கடுகுக்கு ஆபத்து!
மரபீனி மாற்று விதைகள் ஏன் அணு உலையை விட ஆபத்தானவை? Detailed Report.
-கி.ச.திலீபன்
டெல்லி வேளாண் பல்கலைக்கழகம் 2015ம் ஆண்டு நடத்திய மரபீனி மாற்று கடுகு (genetically modified mustard) களப் பரிசோதனையின்போதே அதன் மீது கடும் எதிர்ப்பலைகள் கிளம்பின. மரபீனி மாற்று விதைகளால் சூழல் சீர்கேடுகள் ஏற்படுவதுடன் நமது விதை கேள்விக்குள்ளாக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.
இதோ இப்போது அந்த அபாயத்தை நாம் நெருங்கியிருக்கிறோம். மரபீனி மாற்று கடுகை அனுமதிக்கும்படி genetic engineering appraisal committee மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு தனது பரிந்துரையை அனுப்பியிருக்கிறது. சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அந்தப் பரிந்துரையை ஏற்று அதற்கு ஒப்புதல் அளித்தால் நம் நாடு பேரழிவுக்கு ஆளாக நேரிடும் என்கிற அபாயக்குரல் ஒலிக்கிறது.
மரபீனி மாற்று விதைகளின் தொழில்நுட்பம் குறித்தும், அதன் பாதகங்கள் குறித்தும் சூழல் ஆய்வாளர் சுல்தான் இஸ்மாயிலிடம் கேட்டோம். ‘‘இப்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மரபீனி மாற்று கடுகு DMH 11 (Denmark Madras Hyderabad 11), டெல்லி பல்கலைக்கழகத்தில் தீபக் பெண்டல் என்கிற அறிவியலாளரின் தலைமையில் நடைபெற்ற ஆராய்ச்சியின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
பிடி கத்திரிக்காய் மற்றும் பிடி பருத்தியில் bacillus thuringiensis என்கிற நுண்ணுயிரியின் மரபு பயன்படுத்தப்பட்டதைப் போல், BARNASE / BARSTAR என்கிற உயிரி தொழில்நுட்பம் இந்த மரபீனி மாற்றுக் கடுகில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. Bacillus amyloliquefaciens என்கிற நுண்ணியிரியின் மரபிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் பார்னியஸ்.
கடுகுச் செடியின் ஒவ்வொரு பூவிலும் ஆண், பெண் என இரண்டு இனங்களும் இருப்பதால் அவை தன்மகரந்தச் சேர்க்கை புரிந்து கொள்ளும். இந்நிலையில் வருணா என்ற கடுகு வகையிலிருந்து பார்னியஸ் லைனை உருவாக்குகிறார்கள். அதற்கு ஆண் உறுப்பினை செயலிழக்க வைத்துவிடுகிறார்கள். ஹீரா 2 என்கிற கடுகு வகையை எடுத்துக் கொண்டு அதன் பெண் உறுப்பை அகற்றி விடுகிறார்கள்.
தன்மகரந்தச் சேர்க்கை அல்லாமல் அயல் மகரந்தச் சேர்க்கைக்காக இந்த மலட்டுத்தன்மை ஏற்படுத்தப்படுகிறது. மூன்றாவதாக Streptomyces hygroscopicus என்கிற நுண்ணுயிரியின் மரபைக் கலந்து இந்தக் கடுகைத் தயாரித்திருக்கிறார்கள். வருணாவும் ஹீரா 2வும் மகரந்தச் சேர்க்கை புரிவதன் மூலம் கிடைக்கும் f 1 விதைதான் இந்த மரபீனி மாற்றுக் கடுகு விதை.
கடுகு வெறும் எண்ணெயாகவும், உணவுப்பொருளாகவும் மட்டுமே பயன்படுவதில்லை. கடுகு விளைவித்தால் மண் சுத்தமாகும். மண்ணிலிருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கடுகுக்கு உண்டு. நம் நாட்டில் 50 - 60% தேன் கடுகுச் செடிகளின் பூக்களிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. கடுகுச் செடியின் மஞ்சள் நிற பூ, தேனீக்களின் விருப்புக்குரியது.
