அகத்தின் அழகு லிப்ஸ்டிக்கில் தெரியும்!



‘உன்னாலே உன்னாலே’ படத்தின் ‘ஹெல்லோ மிஸ் இம்சையே...’ பாடலில் ‘உதட்டோடு உதட்டுச்சாயம்... ஆண் நெஞ்சில் ஆறாக்காயம்...’ என்று வரும். உண்மையில் ஆண்நெஞ்சில் ஆறாக்காயமாக மாறிவிடும் அளவுக்கு லிப்ஸ்டிக் அவ்வளவு பெரிய விஷயமா?

‘‘நிச்சயம் சாதாரண லிப்ஸ்க்கும், லிப்ஸ்டிக் லிப்ஸ்க்கும் உள்ள அழகே தனிதான். ஏன், முதன்முதலில் உதட்டுச்சாயம் பூசிக்கொண்ட கிளியோபாட்ராதானே உலக அழகியாக எகிப்திய பேரரசுக்கே சவாலாக நின்றார்!” என்று கெத்தாக பேச ஆரம்பித்தார்கள் அழகுக்கலை நிபுணர்களான ஷிவ்வும் ஜெயந்தியும்.

‘‘லிப்ஸ்டிக் தேர்வு, லிப்ஸ்டிக் சோதனை இதுவே பெரிய கலை. சிலர் லிப்ஸ்டிக் வாங்கப் போனா குறைஞ்சது ஒரு மணி நேரம் செலவிடுவாங்க. அந்த அளவுக்கு மேக்கப்களில் லிப்ஸ்டிக் முக்கியம். எப்படியெல்லாம் லிப்ஸ்டிக் பயன்படுத்தக் கூடாது, எப்படியெல்லாம் லிப்ஸ்டிக் தேர்வு செய்யணும்னு சொல்றேன் கேளுங்க...’’ என பட்டியலிடத் தொடங்கினார் ஷிவ் (Bridal Makeup Artists, Trios).

லிப்ஸ்டிக் டெஸ்ட்:முதல்ல நம்ம லிப்ஸ் என்ன வடிவம், எப்படிப்பட்ட ஸ்கின்னு புரிஞ்சுகிட்டு லிப்ஸ்டிக் தேர்வு செய்யணும். சிலர் கைகளுடைய பின்பக்கம் அல்லது விரல் நுனி இப்படி பயன்படுத்துவாங்க. ஆக்சுவலா உதட்டுல லிப்ஸ்டிக் போட்டுதான் டெஸ்ட் பண்ணணும்.
காரணம், நம் கைகளுடைய கலரும், லிப் கலரும் வேற வேற.

அதேபோல லிப்ஸ்டிக்கை நேரடியா போட்டுக்கறதை முடிஞ்சவரை தவிர்க்கணும். லிப்ஸ்டிக் பிரஷ் பயன்படுத்தி போடணும். டெஸ்ட் பண்ற பெரும்பாலான இடங்கள்ல லிப் பிரஷ் இருக்கும். இல்லைனா isopropyl என்கிற
திரவம் இருக்கும்.

இதுல லிப்ஸ்டிக்கை முக்கிட்டு நேரடியா போட்டுக்கலாம். உதடுகள் நம் முகத்தை விட சாஃப்ட். அடுத்து இந்த பேல் கலர்கள், அதாவது உதடு வெளுத்துப்போன நிறங்கள்ல லிப்ஸ்டிக் தேர்வு செய்வதைத் தவிர்க்கணும். மேட் லிப்ஸ்டிக், அதாவது கொஞ்சம் ட்ரையா நேரடிக் கலர்கள்ல லிப்ஸ்டிக் இருக்கும். உதடு பெரிசா இருக்கும் பெண்கள் இந்த லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம். க்ளாஸ் லுக் அல்லது பளபளன்னு போட்டுக்கிட்டா இன்னும் பெரிய உதடா காட்டும்.

நம்ம ஊர் பெண்கள் அதிகம் தப்பு பண்றது இந்த மேட், க்ளாஸ் லிப்ஸ்டிக் தேர்வுலதான். Loreal, Nivea, Ponds மாதிரியான நிறுவனங்கள் ஸ்கின்கேர் புராடக்ட் விற்பனை செய்யறாங்க. ஆனா, MAC, Lakme, Revlon போன்ற நிறுவனங்கள் மேக்கப் புராடக்ட் நிறுவனங்கள்.

மேக்கப் பிராண்ட்ல மேக்கப் அயிட்டங்கள் வாங்கணும். ஸ்கின் கேர் நிறுவனங்கள் கிட்ட ஸ்கின் புராடக்ட்ஸ் வாங்கணும். கல்யாணம், விழாக்கள், நிகழ்ச்சிகள்ல க்ளாஸ், மாய்ச்சுரைஸர் வகை லிப்ஸ்டிக்குகளைத் தவிர்க்கணும். இல்லைன்னா வெப்பத்துல உருகி கசிய ஆரம்பிச்சு லிப்ஸ் ஷேப் மாறிடும். இது HD குவாலிட்டி வீடியோல அல்லது புகைப்பட ஆல்பங்கள்ல பளிச்சுனு காட்டிக் கொடுத்துடும்.

மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்த பெரும்பாலான பெண்கள் தயங்குவாங்க. ரொம்ப அடிக்கிற மாதிரி இருக்குமோன்னு நினைக்கறாங்க. க்ளாஸ் லிப்ஸ்டிக் டெய்லி பயன்பாட்டுக்கு ஓகே. ஆனா, விழாக்கள், புகைப்படங்களுக்கு மேட்தான் சரியான தேர்வு...’’ என ஷிவ் முடிக்க, லிப்ஸ்டிக்கை எப்படி போட்டுக்கொள்ள வேண்டும், யாருக்கு என்ன லிப்ஸ்டிக் செட் ஆகும் என விவரிக்க ஆரம்பித்தார் ஜெயந்தி குமரேசன்.

“டிரெடிஷனல் உடைகள், அதாவது பட்டுச் சேலைகளுக்கும், தென்னிந்திய பார்ட்டி உடைகளுக்கும் கொஞ்சம் அடர் நிறத்தில் கோல்டன் கலர் கலந்த டபுள் ஷேட்கள் பயன்படுத்தலாம்.

அதுவே இந்தோ - வெஸ்டர்ன், அதாவது மஸ்தானி, பலாஸோ, சல்வார் மாதிரியான உடைகளுக்கு பிங்க் ஷேட்ஸ் நல்ல சாய்ஸ். வெஸ்டர்ன் உடைகள்னா தோல் நிறம், நியூட்ரலைஸ்ட் வண்ணம் ஓகே. நயன்தாரா இதை அதிகமா பயன்படுத்துவாங்க. இந்த நியூட்ரலைஸ் ஸ்டைல் லிப்ஸ்டிக் உங்க தினப் பயன்பாட்டுக்குக் கூட நல்ல தேர்வா இருக்கும்.

அடர்நிற லிப்ஸ்டிக் போட்டுக்கிறப்ப கண்கள்ல மேக்கப் கொஞ்சம் குறைவா போட்டுக்கணும். இரண்டுமே ஹெவி மேக்கப்னா பார்க்கிறவங்க ‘பவுடர் மூஞ்சி’னு கலாய்ப்பாங்க. அதுவே கண்கள்ல மேக்கப் குறைவா போட்டுக்கிட்டா டார்க் லிப்ஸ்டிக்குக்கு போகலாம். ஏன், சும்மா முகம் கழுவி சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டாலே நல்லா மேக்கப் செய்த மாதிரி தெரியும். அந்த அளவுக்கு டார்க் லிப்ஸ்டிக் ஸ்பெஷல். 

கொஞ்சம் டஸ்கி பெண்கள் அடர் நிற லிப்ஸ்டிக் அல்லது நேரடி கலர்கள் பயன்படுத்தலாம். ஃபேர் ஸ்கின்னுக்கு எந்தக் கலரும் பொருந்தும். ஆனாலும் அடர் சிவப்பு, அடர் ப்ரவுன் கலர்களைத் தவிர்ப்பது நல்லது. உதடு கொஞ்சம் கருப்பா இருந்தால் டார்க் கலர்ஸ் பயன்படுத்தணும். குறைந்தபட்சம் ரூ.200 அளவாவது செலவிட தயார்னா மட்டுமே லிப்ஸ்டிக் பயன்படுத்துங்க. குறைந்த, மட்டமான பிராண்ட் வேண்டாம். 

லிப் லைனர்:

என்ன கலர் லிப்ஸ்டிக்கோ அதே ஷேட்லதான் லிப் லைனர் போடணும். சிலர் டார்க் கலர் போட்டு ஸ்கெட்ச் அவுட் லைன் போட்ட மாதிரி பயன்படுத்துவாங்க. அந்த ஸ்டைல் ஒரு சிலருக்குதான் பொருந்தும். அப்புறம் உதட்டை விட பெரியதா லிப்ஸ்டிக் போடக்கூடாது. முடிந்தவரை இதழ்களோட இரு பக்க ஓரங்கள்லயும் கவர் செய்யாம விடணும். இல்லைனா வெளிய பரவாம போட்டுக்கணும். லிப்ஸ்டிக், லிப் க்ளாஸ், லிக்விட், க்ரீம்... இந்த வரிசைல லேட்டஸ்ட் ட்ரெண்ட் லிப்ஸ்டிக் கிரேயான்ஸ்!

கடைசியா ஒண்ணு. லிப்ஸ்டிக் போட்டுக்கறது உடலுக்கு நல்லதா கெட்டதானு யோசிக்கறது வேற. அது தனி டாபிக். ஆனா, போடணும்னு முடிவு செஞ்சுட்டா சரியான முறைல போடறதுதான் நல்லது...’’ என்கிறார் ஜெயந்தி.                   

ஆர்கானிக் பிங்க் லிப்ஸ்!

உடனே எனக்கு பிங்க் லிப்ஸ் வேண்டும் எனத் தோன்றினால், பீட்ரூட் சாறை குழந்தைகள் டூத் பிரஷ்ஷால் நனைத்து இதழ்களில் மென்மையாகத் தேய்த்தால் இயற்கையான முறையில் லிப்ஸ்டிக் பூசியதுபோல் ஆகும். கூடவே இதழ்களில் தென்படும் கருப்பு நிறமும் குறைந்த நிலையில் தெரியும்.

பல் தேய்க்கும் போது கூட இந்த பிரஷ் ட்ரீட்மென்ட்டை தொடரலாம். அழகிய பிங்க் நிற லிப்ஸ்க்கு சொந்தக்காரி ஆகலாம். கொத்தமல்லி சாறும் இதழ்களில் பூசி வர இதழ்களின் கருமை நீங்கும். முடிந்தவரை ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட்ஸ் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவைதான் இதழ்களுக்கு எதிரி.