ஹீரோக்களின் சம்பளம் கோடிகளில் உயர்வது எப்படி? ரகசியத்தை உடைக்கிறார் ராஜ்கிரண்



மை.பாரதிராஜா

ராஜ்கிரண் ஒரு திறந்த புத்தகம். வெறும் நாலு ரூபாய் ஐம்பது காசு தினக் கூலியில் இருந்து இன்று கோடிகளில் சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்திருப்பவர். அவரிடம் எதைப்பற்றி வேண்டுமென்றாலும் தாராளமாகக் கேட்கலாம். வெள்ளந்தி சிரிப்பும் அனுபவம் நிறைந்த வார்த்தைகளுமாக கனிந்து வரும் பதில்கள்.

அப்படித்தான் இந்த உரையாடலும். அன்று ஹீரோக்களின் சம்பளம் ஆயிரக்கணக்கில்தான் இருந்தது. இன்றோ அது பல கோடியாக வாய் பிளக்க வைக்கிறது. இதற்கு யார் காரணம்? என்ன மேஜிக்? எதை அடிப்படையாக வைத்து ஒரு ஹீரோவின் சம்பளம் உயர்கிறது? அனைத்துக்கும் அவர் அளித்த பதில்கள் அப்படியே இங்கே... அதுவும் அவர் வார்த்தைகளில்...

பதினாறு வயசுல சென்னைக்கு வந்தேன். கிரசன்ட் மூவீஸ் கம்பெனில ஃபிலிம் ரெப்ரசன்டேடிவ்வா வேலை பார்த்தேன். சம்பளம்? தினமும் நாலு ரூபா ஐம்பது பைசா. படப்பெட்டியோட பல ஊர்கள்ல இருக்கற தியேட்டர்களுக்கு போயிருக்கேன். கவுண்டர் வாசல்ல நின்னு சரியான விலைக்கு டிக்கெட்டை விற்கறாங்களா... எத்தனை டிக்கெட் கிழிக்கறாங்கனு கவனிப்பேன். அன்னிக்கு ஆகுற வசூலை அடுத்த நாள் டிராஃப்ட் எடுத்து முதலாளிக்கு அனுப்புவேன்.

மேட்னி ஷோவுக்கு மட்டும்தான் தியேட்டர் கதவுகளை அடைச்சு ஓட்டுவாங்க. ஈவினிங் ஷோ, நைட் ஷோ ஓடறப்ப கதவை காத்தாட தொறந்து வுட்ருவாங்க. நான் குடோன்ல தங்கியிருப்பேன். ஷோ முடியற வரை எல்லா சத்தமும் கேட்டுக்கிட்டே இருக்கும். எந்த சீனுக்கு கை தட்டுறாங்க... எந்த சீனுக்கு வெளியே எந்திரிச்சு போறாங்கனு பார்த்திருக்கேன். அந்த பொக்கிஷமான அனுபவங்கள்தான் இப்ப நல்ல கதைகள் தேர்தெடுக்க உதவியா இருக்கு.

அதனாலதான் ஒரு சக்சஸ்ஃபுல்லான விநியோகஸ்தரா என்னால இருக்க முடிஞ்சது. முப்பது நாற்பது வருஷங்களுக்கு முன்னாடி சினிமா இருந்த விதமே வேற. எம்ஜிஆர், சிவாஜி, எஸ்.எஸ்.ஆர், ஜெமினி கணேசன்னு எல்லாருமே அவங்கவங்களுக்குனு ஒரு பாணியை வைச்சிருப்பாங்க. அப்ப போட்டிகள் அதிகம் இல்லாததால லாப நஷ்டங்கள் தயாரிப்பாளர்களை பெருசா பாதிக்காது.

ஒருவேளை ஒரு படத்துல அடிபட்டாலும் அடுத்த படத்துல அதை அட்ஜஸ்ட் பண்ணிக் கொடுத்துடுவாங்க. ஹீரோக்களும் அப்படி தயாரிப்பாளரை காப்பாத்திடுவாங்க. இப்ப அப்படி இல்லை. ஆயிரம் புரொட்யூசர்கள் இருக்காங்க. நஷ்டம்னா யாரும் யார்கிட்டேயும் திருப்பிக் கேட்க முடியாது. ஆனாலும் புதுசா விஷயம் இருக்கற படங்கள் ஓடிட்டுத்தான் இருக்கு.



‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ மாதிரி வித்தியாசமான கதைகளோட எக்கனாமிக்கலா தயாரிச்ச படங்கள் ஓடிடுது. புதுமுக நடிகர்கள், வித்தியாசமான கதைகள் ஜெயிக்கறது எல்லா காலகட்டத்திலேயும் நடக்கறதுதான். இங்க சின்ன நடிகர், பெரிய நடிகர்னு யாரா இருந்தாலும் எல்லாருக்குமே ஒரு இமேஜ் இருக்கு. அந்த இமேஜுக்குள்ள

படம் எடுத்தா, கமர்ஷியலா ஹிட் பண்ணிட முடியும். ஜெயிக்கற மாதிரி கதைகளை தேர்ந்தெடுக்கறது அந்தந்த ஹீரோக்களோட பொறுப்பு. இந்த மாதிரி... அதாவது முப்பது வருஷங்களுக்கு முன்னாடி இருந்த காலகட்டத்து சினிமா இப்ப வரணும். அப்ப ஒரு தயாரிப்பாளர் நல்ல கதையோடு வந்தா கால்வாசிப் பணத்தை அவர் போட்டா போதும். அடுத்த கால்வாசியை ஃபைனான்ஸியர்கள் கொடுப்பாங்க.

மீதமுள்ள ஐம்பது சதவிகிதத்தை தியேட்டர்கள்கிட்ட விநியோகஸ்தர்கள் வாங்கிப்பாங்க. இந்தப் பணத்தை அட்வான்சா தயாரிப்பாளர் வாங்கிக்கலாம். படத்தை முடிக்கலாம். படம் வெற்றி  பெற்றா எல்லாருக்கும் சந்தோஷம். தோல்வியானா பெரிய அளவுல கையைக் கடிக்காது. அப்ப உள்ள இன்னொரு நல்ல விஷயம், எல்லா தியேட்டர்களும் பர்சன்டேஜ் கணக்கில்தான் படத்தை திரையிட முன் வருவாங்க. இல்லேனா ஃபிக்ஸடு ஹையர் முறை.

ஒரு குறிப்பிட்ட ஹீரோ நடிச்ச படம் எவ்வளவு நாள் ஓடுதோ, அதை ஒரு ‘ரன்’னு சொல்வாங்க. ஒரு ரன்னுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிப்பாங்க. ஃபிக்ஸடு ஹையர்னு வாங்கிட்டா, லாப நஷ்டம் அவங்களோடது. பர்சன்டேஜ் கணக்குன்னா வர்றதை பிரிச்சு எடுத்துப்பாங்க. இதனால யாருக்கும் பெரிய பாதிப்பு வந்ததில்லை. இப்ப பர்சன்டேஜ் சிஸ்டமே இல்ல.

ஒரு தயாரிப்பாளர் 25 பர்சன்டேஜ் பணம் போடுற பிராக்டீஸ் இப்ப கிடையாது. அந்த புரொட்யூசருக்கு லீடிங் ஹீரோ தெரிஞ்சவரா இருந்தால் போதும். ஹீரோ டேட்ஸ் கொடுத்துடுவார். இந்த விஷயம் வெளில தெரியறதுக்கு முன்னாடியே ஃபைனான்ஸியர்கள் காதுக்கு போயிடுது. உடனே அவர் தயாரிப்பாளருக்கு போன் செய்து, ‘ஹீரோவுக்கு எவ்வளவு அட்வான்ஸ் கொடுக்கணும்? உங்களுக்கு எவ்வளவு தேவைப்
படும்?’னு கேட்கறாங்க.

ஹீரோவுக்கு ஐம்பது கோடி... தயாரிப்பு செலவு 25 கோடினு சொன்னா பணம் தர ரெடியா இருக்காங்க. இந்த வகைல தயாரிப்பு செலவு 75 கோடி. இந்தத் தொகைக்கு படத்தை விற்கணும். விநியோகஸ்தர்கள் இந்த பெரிய தொகையை கவர் பண்ற மாதிரி படத்தை வாங்கி ‘மினிமம் கேரன்டி’னு சொல்லப்படுற ‘எம்ஜி’ முறையை போடறாங்க.

