இதுவரை பார்க்காத போலீஸ் கதை..!



‘தீரன் அதிகாரம் ஒன்று’ சீக்ரெட்ஸ்

‘‘தமிழ்ல இதுக்கு முன்னாடி போலீஸ் கதைகள் நிறைய வந்திருக்கு. போலீஸ்னா ஒண்ணு அவர் ரவுடி மாதிரி நின்னு பிரச்னைகளை கையாள்வார். இல்லைனா பொறுக்கி மாதிரி இறங்கி எதிரிகளை என்கவுன்டர் பண்ணுவார். இப்படி ரவுடி - வில்லன் காம்பினேஷன், அப்புறம் சவால் விட்டு சரி பண்றது... இல்ல ஒட்டுமொத்த பிரச்னையையும் ஒருத்தரே கம்ப்ளீட்டா தீர்க்கறதுனு ஏராளமான போலீஸ் கதைகள நாம பார்த்திருப்போம்.

ஆனா, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ அப்படியில்ல. இது ரொம்பவே வித்தியாசப்படும்...’’ நம்பிக்கை மின்ன பேசிக்கொண்டே, தன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸரை நமக்கு ப்ளே பண்ணிக் காட்டி, நம் ரியாக்‌ஷனை எதிர்பார்க்கிறார் இயக்குநர் எச்.வினோத். ‘சதுரங்க வேட்டை’க்கு அடுத்து இப்போது கார்த்தியுடன் இணைந்து அடுத்த சிக்ஸருக்கு ரெடியாகியிருக்கிறார்.

‘‘பில்டப் பண்ணலை. உண்மையைத்தான் சொல்றேன். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ல நோ பன்ச் டயலாக்ஸ். பக்கத்து வீட்டுல, எதிர் வீட்டுல, உங்க அப்பா, உங்க அண்ணா, சொந்தக்காரர் இப்படி இவங்கள்ல யார் போலீஸ் ஆபீஸரா இருந்தாலும் ரியல் லைஃப்ல அவர் எப்படி செயல்படுவாரோ...

அந்த அதிகாரிங்களை நீங்க எப்படி பார்த்து ரசிப்பீங்களோ... அப்படித்தான் இந்த பட ஹீரோவோட ஆக்‌ஷன்களும் இருக்கும். ‘சிறுத்தை’ல கார்த்தி சாரே போலீஸ் ஆபீஸரா பண்ணியிருப்பார். ஆனா, இதுல வேற ஒரு போலீஸ் ஆபீஸரை பார்க்கப் போறீங்க!’’ திருப்தியாகப்பேசுகிறார் எச்.வினோத்.

எப்படி உருவானது?

‘ட்ரீம் வாரியர்ஸ்’ தயாரிப்பாளர் பிரகாஷ்பாபு சார்கிட்ட ரெண்டு, மூணு கதைகள் சொன்னேன். அதில் இந்தப் படத்தோட ஒன்லைன் அவருக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு. ‘சதுரங்க வேட்டை’க்கு முன்னாடி பத்திரிகை செய்தியா படிச்ச தகவலை கற்பனை கலந்து பண்ணின கதை. இப்ப அந்தக் கதையை மெரூகேத்த மறுபடியும் அந்த பத்திரிகை நியூஸை படிச்சப்ப, எனக்குள்ள நிறைய கேள்விகள் எழுந்தது.

அந்த கேஸை விசாரிச்ச அதிகாரிகிட்டயே அதைப் பத்தி கேட்டு தெரிஞ்சுக்க விரும்பினேன். அப்ப அவர் என்கிட்ட சொன்ன தகவலுக்கும், நான் யோசிச்சதுக்கும் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாமல் எதிர்பாராத திருப்பங்களோட இருந்தது. அந்த உண்மைச் சம்பவத்தை தேடிப் போகப் போக புதுப்புது கதவுகள் திறந்துட்டே இருந்துச்சு.

‘சதுரங்க வேட்டை’ல வொயிட் காலர் க்ரைம்ஸ் பத்தி பண்ணியிருந்தேன். இதுல டார்க் காலர் க்ரைம்ஸ் பண்ணியிருக்கேன். கார்த்தி சார்கிட்ட இந்தக் கதையை சொல்லும் போது அவரும் ரொம்பவே ஆச்சரியப்பட்டார்.

அவர் ‘சிறுத்தை’ பண்ணும்போது ஒரு போலீஸ் ஆபீஸர் அவர்கிட்ட சொன்ன ஒரு இன்ஸிடென்ட்டைத் தான் இப்ப நானும் கதையா பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சதும், ‘நம்மளையே இந்த கதை சுத்தி சுத்தி வருது’னு சந்தோஷமா சொல்லி கமிட் ஆனார்.

போலீஸ் ஆபீஸரோட லைஃப்தான் இந்தப் படம். போலீஸ் ஆபீஸர் தீரன் திருமாறனா கார்த்தி நடிக்கறார். ஆக்‌ஷன், லவ், ரொமான்ஸ், காமெடி தவிர ஒரு போலீஸ் ஆபீஸர் சந்திக்கும் பிரச்னைகள், சவால்கள் எல்லாத்தையுமே அவர் கையாண்ட ஒரு வழக்கு மூலமா சொல்லியிருக்கோம். இப்படி பல அத்தியாயங்கள் சேர்ந்த ஒரு அதிகாரம்தான் ‘தீரன் அதிகாரம் ஒன்று’.

