மனிதர்களைப் பிணமாக்கும் ஆதிவாசிகள்..?



அந்தமானின் நிஜக் கதை

அந்தமானின் தலைநகரான போர்ட்பிளேரிலிருந்து 90 கி.மீ. உள்ளே சென்றால் காதம்தலாவில் உள்ள ஹாம்லெட் என்ற ஜாரவா வனப்பகுதி உங்களை வரவேற்கும். ஆனால் -சூரியன் மறையத் தொடங்கினதும் அங்குள்ள அரசு பழங்குடி நலவாழ்வு அமைப்பான ‘அந்தமான் ஜன்ஜதி விகாஸ் சமிதி’ (AAJVS) பரபரப்பாகிவிடும். காரணம் -வந்திருக்கும் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பாக வழி அனுப்பி வைக்க வேண்டுமே என்ற பயம்தான்!
எனில், யாரால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆபத்து வரும் என்று அஞ்சுகிறார்கள்? காட்டு விலங்குகளாலா..?இல்லை. ஜாரவா பழங்குடியின மக்களால்!

வெறும் நானூற்றுச் சொச்சம் மக்கள் தொகையைக் கொண்ட இவர்களைக் கண்டுதான் வலிமையான இந்தியா பயப்படுகிறது!  ஜாரவா பழங்குடியினர் ஆக்ரோஷமானவர்கள். தங்கள் நிலத்தின் மீது விமானம் பறந்தால்கூட அதன் மீது அம்பு எய்யும் ஆவேசக்காரர்கள். அத்துமீறி அவர்கள் மண்ணில் கால் வைத்தால் அவ்வளவுதான். பிணமாக்கி விடுவார்கள்.

ஜாரவா ஆதிவாசிகள்

ஜாரவா வனப் பகுதியைப் பிளந்து கொண்டு செல்லும் அந்தமான் ட்ரங்க் சாலையில் உள்ள எச்சரிக்கைப் பலகைகளைப் படித்தால் பீம்புஷ்டி லேகியம் சாப்பிடும் பயில்வான்களுக்கும் லைட்டாகத் தொடை நடுங்கும். முழுநிலவு நாட்களில் இந்த வனப்பகுதியில் வசிக்கும் மற்ற மக்களேகூட தங்களின் உயிர் பிழைக்குமா என டாஸ் போட்டுப் பார்த்தபடி வீட்டுக்குள்ளேயே நடுங்கிக் கிடப்பார்கள். இரவில் கடவுளே வந்து தரிசனத்துக்குக் கூப்பிட்டாலும் மக்கள் வெளியே வரவேமாட்டார்கள்.

காரணம் ஜாரவா ஆதிவாசிகள். வனப்பகுதியில் உள்ள மற்ற குடிகளின் வசிப்பிடங்களுக்குள் நுழைந்து ஆடு, கோழிகள் முதல் பழங்கள் வரை கையில் கிடைப்பதை எல்லாம் கொள்ளை அடிப்பதும்; தடுக்க முயன்றால் உடலைத் துளைத்து அம்புப் படுக்கையில் கிடத்தி நதியோரம் வீசுவதும் இவர்கள் வழக்கம்.

இவ்வளவு கொடூரமானவர்களா இந்தப் பழங்குடிகள்?

‘ஆதிம் ஜன்ஜதி விகாஸ் சமிதி’யின் (AAJVS) அதிகாரி அதுல் மோண்டலிடம் பேசினோம். ‘‘ஜாரவா மக்கள் பூர்வகுடிகள். இப்போது அந்தமானில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் இந்திய சுதந்திரத்தின்போது வங்காளதேசத்தில் இருந்து அகதியாக வந்தவர்கள்தான்.

ஜாரவா மக்கள் இந்த நிலம் தங்களுக்கானது எனக் கருதுகிறார்கள். இவர்களுக்கு நவீன உலகின் சட்டதிட்டங்கள் பற்றி ஏதும் தெரியாது. எந்த விதிகளுக்கும் எல்லைகளுக்கும் அவர்கள் கட்டுப்படுவது இல்லை.

1975ம் ஆண்டு தொடங்கப்பட்ட AAJVS அமைப்பு பழங்குடி மக்களுக்கான நலவாழ்வுத் திட்டங்களைத் தீட்டிச் செயல்படுத்துகிறது. இதன் மூலம், அழிந்துவரும் பழங்குடி இனமான ஜாரவா மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்...’’ என்கிறார்.

ஆக்கிரமிப்புகள்-அல்லல்கள்!

சென்ற நூற்றாண்டுகளில் அந்தமான் நிலப்பரப்பை ஆக்ரமித்த வெள்ளை அரசு தனது தேவைகளுக்காக வெளிப்புற மக்களை அதிமாகக் குடியமர்த்தியது. அப்போது முதலே அவர்களுக்கும் ஜாரவா மக்களுக்குமான மோதல் போக்கு தொடங்கிவிட்டது எனலாம்.

கடந்த நூற்றாண்டில் அரசுகள் பழங்குடிகளோடு சுலபமான, சுமுகமான தொடர்பு கொள்வதற்கான சாதனமாக போதைப் பொருட்களைக் கையாண்டனர். போதைப் பொருட்களை அவர்களுக்குக் கொடுத்து அடிமையாக்கி அவர்களிடமிருந்து நிலம் உள்ளிட்டவற்றை அபகரிக்கத் தொடங்கினர். பழங்குடிப் பெண்கள் நிர்வாணமாக நடனமாடும் வீடியோக்களின் பூர்வீகம் இந்த துயரக் கதைதான்.

