வாங்க பாஸ்... படம் பண்ணலாம்!



கேன்சரை ஜெயித்த இயக்குநர் ரமணாவின் கதை

இயக்குநர் ‘திருமலை’ ரமணாவிற்கு இது புத்துணர்ச்சி வருடம்!

கடவுள் ரமணாவுக்கு வைத்த செக்... கேன்சர். அதையும் தாண்டி, தானொரு ஃபீனிக்ஸ் என்பதை உணர்த்தியிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ஸ்டார்ட்... கட்...’ சொல்லத் தயாராகிறார்.

அவருக்குத் தேறுதலையும், வெற்றியையும் காலம் வழங்கலாம். அமைதி தவழும் சாந்தோம் வீட்டில் நடந்தது இந்த உரையாடல்.‘‘கொம்பை மண்ணுல குத்திக்கிட்டு ஜல்லிக்கட்டு காளை போல் பூமி கீறி, மண்ணை வாரியிறைத்து முன்னே நகரும் மூர்க்கம் இப்போ இல்லை. வேகம் மறந்து, நிதானம் கைகூடியிருக்கு. உதயம்னு நினைச்சது அஸ்தமனமாகவும், அஸ்தமனமென்று நம்பினது உதயமாகவும் மாறியது கடந்த ஆறு ஆண்டுகள்.

‘திருமலை,’ ‘சுள்ளான்’, ‘ஆதி’னு ஆரம்பிச்சு நாசரின் ‘குதிரை’ படத்தில் நடிச்சிட்டு இருக்கும்போது குரல் மாறிப்போனது தெரியுது. கேன்சர்னு சொல்றாங்க. பயாப்சி ரிப்போர்ட் கொடுத்தா, அது post dated death certificate மாதிரி எனக்குத் தெரியுது. கடவுள் எப்ப வேண்டுமானாலும் பேங்கில் போட்டு என்னை எடுத்துக்கலாம் என்கிற மாதிரி.

நடிகர் விஜய், பிரகாஷ்ராஜ், ராதாமோகன், விஜி, ரா.கண்ணன், வெங்கட்னு குறிப்பிட்ட ஆறு பேருக்கு அலைபேசுறேன். ‘உங்களைச் சந்திக்கணும்’னு சொல்றேன். ‘என்ன விஷயம் சொல்லுங்களேன்’னு சொல்றார் விஜய். ‘எனக்கு கேன்சர் விஜய்’னு சொன்னேன். ‘என்னண்ணா சொல்றே’ங்கிறார் விஜய். அன்னிக்கு சரியான மழை. காரெல்லாம் வர முடியாது.

முழங்காலுக்கு மேலே தண்ணி ஓடுது. விஜய், சகோதரி சங்கீதாவோடு வந்தார். ‘உடனே லண்டனுக்குப் போலாம்... எல்லாம் சரிபண்ணிடலாம்’னு கலங்கி ெசால்றார். ‘இங்கே எல்லா சௌகரியமும் இருக்கு விஜய், பார்த்துக்கலாம்’னு சொல்றேன். ெசால்லி வைச்ச மாதிரி அத்தனை பேரும் கூடினோம்.

இப்போது மனிதர்களைச் சேர்ப்பதற்கும், நண்பர்களைச் சேர்ப்பதற்கும் வித்தியாசம் தெரிகிறது. 1000 contacts இருந்ததில், நபர்கள் யாரு, நண்பர்கள் யாருன்னு தேடினால் 15 பேர் தேறலை. எனக்கு சினிமா, சினிமா, வெற்றி, வெற்றி இதுதான் தெரிந்தது.