ஆப்பிள் மரங்களுக்குக் கீழ் கடுகு வளர்த்தால் தேனீக்களின் வருகையால் நிகழும் மகரந்தச் சேர்க்கை காரணமாக ஆப்பிள் உற்பத்தி அதிகரிக்கும் என்று ஜெயா தாக்கரே என்கிற மாணவி கண்டறிந்திருக்கிறார். பல வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த கடுகை மரபீனி மாற்றம் செய்வது பெரும் சீர்கேட்டுக்கு இட்டுச் செல்லும். தேனீக்களின் மகரந்தச் சேர்க்கையை இது கேள்விக்குட்படுத்தும்.
மட்டுமல்லாமல் இந்த DMH 11 கடுகுக்கு களைக் கொல்லியாக க்ளூப்போசீனேட் கொண்டு வரப்படவிருக்கிறது. இக்களைக்கொல்லி நரம்பு மண்டலத்தை பாதிக்க வாய்ப்பிருக்கிறது. உயிரி வளம் அதிகமுள்ள நமது நாட்டில் மரபீனி மாற்றப்பட்ட விதைகள் மூலம்தான் விளைச்சலைப் பெருக்க முடியும் என்பதில்லை.
எந்த ஒரு தொழில்நுட்பமும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பல கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த கடுகு விஷயத்தில் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை...’’ என்கிறார் சுல்தான் இஸ்மாயில். மரபீனி மாற்றம் என்பதே விதையைக் கைப்பற்றுவதற்கான அரசியல்தான் என்கிறார் வேளாண் அறிஞர் பாமயன்.
‘‘மரபீனி மாற்று கடுகு கொண்டு வரப்படுவதற்கான தேவை என்ன? கடுகுப் பற்றாக்குறை நிலவுகிறதா என்ன? இதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்? இந்தக் கேள்விகளின் மூலம்தான் நாம் விதை நிறுவனங்களின் அரசியலைப் புரிந்து கொள்ள முடியும். மரபீனி மாற்று விதைகள் மூலம் விளைச்சல் அதிகரிக்கும் என்கிறார்கள்.
பி டி பருத்தி கொண்டு வரப்பட்ட பின்னர் பருத்தி விளைச்சல் கூடியதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. மாறாக வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகள் ஒரு கிலோவே 40 - 50 ரூபாய்க்கு விற்கப்படும்போது, பி டி பருத்தி விதைகளை 450 கிராம் 900 - 1100 ரூபாய் கொடுத்து வாங்கும் நிலைக்கு பருத்தி விவசாயிகள் ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். மரபீனி மாற்று கடுகு, பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பணியை மட்டும்தான் செய்கிறது.
பூச்சிகள் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் விளைச்சல் அதிகரிக்கும் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். பூச்சித் தாக்குதலை இயற்கை முறையிலேயே சமாளிக்க முடியும். மன்சாண்டோ, டூபாண்ட், பேயர் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களின் கைவசம் நமது விதைகளை ஒப்படைப்பதற்கான வேலை இது. இந்தியாவில் 95% பி டி பருத்திதான் விளைவிக்கப்படுகிறது.
அதாவது நம் பருத்தி உற்பத்தி மன்சாண்டோ போன்ற சில விதை நிறுவனங்களின் கைகளில் இருக்கிறது. இது நம் விதை இறையாண்மைக்கு எதிரானது. முதல் முறையாக உணவுப் பொருளுக்குள் மரபீனி மாற்று விதை நுழைகிறது. இதை அனுமதித்தால் நெல், கோதுமை என அனைத்திலும் மரபீனி மாற்றம் தொடரும்.
இந்திய மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்பதை விதை நிறுவனங்கள் தீர்மானிக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம். பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட போது ஜே.சி.குமரப்பா போன்ற அறிஞர்கள் அதனை கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது அவர்களை கேலியாகப் பேசியவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அதன் தாக்கத்தை உணர்ந்தார்கள்.