இது ஃபிக்ஸடு ஹையரை விட பெட்டரான முறை. எம்ஜி பத்து லட்ச ரூபாய்னா... தியேட்டர் வசூல் பத்து லட்ச ரூபாய்க்கு கீழே வந்தா அந்த நஷ்டத்தை டிஸ்ட்ரிபியூட்டர் ஏத்துக்கணும். பத்துலட்ச ரூபாய்க்கு மேல வந்தா அது தயாரிப்பாளருக்கு. 75 கோடி முதலீட்டை திருப்பி எடுக்கணும்னா சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரும் ஹீரோவும் சரியான கதையை தேர்ந்தெடுக்கணும் இல்லையா..?
 
படம் எடுக்கிறவரை நம்பித்தான், அவர் சொத்துக்களை எழுதி வாங்கிட்டுதான் ஃபைனான்ஸியர் பணம் கொடுக்கிறார். ஹீரோவை நம்பித்தான் பணம் கொடுக்கறார்னாலும் கையெழுத்து போடுறது தயாரிப்பாளர்தானே! இவ்வளவு ரிஸ்க் இருக்கு. அப்ப, ஒரு கதையை தீர்மானிக்கிற அனுபவம் புரொட்யூசருக்கு இருக்கணும். அடுத்தது இவர் யாரை ஹீரோவா வச்சு படம் பண்றாரோ, அந்த ஹீரோவுக்கு இந்த கதை ஜெயிக்குமானு கணிக்கிற திறமை இருக்கணும்.



அடுத்து விநியோகஸ்தர்கள்... ‘புரொட்யூசர் 75.சி. பட்ஜெட் சொல்லிட்டார். ஸோ, அதை விற்க வலைவிரிக்கணும்’னு இறங்கிடக்கூடாது. கால் கிலோ கத்திரிக்காய் வாங்கினா கூட இது சொத்தையா, நல்லா இருக்கானு பார்த்துத்தானே வாங்கறோம்? அப்ப கோடிக்கணக்கான ரூபாய்க்கு படத்தை வாங்கறப்ப சோதிக்காம வாங்கறது அடி முட்டாள்தனமில்லையா?

அந்தக் காலத்துல படத்தை திரையிட்டுக் காட்டச் சொல்வாங்க. படம் பிடிச்சிருந்தா விலை பேசுவாங்க. அடுத்து தியேட்டர்காரங்க. எனக்கு முப்பது பர்சன்ட், மீதியை நீங்க எடுத்துக்குங்கனு இருந்தா சரியா இருக்கும். ஆனா, இப்ப பக்கத்து தியேட்டர்காரங்க படத்தை எடுத்துடக் கூடாதுனு ஐந்து லட்ச ரூபாய் வசூல் ஆகற படத்தை பக்கத்து தியேட்டர்காரங்க பத்து லட்ச ரூபாய்க்கு எடுத்திடுவான்னு பயந்து கூடுதல் விலைக்கு வாங்கறாங்க.

மொத்தத்துல புரொட்யூசர்ல இருந்து தியேட்டர் வரை எல்லாமே தப்பா இருக்கு. இதை தவிர்க்கணும். சினிமா நல்லா இருக்கணும்னா, பழைய முறைக்கு திரும்பணும். நடிகர்கள் யாரும் எனக்கு இவ்வளவு சம்பளம் வேணும்னு கேட்கறதில்ல. உதாரணத்துக்கு என் வாழ்க்கைல நடந்த சம்பவத்தை சொல்றேன். ‘மஞ்சப் பை’ வெற்றிக்கு முன்னாடி நான் வாங்கின சம்பளம் ஒரு கோடி ரூபாய். ஆனா, அந்தப்படம் வெற்றிக்கு அப்புறம் நிறைய கதைகள் கேட்டு, திருப்தி இல்லாம திருப்பி அனுப்பினேன்.

உடனே ‘இவர் சம்பளத்தை பெருசா எதிர்பார்க்கறார். கேட்டதை கொடுத்துட்டா சம்மதிச்சிடுவார்’னு நினைச்சு, ‘மூணு கோடி தர்றேன்; ஒரு கோடி சிங்கிள் பேமன்ட்’னு ஒருத்தர் சொல்றார். இன்னொருத்தர் மூன்றரை கோடினு ஏத்தறார். ‘மஞ்சப்பை’ லாபம் கிட்டத்தட்ட முப்பது கோடி ரூபாய். சற்குணத்தோட உதவியாளர் ராகவன் ‘மஞ்சப் பை’ கதையை சற்குணம்கிட்ட சொல்லியிருக்கார். நான் நடிச்ச கேரக்டரை எஸ்.பி.முத்துராமன் சாரை வச்சு செய்யலாம்னு நினைச்சிருக்கார்.

