இதுக்கான விடைதான் ஸ்பைடர்!



ரகசியத்தை உடைக்கிறார்

தேசப் பாதுகாப்புக்கு இருக்கிற உபகரணங்களை தன் தேவைக்கு ஹீரோ ஏன் பயன்படுத்தறார்?

‘‘பதினாறு வருஷம் ஆகிடுச்சு, ‘தீனா’ வந்து. அப்ப எனக்கிருந்த சினிமா மீதான நேசிப்பும், பயமும் இப்பவும் இருக்கு.  இன்னமும் நான் சினிமாவை கத்துக்கிட்டேன்னு சொல்ல முடியாது. இங்குள்ள மனிதர்கள், டெக்னிக்ஸ், கதை, ஸ்கிரிப்ட்னு ஒவ்வொன்றையும் ஒவ்வொரு நொடியும் கத்துக்கிட்டிருக்கேன். புதுசா பூத்துக்கிட்டே இருக்கேன்.

அனுபவங்கள் கொஞ்சம் சேர்ந்திருக்கு. அதனாலேயே பயமும் அதிகரிச்சிருக்கு. நல்லா செய்யணும்கிற பதட்டம் இப்ப கூடியிருக்கு...’’தன்னடக்கமும் எளிமையுமாக புன்னகைக்கிறார் இந்தியாவின் மோஸ்ட்வான்டட் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ்.

இந்த முறை டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவுடன் கைகோர்த்திருக்கிறார். ‘ஸ்பைடர்’ படத்தை சென்ஸாருக்கு அனுப்பும் வேலைகளுக்கிடையே பேச ஆரம்பித்தார்.   ‘‘பத்து வருஷங்களுக்கு முன்னாடி விஜயவாடால மகேஷ்பாபுவோட ‘ஒக்கடு’ பார்த்தேன்.

அது வெளியாகி மூணு வாரங்கள் ஆன பிறகும் கூட்டம் குறையலை. திருவிழா மாதிரி அவரது ரசிகர்கள் கொண்டாடிட்டு இருந்தாங்க. அவர் ‘போக்கிரி’ பண்ணும் போதே அவரை இயக்க ஆசைப்பட்டேன். அப்புறம் ‘துப்பாக்கி’யை நானே தயாரிச்சு அவரை இயக்கணும்னு நினைச்சேன். சரியான சந்தர்ப்பங்கள் அமையல. அவரோட எப்ப படம் பண்ணினாலும் அதை தமிழ், தெலுங்குனு ரெண்டு மொழிகள்லயும் ஒரே நேரத்துல செய்யணும்னு மட்டும் உறுதியா இருந்தேன்.

‘ஸ்பைடர்’ல அது கைகூடியிருக்கு. உண்மையை சொல்லணும்னா மகேஷ்பாபுவோட ஒத்துழைப்பு பிரமிக்க வைச்சது. அமீர்கானுக்கு அப்புறம் என்னை ஆச்சர்யப்பட வைச்ச ஆக்டர். ஆமா, அப்படித்தான் சொல்லணும். இந்தி ‘கஜினி’ முடிஞ்சதும் அமீர்கான் என் பக்கத்துல வந்து, ‘ஏதாவது ரீ ஷூட் பண்ணணும்னு நினைச்சா தயங்காம கேளுங்க, டேட்ஸ் தரேன்’னு சொன்னார். அதே வார்த்தைகளை மகேஷ்பாபுவும் ‘ஸ்பைடர்’ முடிஞ்சதும் கேட்டார்...’’ நெகிழ்ச்சியுடன் அசை போடுகிறார்  ஏ.ஆர்.முருகதாஸ்.

முதல் முறையா ஒரே நேரத்துல ரெண்டு மொழிகள்ல படம் பண்ணியிருக்கீங்க. எப்படி இருந்தது இந்த அனுபவம்..?யுனிவர்சிட்டில படிச்ச உணர்வு. ரெண்டு மொழியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்னு புரிஞ்சுகிட்டேன். க்ளோஸப் ஷாட்ஸ் தவிர மத்த சீனெல்லாம் பொதுவா அப்படியே விட்டுடுவாங்க.

நாங்க அப்படி செய்யலை. ஒவ்வொரு ஷாட்டையும் தனித்தனியா தமிழ், தெலுங்குல எடுத்திருக்கோம். அந்தக் காலத்துலயும் பைலிங்குவல் படங்கள எடுத்திருக்காங்க. என்ன... டீடெயிலா நமக்கு தெரிஞ்சிருக்காது.

உதாரணத்துக்கு ‘மிஸ்ஸியம்மா’, ‘வசந்த மாளிகை’. ஒரே நேரத்துல ரெண்டு மொழிகள்ல ஷூட் செய்தாலும் ஹீரோஸ் வேற வேற. சிவாஜியை இந்தப் பக்கம் எடுப்பாங்க. நாகேஸ்வர ராவை வைச்சு அந்தப் பக்கம் ஷூட் செய்வாங்க. ரங்காராவ், சாவித்ரியம்மா, கண்ணாம்பானு இரு மொழிகளுக்கும் பொருந்தற நட்சத்திரங்களை புக் செய்வாங்க.

