ஊஞ்சல் தேநீர்
யுகபாரதி - 26
உலகமே தேனுகாவை கலை விமர்சகர் என்று அடையாளப்படுத்தினாலும் அவர் அந்த பதாகைக்குள் அடைபட மறுத்தார். தெரிதாவைப்போல் அவருமே மொழியின் குழப்பங்களிலிருந்து விடுதலை பெறவே விரும்பினார். சூரசம்ஹாரத்தில் முருகன், சூரன் தலையை வெட்ட, யானைத் தலைவரும் யானையின் தலையை வெட்ட, யாளித் தலைவரும்... அப்படித்தான் தேனுகாவும் இருந்தார்.
ஒன்றோடு நிறுத்திக் கொள்வதில் அவருக்கு சம்மதமில்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றை தாவிப் பிடிக்க முயன்றார். இசை, ஓவியம், சிற்பம் என்ற வெவ்வேறு கலை வடிவங்களை கைக்கொண்டாலும் அந்த மூன்றிலுமுள்ள மையப் புள்ளியாகத் தத்துவத்தையே முதன்மையாகக் கருதினார்.
‘வெட்டிக்கிட்டேன் துளித்துக்கிட்டேன், வேற தல வச்சிக்கிட்டேன்’ என்ற சூரசம்ஹாரப் பாடலைப் போல வேறு வேறு உருவங்களாக அவர் வெளிப்பட எண்ணினார். இறுதியில் தத்துவம் சார்ந்து செல்ல விரும்பிய தேனுகா, வார்த்தைகளைத் துறக்கப் போகிறேன் என்று சபதமெடுத்தார். மத்திய அரசு வழங்கும் ஃபெலோஷிப் விருது உள்பட அவர் எழுதிய பல நூல்களுக்கு விருதுகள் கிடைத்திருக்கின்றன.
என்றாலும், நிறைவுறாத மனத்துடனே அவரிருந்தார். படைப்பாளர்களுக்கே உரிய நிறைவுறாத அந்த மனம், அவரை பல்வேறு தளங்களுக்குப் பயணப்பட வைத்தது. தமிழ்ப் போதாமைகளையும் தமிழ்த் தேவைகளையும் கவனத்தில் கொண்டிருந்த அவர், போலிகளைப் புகழ்வதில் தயக்கம் காட்டினார். அதன் விளைவாக பெரும் மன உளைச்சலுக்குள் அந்த போலிகள் அவரைத் தள்ளினார்கள்.
தங்களைப் பாராட்டாத தேனுகாவை அங்கீகரிப்பதில்லை என்று முடிவெடுத்த அந்த போலிகள், அவருக்கு எதிரான காரியங்களில் ஈடுபட்டதை கலை இலக்கிய உலகு நன்கறியும். உள்ளூர்க்காரர்களை உதாசீனப்படுத்திவிட்டு உலகப் பார்வை யென்பது பம்மாத்து என்று அந்த போலிகள் தேனுகாவைத் திணறடித்தார்கள்.
பட்டீஸ்வரத்திலுள்ள நாயக்கர் காலத்து சுவரோவியத்தை காப்பியடித்து, அதை மைசூருக்கு அனுப்பி விருது பெற்ற ஒருவர், ஆள்பிடித்து தேசிய விருது பெற முயன்ற இன்னொருவர் என அந்த போலிகள் கூட்டத்திலிருந்த தத்துப்பித்துகளே தேனுகாவைக் காயப்படுத்தினார்கள். நிஜத்தை உணர்ந்தவர்களுக்கு வார்த்தைகள் கைகொடுப்பதில்லை.
மொழிகளின் குழப்பங்களிலிருந்து விடுதலை பெற விரும்புகிறேன் என்று அவர் சொன்னதுகூட அந்த உளைச்சலின் வெளிப்பாடுதான். தேனுகாவின் தாத்தா சீனுவாசம் பிள்ளை. அந்த சீனுவாசம் பிள்ளைதான், வள்ளலாரின் அருட்பா பாடல்களை தெருவெங்கும் நடந்தபடியே பாடிப் பரப்பியவர். அவருடைய மகனான முருகையா, சுவாமிமலை முருகன் கோயிலில் நாதஸ்வர சேவகம் செய்துவந்தவர். அதாவது தேனுகாவின் தந்தை.
