பொறந்த ஊருக்கு புகழத் தேடிக் கொடுக்கறார் உதயநிதி!



பொதுவாக எம்மனசு தங்கம் என்று நெகிழ்கிறார் இயக்குநர் தளபதி பிரபு

- மை.பாரதிராஜா

குதூகலம் அள்ளும் வண்ணமிகு திருவிழா. ஜொலிக்கும் ஊர்மக்களின் கூட்டம் பயபக்தியுடன் பவனி வர... குலதெய்வம் ஸ்ரீதிரௌபதி அம்மனை தலையில் சுமந்தபடி வீதியில் பவனி வருகிறார் வில்லேஜ் ஹீரோ உதயநிதி. வெள்ளை வேஷ்டி - மெரூன் கலர் சட்டையில் முறுக்கு மீசையுடன் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என பளீரென புன்னகைக்கிறார்.

‘‘இதுவரை உதயநிதி சாரை நகரத்து பையனாதான் பார்த்திருப்போம். இதுல அவர் கிராமத்து பையன். எமோஷனும் காமெடியும் கலந்த கதை. பொதுவா கிராமங்கள்ல நடக்கிற திருவிழாக்கள்ல சடங்கு, சம்பிரதாயங்களை மக்கள் ஒற்றுமையாதான் செய்யறாங்க. அப்படி என் கிராமத்துல நடந்த, நேர்ல நான் பார்த்த விஷயங்களைத் தான் படமா எடுத்திருக்கேன்.

ரஜினி சார் நடிச்ச ‘முரட்டுக்காளை’ல ‘பொதுவாக எம் மனசு தங்கம்... ஒரு போட்டியினு வந்துவிட்டா சிங்கம்...’ பாட்டு பட்டைய கிளப்பும். அதுல ‘பொறந்த ஊருக்கு புகழ சேரு... வளர்ந்து நாட்டுக்கு பெருமை தேடு...’னு ஒரு வரி வரும். எங்க படத்தோட கான்செப்ட் அதுதான். அதனாலதான் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’னு டைட்டில் வைச்சோம்...’’ மென்மையாகப் பேசுகிறார் அறிமுக இயக்குநரான தளபதி பிரபு.

உதயநிதி, சூரி, பார்த்திபன்னு கூட்டணியே கலகலன்னு இருக்கே..?
கலர்ஃபுல்லா, கலகலப்பா ஒரு வில்லேஜ் படம் பார்த்து நாளாச்சுல்ல..?! அந்தக் குறையை இந்தப் படம் போக்கும். படத்துல உதய் சாரும் சூரியும் ஒரு செட். பார்த்திபனும் - மயில்சாமியும் இன்னொரு செட். இவங்க நாலு பேருக்குமான கெமிஸ்ட்ரி பிரமாதமா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. எங்க டைரக்டர் பொன்ராம் சாரோட டெக்னிக்கல் டீமே என் முதல் படத்துலயும் இருக்கணும்னு விரும்பினேன். நினைச்ச  மாதிரியே பாலசுப்ரமணியம் சார் ஒளிப்பதிவு. இமான் - யுகபாரதி காம்பினேஷன்.

ட்ரெயிலர்ல உதயநிதி டான்ஸ்லயும் பிச்சு உதறுறாரே..?
கலக்கியிருக்கார். பாடல்கள் ஏற்கெனவே ஹிட். படத்துல அவர் கேரக்டர் அருமையா இருக்கும். அப்பா - அம்மாவை சுத்தி வந்து ஞானப்பழத்தை விநாயகர் வாங்கறதா ஒரு கதை இருக்கு இல்லையா..? அது மாதிரிதான் ஹீரோ. மிட்நைட் ஷூட் முடிஞ்சாலும் மறுநாள் காலை ஏழு மணிக்கு ஸ்பாட்ல இருப்பார். என் முகத்தை பார்த்தே ‘நோ ப்ராப்ளம். ஒன் மோர் போகலாம்’னு சொல்வார்.
 
அதே மாதிரி பார்த்திபன் சார் கேரக்டரும் பேசப்படும். புகழ் விரும்பியா நடிச்சிருக்கார். எல்லா புகழும் தனக்கு வரணும், தனக்கு மட்டுமே வரணும்னு நினைக்கிற கேரக்டர். சூரி அண்ணனோட ஏற்கனவே ரெண்டு படங்கள் ஒர்க் பண்ணியிருக்கேன். அதனாலயே அவரை மனசுல வைச்சு அவர் கேரக்டரை எழுத முடிஞ்சது. சீன் எடுக்கிறப்ப தன்னால ஏதாவது இம்ப்ரூவ் பண்ண முடியுமான்னு அண்ணன் யோசிப்பார். டப்பிங்ல, மிக்ஸிங்ல தனக்கு புதுசா தோன்றதை சேர்ப்பார்.

