விஜயனின் வில்கே.என்.சிவராமன் - 39

கிருஷ்ணனின் புருவங்கள் முடிச்சிட்டன. ‘‘வாட்? கதையே ஒரு code ஆ?’’ ‘‘ஏன், இருக்கக் கூடாதா..?’’ ஆதியின் முகத்தில் சிரிப்பு வற்றாமல் ஊற்றெடுத்தது. ஐஸ்வர்யாவும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கார்க்கோடகருக்கும் கருடனுக்கும் உக்கிரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. முன்பு நின்ற இடத்திலேயே சரஸ்வதி என ஆதியால் சுட்டப்பட்ட பெண் நின்றுகொண்டிருந்தாள்.

‘‘அதெப்படி முடியும்..? அக்னி, பிரம்மா, சிவன்... அப்புறம் அந்த சுவேதகி மன்னன்... இவங்க எல்லாம் எப்படி கோடடா இருப்பாங்க?’’ கிருஷ்ணனை பார்த்து உதடு துடிக்க ஐஸ்வர்யா வினவினாள். ‘‘முக்கியமானதை நீ விட்டுட்ட. அதைத்தான் ஆதி பிரேக் பண்ணச் சொல்றார்...’’ ‘‘எதை க்ருஷ்..?’’ ‘‘வனம்... காடு!’’ கிருஷ்ணன் இப்படிச் சொன்னதுமே ‘‘சபாஷ்...’’ என ஆதி கைதட்டினான்.

‘‘கற்பூரம், கப்புனு புரிஞ்சுகிட்ட!’’ ‘‘ஸ்டில் ஐ கான்ட் அண்டர்ஸ்டாண்ட்...’’ ஐஸ்வர்யாவின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் பூத்துப் படர்ந்தன. ‘‘சிம்பிள் ஐஸ்... ஒரு நகரம் எப்ப உருவாகும்? ஐ மீன் எந்த இடத்துல நகரம் தோன்றும்..?’’ அவள் தோளை அணைத்தபடி கிருஷ்ணன் தொடர்ந்தான். ‘‘ஃபர்ஸ்ட்... நகரம் உருவாக நிலப்பரப்பு வேணும்.

அதுவும் புதுசா. பெருசா. ஏற்கனவே இருக்கிற கிராமங்களோட பரப்பளவு பத்தலை என்பதால்தான் நகரத்தை உருவாக்கறோம். இல்லைனா கிராமத்தையே எக்ஸ்டன்ட் செஞ்சு... பல கிராமங்களை இணைச்சு புதுசா ஒரு நகரத்தை தோற்றுவிக்கறோம். சென்னை இப்படித்தான் உருவாச்சு. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம் மாதிரியான கிராமங்களை இணைச்சாங்க...’’ ‘‘நானும் இதை கேள்விப்பட்டிருக்கேன் க்ருஷ்...’’ ‘‘இதுல அண்டர் கரென்ட்டா இன்னொரு விஷயம் புதைஞ்சிருக்கு.

ஆதி சொல்ல வர்றது அதைத்தான்...’’ ‘‘எதைச் சொல்ற..?’’ ‘‘பூர்வகுடிகள்!’’ ‘‘...’’ ‘‘எல்லா காடுகள்லயும் வனங்கள்லயும் பழங்குடியின மக்கள் காலம் காலமா வாழ்ந்துட்டு வர்றாங்க. அவங்களை அந்த இடத்துலேந்து வெளியேற்றித்தான் புதுசா நகரங்களையே நாம உருவாக்கறோம். அதனாலதான் மகாபாரதக் கதைல பீமனும் அர்ஜுனனும் ஏராளமான பூர்வகுடி மக்களோட பெண்களை- அந்த மண்ணோட இளவரசிகளை- மணந்து அந்த இடத்தை சீதனமா வாங்கிட்டாங்க...’’ ‘‘எல்லாம் சரிடா.