கார்த்தி, ரகுல்தான் தெரியறாங்க. மத்தவங்க..?

கதைக்கான கேரக்டர்கள் நிறைய இருக்காங்க. கார்த்தி ஜோடியா டோலிவுட் டாப் ஹீரோயின் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறாங்க. அப்புறம் சத்யன், அபிமன்யு சிங், போஸ் வெங்கட்னு தெரிஞ்ச முகங்கள் நிறைய இருக்காங்க.

இந்தக் கதை நிறைய இடங்களுக்கு டிராவல் ஆகும். ஸோ, நார்த் இந்தியாவில் பெரும்பாலான இடங்கள்ல கதை நடக்கறதால கேரக்டர்கள் ரியலிஸ்டிக்கா இருக்கணும் என்பதற்காக எந்த ஸ்டேட்ல ஷூட் பண்றமோ, அந்த ஸ்டேட் ஆர்ட்டிஸ்ட்களை நடிக்க வச்சிருக்கோம்.

இந்தி, மராத்தி, போஜ்புரி நடிகர்கள் தமிழுக்கு வர்றாங்க. ராஜஸ்தான் பாலைவனம், மத்தியப்பிரதேஷ்னு படப்பிடிப்பு தொடர்ந்து பல வாரங்கள் நடந்தது. அங்கெல்லாம் சாப்பாடும், மொழியும்தான் பிரச்னையாக இருக்கும்னு நினைச்சோம்.

ஆனா, அங்க போனதும்தான் தெரிஞ்சது. சுட்டெரிக்கும் வெயில்... வறண்ட காத்து க்ளைமேட்னு எல்லாமே வேறயா இருக்கு. ட்ரை காத்து வீசினா நமக்கு வியர்க்காது. மாறா மூக்குல இருந்து பொலபொலனு ரத்தம் வந்திடும். மயக்கம் வந்திடும். குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகம்.

இப்படி நிறைய சிரமங்களைக் கடந்து படப்பிடிப்பு நடத்திட்டு வந்தோம். ஒட்டு மொத்த யூனிட்டோட ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஒரு கட்டத்துக்கு மேல அவங்க சப்பாத்தி எங்களுக்கு பிடிச்சுப் போச்சு. நம்ம பொங்கல் அவங்களுக்கு பிடிச்சிடுச்சு.

சத்யன் சூரியனின் கேமரா, வட இந்தியாவை விஷுவல் ட்ரீட்டா கொண்டு வந்திருக்கு. ஸ்டோரி போர்டு ரெடி பண்ணின பிறகு ஷூட் போனதால, நினைச்ச விஷுவலை கொண்டு வந்திருக்கோம். படத்துக்கு ஜிப்ரான் இசையமைச்சிருக்கார். ஆறு பாடல்களும் ஒவ்வொரு எமோஷன்ல இருக்கும்.

என்ன சொல்றாங்க ரகுல் ப்ரீத் சிங்..?

இதுல அவங்க வில்லேஜ் கேர்ள். கார்த்தியோட லவ்வர். ஸ்பாட்டுக்கு வந்துட்டா ரொம்ப புரொஃபஷனல். சொன்ன டைம்ல ரெடியா வந்து நிப்பாங்க. தெலுங்குல பிஸியா இருந்தாலும், தமிழ்லயும் நிறைய படங்கள் பண்ண விரும்பறாங்க.‘சதுரங்க வேட்டை’யும் சரி, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படமும் சரி... இரண்டுமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையா கொண்டது. எதனால இப்படி..?

நடந்த ஒரு விஷயத்தை சொல்லும்போது, மக்கள் எளிதா கனெக்ட் ஆகிடுவாங்க. நமக்குத் தெரிஞ்ச விஷயம்தான்னு ஆடியன்ஸ் மொதல்ல நினைச்சாலும், அதுலயே அவங்க அறியாத விஷயங்களை சொல்றப்ப ‘அட ஆமால்ல...’னு ஆச்சரியப்பட ஆரம்பிச்சிடுவாங்க.

 
நீங்க சம்பந்தப்படாத வரை உங்களுக்கு பின்னாடி நடக்குற எதுவுமே உங்களுக்கு தெரியாதுதானே! தினமும் படிக்கிற செய்திதான்னாலும், அதுக்கு பின்னாடி நடக்கற விஷயத்தை சொல்லணும்னுதான் எப்பவும் விரும்புவேன்.

இந்தக் கதைல நான் தொட்டிருக்கும் விஷயம்... பொதுவா நாம எதுக்கெடுத்தாலும் யாரையாவது ஈஸியா குற்றம் சொல்லிக்கிட்டே இருக்கறோம். போலீஸ் சரியில்லை... அரசியல்வாதி சரியில்லைனு கொதிக்கிறோம். அரசாங்க அதிகாரிகள் வேலையே செய்யாம இருக்காங்கன்னு கொந்தளிக்
கிறோம்.

ஆனா, நம்ம சிஸ்டம் எப்படி அமைஞ்சிருக்குனு புரிஞ்சுக்காம விட்டுடறோம். அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீஸ் எல்லாம் எங்கிருந்து வந்தாங்க? நம்மில் இருந்துதானே?இந்த உண்மையை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ல அழுத்தமா சொல்லியிருக்கேன்!