கும்ப லக்னம் சனி-சூரியன் சேர்க்கை தரும் யோகங்கள்கிரகங்கள் தரும் யோகங்கள் - 103

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

சனியோடு சூரியன் சேரும்போது சமநிலை சீர்குலையும். அது கட்டற்றதாக உருவெடுக்கும். தலைமை ஸ்தானத்திற்குரிய சூரியனும், உழைப்பாளிக்குரிய சனியும் சேரும்போது இயல்பாகவே அங்கு போராட்டச் சூழல் உருவாகும். நடைமுறை வாழ்வுக்குரிய சூரியனும், இரக்கத்திற்குரிய சனியும் ஒன்றுசேரும்போது நிறைய முரண்கள் முளைக்கின்றன.

அறிவுபூர்வமாக சிந்தித்து உணர்வுபூர்வமாக செயல்படுவதில் வல்லவர்கள். சிறு வயதில் பலரால் ஏமாற்றப்பட்டு இளமையில் சாமர்த்தியமாக மாறுவார்கள். சிறிய அவமானங்களை உள்வாங்கிக் கொண்டு நேரம் பார்த்து கொரில்லா தாக்குதல் நடத்துவார்கள். எப்போதுமே யுத்த களத்தில் இருப்பதுபோன்ற ஒரு மனோநிலையில் இருப்பார்கள். இவர்களை ஏதோ ஒரு சக்தி தடுப்பதுபோல உள்ளுணர்வு சொல்லிக் கொண்டே இருக்கும். ஒருவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமெனில் இவர்களிடம்தான் வரவேண்டும்.

இவர்களின் கணிப்பு சரியாக இருக்கும். மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். ஆனால், ஒவ்வொரு ராசியிலும் லக்னாதிபதியான சனியும் சூரியனும் தனித்து நின்றால் என்ன பலனென்று பார்ப்போமா? கும்ப லக்னத்திலேயே-அதாவது ஒன்றாம் இடத்திலேயே சனியும் சூரியனும் இருந்தால் வித்தியாசமான நடத்தைக் கோலத்தைக் கொடுக்கும்.

அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை கொடுக்கும். எல்லாமுமே அடைந்தும் கூட எதிலும் நிறைவுறாமல் எதையோ தேடிக் கொண்டே இருப்பார்கள். சொல்ல வந்த விஷயத்தையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். தான்தான் எல்லாம் என்கிற அகந்தையிருக்கும். சோம்பேறித்தனம், மசமசவென்று ஒரு காரியத்தைச் செய்தல் என்றிருப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட தடுமாறித்தான் பெற வேண்டியிருக்கும். பளிச்சென்று பேசுவதால் நண்பர்கள் நீண்டகாலம் நிற்பதில்லை.

இரண்டாம் இடமான மீனத்தில் சனியும் சூரியனும் எவ்வளவு பணத்தை கையில் வைத்திருந்தாலும் காசு தங்காது. அதிக செல்வாளியாக இருப்பார்கள். தான் செய்யும் தவறுகளை கால நேர சூழலுக்கேற்ப நியாயப்படுத்திப் பேசத் தயங்க மாட்டார்கள். மாறு கண், தெற்றுவாய் என்று சில பிரச்னைகள் இருக்கும். கண்களில் எந்தத் தொந்தரவு வந்தாலும் உடனே மருத்துவரை பார்க்கவும். கிட்டத்தட்ட ப்ளஸ்டூ வரை கடனே என்றுதான் பள்ளிக்கு செல்வார்கள்.

18லிருந்து 34 வரை வாழ்க்கையை குறித்த தத்துவப் புத்தகங்களை நாடித்தான் செல்வார்கள். ஆங்கில இலக்கியம், பொலிடிகல் சயின்ஸ், வரலாறு, ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங், மருத்துவத்தில் கண், கால், தலை அறுவை சிகிச்சை நிபுணராக வாய்ப்புண்டு. மூன்றாம் இடமான மேஷத்தில் சனியும் சூரியனும் சேர்ந்திருந்தால்  சொந்த புகழை விட, மக்கள் பயனுற வேண்டும் என்ற நோக்கில் நல்லது பல செய்வார்கள்.

மத்திம வயது காலகட்டத்தில் உங்களின் தொடர்புகளின் எல்லைகள் அதிகமாகும். குறுகிய வட்டம் தாண்டி பெரிய வட்டத்திற்குள் புகுவார்கள். புத்தி கட்டளையிடுவதை உடம்பு செய்ய மறுக்கும். இந்த மாதிரி சின்ன போராட்டம் உங்களிடத்தில் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். நான்காம் இடமான ரிஷபத்தில் சனியும் சூரியனும் இருந்தால் ஏதேனும் ஒரு உடல்நிலைக் குறைவு இருந்து கொண்டேயிருக்கும்.