மரபீனி மாற்று விதைகளும் அப்படித்தான். நிச்சயமாக இது அறிவியல் தொழில்நுட்பம் கிடையாது. தொழில்நுட்பத்தைக் கொண்டு நிகழ்த்தப்படும் தகிடுதத்த (manipulation) வேலை. மரபீனி மாற்று விதைகள் அணு உலையை விட ஆபத்தானவை. அணு உலையிலாவது எங்கெல்லாம் கதிரியக்கம் இருக்கிறது எனக் கண்டறியலாம். ஆனால் இந்த விதைகள் எங்கெல்லாம் பரவும் என்பதை கண்டறியவே முடியாது.
அந்த விதைகள் பக்கத்து நிலங்களில் விளையும் அதே குடும்பத்தைச் சேர்ந்த செடிகளையும் இதன் தன்மைக்கே மாற்றிவிடும். மரபீனி மாற்று கடுகு பயிரிடப்படும்போது கடுகின் குடும்பப் பயிர்கள் எல்லாமே இத்தன்மைக்கு மாற்றம் அடையும். இதற்கான தடுப்பு, பாதுகாப்பு பற்றி எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
ஏற்கனவே வறட்சியின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறையில் நாடே தவித்துக் கொண்டிருக்கும் சூழலில் இது தேவையற்றது. இயற்கை ஆர்வலர்கள் மட்டும் இதனை எதிர்க்கவில்லை. அறிவியலாளர் சுவாமிநாதனே மரபு வேளாண்மைக்குத் திரும்புவோம் என்றுதான் கூறுகிறார். உலக அளவில் பார்க்கவா, செரிலானி போன்ற மிக முக்கியமான உயிரி தொழில்நுட்பவியல் அறிஞர்களும் இதனை எதிர்க்கிறார்கள்...’’ என்கிறார் பாமயன்.
இதற்கெதிரான செயற்பாடுகளில் இயங்கி வரும் ஆஷா அமைப்பைச் சேர்ந்த ஸ்ரீதேவியை தொடர்பு கொண்டோம். ‘‘விவசாயிகள் மற்றும் நுகர்வோர் இருவருக்குமே இது பாதகம்தான். மரபீனி மாற்றம் வேண்டாம் என்று சொல்வதற்கான உரிமை நுகர்வோருக்கு இருக்கிறது. ஆனால், ஒரு உணவுப்பொருள் மரபீனி மாற்றம் அடைந்திருக்கிறதா இல்லையா என்று எப்படி வகைப்படுத்த முடியும்? ஏனென்றால் இவை வேகமாக வேற்று நிலத்துக்கும் பரவி அந்த விளைபொருளின் தன்மையை மாற்றவல்லது.
இது நடக்காது என்பதற்கான உத்தரவாதத்தை யாரால் அளிக்க முடியும்? இதை அனுமதித்தால் எல்லாம் நம் கையை மீறிப்போய்விடும். அதிலிருந்து மீள்வது கடினம். உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி பி டி கத்திரிக்காய் குறித்த அனைத்து ஆவணங்களும் பொது வெளியில் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், மரபீனி மாற்று கடுகு குறித்த ஆவணங்களில் வெளிப்படைத் தன்மையில்லை. ஏன் இதை ரகசியமாக வைக்க வேண்டும்? ‘ஆஷா’ சார்பில் இதற்கு எதிரான பல முன்னெடுப்புகள் மேற்கொண்டிருக்கிறோம். மரபீனி மாற்று கடுகுக்கு எதிராக change.org என்கிற வலைத் தளத்தில் பொதுமக்கள் கையெழுத்திடலாம். indiagminfo.org என்கிற வலைத்தளத்தில் DMH 11 குறித்த விரிவான தகவல்கள் இருக்கின்றன...’’ என்கிறார் ஸ்ரீதேவி.
|