துப்பறிவாளன்



கொலையுண்ட நாயைக் கொன்றவரை துப்பறியப் போய் பெரும் கொலைகாரக் கும்பலைப் பிடித்து அழிக்கும் சூப்பர் ஹீரோவே ‘துப்பறிவாளன்.’துப்பு துலக்குவதில் திறமையானவராக இருந்தாலும், சவால் விடும் கேஸ்கள் கிடைக்காமல் எரிச்சலில் இருக்கிறார் விஷால். அவரின் சகா பிரசன்னா.

காணாமல் போன மகளைத் தேடி ஆத்திரத்துடன் வரும் தலைவாசல் விஜய் கொடுக்கும் பிளாங்க் செக்கையும் காரண காரியத்தோடு மறுக்கும் விஷால், தன் பிரியமுள்ள நாயைக் கொன்றவரைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி கேட்டுக் கொண்ட பள்ளிச் சிறுவனின் கோரிக்கையை ஏற்கிறார்.

இறந்துபோன நாயின் தடம் தேடிப் போனவர்களுக்கு, அதிர்ச்சிகள் காத்திருக்கிறது. அடுத்தடுத்த கொலைகள், கடைசியில் குற்றங்களின் ஊற்றுக் கண்ணாக விளங்கும் கும்பலை படிப்படியாக அழிப்பதே மீதிக் கதை.

சூப்பர் ஹீரோ உருவாகும் வித்தையை, தேவையை முன்பாதியில் அழுத்தமாக விதைத்து எடுத்துச் சென்ற வகையிலும், ஷெர்லாக் ஹோம்ஸ் வகையான கதையை தமிழுக்கு அறிமுகப்படுத்திய விதத்திலும் மிஷ்கின் மெருகேற்றியிருக்கிறார்.

உயரம், சுறுசுறுப்பு, வேகம், பரபரப்பு, படபடப்பு என உடல்மொழியிலும், கதையின் பாரத்தை மொத்தமாக தோள் மாற்றாமல் சுமக்கும்போதும் முன் எப்போதும் பார்க்காத விஷால். எதிரிகளை பந்தாடும்போதும், சிறுவனின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும்போதும், ‘எங்கே நெருங்கி வாங்கடா’ என தில் காட்டும்போதும், இறந்து கிடக்கும் பிரியமானவளின் உடலுக்கு முன் கதறி அழும்போதும்... ஆஹா விஷால்!

உடன் பயணிக்கும் பிரசன்னா இயல்பில் ேநர்த்தி. கொஞ்சமும் அசராமல், இறுகிய புன்னகையில் ‘ஒரு காபி கிடைக்குமா?’ என ஒரு விரல் அசைத்து கேட்கும்போதும், பதட்டமே இல்லாமல் எதிராளியை கொல்வதற்காக அன்ன நடை நடக்கும்போதும், எதிராளியின் சைக்காலஜியைச் சிதைக்கும்போதும்... வில்லனாக வினய் கச்சிதம்.

அவருடைய ஐவர் கூட்டணியின் ஒற்றுமை புதுசு. அந்த ஒற்றுமையின் காரணம் கடைசி வரை காணக்கிடைக்கவில்லை. ஏனோ? கூட்டணியின் பெரியவர் பாக்யராஜ் பேச்சை குறைத்து நடிப்பில் மிரட்டுகிறார்.

அவரின் படங்களுக்குக் கூட அவர் இந்த வகை நடிப்பை வழங்கியதில்லை! திடுமென கொஞ்ச நேரமே வந்து சென்றாலும் அனு இம்மானுவேல் கவர்கிறார். கொலையும், பயமும், த்ரில்லுமாய் விரையும் படத்தில் அழகழகாய் கண்களில் விளையாடுகிற காதல் ரசிக்கும் வகை. இறுதியில் அப்படியே சரிந்து இமை மூடாமல் இறந்து கிடப்பது கண்களை ஈரப்படுத்த தவறாத காட்சி.

அப்படியே நேர் எதிராக ஆண்ட்ரியாவின் பரபரப்பும் துணிச்சலும் மிரட்டுகிறது. செயற்கை மின்னலை உருவாக்கி கொன்றதை நமக்கு புரிய வைப்பதற்கே அவ்வளவு நேரம் எடுக்கிறார் மிஷ்கின். விஷாலின் கேரக்டரை முன்னிருத்துவதற்கே ஆரம்பத்தில் அதிக நேரம் எடுத்துக் கொண்டதை தவிர்த்திருக்கலாம்.

அரோல் கரோலியின் பின்னணி படத்தின் டெம்போவை தக்க வைக்கிறது. தினேஷ் காசியின் சண்டைக்காட்சிகளில் சூடு பறக்கிறது. ஆக்‌ஷனில் தீப்பிடிக்கும் கார்த்திக் கேமரா, த்ரில்லர் எபெக்ட்டும் தருகிறது.குறைகள் இருந்தாலும் விறுவிறுக்க வைக்கிறான் துப்பறிவாளன்.     

குங்குமம் விமர்சனக்குழு