ஆங்கிலப் பதிப்புகளுக்குக் கிடைக்கிற மரியாதையையும் மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியத்திற்கு இருக்கும் அருமை பெருமைகளையும் நாம் அடைந்து விடலாம்...நம்பிக்கையோடும் உற்சாகத்தோடும் தன் கனவை பகிர்ந்துகொள்கிறார் ‘காலச்சுவடு’ கண்ணன்

- நா.கதிர்வேலன்

தமிழ் இலக்கிய உலகிற்கு ‘காலச்சுவடு’ இதழும் பதிப்பகமும் அளித்தது போற்றுதலுக்குரிய பங்களிப்பு. எண்பதுகளுக்குப் பிறகு பிறந்து தீவிரமாக வாசிக்க ஆரம்பித்த அனைவருக்குமான வாசல் ‘காலச்சுவடு’தான். இலக்கியத்திற்கான அருமையான அர்ப்பணிப்பு கண்ணன் வழியாக நடந்து கொண்டேயிருக்கிறது. அவர் வழியாக புத்தகங்களுக்குப் பெரும் மரியாதை உருவாகியது. சுந்தர ராமசாமியின் மூச்சுக்காற்றும் காலடித்தடங்களும் நினைவும் பிரவாகமாக இறைந்து கிடக்கும் நாகர்கோவில் வீட்டில் கண்ணனோடு நடந்தது இந்த உரையாடல். வெகுஜன பத்திரிகையில் வெளிவரும் அவரின் முதல் நேர்காணல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘காலச்சுவடு’ இதழைத் திரும்ப நடத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?
இதழியல் மீது ஆர்வம் என் பதின்பருவத்திலேயே தொடங்கிவிட்டது. வியாபாரப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு அப்பாவிற்கு முக்கியமான புத்தகங்களை எழுதுவதற்கான நேரத்தை ஒதுக்கித் தந்த பிறகு எனக்கு பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தொடங்கிய பிறகு கருப்பொருள் சார்ந்து இது வரணும், இது வரக்கூடாது என்ற வரையறையைத் தவிர்த்தேன்.

தீவிர வாசகர்களுடைய தேவை, அவர்களின் உணர்வைத்தான் கருத்தில் எடுத்தேன். சந்திக்கும்போது, தொலைபேசியில் உரையாடும்போது, கடிதங்கள் எழுதும்போது அவர்களைப் புரிந்துகொண்டேன். ஒரு நட்புக்காக, எழுத்தாளர் உறவுக்காக மோசமான படைப்பை வெளியிட்டு வாசகரை சோதிப்பதைத் தவிர்த்தேன். அதனால்தான் இத்தனை இதழ்கள் இருந்தும் ‘காலச்சுவட்’டிற்கு மரியாதை கூடுதலாகக் கிடைத்திருக்கிறது.

பத்திரிகையை நடத்துவதற்கு வைத்திருந்த திட்டங்கள்...
தொண்ணூறுகளில் வாசகர்கள் அதி தீவிரத்துடன் இயங்கத் தொடங்கியிருந்தது சந்தோஷமளித்தது. என்னால் சமயங்களில் பெரும் நுட்பங்களை அவர்களிடமிருந்து உணரவும் முடிந்தது. மேலதிக வீச்சோடு புறப்பட்டு வருகிற வாசகர்களை நான் விரும்புவேன். சட்டென விழிப்படைய வைத்துவிடும் அவர்களின் குரல் எனக்குப் பிடிக்கிறது. மாறுபட்ட சாத்தியங்கள் கொண்ட பார்வையையும் மதிப்பீட்டையும் அவர்களே முதல் கட்டமாக வரவேற்கிறார்கள்.

இந்த 10 ஆயிரம் அச்சுப் பிரதிகளின் வாசகர்களும் இணையதளங்களில் வாசிக்கும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களும் என்னை உற்சாகத்தில் வைத்திருக்கிறார்கள். நல்ல அறிவுச்சூழல் கண்ணுக்கு முன் உருவாகக் காத்திருக்கிறேன். ஆங்கிலப் பதிப்புகளுக்குக் கிடைக்கிற மரியாதையையும் மலையாளம் போன்ற மொழிகளில் இலக்கியத்திற்கு இருக்கும் அருமை பெருமைகளையும் நாம் அடைந்துவிடலாம். இதுவொன்றும் முடியாத காரியம் அல்ல.

