மகளிர் மட்டும்



சம்பிரதாயமான வாழ்க்கையில் உழலும் தோழிகளான மூன்று பெண்களை ஒன்று சேர்த்து நினைவுப் பயணமாக்கி அவர்களின் சந்தோஷ - வேதனை பக்கங்களை எடுத்துரைப்பதே ‘மகளிர் மட்டும்’.

பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி. மிகவும் ப்ரியமும் சுவாரஸ்யமும் நிரம்பியிருந்தது அவர்களின் பள்ளி நினைவுகள். வாழ்க்கை மூன்று திசையில் பிரித்துப் போட்டதில் அவர்கள் பரிச்சயம் மறந்து இருக்கிறார்கள்.
ஊர்வசியின் மருமகள் ஜோதிகா அவர்களை ஒன்றிணைத்து வைக்க நினைக்கிறார்.

அதற்கான திட்டமிடுதலாக வடநாட்டை நோக்கிய, யாரும் அறியாத மூன்று நாள் பயணம் திட்டமிடப்படுகிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் பகிர்ந்ததும், உணர்ந்ததும், புரிந்துகொண்டதுமே ‘மகளிர் மட்டும்.’

பெண்களின் நிலையையும், படும் பாடுகளையும், கடமை என்ற பெயரால் நசுக்கப்படுவதையும் காட்டுகிற ஊஞ்சல் மாதிரி முன்னும்பின்னுமாய் போய் வருகிற திரைக்கதை படத்தின் பலம். மாறுபட்ட இந்த உத்தியில் எந்தக் குழப்பத்திற்கும் இடம் தராமல் தன் ஸ்கிரிப்ட் நுணுக்கத்தைக் காட்டுகிறார் டைரக்டர் பிரம்மா. பிரச்னைகள் நெருக்கும்போதே பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்கிற அண்மை பலருக்கும் வாய்க்கிறது என்ற உண்மையை உரைக்கிறார்.

மிகவும் தன்மையான பாத்திரத்தை உற்சாகமாகவும், எளிமை கொண்டும் நடித்திருக்கிறார் ஜோதிகா. அதிகாரத்தின் துணைகொண்டு பெண்களை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆண்களின் எதேச்சதிகாரம் அவர்களை எப்படி குதறிப்போடுகிறது என்பதை நீட்டி முழக்காமல், கருத்து வகுப்பெடுக்காமல் சொல்லியிருப்பது அழகு.

காலங்கள் கடந்து முகநூலில் தோழியின் முகம் பார்த்து குதூகலிப்பது, குரல் கேட்டு ஆனந்தத்தில் கூச்சலிடுவது என ஊர்வசி அருமை. அனுபவம்  பேசுகிறது. அவருக்கு பானுப்ரியாவும், சரண்யாவும் சளைத்தவரில்லை. பானுப்ரியா பெரிய வீட்டின் அதிகாரத்தையும் தாங்கிக்கொண்டு குடும்பத்தை நடத்துகிற விதம் அழகு சித்திரம். குடிகாரக் கணவனைப் பொறுத்துக் கொண்டு மாமியாரைக் கவனித்துக் கொள்ளும் விதம் சரண்யாவுக்கு வழி வந்த நடிப்பு.

கூப்பாடாக இல்லாமல் பெரும்பாலான பெண்கள் தம் சுயம் இழந்து, ஆகிருதி குறைந்து, ஆண்களின் நலன் ஒன்றிற்காகவே பலிகடா ஆவதை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜோதிகாவின் வழியாக இந்த வாழ்வின் வேதனைகளை, காதலை, பரிவை அந்த மூன்று பெண்களும் காட்டுகிறார்கள். அவர்களின் இளம் வயது பள்ளிப்பருவ நடிப்பிலும் அதே மலர்ச்சி. மனைவியை விரட்டி மிரட்டும் கேரக்டருக்கு நாசர் அப்படியே பொருத்தம். அவரது முரட்டு மகன் பாவல் நடிப்பில் உயிர்த் ததும்பல். மாப்பிள்ளை மாதவன், போலீஸ் விதார்த் குறுகிய நேரமே வந்தாலும் குறையில்லை.

ஊர்ஊராக சத்தீஸ்கர் வரைக்கும் சென்றதில் கண்ணுக்கு குளிர்ச்சியே தவிர, கதைக்கு வலிமை சேர்க்கவில்லை. இன்னும் கொஞ்சம் சம்பவங்கள் கோர்த்திருக்க வேண்டும். எஸ்.மணிகண்டனின் ஒளிப்பதிவு கண்ணில் நிற்கிற பதிவு. ஜிப்ரான் பின்னணியும், பாடல்களும் செறிவு.பெண்களின் அன்பைப் புரிந்து, சுதந்திரம் வேண்டும் என்பதை பொய்யின்றி சொன்ன அக்கறைக்காக பாராட்டலாம்.

குங்குமம் விமர்சனக்குழு