அறிவுப் பசிக்கு ஒரு கவளம் சோறு!



பொதுவாக ஒரு கிராஃபிக்ஸ் நாவல் என்றால் எப்படி இருக்கும்?

மர்மம், டெக்னாலஜி, துப்பறியும் சாகசங்கள், அமானுஷ்யங்கள், சூப்பர் ஹீரோக்கள்... இத்யாதி... இத்யாதி.இதிலிருந்து மாறுபட்டிருக்கிறது ‘This Dog Barking’ கிராஃபிக்ஸ் நாவல்.ஆம். தத்துவஞானி யு.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாற்றை பரபர சுவாரஸ்யத்துடன் விவரிக்கிறது. அதனால்தான் இது ஸ்பெஷல்.

தன்னுடைய 49வது வயதில் யு.ஜி.கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு புரிதல் ஏற்பட்டது. அவர் தன்னைத்தானே முழுவதுமாக உணர்ந்தார். ஒரு கட்டத்தில், அவரது உடலை அவராலேயே பார்க்க இயலாமல் போனது. துணைவியை அழைத்து, “என் கை, கால்களை உன்னால் பார்க்க முடிகிறதா?” என்று கேட்டார். அவரால் பார்க்க முடிந்தது. யூஜியால் இயலவில்லை!

அதன்பிறகு, அவரது உடலில் பல நம்பமுடியாத மாற்றங்கள் உண்டாயின. புத்தர், ஏசு போன்றவர்கள் அடைந்தது போன்ற உன்னத நிலையை தானும் அடைந்ததாக உணர்தார். ஒருவாரம் கழித்து, நினைவு திரும்பியவுடன், 30 ஆண்டுகள் அவர் உலகம் முழுவதும் பயணம் செய்து, “வாழ்க்கையில் புரிந்துகொள்ள ஒன்றுமே இல்லை...” என்ற தத்துவத்தைப் போதித்தார்.

யார் இந்த யு.ஜி.கிருஷ்ணமூர்த்தி?

‘மோக்‌ஷ நிலை என்று ஒன்றுமே இல்லை’ என்று உலகம் முழுவதற்கும் எடுத்துச் சொன்ன தத்துவஞானி.இன்றைய தலைமுறைக்கு, தமிழ், தெலுங்குப் படங்களில் நடித்த சவும்யாவின் தாத்தா என்றும், நடிகை கவுதமியின் தூரத்து உறவினர் என்றும் அவரை அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.

ஆனால், அடையாளங்களைத் துறப்பதையே தனது அடையாளமாகக் கொண்டிருந்த யூஜிக்கு, இது சாதாரணம்தான். 99 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆந்திராவிலுள்ள மசூலிப்பட்டணத்தில் வசதியான பிராமணக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு அனைத்து விதமான வேத, உபநிஷத்துகளும் வீட்டிலேயே சொல்லிக் கொடுக்கப்பட்டன. பிரம்மஞான சபையிலும் சென்னைப் பல்கலைக்கழகத்திலும் தனது கற்றலைத் தொடர்ந்தார்.

ஆனால், தன் வாழ்க்கையில் நடந்த மூன்று சம்பவங்களுக்குப் பிறகு, அவரது கற்றல் வேட்கை ஒரு முடிவுக்கு வந்தது. தனது பட்டப்படிப்பைக் கூட முடிக்காமல், தன்னுள் எழுந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடத் தொடங்கினார்.

அந்தத் தேடல்தான் அவரை பிரபல ஞானியான ஜே.கிருஷ்ணமூர்த்தியிடம் அழைத்துச் சென்றது. ஆனால், இவரைப் போன்றவர்கள் எந்த ஒரு கேள்விக்கும் நேரான பதிலைச் சொல்லாமல், குழப்பமான வார்த்தைகளைச் சொல்லியே மக்களை வழிநடத்துகிறார்கள் என்று யூஜி நம்பினார்.

இதன் காரணமாக, ஜேகேவும் யூஜியும் பிரிந்தார்கள். ஆனால், விதி இவர்கள் இருவரையும் முக்கியமான சந்தர்ப்பங்களில் மீண்டும் மீண்டும் சந்திக்க வைத்தது. அப்படி ஒருமுறை ஜேகே பிரான்சில் பேசும்போதுதான் யூஜியின் வாழ்க்கையில் அந்த மகத்தான மாற்றம் நடைபெற்றது...

பிரம்மஞான சபையின் தோற்றத்தில் ஆரம்பித்து, யூஜியின் முழு வாழ்க்கையையும் சொல்லும் இந்த 160 பக்க கிராஃபிக் நாவல், ஒரு வித்தியாசமான முயற்சி. ஏனெனில் ஓர் அறையில் யூஜி அமர்ந்திருக்க, அவரிடம் ஒருவர் தொடர்ந்து கேள்விகளாகக் கேட்கிறார். இதை சிலர் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார்கள்.

