ஃபேஷன் உலகின் குட்டிச் சுட்டி!



- ஷாலினி நியூட்டன்

Engjiyandy இந்தப் பெயர் இணையதளத்தில் அதீத பிரபலம். ஃபேஷன் வெப்சைட்கள், இன்ஸ்டாகிராம், சமூக வலைத்தளங்கள் என எங்கும் எதிலும் இயந்த வார்த்தையை டைப் செய்தால் சுமார் முந்நூறு புகைப்படங்களாவது சர்ர்ர்ர்ரென கொட்டும். மாஸ் லுக், ஸ்டைலிஷ் உடைகள், மயக்கும் ஹேர் ஸ்டைல் என ‘Engjiyandy’க்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஐந்து வயது குட்டி ஃபேஷன் ஐகான். பிரபல மாடல்கள் பலரும் கூட இந்த சிறுவனுக்கு ரசிகர்கள்.

2012 ஜூன் மாதம் பிறந்த எங்ஜியாண்டிக்கு இரண்டு வயது இருக்கும் போதே சில ஃபேஷன் ஸ்டைல் உடைகளை அவருக்கு அணிவித்து அதை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிரத் தொடங்கியிருக்கிறார் அவரது அம்மா. இன்று எங்ஜியாண்டி இன்ஸ்டா பக்கத்துக்கு மட்டும் மூன்றரை லட்சம் ரசிகர்கள். முகநூலில், ட்விட்டரில் என லட்சக்கணக்கில் பின்தொடரும் ஃபேஷன் விரும்பிகள். போதாக் குறைக்கு இந்த குட்டி சுட்டிக்கு ஏகப்பட்ட அழைப்புகள் வேறு.

அழைப்பா? யெஸ். அனைத்தும் ஃபேஷன் ஷோ, மாடலிங், சினிமாவில் நடிக்க வாய்ப்புகள்தான். அனைத்திற்கும் ஜாலியாக பை பை காட்டிவிட்டு என் உலகம் இந்த இன்ஸ்டாவும், இணையமும்தான் என போஸ் கொடுக்கிறார் இந்த வாண்டு. இதை அறிந்து எங்ஜியாண்டியின் ஃபேஷன் போஸ்ட்டிங்கில் ஆர்வம் கொண்ட பல ஹாலிவுட் டிசைனர்கள், ஷோரூம்கள் தங்கள் பங்குக்கு தாராளமாக ஸ்பான்ஸரும் செய்கிறார்கள்.

ஸ்வீடன் நாட்டில் பிறந்த என்க்ஜியின் கனவு ஹாலிவுட் ஸ்டார் ஆவது. ஆன்லைன் ஃபேஷன் ப்ளாக் எழுதும் பிரபலம் மரியான்னா ஹிவித்துடன் கோ- பிளாகராகவும் இருக்கிறார் இந்த சுட்டி! ஆண்டியின் புகைப்படங்கள் தவிர்த்து ஸ்டைலாக ஹேர் ஜெல் தடவிக் கொள்வது, உடைகள் அணிவது, நேர்த்தியாக டை கட்டிக் கொள்வது என யூடியூபிலும் இந்தக் குட்டியின் வீடியோக்கள் மாஸ் ஹிட்.
 
சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக இணைய உலகின் மிகப்பிரபலமான ஒரு லட்சம் மக்களில் எங்ஜியாண்டிக்கு 46,428வது இடம் கிடைத்திருக்கிறது! அதற்காக எல்லோருமே தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் என்று அர்த்தமில்லை. விமர்சனங்களும் பாய்கின்றன. சிறு வயதிலேயே இவ்வளவு ஃபேஷன் அடிமைத்தனமும், புகழின் போதையும் வளர வளர பாதிக்கலாம்.

தவிர இந்தப் புகழ் எல்லாம் வளர வளர குறையும். இந்த சறுக்கல் நிச்சயம் எங்ஜியாண்டிக்கு மன அழுத்தத்தைத் தரும். குழந்தைகளை இப்படி வளர்ப்பது தவறு... என சமூக ஆர்வலர்கள் பொங்குகிறார்கள். இதற்கு பதில் தரும் விதமாக எங்ஜியாண்டி நிச்சயம் மாடலிங் உலகைக் கலக்குவான், அதற்கான அடித்தளமே இந்த இணைய உலக புகழ் என்கிறார்கள் ஃபேஷன் விரும்பிகள். இந்த இரண்டையும் கருத்தில் கொள்ளாமல் எங்ஜியாண்டியின் சமூக வலைப் பக்கங்களுக்குச் சென்றால்... எவ்வளவு டென்ஷனும் சுலபமாக இறங்கி விடும். அவ்வளவு க்யூட் இந்த குட்டி டூட்!