வேலை வாய்ப்பில் பெண்களுக்கு நோ என்ட்ரி?



சர்ச்சையை கிளப்பும் பெண் நீதிபதிகள் நியமனம்

‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற பாரதியின் வரிகளுக்கு நூற்றாண்டு வரப்போகிறது. ஆனால், இந்தியாவின் மிக உயர்ந்த நீதி அமைப்பான உச்சநீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தைப் பார்க்கும்போது பாரதியின் இந்த வரிகள் வெறும் கவிதையாகவே எஞ்சி இருக்கும் கசப்பான உண்மையை உணரலாம்.

அண்மையில் ‘உடனடி முத்தலாக்’ என்ற சமூகத் தீமைக்கு எதிராக வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைச் சொன்னது உச்சநீதிமன்றம். பல கோடி இஸ்லாமிய பெண்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்திருக்கும் இந்த தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள் குழுவில் ஒரு பெண்கூட இல்லை.  ‘ஆதார் கார்டு தனிநபர் அந்தரங்கத்தில் தலையிடும் உரிமை மீறல்’ என்ற புகழ்பெற்ற தீர்ப்பு அளித்த அனைவருமே ஆண் நீதிபதிகள்தான்.

ஏன் இந்த பாரபட்சம்?
இன்று பெண்கள் விளையாட்டு முதல் ராக்கெட் சயின்ஸ் வரை சகல துறையிலும் தங்கள் தனி முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும்போது, இந்தியாவின் நீதியைப் பரிபாலிக்கும் மிக உன்னதமான நீதியரசர்கள் நியமனத்தில் மட்டும் ஏன் இந்த அநீதி என்று பொருமுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

உச்சநீதி மன்றத்தில் 1950ம் ஆண்டு 229 நீதிபதிகள் பணியமர்த்தப்பட்டனர். அதில் அப்போது இருந்த பெண் நீதிபதிகள் ஐந்து பேர் மட்டுமே. அதற்குப் பிறகு அடுத்த பெண் நீதிபதி ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதி இருக்கையில் அமர 39 ஆண்டுகள் தேவைப்பட்டன.

1989ம் ஆண்டு அப்படி தேர்வானவர்தான் பாத்திமா பீவி. அடுத்து ஏழு ஆண்டுகள் கழித்து சுஜாதா வி மனோகர் தேர்வானார். இதனைத் தொடர்ந்து வந்த 23 ஆண்டுகளில் வெறும் நான்கு பெண் நீதிபதிகள் உருவாகியுள்ளனர்.

இன்றைய 25 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பெண் நீதிபதிகள் எத்தனை பேர் தெரியுமா?

ஆர்.பானுமதி என்ற ஒரே ஒருவர்தான்!

ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக செயல்பட்டு பின்னர் 2014ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்டவர். 2012 டிசம்பர் 16 அன்று நிர்பயா விவகாரம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் பென்ச்சில் இவரும் ஒருவர். ‘‘பெண்களின் வாழ்வை பாதிக்கும்படியான வழக்குகளை விசாரிக்கக் கூட போதுமான பெண் நீதிபதிகள் இல்லை என்பதும்; இருக்கும் பெண் நீதிபதி
களுக்கும் அதற்கான அனுமதி இல்லை என்பதும் நமது நீதித்துறையின் துயரங்களில் ஒன்று...’’ என்று விரக்தியாகப் பேசுகிறார் மூத்த வழக்
குரைஞரான ரெபெக்கா ஜான்.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பெண் நீதிபதிகளின் எண்ணிக்கையை 31 ஆக அதிகரிக்க பரிந்துரை செய்தும் இன்று வரை அந்த எண்ணிக்கை 25ஐத் தாண்டவில்லை. 2015ம் ஆண்டு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், நீதிபதிக்கான பணியிடங்களில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க அரசியலமைப்புக் குழுவிடம் மனு அனுப்பியது.

இதில், பொது மற்றும் தனியார் அமைப்புகளில் பெண்களைப் பங்கேற்க அனுமதிக்கும் சட்டத்தினை சுட்டிக்காட்டி இருந்தனர். எனினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘‘கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து நீதிபதிகளில்கூட பெண்கள் யாரும் இல்லை. டில்லியைச் சேர்ந்த நீதிபதியான ஜி.ரோகிணி, மும்பையைச் சேர்ந்த மஞ்சுளா செல்லூர் ஆகியோர் தகுதி இருந்தும் இந்தப் பணிக்கு பரிசீலனை கூட செய்யப்படவில்லை...’’ என்று ஆவேசமாகப் பேசுகிறார் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் பிரபா தேவன்.