கேள்விகளுக்கு பதிலாக, தனது முழு வாழ்க்கையையுமே சொல்கிறார் யூஜி. சில ஃபிளாஷ்பேக்குகள், சில சம்பவங்கள் தவிர்த்து, இது முழுக்க முழுக்க ஒரே அறையில் நடக்கும் கேள்வி - பதில்தான். ‘முதல்வன்’ படத்தில் வரும் அர்ஜுன் - ரகுவரன் விவாதம் போலவே தோன்றினாலும், இந்த விவாதத்தில் ஜெயிப்பதென்னவோ ரகுவரனான யூஜிதான்!

இந்த கிராஃபிக்ஸ் நாவலின் ஹைலைட்ஸ் என்ன?

பதிமூன்று ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இந்த கிராஃபிக் நாவல், பல சுவாரசியமான சம்பவங்கள், யூஜியின் பல சூடான பதில்கள் என்று ஒரு மர்ம நாவலைப் படிப்பது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரமண மகரிஷியிடம் யூஜி ‘மோக்‌ஷ நிலையை எனக்குக் கொடுக்க முடியுமா?’ என்று கேட்க, ரமணர், ‘நான் கொடுத்து விடுவேன். ஆனால், உங்களால் வாங்கிக்கொள்ள முடியுமா?’ என்கிறார்.

தனக்கும் மனநிலை சரியற்றவர்கள் என்று இந்த சமூகத்தால் சொல்லப்படுபவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு மிகவும் குறைவே என்று சொல்லும் யூஜி, ஓஷோவைப் பற்றியும், கடவுள்களைப் பற்றியும் சொல்லும் பதில்களை ஃபேஸ்புக்கில் போட்டால், பிரளயமே வெடிக்கும்!
தத்துவங்களை அறியவும், வாசிப்பு அனுபவத்தை நுகரவும் இந்த கிராஃபிக்ஸ் நாவல் உதவும். 

டேட்டாஸ்

எழுத்தாளர்: ஜேம்ஸ் ஃபார்லி
ஓவியர்: நிகொலஸ் ஓ க்ரே
பதிப்பாளர்: ஹார்ப்பர் எலமெண்ட், 2017. பெரிய சைஸ், 168 பக்கங்கள், கருப்பு வெள்ளை.
விலை: ரூ.599. இப்போது 50% டிஸ்கவுண்டில் கிடைக்கிறது.
கதை: காஸ்மிக் நக்சலைட் யூஜி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு.
அமைப்பு: பிரம்மஞான சபையின் தோற்றம், மசூலிப்பட்டணத்தில் 1918ல் பிறப்பு என ஆரம்பப் பக்கங்களில் ஆவணப்படம் போலிருந்தாலும், அதன்பிறகு இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரசியமான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஓவிய பாணி: நிப் & இங்க் பாணியில், கருப்பு வெள்ளை ஓவியங்கள், கதைக்கான தத்துவார்த்த களத்திற்கு வலு சேர்க்கிறது. ‘ஹாட்ச்சிங்’ - கோடுகளைக் கொண்டு பின்னணி வரையும் - பாணியில் ஒவ்வொரு ஓவியமும் மிளிர்கிறது. ரிப்பன் ஸ்டைல் பெயர்கள், அனாடமியிலிருக்கும் குறைகளை மறைக்கும் அழுத்தமான வண்ணக்கலவை என்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கிராஃபிக் நாவல் இது.

ஓவியர் நிகொலஸ் க்ரே

க்ரேயின் தாத்தா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இவர் தன் 16வது வயதில் பள்ளியையும், குடும்பத்தையும் விட்டுப் பிரிந்தார். 13 ஆண்டுகள் லண்டன் தெருக்களில் வாழ்ந்து, தானாகவே ஓவியம் வரையக் கற்றுக் கொண்டு, பல முக்கியமான அண்டர்கிரவுண்ட் காமிக்ஸ்களைப் படைத்தார்.

போதை மருந்து, சிறை என அலைந்து திரிந்து இந்தியாவில் ஹைதராபாத்தில் சிலகாலம் தங்கி, இப்போது கம்போடியாவில் வசிக்கிறார். பழைய சிகரெட் பெட்டிகள், புகைப்படங்கள், உடைந்த பொம்மைகளையெல்லாம் சேகரிக்கும் வித்தியாசமான ஆள்.

எழுத்தாளர் ஜேம்ஸ் ஃபார்லி

இங்கிலாந்தில் பிறந்து, ஆக்ஸ்ஃபோர்டில் ஆங்கில இலக்கியம் படித்த ஜேம்ஸ் எழுதிய நாடகம் அரங்கேறவில்லை. எழுதிய நாவல் அச்சாகவில்லை. கடைசியாக இவர் எழுத ஆரம்பித்த மர்ம நாவலை இன்னமும் முடிக்கவேயில்லை! கடந்த 25 ஆண்டுகளாக சிறுவர் சமூகத்துக்கு தொண்டாற்றி வரும் இவர், மனைவி, மகனுடன் ஸ்காட்லாந்தில் வாழ்ந்து வருகிறார்.

கிங் விஸ்வா