அதுக்கும் இப்ப நாம பேசிட்டு இருக்கிற கதைக்கும்..?’’ ‘‘தொடர்பிருக்கு ஐஸ். இந்தியாவுல நகரங்கள் உருவான காலகட்டமும் மகாபாரதம் நடந்ததா குறிப்பிடப்படற ஆண்டும் ஏறக்குறைய ஒண்ணு...’’ ‘‘அதைத்தானே நீயும் இப்ப சொல்லிட்டு இருக்க..?’’ ‘‘அதேதான். ஏகப்பட்ட காடுகளை அழிச்சு நகரங்களை மகாபாரத நிகழ்வுகள் நடந்தப்ப உருவாக்கினாங்க... சலிச்சுக்காதே. சில விஷயங்களை ஆரம்பத்துலேந்து முறுக்குப் பிழியற மாதிரி சொல்லித்தான் ஆகணும்...’’ ‘‘சரி. கேட்டுத் தொலையறேன்.

சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லு..!’’ ‘‘இப்ப தென்னிந்தியாவை எடுத்துப்போம். புராண காலங்கள்ல வட இந்தியாவும் தென்னிந்தியாவும் கிட்டத்தட்ட இரண்டாதான் பிளவு பட்டிருந்தது. பிரிச்சது தண்டகாரண்ய காடுகள்!’’ ‘‘...’’ ‘‘அதனாலதான் விந்திய மலையை கடப்பது பெரிய சாகசமா புராணங்கள்ல சொல்லப்படுது...’’ ‘‘இதனாலதான் சங்க காலத்துக்கு முற்பட்ட தமிழகம் பத்தி வட இந்தியாவுக்கு தெரியாமயே இருந்ததா க்ருஷ்..?’’ ‘‘எக்ஸாக்ட்லி.

அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தண்டகாரண்யத்தை அழிச்சு நகரங்களை, தேசங்களை உருவாக்கினாங்க...’’ ‘‘அதாவது காடுகளை அழிக்க நெருப்பை, அக்னியை பயன்படுத்தி யிருக்காங்க. இப்ப நாம பேசிட்டு இருக்கிற கதைலயும் அக்னி வர்றார்... காண்டவ வனத்தை தன் மந்த நோய் தீர அர்ஜுனன் உதவியோட எரிச்சு சாம்பலாக்கறார்... கரெக்டா?’’ ‘‘தேங்க் காட்.

ஒருவழியா உனக்கும் புரிஞ்சுடுச்சு!’’ கிருஷ்ணன் சிரிக்க, ஆதி அதை எதிரொலித்தான். ‘‘ஓகே. இப்ப கதையை பிரேக் பண்ணினா என்ன கிடைக்கும்?’’ ஐஸ்வர்யா விஷயத்துக்கு வந்தாள். ‘‘கிருஷ்ணனோட கேள்விக்கான பதில்!’’ ஆதி பதிலளித்தான். ‘‘புரியலை..?’’ ‘‘இப்ப என்கிட்ட என்ன கேட்ட க்ருஷ்? அர்ஜுனனோட வில்லான காண்டீபம் எப்படி சரஸ்வதிக்கு சொந்தமாகும்னுதானே?’’ ‘‘ஆமா...’’ ‘‘அர்ஜுனன் உதவியோட அக்னி எரிச்ச காண்டவ வனம் சரஸ்வதி நதிக்கரைலதானே இருந்தது?!

அப்ப விஜயனோட வில் சரஸ்வதிக்குத்தானே சொந்தம்?’’ கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக நின்றார்கள். அவர்கள் குழம்பி இருப்பது ஆதிக்குப் புரிந்தது. தெளிவுபடுத்தும் விதமாக தொடர்ந்தான். ‘‘இப்ப ஹரப்பா நாகரீகத்தோட பரப்பளவு என்ன? போன நூற்றாண்டுல அந்த நாகரீகம் பரவியிருந்த இடங்களைக் கண்டுபிடிச்சிருக்காங்க.