பாத்திமா பீவி  (1989 - 92)

கடவுளின் தேசமான கேரளாவில் பிறந்த பாத்திமா பீவி, உச்ச நீதிமன்றம் உருவாகி 39 ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி. 1983ல் கேரள உயர்நீதி மன்றத்தில் வழக்குரைஞர், நீதிபதியாக தனது பயணத்தைத் தொடங்கியவர்; 1992ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்றார். தமிழ்நாட்டின் ஆளுநராக (1997 - 2001) பதவி வகித்தவர். ஜெயலலிதா மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டபோது அவர் முதல்வராக நீடிப்பது குறித்து கடுமையான ஆட்சேபம் தெரிவித்த தைரிய லட்சுமி.

சுஜாதா வி மனோகர் (1994 - 1999)

மும்பையில் பிறந்த சுஜாதா வி மனோகர், மகாராஷ்டிர மாநில உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி. 20 ஆண்டுகள் கீழ் கோர்ட்டுகளில் வழக்குரைஞராகப் பணியாற்றியவர், அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளுக்கு எதிரான ‘விசாகா’ எனும் பாதுகாப்பு விதிமுறைகளை வகுத்தளித்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவில் இடம்பெற்ற புரட்சிகர நீதிபதி என பல அடையாளங்கள் இவருக்கு உண்டு.

ரூமா பால் (2000 - 2006)

பணி ஓய்வுவரை உச்சநீதிமன்ற நீதிபதியாக தளர்வறியாது பணியாற்றிய ரூமா பால், மனித உரிமை தொடர்பான பல்வேறு வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை அளித்தவர். 1990ம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றவர். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஊழலை கடுமையாக விமர்சித்த மூன்று பேர் கொண்ட கொலீஜியம் நீதிபதிகளின் குழுவில் இருந்து ஒலித்த நீதியின் குரல் இவருடையது.

கியான் சுதா மிஸ்‌ரா (2010 - 2014)

கீழ் கோர்ட்டில் நான்கு ஆண்டுகளும், ஜார்கண்டின் உயர் நீதிமன்ற நீதிபதியாக இரண்டு ஆண்டுகளும் பணியாற்றியவர் நீதிபதி சுதா மிஸ்‌ரா. பாட்னா, ராஜஸ்தான் ஹைகோர்ட்டுகளில் நீதிபதியாகப் பணியாற்றிவர். கிரிக்கெட் வாரியத்தின் நாராயணஸ்வாமி னிவாசன் ஊழல் வழக்கு, அருணா ஷான்பெக்கின் பாலியல் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்தவர்.

ரஞ்சனா பிரகாஷ் தேசாய் (2011 - 2014)

க்ரைம் வழக்குகளில் கில்லி எனப் பெயர் எடுத்தவர். 1986ம் ஆண்டு முதல் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றத் தொடங்கினார். 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதித்த நீதிபதிகளில் இவரும் ஒருவர். ஜாமீன் இல்லாத குற்றங்களுக்கு எஃப்ஐஆரை பதிவு செய்வது, நோட்டா வழக்கு ஆகியவற்றில் முக்கியமான தீர்ப்பளித்த நீதிபதி. பெண்களுக்கான தனி நீதிபதிக் குழுவை தொடங்கிய போராளி.

ஆர்.பானுமதி (2014 -)

இப்போது உச்ச நீதிமன்றத்தில் பதவியில் உள்ள ஒரே பெண் நீதிபதி. மாவட்ட நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பானுமதி, ஜார்க்கண்ட், தமிழ்நாடு உயர்நீதி மன்றங்களில் நீதிபதியாகப் பதவி வகித்தவர். 2003ம் ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டில் பாதுகாப்பு விதிகளை வகுத்தளித்த பெருமைக்குரியவர். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து மக்களின் மதிப்பைப் பெற்றவர்.

கோர்ட் வரலாறு!

இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள உயர்நீதி மன்றங்களின் எண்ணிக்கை 24. உயர்நீதி மன்றத்தின் கீழே சிவில், குற்றவியல், குடும்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான நீதிமன்றங்கள் அமைந்துள்ளன. அரசியலமைப்புச் சட்டம் பகுதி 6 அத்தியாயம் 5, ஆர்ட்டிகிள் 214ன் படி உயர்நீதிமன்றங்கள் செயல்படுகின்றன.

உச்ச நீதிமன்ற நீதிபதி, மாநில ஆளுநர் ஆகியோரின் வழிகாட்டுதல் ஆலோசனைப்படி உயர் நீதிமன்ற நீதிபதிகளை குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். நீதிமன்றத்திற்கான நீதிபதி நியமனம் என்பது அந்த நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவாகும் வழக்குகளைப் பொருத்ததே. சென்னை, மும்பை, கொல்கத்தா, அலகாபாத் ஆகியவை தொடக்க காலத்தில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் மிகப் பழமையான நான்கு உயர் நீதிமன்றங்களாகும்.