ஆர்ட் ப்ளாட்ஃபார்ம்!



- குரு

ரவுண்டு கட்டி அடிக்கும் இளைஞர்கள்

மக்களை இணைக்கும் அன்புச்சங்கிலியே கலை. ஆனால், கலைஞர்களே பிளவுபட்டு தனித்தனி தீவாக அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கிறார்கள். இப்படி பிரிந்திருக்கும் கலைஞர்களை ஒன்றிணைக்க ஒரு ப்ளாட்ஃபார்மை உருவாக்கியிருக்கிறது பெங்களூருவைச் சேர்ந்த ‘ஓப்பன் ஸ்கை ஸ்லாம்’ என்ற அமைப்பு.

‘‘ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நண்பரோட வீட்டு மொட்டை மாடில இரண்டு கவிஞர்களும், அவங்களோடு சிலரும் பாடல்கள் குறித்து பேசிட்டு இருந்தாங்க. அதுக்குப் பிறகுதான் பாடல்கள் மீதான தெளிவான பார்வையும், பாஸிட்டிவ் எண்ணங்களும், மன அமைதியும் அவங்களுக்கு கிடைச்சது.

இந்த மாதிரியான கலந்துரையாடல் கலைஞர்களுக்கு அவசியம்னு உணர்ந்த அவங்க ‘ஏன் இது போல ஆர்ட்டிஸ்ட்கள் விவாதிக்க ஒரு ப்ளாட்ஃபார்மை உருவாக்கக்கூடாது’னு நினைச்சாங்க. உடனே ஒரு ஆர்ட் கம்யூனிட்டியை உருவாக்கினாங்க. மொட்டை மாடி வெட்ட வெளில இந்த ஐடியா உதிச்சதால அதுக்கு ‘ஓப்பன் ஸ்கை’னு பெயர் வைச்சாங்க...’’ என தங்கள் அமைப்பு உருவான விதத்தைப்பற்றி உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் இவ்வமைப்பின் கோ-ஆர்டினேட்டரான ஸ்ருதி எம்.ஆச்சார்யா.

‘‘பெங்களூருலதான் முதல்ல இந்த அமைப்பைத் தொடங்கினோம். அங்கிருந்த கலைஞர்கள்கிட்ட நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்புறம் சென்னை, மும்பை, புனேனு மத்த இடங்கள்லயும் ஆரம்பிச்சோம். ‘ஓப்பன் மைக்’, ‘ஆர்ட் இன் தி பார்க்’னு மாசத்துக்கு ரெண்டு ஈவென்ட்ஸ் நடத்தறோம். ஸ்டேண்ட் அப் காமெடியன்ஸ், மியூஸிஷியன்ஸ், மெஜிஷியன்ஸ், பெயின்டர்ஸ்னு... எல்லாரும் கலந்துகிட்டு அவங்களோட பங்களிப்பை கொடுக்கறதுதான் ஓப்பன் மைக்.

பெரிய பெரிய தியேட்டர்கள்ல ‘பிளைண்ட் டேட்’னு ஒரு ஷோ ஸ்கிரீன் பண்ணுவாங்க. சர்ப்ரைஸா என்ன படம், எந்த மொழின்னு கூட தெரியாம மக்கள் அந்த ஷோவைப் பார்க்கப் போவாங்க. அதே மாதிரிதான் எங்களுடைய ஆர்ட் இன் தி பார்க் ஈவென்ட். ஆர்ட்டிஸ்ட்களின் கண்ணைக் கட்டிவிட்டு மத்த ஆர்ட்டிஸ்ட்களோடு பேச வைப்போம்.

முகம் தெரியாத அந்த மனுஷங்ககிட்ட தங்களோட வாழ்க்கை அனுபங்களையும், தங்கள் கலைகளையும் பகிர்ந்துப்பாங்க. சாதி, மதம், இனம், நிறம்னு எந்த பேதமும் இல்லாம கலை அனுபவங்கள் இந்த ஈவென்ட்ல பகிரப்படும்...’’ என தொடர்ந்த ஸ்ருதி தங்களுடைய நோக்கங்களையும் பட்டியலிட்டார். ‘‘மண்ணுல பிறக்கிற எல்லா குழந்தைங்ககிட்டயும் ஒரு கலைஞன் மறைஞ்சிருக்கான். ஆனா, வளரும்போது அந்தக் கலைஞன் ஏன் மறைஞ்சு போறான்?

இந்தக் கேள்வி ஏற்படுத்திய தாக்கம்தான் எங்க அமைப்பு அடுத்தடுத்து வளர காரணம். ஆர்ட்டிஸ்ட்டை மோட்டிவேட் பண்ணி ஆர்ட்டை வளர்ப்பதுதான் எங்க நோக்கம். நான் ஒரு கிளாசிக்கல் டான்சர். என்னை மாதிரியே எங்க டீம் மெம்பர்ஸ் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு துறைல ஆர்ட்டிஸ்ட்டா இருக்காங்க.

நாங்க நடத்தின ஈவென்ட்ஸ்ல தனித்தனியா கலந்துகிட்டவங்க இப்ப அவங்களுக்குள்ளயே ஒரு டீமை ஃபார்ம் பண்ணி செயல்பட ஆரம்பிச்சுட்டாங்க. அவ்வளவு ஏன், பல மியூஸிக் பேண்ட்ஸ் நாங்க நடத்தின ஈவென்ட்ஸிலிருந்துதான் உருவாச்சுனா பாருங்க!’’ பெருமையுடன் சொல்கிறார் ஸ்ருதி.