? என ‘நினைவு நாடாக்கள்’ நூலில் எழுதியிருக்கிறார்.
சமயோசிதமாகப் பேசி எதிராளியின் வாதத்தை முறியடிக்கக்கூடியவர். ஒரே நேரத்தில் எம்.ஜி.ஆரின் ‘தாழம்பூ’வும் சிவாஜியின் ‘அன்புக்கரங்களு’ம் தயாராகிக்கொண்டிருந்தன. இரண்டு திரைப்படத்திற்கும் வாலிதான் பாடல். அப்படியிருக்கையில், எதேச்சையாக சந்திக்க வந்த வாலியிடம் எம்.ஜி.ஆர், “உங்க அன்புக் கரங்கள் எப்ப ரிலீஸ்” எனக் கேட்கிறார்.
உங்க என்ற சொல்லில் இருந்த பொருள் வாலிக்கு புரிந்துவிட, “உங்க அன்புக்கரங்களில் இருந்து எனக்கு எப்போதுமே ரிலீஸ் இல்லையே” என பதிலளித்திருக்கிறார். அவர் தலைமையில் கவியரங்கங்களில் பங்குபெற்றபோது பல சமயங்களில் அவருடையமொழியறிவையும் சட்டென்று வந்துவிழும் வார்த்தை ஜாலங்களையும் கண்டு வியந்திருக்கிறேன்.
இன்னமுமே எனக்கு நினைவில் நிற்பது கமலஹாசன் பிறந்தநாள் விழா கவியரங்கம்தான். அவர் தலைமையில் நான், கபிலன், இளையகம்பன் ஆகியோர் கவிதை வாசித்தோம். அப்போது கபிலன் கமலைக் குறித்து சொல்லும்போது, “நீ பூணூலை அறுத்த புதிய பாரதி” என்றார்.
கவியரங்கைக் காண வந்திருந்தவர்கள் அனைவரும் கமல்ஹாசனின் நற்பணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள். கபிலன் அப்படிச் சொன்னதும் அரங்கமே கிடுகிடுக்கும் அளவுக்குக் கைதட்டல். பிறகு நானும் இளையகம்பனும், விவேகாவும் வாசித்தோம். எல்லோருடைய கவிதைகளையும் வாழ்த்திய அவர், கபிலனை மட்டும் பாராட்டவில்லை. மாறாகக் கோபித்துக்கொண்டார்.
பிறந்தநாள் விழாவில், “ஏன் அறுக்கிறதைப் பத்தியெல்லாம் பாடணும்” எனக் கேட்டார். தலைமைக் கவிஞராக இருப்பவர், அரங்கை ஒழுங்கு செய்து கொடுக்கலாமே தவிர, இதைத்தான் வாசிக்கவேண்டும், அதைத்தான் வாசிக்கவேண்டும் என ஆணையிட முடியாது.
பூணூலை அறுத்த புதிய பாரதிக்குக் கோபித்துக்கொண்ட அவரே பத்து வருடங்கள் கழித்து, பெரியார் திடலில் நடந்த தொல்.திருமாவளவனின் பிறந்தநாள் விழா கவியரங்கில் “கலித்தொகைபோல் நீயொரு தலித்தொகை” என்றார். அருகில் அமர்ந்திருந்த என்னிடம் “என்னய்யா தலித்தொகை புதுசா இருக்கா” என்று புன்முறுவினார்.காலத்திற்கும் களத்திற்கும் சூழலுக்கும் ஏற்பவே அவருடைய வார்த்தைகளும் சிந்தனைகளும் பின்னப்பட்டன.
(பேசலாம்...)
யுகபாரதி
ஓவியங்கள்: மனோகர்
|