ஆபரேஷனுக்கு போயிட்டோம். வெளியே நடிகர் விஜய், பிரகாஷ்ராஜ், ராதாமோகன், மனைவி... உறவுகள் நிக்கிறாங்க. கனத்த மௌனத்தைத் தாண்டிப் போறேன். டாக்டர் ராயப்பா... கூடுதல் டாக்டர்களோடு இருக்கிறார். ‘என்ன ஆகும், என்ன செய்யப் போறீங்க’ன்னு கேட்கிறேன். ‘அதிகபட்சம் பேச முடியாமல் போகலாம்’னு சொல்றாங்க.

பட்டினி, தோல்வி வந்தபோதுகூட பயந்ததில்லை. உயிர்ப்பயம்னு சொல்வாங்களே... அது வருது. அப்ப மரணத்தோட முகம் பார்த்தேன். அய்ேயா, ஒரு போர் வீரனுக்கு ஆயுதத்தை பிடுங்கிட்டு ‘முன்னாடிப் போ’னா எப்படி தேங்குவானோ.. அப்படி ஆகுறேன். எனக்கு பேச்சு மூலமாகவே எதையும் சொல்ல வரும். ‘தொண்டையில் ஓட்டை போடுவோம்.

அங்கே கடுகளவு பிரச்னை. ஓட்டையை மூடிட்டு பேசப் பழகலாம். பசிக்குது. பெல் அடிக்கிறாங்க, தூக்கம் வருதுனு சொல்ல முயற்சிக்கலாம்’னு சொல்றாங்க. ‘எல்லாவற்றையும் முயன்றால் முடியும்’னு புன்னகையோடு சொல்கிறார்கள்.

நீங்க நல்லவனா, கெட்டவனான்னு தெரிஞ்சிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு. அதை வாழ்க்கைத்துணை சொல்லிடும். ‘உதிரிப்பூக்கள்’ மாதிரி, ஊரே எதிர்த்தாலும் மனைவி இவன் நல்லவன்தான்னு சொன்னால் நம்பும்.

நான் இந்தக் கண்ணாடியெல்லாம் உடைச்சு கடவுள் படங்களைத் தூக்கி எறிஞ்சு, புத்தகங்களைக் கொளுத்தியிருக்கேன். ஆனால், என் சாந்தா என்னை கைகளில் ஏந்தியிருக்கா. வாசம் தெரியாது. சுவை அறியாது.

தூக்கி வீசின சாப்பாட்டுத் தட்டை எடுத்து, சோறு பொறுக்கி, சுத்தம் செய்து, மறுபடி கொண்டு வந்து ஊட்டி ‘மாத்திரை சாப்பிடணுமே... உனக்குப் பிடிக்காதுன்னு தெரியும், ஒரு உப்புக்கல் குறைஞ்சால் உனக்கு உள்ளே இறங்காதுன்னு தெரியும்’னு சொல்லி புகட்டியவள்.

ஆண்டவன் சிலபேரைத்தான் தன்னுடைய பிரதிநிதிகளாக உலகுக்கு அனுப்புவார். அப்படி அனுப்பியதில் ஒருத்தி சாந்தா. எல்லா வலியையும் அவளே சேர்த்து வைத்துக் கொண்டாள். டபுள் லக்கேஜ். கோவேறு கழுதை மாதிரி.

படிச்ச புத்தகம், கிடைச்ச அனுபவம், பெற்ற பாடம் எல்லாம் ஒரு பகுதிதான். அதையெல்லாம் தாண்டி ‘முன்னாடி போ... உன்னால் முடியும்’னு சொன்ன கடவுள் சாந்தா. ஜோதிகா, சூர்யான்னு கதை சொல்ல வைச்சு திரைப்படத்திற்குள் வரவைத்தது, வந்தது ரமணா அல்ல... சாந்தா ரமணாதான். அவள் பெண் அல்ல... கடவுள்!