கோயில் நடையில், ஒவ்வொரு நாளும் ஆறு வேளை நாதஸ்வரம் வாசித்த தந்தை முருகையாவுக்குத் தாளம் தட்டும் சிறுவனாக தேனுகா இருந்திருக்கிறார். தம்முடைய பால்ய வயதிலேயே இசையின் நுட்பங்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு அப்படித்தான் கிடைத்திருக்கிறது. அவரே ஒருதரம் சொன்னதுபோல, தினசரி கோயிலில் ஆறு வேளையும் அறுபது படிகள் ஏறி இறங்கி சங்கீதத்தைப் பயின்றிருக்கிறார்.
காலையில் பூபாளம், பெளலி, மலையமாருதம், பிலஹரி, மதியத்திற்குமுன் சுருட்டி, மதியத்தில் மத்தியமாவதி, சாயங்காலத்தில் பூர்வீ கல்யாணி, கல்யாணி, இரவில் நீலாம்பரி என்று அவருடைய தந்தை நாதஸ்வரத்தை இசைத்திருக்கிறார். தவிர, சந்நிதி தெருவிலேயே அவர்கள் வீடு இருந்தபடியால் பெரிய பெரிய இசை மேதைகள் எல்லாம் அவருக்கு இள வயதிலேயே அறிமுகமாகிவிடுகிறார்கள்.
அவர்கள் வீட்டுத் திண்ணையில் அமராத இசை ஜாம்பவான்களே இல்லை. ஒருபுறம் இசை ஜாம்பவான்கள் என்றால் மற்றொரு புறம் இலக்கிய ஜாம்பவான்கள். மெளனி, கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, தி.ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, வெங்கட் சுவாமிநாதன், க.நா.சு., எம்.வி.வெங்கட்ராம் போன்ற பெரும் இலக்கியவாதிகளின் பரிச்சயத்தையும் அவர் அந்த வயதிலேயே பெற்றுவிடுகிறார்.
எல்லோருக்கும் எல்லாமும் வாய்ப்பதில்லை. அப்படியே வாய்த்தாலும் அதை பயன்படுத்திக்கொள்ளும் திறமும் உரமும் தேனுகாவைப் போன்றோருக்கே சாத்தியமாகிறது. ஒருமுறை ‘பெரும்பாலும் நின்றுகொண்டே வாசிக்கும் நாதஸ்வரக் கலைஞர்கள் எப்போதிலிருந்து அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தார்கள் தெரியுமா?’ என்றார்.
எங்களுக்குத் தெரியாதென தெரிந்துகொண்டு அவரே அச்சம்பவத்தை சொல்லத் தொடங்கினார். “திருவையாறு தியாகப்பிரம்ம உற்சவத்தில், தியாகராஜ சுவாமிகள் பட ஊர்வலம் அவருடைய வீட்டிலிருந்து புறப்பட இருந்தது. அவ்விழாவுக்கு நாதஸ்வரம் இசைக்க அழைக்கப்பட்டிருந்தவர் நாதஸ்வரச் சக்ரவர்த்தியான திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை.
மங்கள வாத்தியத்திற்குத்தான் முதலிடம் என தியாகப்பிரம்ம செகரட்டரி முசிறி சுப்ரமணிய ஐயர், ராஜரத்தினத்தை அழைக்கிறார். அப்போது ராஜரத்தினம் பிள்ளை நின்றுகொண்டு வாசிக்க மாட்டேன், மேடையில் அமர்ந்துதான் வாசிப்பேன் எனச் சொல்லிவிடுகிறார். அன்றிலிருந்துதான் நாதஸ்வரக் கலைஞர்கள் அமர்ந்து வாசிக்கும் பழக்கமேற்படுகிறது.
நின்றவர்களை அமரவைத்த பெருமை ராஜரத்தினத்திற்கே உரியது. ஒரு கலைஞன் தன் ஸ்தானத்தை இப்படித்தான் நிலைப்படுத்தணும் இல்லையா..?” என்றார். மைசூர் மகாராஜா ராஜரத்தினத்தை அழைத்து வாசிக்கச் சொன்னபோதுகூட தனக்கும் ராஜாவுக்கு சமமான மேடையை அமைத்தால்தான் வாசிப்பேன் என்றிருக்கிறார்.