சிறு வயதிலேயே தாயை விட்டு பிரிந்து வாழுதல் அல்லது உறவினர்களின் வீட்டில் வளர்தல் என்றெல்லாம் வாழ்க்கை சோதனையாக இருக்கும். குறிப்பாக தாயாருக்கு கர்ப்பப்பை கோளாறு இருந்தால் சரிசெய்து கொள்ள வேண்டும். இவர்கள் நிலம் வாங்கும்போது தாய்ப் பத்திரங்கள் சரியாக உள்ளதா என்று பார்த்துவிட்டுத்தான் வாங்க வேண்டும்.

ஐந்தாமிடமான மிதுனத்தில் சனியும் சூரியனும் நின்றிருந்தால் லௌகீகம் எது? தெய்வீகம் எது? என்று தனித்தனியே பிரித்து வைத்திருப்பார்கள். இவர்கள் லௌகீகவாதியா, ஆன்மிகவாதியா என்று பிரித்துணர முடியாது. பூர்வீகச் சொத்தின் பின்னால் ஓடிக் கொண்டே இருக்கக் கூடாது. தாய்மாமன் உறவில் ஏதேனும் பகை உணர்வு இருந்து கொண்டேயிருக்கும். எப்போதுமே சமூகக் கோபங்கள் உள்ளுக்குள் இருந்து கொண்டே இருக்கும்.

அதை எங்கேயாவது வெளிப்படுத்துவார்கள்.  முன்னோர்கள் செய்த தவறுகளை தங்கள் பிள்ளைகள் செய்துவிடக் கூடாது என்று நினைப்பார்கள். வாரிசுகள் கோபக்காரர்களாக இருப்பார்கள். ஆறாம் இடமான கடகத்தில் சனியும் சூரியனும் இருந்தால் தனக்கருகே மாற்றுத் திறனாளிகளை வைத்து நிபந்தனையற்ற ஆதரவு தருவீர்கள். கையெழுத்தை மாற்றி மாற்றி போடக் கூடாது.

சூரியன் உங்கள் லக்னாதிபதியான சனிக்கு பகையாக வருவதால் எமோஷனலாக முடிவுகளை எடுக்குமாறு உங்களைத் தூண்டுவார். இனிமேல் என்னால் எதற்கும் பொறுக்க முடியாது என்று வெடிப்பார்கள். நறுக்கென்று பேசுவதால் ஆங்காங்கு எதிரிகள் முளைத்த வண்ணம் இருப்பார்கள். சட்டென்று தூக்கியெறிந்து பேசிவிட்டு மனசை புண்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.

முதுகுத் தண்டுவடத்தில் சிறிய வலி வந்தால்கூட உடனே பார்த்துவிடுவது நல்லது. கடன் வாங்குவதில் எல்லை மீறி சென்று கொண்டேயிருப்பார்கள். எச்சரிக்கை தேவை. ஏழாம் இடமான சிம்மத்தில் சனியும் சூரியனும் இருந்தால் திருமணம் தாமதமாகும். அவ்வப்போது வாழ்க்கைத் துணையின் உடல்நிலை பாதிக்கப்படும். குழந்தைப் பிறப்பு தடைபட்டு தாமதமாகும். சம வயதுள்ள அல்லது சில மாதங்களே இடைவெளியில் பிறந்த வாழ்க்கைத் துணை அமையும். ஒரு பிடிவாத குணம் இருந்து கொண்டேயிருக்கும்.

வாழ்க்கைத் துணைவர் சட்டென்று தூக்கி எறிந்து பேசுபவராக இருப்பார். தான் சொல்வதே சரியென்று நிலைநாட்டிக் கொண்டிருப்பார். எட்டாமிடமான கன்னியில் சனியும் சூரியனும் இடம்பெற்றிருந்தால் சில பழக்கங்களுக்கு அடிமையாவார்கள். அசையும் சொத்துகளை இவர் பேரிலும், அசையாச் சொத்துகளை மனைவியின் பேரிலும் வைத்துக் கொள்வது நல்லது. சாதாரணமாகப் பேசி முடிக்க வேண்டிய விஷயத்திற்கெல்லாம் வழக்கு வரை செல்வார்கள். சேமிப்புகளை அவ்வப்போது எடுத்துச் செலவழித்து விடுவார்கள்.

ஒன்பதாம் இடமான துலாத்தில் சனியும் சூரியனும் இருந்தால் திடீரென்று தந்தைக்கு வேலைமாற்றம், இடமாற்றம் என்று ஏற்படும். குடும்பத்தில் மெல்ல அமைதியற்ற நிலை நிலவத் தொடங்கும். தந்தைக்கும் பிள்ளைக்குமிடையே ஒருவரையொருவர் விஞ்சிக் கொண்டே இருப்பார்கள். அவ்வப்போது சிறு விரிசல் வந்து நீங்கும். தர்ம காரியங்களில் ஈடுபாடும், நிறைந்த சமயோஜித புத்தியோடும் இருப்பார்கள்.

