விஜயனின் வில்
கே.என்.சிவராமன் - 28
‘‘நாங்க அப்பவே வந்துட்டோம்..!’’ கோரசாக ஒலித்த குரலைக் கேட்டு ஆதியும் கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார்கள். கருங்கல் சுவரைத் தவிர வேறு மனித வாசனையே அங்கில்லை.
குழப்பத்துடன் கார்க்கோடகரை ஏறிட்டார்கள். அவர் உதட்டில் புன்னகை விரிந்தது. ‘‘எப்ப வந்தீங்க?’’ ‘‘முதல்ல நீங்க கூப்பிட்டப்பவே!’’ ‘‘அப்புறம் ஏன் குரல் கொடுக்கல..?’’ ‘‘வாசுகி அம்மா வந்திருந்தாங்களே...’’ சில நொடிகள் அமைதி நிலவியது. கார்க்கோடகர் தொண்டையை செருமினார்.
‘‘குளிகனும் பத்மனும் பாதுகாப்பா இருக்காங்களா அனந்தா?’’ ‘‘எங்க மூணு பேருக்கும் எந்தப் பிரச்னையும் இல்ல...’’ தலையசைப்புடன் கார்க்கோடகர் பெருமூச்சு விட்டார். ‘‘அ... அவங்க நேர்ல வர மாட்டாங்களா..?’’ ஆதியின் கேள்விக்கு அவர் உடனடியாக பதில் அளிக்கவில்லை. சிறைப்பட்ட அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்தார். அவரது முகத்தில் மட்டும் பாவனைகள் அவ்வப்போது மாறிக் கொண்டிருந்தன.
மீண்டும் எதையோ கேட்க முற்பட்ட ஆதியின் கரங்களை கிருஷ்ணன் பிடித்தான். ‘அமைதியாக இரு...’ என செய்கை காட்டினான். ஐஸ்வர்யாவும் இமைகளை மூடித் திறந்து ‘வெயிட்...’ என கெஞ்சினாள். ‘தொம்... தொம்...’ தன் கால்களை உயர்த்தி தரையை ஓங்கி அடித்த கார்க்கோடகர் மூவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.
‘‘என்ன கேட்ட... அனந்தனும் குளிகனும் பத்மனும் நேர்ல வர மாட்டாங்களானுதானே... எப்படி வருவாங்க? இது என்ன இடம்..? உலூபியோட ராஜ்ஜியம். இங்க அவங்க இருக்கறது தெரிஞ்சா என்ன ஆகும்..?’’ ‘‘எ...ன்...ன ஆகும்..?’’ ‘‘உயிர் போகும் ஆதி... அவங்க மூணு பேரும் சாம்பலாகிடுவாங்க... எப்பவும் அவங்க குரல்தான்.
குறிப்பிட்ட சிலபேர் தவிர வேற யார் கண்ணுக்கும் தெரியமாட்டாங்க. தேவைப்பட்டா நான் உருவத்தை கொடுப்பேன்...’’ ‘‘அப்படீன்னா அனந்தனும் பத்மனும் குளிகனும் யாரு? உலூபி தாயாருக்கு எதிரானவங்களா கார்க்கோடகரே...’’ ‘‘ஆமா...’’ குரலை உயர்த்தாமல் அதே நேரம் அழுத்தத்தை குறைக்காமல் கார்க்கோடகர் பதில் அளித்தார்.
‘‘அவங்க மட்டுமில்ல... நானும்தான்..!’’ ‘‘...’’ ‘‘என்ன அப்படிப் பார்க்கறீங்க..?’’ அவரது பார்வை தன் முன் நின்றுகொண்டிருந்த ஆதி, கிருஷ்ணன், ஐஸ்வர்யா மூவரையும் அலசியது. ‘‘நாங்க வாசுகி அம்மாவுக்கு நீதி கிடைக்கறதுக்காக தலைமுறை தலைமுறையா போராடிட்டு இருக்கோம். அமிர்தம் எடுக்க தன்னோட உடம்பையே கயிறா பயன்படுத்த கொடுத்தாங்க.
ஆனா, என்ன நடந்தது? அமிர்தம் கிடைச்சதும் எல்லாரும் வாசுகி அம்மாவை மறந்துட்டாங்க. அவங்க வலியோடயும் வேதனையோடயும் துடிச்சதைப் பத்தி யாருமே கவலைப்படலை. ஏன், ஆறுதல் கூட சொல்லலை. இதெல்லாம் சரினு நினைக்கறியா..?’’ ‘‘தப்பாவே இருக்கட்டும் கார்க்கோடகரே... நீங்க எடுத்துச் சொல்லலாமே?’’ ‘‘யார் கிட்ட ஆதி... ‘Intelligent Design’ அமைப்புகிட்டயா இல்ல உலூபி கிட்டயா..?’’ பதில் சொல்ல முடியாமல் ஆதி தலைகுனிந்தான்.
தங்களுக்கு அப்பாற்பட்டு நடக்கும் விஷயங்கள் என்பதால் அதை உள்வாங்க கிருஷ்ணனும் ஐஸ்வர்யாவும் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்கள். ‘‘ஏன் மவுனமாகிட்ட ஆதி..? இப்படி அமைதியா இருந்து இருந்துதான் கொடுமைக்கு துணை போயிட்டு இருக்கோம். இதுக்கு மேலயும் அப்படி இருக்க முடியாது. மிஞ்சிப் போனா துரோகினு சொல்வீங்க... பரவாயில்ல.
உங்க பார்வைல அப்படியே இருந்துட்டு போறோம். அதே சமயம் வாசுகி அம்மாவுக்கு நியாயம் கிடைக்கிற வரை எங்க போராட்டம் முடியாது. நான் அழிஞ்சாலும் சரி... இது தொடரும். ஆமா... இது தனி மனித யுத்தம் இல்ல. ஒரு இனத்தோட போர்... அதுவும் வாசுகி அம்மாவோட பரம்பரையைச் சேர்ந்தவங்க நடத்தற உரிமைப் போராட்டம்.
அதனாலதான் நாங்க பூமில இருக்கிறவங்களோட வாசமே படாம வேற்று கிரகத்துல வசிச்சுட்டு இருக்கோம்...’’ ‘‘சரி, வாசுகிக்கு... ஐ மீன்... வாசுகி அம்மாவுக்கு நியாயம் கிடைக்க என்ன செய்யப் போறீங்க..?’’ கேட்ட ஐஸ்வர்யாவை ஏற இறங்கப் பார்த்தார் கார்க்கோடகர்.
‘‘நீங்க எடுக்க நினைச்சதை கைப்பற்றப் போறோம்...’’ ‘‘எது..?’’ ஆதி பதறினான். ‘‘அதுதான்..!’’ அவன் தோளில் ஓங்கித் தட்டினார். ‘‘விஜயனின் வில்!’’ அடுத்த கணம் அந்த கருங்கல் சிறை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது...
(தொடரும்)
ஓவியம் : ஸ்யாம்
|