கலெக்டர் நயன்தாரா!



-மை.பாரதிராஜா

எப்போதும் வெயில் சுட்டெரிக்கும் ராமநாதபுரம் ஆப்பனூர் ஏரியா. முதல்முறையாக கலெக்டராக நயன்தாரா நடிக்கும் ‘அறம்’ படப்பிடிப்பு பரபரத்துக் கொண்டிருந்தது. ஒரு நேர்மையான ஆபீஸரின் ஸ்டிரைட் ஃபார்வேர்டு லுக். காதில் ஸ்டிக்கர் பொட்டு சைஸில் சின்ன கம்மல். நெற்றியை அலங்கரிக்கும் குங்குமப் பொட்டு. போலீஸ், அதிகாரிகள் புடைசூழ சிமென்ட் கலர் காட்டன் புடவை காஸ்ட்யூமில் ஸ்பாட்டுக்கு வீரநடையோடு விசிட் அடித்தார் கலெக்டர் நயன்தாரா.

ஷாட் முடிந்து பிரேக் விட்டுவிட்டு பேட்டிக்கு ரெடியானார் ‘அறம்’ இயக்குநர் ந.கோபி நயினார். ‘நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள்’ குறுநாவல் மூலம் நமக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் இந்த கோபி. ‘‘முதல்ல சற்குணம் சாருக்கும், சவுந்தர் சாருக்கும் ஒரு பெரிய தேங்க்ஸ். அவங்களாலதான் இந்தப் படம் பண்ற வாய்ப்பு கிடைச்சது. நிறைய புரொட்யூசர்ஸ்கிட்ட இந்தக் கதையை சொல்லிச் சொல்லி சோர்ந்து போயிருந்தேன். ‘இனிமே சென்னை சரிப்படாது.

மீஞ்சூரிலேயே பொழப்ப பார்க்கலாம்’னு வெறுத்துப் போய் கிளம்பிப் போயிட்டேன். திடீர்னு ஒருநாள் சற்குணம் சார்கிட்ட இருந்து போன். ‘என்ன பண்றீங்க கோபி... ஆளையே காணோம்?’னு விசாரிச்சார். ‘நீங்க அங்கேயே இருந்தா, உங்கள கோடம்பாக்கம் தேடி வந்திடுமா? உடனே கிளம்பி நம்ம ஆபீஸுக்கு வாங்க’னு கூப்பிட்டார்.

‘வந்தா ஐநூறு ரூபாய் தருவீங்களா?’னு கேட்டேன். என் நிலைமை அப்படி. கைல பத்து ரூபாய் கூட இல்லாத டைம் அது. சற்குணம் சார் ஆபீஸ் போனதும் முதல் வேலையா அவர்கிட்ட ஐநூறு ரூபாயை கேட்டு வாங்கினேன். அப்புறம்தான் என்ன விஷயமா என்னை வரச்சொன்னீங்கனு கேட்டேன்...’’ பொறுமையும் நிதானமுமாக பேசத் தொடங்கினார் கோபி நயினார்.

‘‘சற்குணம் சார் ஆபீஸ்லதான் இந்தப் படத்தோட எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர் சவுந்தர் சார் அறிமுகம் கிடைச்சது. அப்புறம் வசந்தகாலம்தான். ‘அறம்’ படத்தோட தயாரிப்பாளர் ராஜேஷ் சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தினாங்க. ஒரு புது இயக்குநரை எந்த தொல்லைக்கும் உட்படுத்தாத ஒரு தயாரிப்பாளர் அவர். எனக்கு நிறைய சுதந்திரம் கொடுத்தார். நயன்தாரா மேடத்துகிட்ட கதையை சொன்னதும் அவங்க ரொம்ப இன்வால்வ் ஆகி ‘உடனே ஷூட்டிங் போயிடலாம்’னு சொன்னாங்க...’’ புன்னகைக்கிறார் கோபி. 

நயன்தாரா லுக் மிரட்டலா இருக்கே..?
மேடத்துகிட்ட கதை சொல்லும் போதே, அவங்க அந்த கேரக்டரை ரொம்ப உள்வாங்கிக்கிட்டாங்க. ஆக்சுவலா படம் ஆரம்பிச்சு 20 நிமிஷங்கள் கழிச்சுதான் அவங்க கதைக்குள்ளயே வருவாங்க. ஸ்கிரிப்ட்டை கொஞ்சம் மாத்தி, கதையோட ஆரம்பத்துல மேடம் வர்ற மாதிரி பண்ணலாம்னு நினைச்சோம். இதை கேள்விப்பட்டு, ‘எனக்காக எதையும் மாத்த வேணாம்’னு சொல்லிட்டாங்க.

