கவிதை வனம்



குட்டி மகளின் ஓவியத்தில்…

இரண்டு நேர் கோடு மேலே முக்கோணம்
குட்டியூண்டு வீடு எங்கள் வீடாம்
மென் நடைபோகிறேன்
உடன் என் குட்டிப் பெண்
வீட்டருகே பச்சைப் புல் வெளியில்

ஆடா மானா தெரியவில்லை
அதைத் தாண்டியதும்
குச்சி குச்சியாய் நீண்டிருந்தன
தைலக் காடாம் அது
அதை ஒட்டிய பாதையில்
தைல வாசத்தோடு நடக்கிறேன்
சட்டென பாதை முடிவது தெரியாமல்

வெண்ணிலாவுக்குள் இறங்கிவிட்டேன்
வேலைப் பரபரப்பில்
செஞ்சூரியனை முதுகில் கட்டி
ஓடிக்கொண்டே இருக்காமல்
என் குட்டி மகளின் ஓவியத்தில்
அவளோடு சேர்ந்து உறைந்தேகிடக்கலாம்

- நாகராஜ சுப்ரமணி

மரணப் பெருவெடிப்பு

திடுக்கிட்டு சுற்றிலும் பார்த்துத் தடுமாறி
பின் சுதாரித்து சிதறிய இடம் பார்த்து
இழப்பை உணர்ந்து
திரண்டு வந்த கண்ணீரை விழிகளில் தேக்கி

தொண்டையில் வெறுமை விழுங்கி
ஒற்றைப் பெருமூச்சுடன்
விம்மிச் சிணுங்கி சமாதானமாகி
வேறு விளையாட்டுகளில்
கரைந்துபோகிறது குழந்தை
ஒரு பலூனின் மரணப் பெருவெடிப்பில்

- கி.ரவிக்குமார்