இளைப்பது சுலபம்



அனுபவத் தொடர் 13

வெஜ் பேலியோவில் எடை குறைப்பது எப்படி?


என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? ஆம். நிலைகெட்ட மனிதரை நினைக்காத போதும் நெஞ்சு துடித்துக்கொண்டிருந்த அந்த நடு ராத்திரி களேபரத்தைப் பற்றி. சர்க்கரை சாப்பிட்டால் அந்தத் துடிப்பு சரியாகிவிடுமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.

எதோ தலை சுற்றல், மயக்கமென்றால் சர்க்கரைக் குறைவால் ஏற்பட்டது என்று நினைக்கலாம். இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? அல்லது இதயத் துடிப்பு அதிகரிப்புக்கும் பேலியோவுக்கும்தான் என்ன சம்பந்தம்? 

உள்ளே போன நற்கொழுப்பெல்லாம் இதயத்தைச் சுற்றி நின்று ஜிமிக்கி கம்மல் பாட்டுப் பாடி நடனமாடத் தொடங்கிவிட்டதா? இருக்காதே. இலக்கணப்படி நல்ல கொழுப்பென்றால் அது காலக்கிரமத்தில் எரிக்கப்பட்டு சக்தியாகி விடுமல்லவா? உள்ளே போய் உட்காரக் கூடாதல்லவா? என்றால் இது வேறு ஏதோ பிரச்னை என்று தோன்றியது. சனியன் தூக்கம்தான் இல்லாமல் போய்விட்டது.

பிராணன் போகிறதென்றால் அதற்குமுன் என்னத்தையாவது ஒன்றைத் தெரிந்துகொண்டு போய்த் தொலைக்கலாமே என்று என் மடிக்கணினியைத் திறந்து நெஞ்சு படபடப்பின் காரணிகள் என்னென்னவென்று கூகுளில் தேடத் தொடங்கினேன்.

அது நடுநிசி நாய்களின் நேரம். என் நட்பு வட்டத்தில் உள்ள மருத்துவர்கள் யாரும் விழித்திருந்தால் ஒரு வழி பண்ணியிருப்பேன். அவர்களது நல்ல நேரம் அப்படி யாரும் அப்போது இல்லாதபடியால் கூகுளைச் சரணடைந்தேன்.

இரண்டு காரணங்கள் அகப்பட்டன. முதலாவது இரும்புச் சத்து குறைபாடு. அது இருக்குமானால் இப்படித்தான் நேரங்கெட்ட நேரத்தில் நெஞ்சம் துடிக்கும். அவ்வப்போதைய நிலவரத்துக்கேற்ப சமூகக் கவலைகளைத் தூக்கி வைத்துக்கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

மற்றொரு காரணத்தை நியாண்டர் செல்வன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்ததைக் கண்டேன். நமது தசைகள் தூங்கத் தொடங்கும் நேரம் மூளை விழித்துக்கொண்டு, நாம் எழுந்துவிட்டால் இந்த மாதிரி படபடப்பு இருக்கும் என்று அவர் சொல்லியிருந்தார்.  என்ன செய்யலாம்? சும்மா தண்ணி குடித்துவிட்டு ராமா கிருஷ்ணா என்று ஜபம் பண்ணிக்கொண்டிருக்கலாம். ஒன்றும் உயிர் போய்விடாது என்று தெரிந்தது. அதன்பின் சற்று
ஆசுவாசமடைந்தேன்.

நமது அடிப்படைப் பிரச்னைகளுள் ஒன்று சரியான தூக்கமின்மை. பல உடல் சார்ந்த கோளாறுகளுக்கு அது முக்கியக் காரணம்.
என்னைப் பொறுத்தவரை இம்மாதிரியான பிரச்னைகள் என்னவாவது இல்லாமல் இருந்தால்தான் ஆச்சரியம். ஏனென்றால் நான் ஒரு நித்ய ராக்கோழி. இரண்டு மணிக்கு முன்னால் படுத்ததாக சரித்திரமே கிடையாது.