கலையை ரசிகனுக்குக் கீழே வைக்கக்கூடாது, சமானமாக அல்லது சமத்துக்கு மேலாக வைக்க வேண்டும். அந்த நிகழ்வில், ராஜரத்தினத்தின் இசையைக் கேட்ட மகாராஜா அவரைத் தன்னுடைய இருக்கையில் அமர்த்தி அழகு பார்த்திருக்கிறார் என்பன போன்ற தகவல்களையெல்லாம் அவர் சொல்லக் கேட்பது தனி ருசி.
நாதஸ்வரச் சக்ரவர்த்தி ராஜரத்தினத்தைப் போலவே கிளாரிநெட் மேதை என்று போற்றப்படும் ஏ.கே.சி. நடராஜனைப் பற்றியும் அவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அரியக்குடி, செம்பை, செம்மங்குடி, ஜி. என். பி., மதுரை மணி ஐயர் என்று எத்தனையோ பேர் அவர் உரையாடல்களில் உயர்த்தப்படுவார்கள்.
காருக்குறிச்சி அருணாசலமும் ஏ.கே.சி நடராஜனும் ஒருமுறை கலைவாணர் என்.எஸ்.கே., வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அவர்கள் போனது என்.எஸ்.கே.வை பார்ப்பதற்கல்ல. அங்கே தங்கியிருந்த டி.என்.ராஜரத்தினத்தைப் பார்க்க. இவர்கள் போயிருந்தபோது டி.என்.ஆரும், கலைவாணரும் மதுவருந்திக் கொண்டிருக்கிறார்கள்.
காருக்குறிச்சியும் ஏ.கே.சியும் பதுங்கிப் பதுங்கி உள்ளே போவதைப் பார்த்த டி.என்.ஆர்., கலைவாணரிடம், “அவனுவளுக்கும் ரெண்டு கிளாஸ் ஊத்திக்கொடுங்க...” என்றிருக்கிறார். “என்னைப்போல சங்கீத ஞானம் வரணுமின்னா இந்த ஞானப்பால குடிக்கட்டு’’ முன்னு டி.என்.ஆர் சொல்ல, கலைவாணர் பதறிப்போய் மறுத்த கதைகளை எல்லாம் தேனுகாவிடமிருந்துதான் தெரிந்து கொண்டோம்.
இச்சம்பவத்தை ஏ.கே.சி.யே தன்னிடம் பகிர்ந்துகொண்டதாகச் சொல்லிய அவர், அதைக் கட்டுரையாகவும் எழுதியிருக்கிறார். கலைஞர்கள் தங்களுக்குப் பின்னால் வரும் கலைஞர்களை எப்படி நடத்தினார்கள் என்பதைச் சொல்வதற்காகவே அச்சம்பவத்தை எங்களுக்குச் சொன்னாரே தவிர, மதுவை ஞானப்பாலாக அருந்தலாம் என்னும் அர்த்தத்தில் அல்ல.
சக கலைஞர்களை சமமாக நடத்தும்போதுதான் கலைகள் ஜீவிக்கும் என அந்தக் காலத்துப் பெரியவர்கள் அறிந்திருக்கிறார்கள். இறுதிவரை தேனுகாவுக்கு கும்பகோணமும் அதைச் சுற்றியுள்ள கோயில்களும் பிரமிக்கத்தக்க விஷயங்களாகவே இருந்தன. ஒரே கோயிலுக்குப் பலமுறை போய் சிற்ப நுட்பங்களை சிலாகித்துக்கொண்டிருப்பார்.
கும்பகோணத்தின் சிறப்பு டிகிரி காப்பியில் அல்ல, அங்கே வாழ்ந்த எண்ணற்ற கலை இலக்கிய கர்த்தாக்களே என்பது அவர் சித்தம். கணித மேதை ராமானுஜனையும் அவர் அப்படித்தான் உள்வாங்கிக்கொண்டார். ‘எண்களின் தோழன் ராமானுஜன்’ என்னும் கட்டுரையில், ‘எண்களுடன் தோழமை கொண்டவர் ராமானுஜன் மட்டுமல்ல. கவிஞர்கள், ஓவியர்கள், சிற்பிகள், இசைக்கலைஞர்கள் போன்ற எண்ணிறைந்தோர் எண்களால் ஆன புதிய படைப்புகளைப் படைத்தனர்.
ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார், சைவ சமயக் குரவர்களில் ஞானசம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் போன்ற அருளாளர்களும் ஒன்று, இரண்டு, மூன்று என ஏழு எண்கள் வரை படைத்த ரகுபந்த கவிதைகள் கணித செய்யுள் வடிவத்தின் எடுத்துக்காட்டு...’ என்கிறார். ‘இசை உலகிலும் எண்களுண்டு. தாளம் என்னும் கால எண்களால் ஆனது லயம்.
ஒன்பது தாள பார்வதி அம்மன் சிலை, பத்து தாள சிவன், விஷ்ணு, ரிஷபதேவர் சிலைகள் என அனைத்திலும் எண்களுண்டு. யெகுதி மெனுகின் வயலின் இசைக்கும் எஸ்சர் என்ற ஜியாமெட்ரி ஓவியனுக்கும் கூட எண்களே பிரதானம்’ என்று அக்கட்டுரையை முடித்திருப்பார். ஆதிமூலத்தின் அரூப ஓவியங்கள், சந்தானராஜின் ஓவியப் பெருவெளி என அவர் அடுத்தடுத்து எழுதிய கட்டுரைகள், சம்பந்தப்பட்ட ஓவியர்களின் வாழ்க்கையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தின.
கம்பீர நாட்டை, சங்கராபரணம், நீலாம்பரி, ஆகிரித்தை போன்ற தலைப்புகளின் கீழ் அவர் எழுதிய கவிதைகளும் குறிப்பிடத்தக்கன. ‘தோற்றம் பின்னுள்ள உண்மைகள்’ என்னும் மிக முக்கியமான அவருடைய கட்டுரையில், நவீன கவிதைகளைப் புரிந்துகொள்வதிலுள்ள சிக்கலையும் அச்சிக்கலை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பதையும் சொல்லியிருக்கிறார்.
ஞானக்கூத்தனின் கவிதைகளை மேற்கோளாகக் கொண்டு அவர் நவீன கவிதைகளின் போக்குகளைப் புரிந்துகொள்ள உதவியிருக்கிறார். என் திருமணப் பத்திரிகையை எடுத்துக்கொண்டு அவர் வீட்டுக்குப் போயிருந்தபோது, அதில் அச்சிடப்பட்டிருந்த என் கவிதையை வாசித்துவிட்டு “எதிர்பார்ப்புதான் வாழ்க்கை, இல்லீங்களா பாரதி” என்றார்.
“எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கலைஞனுக்கு கலை ஓர் அனுபவமாக வாய்க்கிறது. அதுபோலவே உங்களுக்கும் வாழ்க்கை அனுபவமாக மாறட்டும்” என்று வாழ்த்தினார். அனுபவங்களின் திரட்சிதான் வாழ்க்கை என்றால் தேனுகா, அந்த அனுபவங்களைத் தேடித்தேடி பெற்றுக்கொண்டவர். கலை ரசிகராக இருந்து கலை விமர்சகராக மாறியவர், ஒருகட்டத்தில் கலைப் பித்தராகவே மாறிப்போனார்.
எரிக் எரிக்சன் என்ற உளவியல் அறிஞரைப் பற்றிய குறிப்புரையில், ‘இவர் மரணத்தின் மண்டை ஓட்டையே பிளந்து கபால மோட்சத்தைக் காண்பிப்பவர்’ என்று எழுதியிருப்பார். மரணத்தின் மண்டை ஓட்டை பிளக்கும் வாய்ப்பிருந்தால் நான் முதலில் காண விரும்பும் முகம் தேனுகாவினுடையதாயிருக்கும். ஏனெனில், நீண்ட நெடிய கலை இலக்கியப் பரப்பில் மோட்சத்தைக் காட்டும் சக்தி அந்த ஒரு முகத்திற்கு மட்டுமே உண்டு.
(பேசலாம்...)
ஓவியங்கள்: மனோகர்
|