பதிப்பகத்தைத் தொடங்கி வெற்றி பெற்றது எப்படி?
அன்று பல நல்ல கிளாசிக் படைப்புகளுக்குப் புதிய பதிப்பே இருக்கவில்லை. சுராவின் பல நூல்கள் அச்சில் இருக்கவில்லை. புதுமைப்பித்தன் மாதிரியான ஆளுமைகளின் பதிப்புகள் அத்தனை தரமாக இல்லை. அதனால் புதுமைப்பித்தன், ஜி.நாகராஜன் போன்றவர்களின் முழுப் படைப்புலகத்தையும் இன்றைய வாசகர்களின் உலகத்திற்குள் கொண்டு வந்தோம்.

பழைய இருப்பில் இருக்கிற பதிப்புகளை அப்படியே போட வேண்டும் என்றால், அதற்கு ‘காலச்சுவடு’ தேவையில்லை. அவற்றில் நிறைய விஷயங்கள் விட்டுப் போயிருந்தன. தவறான கால நிர்ணயம் இருந்தது. வரிசை ஒழுங்கு இல்லை. பிழைகள் மலிந்திருந்தன. அவற்றை எல்லாம் சீர்திருத்தி, தரமான, சீர்மிகு பதிப்பாகக் கொண்டு வந்தோம்.

புத்தகம் என்றால் 100 ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து வாசகர்கள் வாங்க மாட்டார்கள் என்ற நினைப்பு இருந்தது. அதை நம்பாமல், புத்தகத்தின் தரத்திற்காக மெனக்கெட்டோம். தரமும் புத்தகத்தின் உயிர்ப்பும் படைப்பாளிகளின் ஆளுமையும் அறிந்தால் வாசகருக்கு விலை ஒரு பொருட்டல்ல எனத் தெரிந்த தருணம் அது. நல்ல விஷயமாக இருந்தால் திறந்த மனதோடு வாசிக்கிறார்கள் எனப் புரிந்தது.

முந்தைய எழுத்தாளர்கள் கொண்டாடப்படுவதற்கு ‘காலச்சுவடு’ தொகுப்பும் பதிப்புமே காரணம். இதற்கு ஏதாவது முன் மாதிரி உங்களிடம் இருந்ததா?
‘சக்தி’, ‘வாசகர் வட்டம்’, ‘எழுத்து’, ‘க்ரியா’ என முன்னோடிகள் முயன்றிருக்கிறார்கள். தொண்ணூறுகளில் இணையம் வழியாகப் புதிய பண்பாட்டுச் சூழல் உருவாகத் தொடங்கிவிட்டது. ‘காலச்சுவ’ட்டில் பரந்துபட்ட அறிஞர் வட்டத்தின் பங்களிப்பு இருக்கிறது. அவர்கள் இடதுசாரிகள், தேசீய, தலித்திய, திராவிடப் பார்வை கொண்டவர்கள் என பல கொள்கைகளோடு இருக்கிறார்கள்.

அவர்களின் ஒட்டுமொத்த எண்ணம் ஒரு நல்ல படைப்பு வெளியாவதில் சிக்கலோ தாமதமோ இருந்து விடக்கூடாது என்பதுதான். தமிழுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அக்கறைப்பட்டவர்கள், மாறுபட்ட பார்வை கொண்டவர்கள் என 20 ஆண்டுகளாக இப்படி ஒரு குழு சில மாற்றங்களோடு இயங்கிக் கொண்டே இருக்கிறது. தீராத தொடர்ந்த செயல்பாடு இது.

இதுபோல ஒரு குழு வேறு எந்த பத்திரிகை, பதிப்பகங்களிலும் செயல்பாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. தோல்வி வழியாக கிடைக்கிற விரக்தியில், தியாக பிம்பத்தில் எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை. பிறகு வெறுப்புற்று தமிழ்ச் சமூகம் உருப்படாது என சாபம் இடுவதும் முறையல்ல. முன் வைத்த காலை பின் வாங்காமல் புதிய சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுத்திக்காட்ட வேண்டும்.