‘கதை நல்லா இருக்கு. ஆனா எஸ்.பி.எம். சார்ன்னா படம் விக்குமா’னு சற்குணம் தயங்கியிருக்கார். அப்புறம், ‘நீ ராஜ்கிரண்கிட்ட கதையை சொல்லு. அவருக்கு பிடிச்சிருந்தா, ஜெயிச்சிடுச்சுனு வச்சுக்கலாம்’னு என்கிட்ட ராகவனை அழைச்சிட்டு வந்தார். கதையைக் கேட்டேன். ‘பண்ணுவோம்’னு சொல்லிட்டேன். அதுவரை சற்குணம் சிங்கிள் பைசா முதலீடு பண்ணல. ‘ஒரு வாரத்துல அட்வான்ஸ் தர்றேன்’னு சொல்லிட்டு போயிட்டார்.

இண்டஸ்ட்ரியில ‘ராஜ்கிரண் ஒரு கதையை கேட்டிருக்கார். கதை சூப்பர்னு சொன்னார்’னு நியூஸ் பரவுது. அடுத்த நாள் லிங்குசாமி தம்பி போஸ் போன் பண்றார். ‘அந்தக் கதை உங்களுக்கு பிடிச்சிருக்குனு சொன்னீங்களானு அண்ணன் கேட்கச் சொன்னார்’னு சொன்னார். ‘ஆமாம் தம்பி. நல்ல கதை’னு சொன்னேன். உடனே லிங்குசாமி பேசினார்.



‘அப்படீனா நானே தயாரிக்கறேன்’னு சொல்லிட்டு சற்குணத்தை கூப்பிட்டு ‘ஃபர்ஸ்ட் காப்பி பட்ஜெட் என்ன’னு கேட்டார். ‘நாலரைக் கோடி’னு சற்குணம் சொல்ல... ‘ஐந்தரைக் கோடி. உங்களுக்கு ஒரு கோடி. இந்த ப்ராஜெக்ட்டை நான் பண்றேன்’னு லிங்குசாமி சொல்லி பணத்தை கொடுக்கறார். அதோட ஸாங்ஸ் நல்லா வரணும்னு மேற்கொண்டு ஐம்பது லட்சத்தை லிங்குசாமி செலவழிக்கறார்.

புரமோஷன் ஒன்றரை கோடி. மொத்தமா பட்ஜெட் ஏழரை கோடியைத் தொடுது. இருபது கோடி ரூபா தமிழ்நாட்டு தியேட்டர்கள்ல மட்டும் வசூல் ஆகுது. இது தவிர்த்து ஓவர்சீஸ், அதர் ரைட்ஸ், சாட்டிலைட்னு மொத்தமா முப்பது கோடி ரூபாய் கிராஸ் பண்ணிடுது. இப்ப எனக்கு மூன்றரைக் கோடி சம்பளம் கொடுத்தாலும் தயாரிப்பு செலவு, விளம்பரம் அது இதுனு எல்லா செலவும் சேர்த்து ஒன்பது கோடி செலவு பண்ணினா கூட... ‘மஞ்சப் பை’ லாபத்துல பாதி வந்தா கூட... நமக்கு லாபம்தானேன்னு நினைச்சு சம்பளத்தை உயர்த்தறாங்க.

நான் ஐந்து கோடி சம்பளம் கேட்கவே இல்லை. ஆனா, ‘பவர் பாண்டி’ டிரைலர் வந்த அன்னிக்கே ‘உங்க பேமன்ட் ஐந்தா’னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆக, நடிகர்கள் யாரும் சம்பளத்தை ஏத்தறதில்லை. ஒரு வெற்றிப்படத்துக்கு அடுத்த படம் நம்ம படமா இருக்கணும்னு தயாரிப்பாளர்களா போய் ஹீரோக்கள்கிட்ட விழறாங்க. எப்ப கதைதான் முக்கியம்னு தெரிஞ்சுக்கறாங்களோ அப்ப இந்தத் துறை வெற்றிகரமா இயங்கும்!