விஜய் ஆண்டனியின் கொள்ளுத்தாத்தா!



தமிழ்நாட்டு நீதி மான்கள் - 30

கோமல் அன்பரசன்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை வாங்கி 70 ஆண்டுகள் ஆன பின்னும் நம்முடைய உயர்நீதிமன்றத்தை ஆங்கிலம்தான் ஆண்டு கொண்டிருக்கிறது. இங்கே வழக்காட வருகிற மக்களின் தாய்மொழியான தமிழ் நீதிமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடலுக்குள் போட்ட கல்லாகக் கிடக்கிறது.

நம்மை நாமே ஆளுகிற குடியாட்சியிலேயே இந்த நிலைமை என்றால், வெள்ளையரின் ஆட்சியில் இதைப்பற்றி பேசிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி! பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இருந்த இந்திய ஆட்சி நிர்வாகம், 19ம் நூற்றாண்டின் மத்தியில் நேரடியாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கைகளுக்குப் போனது.

அதுவரை இருந்த நிர்வாக முறைகளை சீரமைத்து அதிகாரம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். அதன் ஓர் அங்கமாக நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. அதற்காக சில சட்டங்கள் எழுதப்பட்டன. ஆனால், அவை எல்லாம் ஆங்கிலத்தில் இருந்தன. இனி ஆங்கிலேயர் ஆட்சியே; அதனால் ஆங்கிலத்தைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போது பரவலாக எழுந்தது.

நிலைமை அப்படி இருந்தபோது, ‘சட்டங்கள் எல்லாம் அவர்கள் மொழியில் உருவாக்கப்பட்டால் எங்களுடைய மக்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்’ என்று நினைத்த வேதநாயகம் பிள்ளை, சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்களை முதன்முறையாக தமிழில் மொழிபெயர்த்தார். “இங்கிலீஷ் வார்த்தைகளுக்குச் சரியான பிரதி பதங்கள் தமிழில் இல்லையென்று வக்கீல்கள் சொல்வது அவர்களது அறியாமையே அல்லாமல் உண்மையல்ல...’’ இப்படி கேட்டதோடு மட்டுமில்லை; தாமே முன்னோடியாக இருந்து நீதி, நிர்வாகம் தொடர்பான சட்டங்களை, ‘சித்தாந்த சங்கிரகம்’ என்ற தமிழ் நூலாக 1862ல் வெளியிட்டார்.

சென்னை உட்பட மூன்று இடங்களில் உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்ட அதே ஆண்டில் முக்கியமான சட்டங்களை மக்களும் வக்கீல்களும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ்ப்படுத்திக் காட்டினார். ‘தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழ் ஆட்சி மொழியாக இருப்பதே சரி’ என்று அழுத்தத்திருத்தமாக நம்பினார். 1850 முதல் 1861 வரை வெளியான நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.

இவற்றோடு ‘நீதி நூல்’ என்றொரு தொகுப்பையும் எழுதினார். ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பே அவர் செய்த இப்பணிகள் சாதாரணமானவை அல்ல. தமிழ்நாட்டு நீதித்துறை வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படத்தக்கவை. திருச்சிக்குப் பக்கத்திலுள்ள குளத்தூரில் சவரிமுத்துப் பிள்ளைக்கும், ஆரோக்கியமேரிக்கும் மகனாக 1826, அக்டோபர் 11ம் தேதி பிறந்தார். தாத்தா மதுரநாயகம் பிள்ளை காலத்திலேயே கிறித்துவ மதத்திற்கு மாறிவிட்டாலும், பிள்ளை என்ற பின்னொட்டு வேதநாயகத்தோடு தொடர்ந்தது.

தம் தந்தையிடமும் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும் தமிழ் படித்த அவர், தியாகப்பிள்ளை என்பவரிடம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். 20 வயதிற்குள் இரு மொழிகளிலும் புலமை பெற்றதோடு, தமிழில் பாடல்கள் இயற்றும் அளவுக்குத் தேர்ந்தார். ஆங்கிலம் கற்றுக்கொடுத்த தியாகப்பிள்ளை, அவருக்கு திருச்சிராப்பள்ளி நீதிமன்றத்தில் 1848ம் ஆண்டு ஆவணக்காப்பாளர் வேலை வாங்கிக் கொடுத்தார். ‘சதர்ன் புரவிஷனல் கோர்ட்’ என்ற பெயரில் தென்னிந்தியாவின் உயர்நீதிமன்றமாகத் திகழ்ந்த அங்கேயே பின்னர் மொழிபெயர்ப்பாளர் பணியும் அவருக்குக் கிடைத்தது.