அரசாங்கத்தால் ஏதேனும் தொந்தரவு இருந்தபடி இருக்கும். எனவே, அரசுக்குச் செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் செலுத்தி விடுதல் மிகவும் நல்லது. பத்தாம் இடமான விருச்சிகத்தில் சனியும் சூரியனும் இடம்பெற்றிருந்தால் அணு உலை, நிலக்கரி சுரங்கப் பணி, இரும்பு உருக்காலை, கெமிக்கல் கம்பெனி, இதய அறுவை சிகிச்சை நிபுணர், பிசியோதெரபிஸ்ட், ஆம்புலன்ஸ் ஓட்டுபவர், மயானத்தில் வேலை, தோட்டக் கலை, சித்த மருத்துவ சாலை, மோட்டார் காயில் கட்டுபவர், லாரி மெக்கானிக், செங்கல் சூளை வைத்திருத்தல் என்று சில தொழில்களை மேற்கொள்வார்கள்.

பதினோராம் இடமான தனுசு ராசியில் சனியும் சூரியனும் தனித்து மூத்த சகோதரரோடு அனுசரித்துப் போய்விடுதல் நலம். ஒரே தொழிலை நம்பி இறங்காது, பல்வேறு முறையில் தடம் பதித்து சம்பாதிப்பார்கள். தீவிர இயக்கங்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்தபடி இருப்பார்கள். இந்த அமைப்பில் உள்ளோர் சொல்தாங்காத குணத்தை கொண்டிருப்பார்கள்.

பன்னிரண்டாம் இடமான மகர ராசியில் சனியும் சூரியனும் அமர்ந்தால் பாட்டாளி, படிப்பறிவில்லாதவர்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றுபவர்களாக இருப்பார்கள். தினமும் உண்பதற்கு முன்பு காக்கைக்கு சோறு வைப்பது நல்லது. ஏதேனும் ஒரு கோயில் தல விருட்சத்தை பராமரிப்பது இறைச் சிந்தனையைக் கூட்டும். தூக்கம் வராது தவிப்பார்கள்.

பழைய கெட்ட நினைவுகளை மறக்காமல் இருப்பார்கள். ஆவிகள் உலகம், தத்துவம், ஜீவசமாதிகளாக தரிசித்தல், மகான்களின் தரிசனம் என்று தீவிர ஆன்மிகவாதியாகவே இவர்கள் விளங்குவார்கள் சனி-சூரியன் சேர்க்கை பொதுவாகவே சிறு சிறு பிரச்னைகளை உண்டாக்கும். எப்போதுமே யார் பெரியவர்? என்கிற போட்டி மனோபாவத்தை வளர்த்தபடி இருக்கும்.

இது தவிர சூரியனும், சனியும் நின்ற ராசிகளில் நீச பாவத்தையும், பகையையும் பெற்றால் பெரும்பாலும் எதிர்மறை கதிர்வீச்சையே வெளிப்படுத்தும். இதிலிருந்து தப்பித்துக் கொள்ள கொஞ்சம் உக்கிர தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.அப்படிப்பட்ட ஒரு ஆலயமே மதுரையிலுள்ள மொட்டகோபுரத்தான் என்றழைக்கப்படும் வடக்கு வாசல் முனீஸ்வரன் ஆகும்.

திருமால் தாரைவார்த்துக் கொடுக்க, மீனாட்சி-சுந்தரேஸ்வரர் உலகநன்மைக்காகக் கைத்தலம் பற்றினர். திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கணப்பொழுதும் கண்ணிமைக்காமல் ஈசனுக்கும், அம்பிகைக்கும் காவலாக விளங்கும் பொருட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் நான்கு திசைகளிலும் அவர்கள் தனியே ஆலயங்களில் கொலுவிருந்தார்கள்.

அந்த நால்வரில் குறிப்பிடத்தக்கவர் வடக்கு வாசலில் கோயில் கொண்டிருக்கும் முனீஸ்வரன். வடக்கு வாசல் முனீஸ்வரனை குலதெய்வமாகக் கொண்ட குடும்பங்கள் நூற்றாண்டுகளாக பரம்பரை பரம்பரையாக இன்றளவும் அவரை வந்து தரிசித்து ஆசிபெற்றுச் செல்கிறார்கள். முனீஸ்வரனை ‘மொட்ட கோபுரத்தான்’ என்றும் செல்லமாக அழைக்கிறார்கள்.

(கிரகங்கள் சுழலும்) 

ஓவியம்: மணியம் செல்வன்