MBA டிரைவர்!



- ரோனி

டாக்ஸியை புக் பண்ணி ஏறி உட்கார்ந்த உடனே ஹெட்போனை காதில் இணைத்து ஃபேஸ்புக் ஜோதியில் ஐக்கியமாகும் ஆட்கள்தானே அதிகம்! இதற்கு மாறாக டெல்லியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. காலையில் தன் கல்லூரிக்கு செல்ல டாக்ஸியை புக் செய்தார் ஜஸ்தேஜ் சிங். வண்டியை ஓட்டி வந்தது 60 வயது டி ஷர்ட் போட்ட அங்கிள். ஏறி அமர்ந்த ஜஸ்தேஜ், ‘எம்பிஏ படிப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உங்கள் பேரனைக்கூட இப்படிப்பில் சேர்த்துவிடாதீர்கள்...’ என போகிற போக்கில் தன் கஷ்டத்தை சொல்லி புலம்பியிருக்கிறார்.

உடனே டிரைவர் அங்கிள், சில எம்பிஏ டெக்னிக்கல் வார்த்தைகளைச் சொல்லி ‘அதுதான் பிராப்ளமா?’ என சிரித்திருக்கிறார். தூக்கிவாரிப்போட ‘அங்கிள் நீங்க யாரு?’ என ஜஸ்தேஜ்சிங் கேட்டிருக்கிறார். சிரித்தபடி, ‘பொதுத்துறையில் ஜெனரல் மேனேஜரா இருந்தேன். ரிடையர் ஆனதும் டாக்சி ஓட்டறேன். இந்த வருமானத்தை அப்படியே ஏழைக் குழந்தைகள் படிக்க செலவிடறேன்...’ என்று புன்னகைத்திருக்கிறார். ஏன் இப்படி மனுஷனை நிலைகுலைய வைக்கிறீங்க அங்கிள்ஸ்!