பல நாள் அதிகாலை மூன்றரை, நான்கு மணி வரைகூட எழுதிக் கொண்டிருப்பேன். அதன்பின் படுத்து இரண்டு, இரண்டரை மணி நேரம் தூங்கிவிட்டு எழுந்து மீண்டும் வேலையைப் பார்க்கப் போய்விடுவேன். மதிய உணவுக்குப் பின் சுமார் மூன்று மணி நேரம் தூங்கிவிடுவேன். 
பல வருடங்களாக இதுதான் வழக்கம் எனக்கு. ஆனால், இது மிகவும் தவறு. நமது மெட்டபாலிசத்தை சர்வநாசமாக்குகிற காரணி இது. என்ன ஆனாலும், உலகமே இடிந்தாலும் இரவு எட்டு மணி நேரம் தூங்கிவிட வேண்டும் என்றே மருத்துவ விஞ்ஞானம் சொல்கிறது.

பேலியோவில் இந்த விவகாரம் மிகத் தீவிரமாக வலியுறுத்தப்படுவது இதனால்தான். காலைச் சாப்பாடு படு லேசாக இருந்தால் போதும். மதியம் சற்று கனமாக. இரவு ஃபுல் கட்டு. வயிறு நிறையக் கொழுப்புணவை உண்டுவிட்டு, இதய சொஸ்தத்துக்கு பசு மஞ்சள் சாப்பிட்டுவிட்டு ஒரு அரை மணி நேரம் விழித்திருந்த பின் படுத்துவிட வேண்டும்.

வரும் பாருங்கள் ஒரு தூக்கம்..! அதற்கு நிகரே கிடையாது. இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு கேள்வி வரலாம். இதென்ன தலைகீழ் விகிதமாக இருக்
கிறது! காலை உணவைத்தான் ராஜ போஜனமாக உண்ண வேண்டும் என்பார்கள். இரவு லேசாக உண்டால் போதும் என்றுதானே சொல்லித் தரப்பட்டிருக்கிறது?  என்றால், அது பிழையான போதனை. காலை டிபன் பிசினஸ்காரர்கள் தமது சௌகரியத்துக்காகக் கிளப்பிவிட்ட கதை.

ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். உங்கள் மகன் அல்லது மகள் எல்கேஜி, யுகேஜி வயது தொடங்கி ஒரு பதிமூன்று பதினான்கு வயதுக்காலம் வரை காலை உணவை உட்கொள்ள எத்தனை பாடு படுத்தியிருப்பார்கள்? பிடித்து வைத்து அடைத்துத்தான் பள்ளிக்கு அனுப்பியிருப்பீர்கள்.
அதே குழந்தை மாலை பள்ளி விட்டு வீடு வரும்போதே பசி பசி என்று பறந்து வந்து, கொடுப்பதை அள்ளி அடைத்துக் கொள்வதையும் பார்த்திருப்பீர்கள். காலை ஒரு இட்லி தின்னவே உயிரை வாங்கிய பிள்ளை மாலை மட்டும் எப்படி மொத்த கபளீகர மேளா நடத்துகிறது என்று என்றாவது சிந்தித்திருக்கிறீர்களா?

நமது இயற்கையே அதுதான். பசி உணர்ச்சியானது நடுப்பகலுக்கு அப்புறம்தான் மெல்ல சோம்பல் முறித்து, கண்ணை விழிக்கும். மாலையானால் கொஞ்சம் சுறுசுறுப்படையும். இருட்டும் நேரம் உச்சம் போகும். சூரியன் மறையும் நேரம் உண்டு முடிப்பது என்கிற வழக்கம் ஜைனர்களிடம் உள்ளது தெரியுமல்லவா? விஷயம் இதுதான்.

முழு உணவை உட்கொள்ள அதுவே தகுந்த பொழுது. ஏனென்றால், இரவு எட்டு மணி நேரம் நாம் உறங்குகிறோம். நடுவே காப்பி டீ குடிப்பதில்லை. கண்டபடி நொறுக்குத்தீனி தின்பதில்லை. மறுநாள் காலை வரை கண்டிப்பாக வாய்க்கும் வயிற்றுக்கும் ஓய்வளிக்கிறோம்.