அதுக்கு முன்னாடி எதுவுமே தெரியாது. மனைவி அழகா இருப்பாள். பணம் கொடுத்தால் வாங்கி வைப்பாள். திரும்பிக் கேட்டால் ஒரு வார்த்தை பேசாமல் திருப்பியும் தருவாள். அப்போ வருமானம் இல்லாமல் வறுமை சூழ்ந்தது. சம்பாதித்து வாங்கின அசோக் நகர் வீட்டை, அந்த ஒரு ஆதாரத்தையும் விற்பதற்கு கையெழுத்து போட்டுத் தருகிறாள்.

ஒரு சலிப்பு, வேண்டா வெறுப்பு இருக்கணுமே... முகமெல்லாம் தேடிப் பார்க்கிறேன்... இல்லை. அவளே பலம்... அவளே ஆதாரம்.  இந்த வீடு சொர்க்கம். முதலிரண்டு மாதத்தில் நான் வீட்டுக்கு வந்தப்ப என் குழந்தை ‘அப்பா மாதிரியே யாரோ வந்திருக்காங்க அம்மா’னு சொல்லியிருக்கு. குழந்தை பொய் சொல்லாது. வெயிட் இறங்கி, ஒடுங்கி, முகம் சப்பையாகி இருந்திருக்கேன்.

ஜந்து மாதிரி இருந்திருக்கேன். ஆணவமா, அராஜகமா, ஆணாதிக்கமா, ‘யாரங்கே’னு கை தட்டி கூப்பிட்டவனை இந்தக் குடும்பம் சரி பண்ணியிருக்கு. நெகிழ்த்திப் போட்டு பண்படுத்தியிருக்கு. 2010ல நான், மனைவி, இரண்டு மகள்கள்னு இருந்தோம்.

இப்போ 2017ல் நாங்கள் நண்பர்களாக இருக்கோம். என் மூத்த மகள் தர்ஷினி ஜர்னலிசம் படிக்கிறாங்க. இளைய மகள் ஸ்வேதா எட்டாவது படிக்கிறாங்க. இந்த இடைவெளியில் சும்மா இருந்தேன். ஃப்ரீயா இருந்தேன். ஜாலியா இருந்தேன். வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்.

கொஞ்சம் படிப்பு, கொஞ்சம் தத்துவம், கொஞ்சம் ஆன்மிகம், கொஞ்சம் கம்ப்யூட்டர், கொஞ்சம் மியூசிக், நிறைய ஸ்கிரிப்ட்னு இருந்தேன். இப்போ ஒரு வார்த்தைனாலும் ‘சுள்ளு’ன்னு தைக்கிற வீரியம் வந்திருக்கு.

கதையில ஹார்மனி வந்து உட்காருது. செம்மையாக எழுத முடியுது. உள்ளத்தில் அமைதியும், குழப்பமற்ற மனதும், நெஞ்சுக்கு நிம்மதியும் வாய்ச்சிருக்குஇனிமேல் என்னால் முன்பு போல் பரபரப்பான படம் செய்ய முடியுமான்னு தெரியவில்லை. ஆனா, அர்த்தமுள்ள படங்கள் செய்வேன். வேகம், கதாநாயக மிடுக்கு, முறுக்கு அதில் குறைந்திருக்கலாம். இயல்பான மனிதர்களை இனி என் படங்களில் பார்க்கலாம்.

இதுவரை தாங்கியவர்களை மறக்க முடியாது. அவர்களுக்கு மனம் குளிர மரியாதையான படங்களைத் தருவதே சிறப்பு.  இந்த வருடத்திற்குள் புதிய படத்திற்கான அறிவிப்பு வந்துவிடும். என்னுடைய சினிமா வாழ்க்கையில் இது புது இன்னிங்ஸ்.நல்ல படம் தரத் தயாராக இருக்கேன். நல்ல இயக்குநராக இருக்க முயற்சி பண்றேன். கோடிட்ட இடங்களை நிரப்புறதுதான் அண்ணே வாழ்க்கை!’’நெகிழ்கிறார் ரமணா. வாங்க பாஸ்... வாங்க.

நா.கதிர்வேலன்

ஆ.வின்சென்ட் பால்