ஸ்பாட்டுல... நீங்களே பார்க்கறீங்களே... இப்படித்தான் எளிமையா இருக்காங்க. தனக்கு திருப்தி ஏற்படற வரைக்கும் உழைக்கறாங்க. இன்னொரு டேக் போக அவங்க தயங்கினதே இல்ல. ஆப்பனூர்ல நாங்க போன நேரம் சரியான வெயில் காலம். ஸ்பாட்டுல தினமும் ஒருத்தராவது வெயில் தாங்காம மயங்கி விழுந்துடுவாங்க. ஆனாலும் மேடம் உட்பட எல்லா ஆர்டிஸ்ட்டும் ஈடுபாட்டோட நடிச்சுக் கொடுத்தாங்க. கேரவன்ல போய் ரெஸ்ட் எடுக்காம எங்களோடயே வெயில்ல நின்னு நடிச்சுக் கொடுத்தாங்க.

என்ன சொல்கிறது ‘அறம்’?
அறம்னா... தர்மம். தர்மம்னா... நீதி. இந்த உலகத்தோட எல்லா செயல்களும் நீதியோட சம்பந்தப்பட்டதுதானே? இது நீதியைப் பேசற படம். இந்தியா மாதிரி மூன்றாம் உலக நாடுகள்ல வாழற மனிதர்களுக்கு ஏதாவது பிரச்னைனா இந்த நாடு எதுவும் செய்யாது... இதுதான் லைன். தண்ணீர் பிரச்னை பத்தியோ, விவசாயம் தொடர்பாகவோ நாங்க எதுவும் பேசலை. ஆனா, ஒட்டுமொத்த மனித குலத்தோட துயரங்களை ‘அறம்’ பேசும்.

நயன்தாரா மேடம் தவிர சுனுலட்சுமி, வேல ராமமூர்த்தி, ராமச்சந்திரன் துரைராஜ், ‘காக்கா முட்டை’ விக்னேஷ், ரமேஷ், பேபி மகாலட்சுமி, பழனினு கேரக்டர்ஸை பிரதிபலிக்கிற நடிகர்கள் நடிச்சிருக்காங்க. பல படங்கள்ல கொடூர வில்லனா, அடியாளா நடிச்ச ராமச்சந்திரன் துரைராஜுக்கு இதுல மென்மையான குடும்பஸ்தர் வேடம். கதையோட மையமே அவர்தான்.

ராமநாதபுரம் தவிர, திருவள்ளூர் பக்கமும் படப்பிடிப்பு நடந்திருக்கு. ‘காக்கா முட்டை’ல மணிகண்டன், சரியான முறைல அந்தப் பசங்கள தயார்படுத்தி வச்சதால விக்னேஷ், ரமேஷ்கிட்ட ஈசியா வேலை வாங்க முடிஞ்சது. படத்துல முக்கியமான மூணு விஷயங்கள்னு பட்டியலிட்டா... கதை, அது பேசும் அரசியல்; அந்த கேரக்டர்களா வாழற நடிகர்கள் தவிர, ஜிப்ரானின் இசையும், உமாதேவியின் பாடல்களும் பெரிய பலம்.

ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு சிறப்பா இருக்கும். பீட்டர் ஹெயின் ஆக்‌ஷன்ல கலக்கியிருக்கார். இளையராஜாவோட கலை படத்துக்கு உயிர் கொடுத்திருக்கு. தயாரிப்பாளர் கோட்டப்பாடி ராஜேஷ் சாரைப் பத்தி சொல்லணும். சினிமா மேல passion உள்ளவர். வாய்ப்பு கொடுத்ததுக்காக இதை சொல்லலை.

கதைக்காகவும் இயக்குநர் மேல வைச்ச நம்பிக்கைக்காகவும் கேட்டதை எல்லாம் அவர் செய்து கொடுத்ததை வைச்சு இதை சொல்றேன். நான் யார்கிட்டயும் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்ததில்லை. ஆனாலும் என்னை இயக்குநரா உயர்த்தி அழகு பார்த்திருக்காங்க. அவங்களுக்கும், என்னோட இணை இயக்குநர்கள் கலைச்செல்வன், விருமாண்டிக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்!’’