இந்த ஓய்வுப் பொழுதில்தான் உடல் இயந்திரமானது உண்டதை எரித்து சக்தியாக மாற்றுகிறது. அதிகம் உண்டிருந்தால் கொழுப்பாக மாற்றி சேமிக்கவும் செய்கிறது. ப்ராசசிங் என்பார்கள். கிரைண்டருக்கு நாம் ஓய்வு கொடுத்தால்தான் அந்த ப்ராசசிங் ஒழுங்காக நடக்கும்.

அப்படிச் செய்யாமல், மணிக்கொருதரம் என்னத்தையாவது போட்டு மென்று தள்ளிக்கொண்டே இருந்தால், உள்ளே போகிற அனைத்தும் பிதுரார்ஜித சொத்தாகச் சேர்ந்துகொண்டேதான் இருக்குமே தவிர, கொழுப்பு எரித்தல் என்னும் செயலே நடைபெறாது போகும்.

இதனால்தான் பேலியோவில் இரவு உணவை கனமாக உண்ணச் சொல்லுவார்கள். எனக்குச் சொன்னது, இருநூறு கிராம் பனீர். அதை நெய்யில் சமைத்து உண்ணவேண்டும். பனீரே கொழுப்பு. நெய் இன்னொரு கொழுப்பு. பத்தாது? உண்டு முடித்த மறுகணமே தலை கிர்ரென்று சுழன்று மப்படிக்க ஆரம்பிக்கும். ஒழுங்காகப் படுத்துத் தூங்கினால் ஒரு பிரச்னையும் இராது.

ஆனால், நான் என்ன செய்தேன்? இரண்டு கை பச்சைத் தண்ணியை அள்ளி முகத்தில் அடித்துக்கொண்டு, வந்த தூக்கத்தை ஒதுக்கி வைத்துவிட்டுக் கலைச்சேவை செய்யப் போனேன். இது தகுமா? முறையா? அதனால்தான் நெஞ்சப் பறவை சிறகடிக்க ஆரம்பித்தது என்பது புரிந்தது.
என் புருஷலட்சண உத்தியோகத்தில் ராத்திரி சீக்கிரம் தூங்குவதென்பது இயலாத காரியம். அதே சமயம் இந்தப் பிரச்னைக்கும் ஒரு முடிவு கட்ட வேண்டும். என்ன செய்யலாம்? தீவிரமாக யோசிக்கத் தொடங்கினேன்.

பேலியோ கிச்சன்

சுரைக்காய் சாதம்

காய்களில் பேலியோ ஃப்ரெண்ட்லி என்றால் அதில் சுரைக்காய்க்குத்தான் முதலிடம். நூறு கிராமில் மொத்தமே மூணரை கிராம் கார்போஹைடிரேட்தான். அதிலும் ஒண்ணரை கிராம் நார்ச்சத்தைக் கழித்துவிட்டால் மிச்சம் ஒன்றுமே கிடையாது. வெறும் தண்ணி. ஆனால் கொழுப்பைக் கரைப்பதிலும் தூக்கப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் சுரைக்காய் ஒரு பெரிய தாதா.

பேலியோவுக்கு வந்ததும் சாதம் சாப்பிட முடிவதில்லையே என்று வருந்துவீர்களானால் சுரைக்காய் அக்கவலையைப் போக்கும். தோலை உரித்து, உள்ளே உள்ள சரக்கைத் துண்டுகளாக்கி (அல்லது துருவி) கொஞ்சம் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். துண்டுகளென்றால் மிக்சியில் போட்டு ஒரு ஓட்டு. துருவல் என்றால் வேண்டாம். அப்படியே வழித்து எடுத்து உப்பைப் போட்டு, கொஞ்சம்போல் தாளித்துக்கொண்டு இரண்டு கரண்டி தயிர் சேர்த்துக் கலந்தால் சுரைக்காய் தயிர்சாதம் ரெடி.

இது ரெகுலர் தயிர்சாதத்தைவிடப் பிரமாதமாக இருக்கும். எலுமிச்சங்காய் ஊறுகாய் அல்லது தக்காளித் தொக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு மதிய உணவாகவும் தந்தனுப்பலாம்.

(தொடரும்)

பா.ராகவன்