‘ஸ்பைடர்’ இதுலேந்து மாறுபட்டது. ஹீரோ ஒரே ஆள்தான். ஒவ்வொரு ஷாட்டையும் ரெண்டு தடவை எடுக்கணும், டயலாக்ஸ், எமோஷன்ஸ் உட்பட. டெக்னீஷியன்ஸ் மட்டுமில்ல... ஹீரோவும் சோர்வடைஞ்சார்னா ஸ்க்ரீன்ல நல்லா இருக்காது. இத்தனை சிரமங்களையும் மீறி படத்தை எடுத்து முடிச்சிருக்கோம். கிரெடிட் மொத்த யூனிட்டுக்கும் போய்ச் சேரணும்.

எப்படி வந்திருக்கு ‘ஸ்பைடர்’?

திருப்தியா. எனக்கு மட்டுமில்ல... ஒர்க் பண்ணின நடிகர்கள், டெக்னீஷியன்ஸ்னு எல்லாருக்குமே ஒரு நிறைவு இருக்கு. முதல் முறையா தமிழுக்கு மகேஷ்பாபுவை கொண்டு வந்திருக்கேன். ஒரு ஸ்டைலிஷான ‘ஸ்பை’யா வர்றார். அவருக்கு ஜோடி ரகுல் ப்ரீத் சிங். பர
பரப்பான திரைக்கதைக்கான மெயின் ரிலீஃப் அவங்கதான்.

இவங்க தவிர, எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்ஜே.பாலாஜினு கதைக்கான ஆட்கள் இருக்காங்க. இதை வெறும் உளவாளி கதை, ஹைடெக்கான கதைனு சொல்லிட முடியாது. இண்டலிஜென்ஸ் பீரோவுல ஒர்க் பண்ற ஓர் இளைஞன், தேசத்தின் பாதுகாப்புக்கு இருக்கிற உபகரணங்களை தன் தேவைக்கு பயன்படுத்தறார். அது ஏன்? விடைதான் ‘ஸ்பைடர்’.

சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். ‘துப்பாக்கி’க்குப் பிறகு அவரோடு கைகோர்த்திருக்கேன். எனர்ஜி லெவல் அவருக்கு குறையவே இல்ல. ஹாரிஸ் ஜெயராஜ் பாடல்கள் ஏற்கெனவே ஹிட்.

பின்னணில கலக்கியிருக்கார். தாகூர் மது, என்.வி.பிரசாத் இதை தயாரிச்சிருக்காங்க. அவங்க ரெண்டுபேருமே எனக்கு ரொம்ப வருஷ பழக்கம். காட்சிக்கு தேவையானதை விட அதிகமாவே செலவு செய்யத் தயாரா இருந்தாங்க. தமிழ்ல லைக்கா ரிலீஸ் பண்றாங்க.

இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் மாதிரி உங்க விழுதுகள்தான் இப்ப இண்டஸ்ட்ரியை கலக்கிட்டிருக்காங்க. உங்ககிட்ட அசிஸ்டென்ட் ஆக என்ன தகுதி வேணும்?ஒரு சிலர் இண்டஸ்ட்ரிக்கு நிறைய ஹீரோக்கள் கொடுப்பாங்க.

சிலர் நிறைய டெக்னீஷியன்ஸை தருவாங்க. நான் நிறைய இயக்குநர்களை அறிமுகப்படுத்தணும்னு நினைக்கறேன். உதவி இயக்குநரா நான் இருந்தப்ப என்னை யாராவது கைதூக்கி விட மாட்டாங்களானு ஏங்கிட்டும் எதிர்பார்த்துட்டும் இருந்தேன்.

அந்த ஏக்கம் ப்ளஸ் எதிர்பார்ப்பை என் உதவியாளர்களுக்கு பூர்த்தி செய்யணும்னு நினைக்கறேன். என்கிட்ட மூணு, நாலு படங்கள் ஒர்க் பண்ணினவங்கள டைரக்டரா அறிமுகப்படுத்தறேன்.

அசிஸ்டென்ட்டா சேர விரும்பறவங்ககிட்ட என் வேவ்லென்த், டேஸ்ட் இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். ரெண்டு சிட்டி பையன்கள், ரெண்டு கிராமத்து பையன்கள், தவிர ஒரு பெண், ஏழ்மைல இருக்கிற ஒருத்தர். இந்த ஈக்குவேஷன்லதான் அசிஸ்டென்ட்ஸ் வைச்சிருக்கேன். இதுல ஒருத்தர் டைரக்டரா உயர்ந்த பிறகுதான் அந்த இடத்துக்கு அதே குவாலிஃபிகேஷனோட இன்னொருத்தரை செலக்ட் செய்வேன்.

மகேஷ்பாபு, பிரபாஸ், ராம் சரண், ராணானு டோலிவுட் ஹீரோக்கள் கவனம் இப்ப தமிழ் பக்கம் திரும்பியிருக்கே..?

தமிழ்ப்படம் தெலுங்குக்கு போகும்போது நமக்கு எக்ஸ்ட்ராவா ஒரு மார்க்கெட் உருவாகுது. அப்படித்தான் அவங்களுக்கும். தவிர தெலுங்கு நடிகர்கள்ல பெரும்பாலானவங்க தமிழகத்துல வளர்ந்தவங்க, படிச்சவங்கதான்.

இன்னொரு விஷயம், இப்ப மொழிதாண்டி, நாடுகள் கடந்து படங்கள் ரசிக்கப்படுது. அதனால எல்லாருமே அடுத்தடுத்த இண்டஸ்ட்ரில கால் பதிக்கிறாங்க. இதை ஆரோக்கியமான விஷயமாதான் பார்க்கறேன்.

ஏ.ஆர்.முருகதாஸ்

மை.பாரதிராஜா