இன்னமும் பல இடங்கள் வெளிப்பட்டுக்கிட்டே இருக்கு. குஜராத், சிந்து, ராஜஸ்தான், பஞ்சாப், அரியானானு இப்ப இருக்கிற மாநிலங்கள் முழுக்கவே அப்ப ஹரப்பாதான். அதுதவிர கிழக்கு உத்தரப்பிரதேசம், மேற்கே சுத்த கஜன்தோர், பலுசிஸ்தானோட மக்ரான் கடற்கரை வரை இந்த நாகரீகம் பரவியிருந்தது. அவ்வளவு ஏன், மத்திய ஆசியாவுல, ஹார்த்துகைனு ஓர் இடம்.

இது ஆஃப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லைல இருக்கு. இங்க கூட ஹரப்பா நாகரீகத்தோட தாக்கம் இருந்ததா சொல்றாங்க. சுருக்கமா சொல்லணும்னா எகிப்திய, சீன, மெசப்படோமியா நாகரீகங்களை விட ஹரப்பா பெருசு!’’ ‘‘...’’ ‘‘இந்த நாகரீக மக்கள் உள்நாட்டு வணிகத்துலயும் வெளிநாட்டு வணிகத்துலயும் அதிகமா ஈடுபட்டிருக்காங்க.

சிந்து சரஸ்வதி பகுதில ஓடிய பல ஆறுகள் மக்களையும் படகுகளையும் சுமந்து இடம் விட்டு இடம் சென்றிருக்கு. இப்போதைய குஜராத் மாநிலம் லோத்தல் என்கிற இடத்துல அப்ப கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கு. அகழ்வாராய்ச்சில இதை கண்டுபிடிச்சிருக்காங்க. இங்கேந்து பாரசீக வளைகுடா நாட்டோட வணிகம் செய்திருக்காங்க.

வணிகக் கப்பல்கள் மக்ரான் கரையோரமா பயணிச்சு சுத்த கஜன்தோர்ல தங்கிட்டு பாரசீக வளைகுடா துறைமுகங்களுக்குப் பயணப்பட்டிருக்கு...’’ ‘‘...’’ ‘‘காதுல பூ சுத்தலை க்ருஷ்... இதெல்லாமே அகழ்வாராய்ச்சியோட முடிவு...’’ ‘‘என்னென்ன ஏற்றுமதி செய்தாங்க... என்னென்ன இறக்குமதி செஞ்சாங்க?’’ ஐஸ்வர்யா இடைமறித்தாள். ‘‘ஐஸ்... இது இப்ப நமக்குத் தேவையில்லாத விஷயம்...’’ கிருஷ்ணன் தடுத்தான்.

‘‘விவரம் தெரியணும்னா சம்பந்தப்பட்ட நூல்களைத் தேடிப் படி. இல்ல கூகுள்ல ப்ரவுஸ் பண்ணு...’’ ‘‘அப்ப வேறென்ன விஷயத்தை நாம இப்ப தெரிஞ்சுக்கணும்னு சொல்ற..?’’ ‘‘வெப்பன்ஸ்!’’ ‘‘என்னது..?’’ அதிர்ந்தது ஐஸ்வர்யா அல்ல. ஆதி! ‘‘புரியும்படியா சொல்லு க்ருஷ்...’’ ‘‘குருக்ஷேத்திரப் போர்ல இந்தியர் அல்லாதவங்களும் கலந்துகிட்டிருக்காங்க. தங்களோட நாட்டு ஆயுதங்களையும் பயன்படுத்தியிருக்காங்க... ஸோ, விஜயனோட வில் சரஸ்வதி நதிக்கு சொந்தம்னு நீ சொல்றதை என்னால ஏத்துக்க முடியலை!’’

(தொடரும்)

ஓவியம் : ஸ்யாம்