நல்ல மொழிபெயர்ப்புகளை முறைப்படி அனுமதி வாங்கி வெளியிடுகிறீர்கள்...
அப்படியான அனுமதி பெறுதல் எழுத்தாளனை அங்கீகரிக்கிற பண்பாகும். இன்று முயன்றால் இணையம் வழியாக  எவரையும் அடைந்துவிட முடியும். முந்தைய தலைமுறைக்கு யாரை, எப்படி, எவ்விதம் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது பிடிபடாதிருந்த வேளையில் அனுமதி இல்லாமல் படைப்புகள் வருவதற்கு ஒருவித நியாயம் இருந்தது. இப்போது அந்த நிலை இல்லாதபோது அனுமதி பெற்று வெளியிடுவதுதான் தர்மம். அந்தப் படைப்பாளிக்குக் கௌரவத்தையும் கொண்டு சேர்க்கிற விஷயம். இனியும் அப்படிச் செய்யாவிட்டால் அது நம் பண்பாட்டிற்கும் மரியாதைக்கும் தலைகுனிவு.

உங்களால் வெளிநாட்டின் இலக்கியவாதிகளும் தமிழக எழுத்தாளர்களும் கலந்துகொள்ளும் ஒன்றுகூடல் சாத்தியமாகியிருக்கு..!
‘காலச்சுவட்’டின் முன்னெடுப்பில் யுவன் சந்திரசேகர், பெருமாள்முருகன், சல்மா, சுகுமாரன், அரவிந்தன், ஜி.குப்புசாமி, தேவிபாரதி, சுகிர்தராணி போன்ற பல எழுத்தாளர்கள் வெளிநாடு சென்று பல மொழி இலக்கியவாதிகளைச் சந்தித்திருக்கிறார்கள். இன்னும் பலர் இந்தியாவில் நடக்கும் எழுத்தாளர் முகாம்களில் கலந்து இந்திய- உலகச் சூழலோடு உறவாடியிருக்கிறார்கள்.

இது பரஸ்பர புரிதல், பகிர்தல். இலக்கியம் சார்ந்த உள்ளும் புறமுமாக ஒரு பகிர்வு. இது நல்லது. எதிர்காலத்தில் இன்னும் முன்னேற்றம் வரும். படைப்பின் உள்ளடக்கம், உருவாக்கம் போன்றவற்றில் நம்மைச் சீர்படுத்திக்கொள்ளவும் அரிய வாய்ப்பு. தமிழ்மொழியின் ஆற்றல், தொன்மம் அங்கே பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ‘காலச்சுவட்’டின் வழி சுமார் 30 படைப்பாளிகளின் படைப்புகள் இந்திய / உலக மொழிகளுக்குச் சென்றிருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

ஸர்மிளா ஸெய்யித் போன்ற கவிஞர்களைக் கூட ‘உம்மத்’ போன்ற நல்ல நாவலில் சம்பந்தப்பட வைத்திருக்கிறீர்கள்...
ஸர்மிளாவிடம் தீவிரமான ஓர் அரசியல் பார்வை உண்டு. கவிதையில் அது குறிப்பிட்ட சட்டகத்தில் நின்று விடுகிறது. அதையே அவர் நாவலாக எழுதும்போது அது வேறுவகையாக அமையும். நாவல் என்ற வடிவத்தின் அறிதலுக்கும் கட்டுக்கோப்புக்கும் கொஞ்சமாக நாங்கள் உதவினோம்.

இப்படித்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயப்படுத்தல் கிடையாது. யோசனைகளை வழங்கி ஊக்குவிப்பது அவ்வளவே. பட்டறிவு உடைய எங்கள் குழு ஒரு படைப்பை மேம்படுத்த துணை நிற்கிறது. இப்படியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமே என்ற கவனப்படுத்தல். ஸர்மிளாவின் நாவல் அவர்கள் மண் சார்ந்த வாழ்வை உருக்கத்தோடும் உண்மையோடும் படைத்தது. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் அப்படைப்பு வெளிவர உள்ளது.                      

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்