ஜாரவா வனப்பகுதியில் அமைக்கப்பட்ட ட்ரங்க் சாலை இன்னொரு துயரம். இதனால் கொடுமையான தொற்றுநோய்கள் ஏற்பட்டு ஜாரவா பழங்குடிகளில் பெரும்பகுதியினர் கொத்துக் கொத்தாக இறந்தனர்.ரயில் பாதை  கடந்த பிப்ரவரியில் இந்திய ரயில்வே அமைச்சகம் அந்தமானின் போர்ட் பிளேர் - டிக்லிபூர் வரையிலான 240 கி.மீ., தூரத்திற்கு யூனியன் பிரதேசத்தின் முதல் ரயில்பாதையை ஜாரவா வனப்பகுதியில் அமைக்கவிருப்பதாக அறிவித்தது.

இங்குள்ள சாலை மற்றும் கடல் மார்க்க வசதிகளையே மக்கள் அதிகம் பயன்படுத்தாதபோது ரயில்பாதை எதற்கு?

அந்தமானில் உள்ள ஐந்து லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று எம்பி பிஷ்ணு பாத ராய் பதிலளிக்கிறார். போர்ட் பிளேரிலிருந்து - டிக்லிபூருக்கு பஸ், கப்பல் மார்க்கமாகச் செல்ல 14 - 24 மணி நேரங்கள் தேவை. புதிய  ரயில்பாதையில் மூன்று மணி நேரம் போதும். பிராட்கேஜ் ரயில்பாதை அமைக்க செலவு ரூ.2,413 கோடி. ரயில்வே தனது 12% லாப அடிப்படையைக் கூட தளர்த்தி இதனை மேற்கொள்ளக் காரணம், டிக்லிபூரிலிருந்து நூறு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மியான்மரின் கோகோ தீவில் சீனா ராணுவத் தளம் அமைத்துள்ளதுதான்.

‘‘ஜாரவா வனப்பகுதியில் இந்தியா ரயில்பாதை அமைத்தால்... ஜாரவா பழங்குடிகளைப் பற்றிப் பேச வேண்டிய அவசியமே ஏற்படாது...’’ என்கிறார் அந்தமான் நிக்கோபார் ஈகோலஜி சொசைட்டி (SANE) தலைவர் சமீர் ஆச்சார்யா. 2002ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சுற்றுலாவுக்கான கட்டுப்பாடுகளை விதித்தாலும், அரசு இதனை முறையாக அமல்படுத்தாததால் தனியாரின் சுற்றுலா வியாபாரம் களைகட்டுகிறது.

தனக்கான உலகில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் வாழிடங்களை அழித்து, ஆதிவாசிகளையும் விலங்குகளையும் ஒரு பாக்கெட் சிப்ஸ், பிஸ்கட்டிற்காக பிச்சை எடுக்க வைத்து விட்டனர். ஜாரவா மக்களிடம் இப்போது மிச்சமிருப்பது உயிர் மட்டும்தான். அதையாவது விட்டுவைப்போமா?              

ஜாரவா

ஜாரவா இனத்தினர் காதம்தலா கிராமத்திலுள்ள பிஜோய் பரோய் என்பவரின் தோட்டத்திலுள்ள பழ மரங்களில் உள்ள கனிகளை 1996ம் ஆண்டு  பறித்துக்கொண்டு செல்லும்போது, அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவன் கால் முறிந்து கீழே விழுந்துவிட்டான். அவனை அரசு மருத்துவமனையில் ஐந்து மாதங்கள் வைத்து சிகிச்சையளித்தனர். அப்போது அவனுக்கு டிவி, ரேடியோ ஆகியவற்றைக் காட்டி உணவுகளை வழங்கி புதிய உலகினை அறிமுகப்படுத்த முயன்றனர்.

என்மெய் என்ற அவனின் மூலம் ஜாரவா பழங்குடிகள் சிறிது நெருங்கி வந்தனர். என்மெய்க்கு இன்று நடுத்தர வயது. ‘தனியாக வாழ்ந்து வரும் அவர் காட்டை விட்டு அபூர்வமாகவே வெளியே வருவார். தன் உணவுக்காக மீன்களைப் பிடித்துக்கொண்டு காட்டுக்குள் திரும்பிவிடுவார்...’ என்கிறார்கள்.

பழங்குடி இனங்கள்!

அந்தமானீஸ்: 18ம் நூற்றாண்டில் இம்மக்களின் எண்ணிக்கை 10 ஆயிரம். 1900ல் 625 ஆக குறைந்தது. 1999ம் ஆண்டு கணக்கிடப்பட்டபோது 41 பேர்களே அந்தமானீஸ் இனத்தில் மிச்சம்.ஜாரவா: அந்தமானின் தெற்கு, மேற்கு, மத்திய பகுதிகளில் வசிப்பவர்கள். மூர்க்கமானவர்கள் என்பதால் இவர்களின் இடங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. இவர்களின் எண்ணிக்கை 471.

சென்டினெலிஸ்: வடக்கு அந்தமானில் வாழும் தனியுலக வனவாசிகள். ஜாரவா, அந்தமானீஸ்களோடு உறவானவர்கள் என்றாலும் தீவை விட்டு வெளியே வருவது கிடையாது.

பிற பழங்குடிகளைக் காட்டிலும் வேறுபட்ட ஆதிவாசி இனத்தில் மிச்சமிருப்பது 50 பேர்கள். ஆங்கே: இயற்கையோடு இணைந்து வாழும் மிக தொன்மையான ஆதிவாசி இனம். பல்வேறு கலைப்பொருட்கள், கைவினைகள், ஓடம் செய்வதில் வல்லவர்கள். எண்ணிக்கை 50.
(Wikipedia.org, economictimes.com தகவல்படி)

ச.அன்பரசு