நிவேதா பெத்துராஜ் எப்படி இந்தக் கதைக்குள்ள வந்தாங்க..?
கிராமத்து கதை. தமிழ் பேசத் தெரிஞ்ச பொண்ணு ஹீரோயினா இருந்தா நல்லா இருக்குமேனு யோசிச்சோம். நிவேதாகிட்ட பேசறப்ப அவங்க துபாய்ல இருந்தாங்க. ‘ஒண்ணும் அவசரம் இல்ல. சென்னை வர்றப்ப ஆபீஸ் வாங்க’னு சொன்னேன். அடுத்த நாளே ஃபிளைட் பிடிச்சு வந்து ஆச்சரியப்படுத்தினாங்க. இந்தப் படத்துல நாலு வருஷங்களா ப்ளஸ் 2 பாஸ் பண்ண மெனக்கெடற வெகுளிப் பெண்ணா வாழ்ந்திருக்காங்க. ஸ்பாட்டுல எப்பவும் எனர்ஜியா இருப்பாங்க. அவங்கள சுத்திதான் கதை நகருது. நிவேதா தவிர, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், ரமா, சுந்தர், நமோ நாராயணன்னு நிறைய நட்சத்திரங்கள் இருக்காங்க.

இயக்குநராகும் முதல் படத்திலேயே உதயநிதி..?
இதை நானே எதிர்பார்க்கலை! என்னைச் சுத்தி இருக்கறவங்க சீக்கிரமே நான் இயக்குநராகணும்னு விரும்பினாங்க. அதுல என் டைரக்டர் பொன்ராம் சார், சிவகார்த்திகேயன் சார், ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் சார்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ ரெண்டிலும் அசோசியேட்.

இந்தப் படத்தோட கதை ரெடியானதும் கேமராமேன் பாலசுப்ரமணியம் சார்கிட்டதான் முதல்ல சொன்னேன். கதை அவருக்கு பிடிச்சிருந்தது. உதயநிதிசார்கிட்ட இந்த கதையை கொண்டு சேர்த்தது அவர்தான். கதை கேட்ட அடுத்த நிமிஷமே உதய் சார் ஓகே சொல்லிட்டார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் முரளி சார் தயாரிப்பாளரா அமைஞ்சது என் நல்ல நேரம்னு சொல்லணும்.

உங்களப் பத்தி சொல்லுங்க..?
ஒரிஜனல் பெயர் தளபதி. அப்பா பெயர் பிரபு. அவர் பெயரையும் சினிமாவுக்கு இணைச்சிருக்கேன். தர்மபுரி பென்னாகரம் பக்கம் அஜ்ஜம்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். சினிமா ஆசைல சென்னை வந்தேன். எங்க மாமா பொக்லைன் ஆபரேட்டர். நானும் தற்காலிக பொக்லைன் ஆபரேட்டரா ஒரு தனியார் நிறுவனத்துல தற்காலிக வேலை பார்த்திருக்கேன். விக்ரமன் சார் அசிஸ்டென்டா என் கேரியர் தொடங்குச்சு. அப்புறம் முத்தையா, மூர்த்தி, பொன்ராம்கிட்ட ஒர்க் பண்ணினேன். அந்த அனுபவத்தோடு இதுல களம் இறங்கியிருக்கேன்.

இயக்குநர்கள் விக்ரமன், பொன்ராம்கிட்ட பிடிச்சது என்ன?
வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் மரியாதை கொடுப்பார் விக்ரமன் சார். எந்த ஒரு வேலைல இறங்கினாலும் அதுல நூறு சதவிகிதம் விரும்பி உழைப்பார். ஒரு ஆர்ட்டிஸ்ட்கிட்ட எப்படி அழகா வேலை வாங்கணும்னு பொன்ராம் சார்கிட்ட கத்துக்கிட்டேன். நடிகர்களுக்கே தெரியாம அவங்கள அவ்வளவு ஸ்மூத்தா வேலை வாங்குவார்.

‘வ.வ.ச’, ‘ர.மு’ படங்களப்ப சிவகார்த்திகேயன் சார் நட்பு கிடைச்சது. இப்ப வரை அது தொடருது. தயாரிப்பாளர் முரளி சாரும் நானும் அவரைப் பார்க்கப் போனப்ப, ‘தளபதி பிரபுவை நீங்க டைரக்டராக்கினதுல ரொம்ப சந்தோஷம். இதுக்காக பர்சனலா நான் நன்றி தெரிவிச்சுக்கறேன்’னு சிவகார்த்திகேயன் சார் சொன்னார். நெகிழ்ந்துட்டேன்.

என்ன சொல்றாங்க உங்க டெக்னிகல் டீம்..?
எல்லாருமே என் நலம் விரும்பிகள். பாலசுப்ரமணியம் கேமரா அவ்வளவு கலர்ஃபுல்லா இருக்கும். ஒவ்வொரு ஃபிரேமிலும் ஹேப்பினெஸ் தெரியும். ‘மதராசபட்டிணம்’ செல்வகுமார் ஆர்ட் டைரக்‌ஷன் இதுல பேசப்படும். திரௌபதி அம்மன், பீமன், தர்மன், அர்ஜுனன்னு 17 சிலைகளை அச்சு அசலா செய்து கொடுத்திருக்கார்.

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இப்ப ஷங்கர் சாரோட ‘2.0’ல பிஸியா இருக்கார். அப்படியிருந்தும் எங்களுக்கு வந்து பண்ணிக் கொடுத்தார். தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் என் கற்பனைக்கு உயிர் கொடுத்திருக்கு. எந்தக் கேள்வியும் கேட்காம ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் செலவு செய்திருக்காங்க. இமான் சாருக்கு என் மேல தனி ப்ரியம் உண்டு. அதை அப்படியே பாட்டுலயும் பின்னணியிலயும் கொட்டியிருக்கார். என்னை நம்பினதுக்கு உதய் சார் உட்பட எல்லாருக்கும் தேங்க்ஸ்.