24 வயதில் கிடைத்த இந்த வேலையில் வேதநாயகருக்கு சோதனை காத்திருந்தது. மேல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டிய மொழி பெயர்ப்பு ஆவணம் ஒன்றை தாம் பணியாற்றிய மாவட்ட நீதிபதியிடம் அவர் ஒப்படைத்திருந்தார். வேறு இடத்திற்கு மாற்றலாகிப் போன அந்நீதிபதி, ஆவணத்தையும் எடுத்துப்போயிருந்தார்.

அடுத்த சில வாரங்களில் அவர் திடீரென நோய்வாய்ப்பட்டு இறந்தும் போனார். அடுத்து வந்த நீதிபதி, வேதநாயகம் மொழிபெயர்ப்பு ஆவணத்தை ஒப்படைக்கத் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார். அதன் பேரில் பணிநீக்கமும் செய்யப்பட்டார். ஆண்டுக்கணக்கில் போராடி தாம் குற்றவாளி அல்ல என்று நிரூபித்த அவர், பறிக்கப்பட்ட பணியையும் பெற்றார்.

வெள்ளையர் ஆட்சியின் ஆரம்ப காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் தலைநகராக கடற்கரை நகரமான தரங்கம்பாடி கொஞ்ச காலம் இருந்தது. வேதநாயகம் பிள்ளை 1857ம் ஆண்டு தரங்கம்பாடி முன்சீப் ஆக பதவியேற்றுக் கொண்டார். அந்த ஊரில் உரிமையியல் நீதிபதியான வேதநாயகம் பிள்ளைதான் ஆங்கிலேயர் ஆட்சியில் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.

முதல் தமிழர். அப்போது அங்கே நீதிபதியாக இருந்த வேதநாயகம் ஓராண்டுக்குப் பின்னர் சீர்காழிக்கு மாற்றப்பட்டார். 1860ம் ஆண்டில் இப்போது மயிலாடுதுறை எனப்படும் மாயூரம் நகரத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றார். வேதநாயகம் நீதியளிக்கும் விதம் அந்தப்பகுதி மக்களைக் கவர்ந்தது. அவரிடம் போனால் நீதி கிடைக்கும் என்று மக்கள் நம்பினார்கள்.

இதற்காக சுற்றியிருக்கும் ஊர்களில் இருந்த வழக்குகளை மாயூரம் நீதிமன்றத்திற்கு மாற்றிக்கொள்ள பலர் ஆர்வம் காட்டினார்கள். உயர்நீதிபதி பதவிகளுக்கு வேதநாயகம் பொருத்தமானவர் என்று வெள்ளைக்கார மாவட்ட நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். நாலாபுறமும் அவரின் புகழ் படர்ந்த நேரத்தில் தஞ்சாவூர் மாவட்ட நீதிபதியாக நெல்சன் என்ற ஆங்கிலேயர் பதவியேற்றார்.

மாவட்டத்திலுள்ள உரிமையியல் நீதிபதிகள் எல்லாம் அவரைப் போய் பார்த்து, பணிந்து வணக்கம் சொன்னார்கள். வேதநாயகம் மட்டும் போகவில்லை. இதில் அந்த வெள்ளைக்கார துரைக்கு கோபம் வந்தது. ஏற்கனவே வேதநாயகர் புகழில் உள்ளூர வெந்து கொண்டிருந்த மற்ற நீதிபதிகள் துரையின் கோபத்தைத் தூபம் போட்டு ஊதிவிட்டனர்.

பிள்ளை தம்மை அவமதித்துவிட்டதாகக் கருதிய மாவட்ட நீதிபதி பழிவாங்க தக்க சமயம் பார்த்திருந்தார். இருமல் மற்றும் இளைப்பு நோயால் பாதிக்கப்பட்ட வேதநாயகர் நீண்ட விடுப்பு எடுத்திருந்த நேரத்தில் மாயூரம் நீதிமன்றத்தை ஆய்வு செய்ய மாவட்ட நீதிபதி திடீரென சென்றார். ‘நீதிமன்றப் பணிகள் சரியாக நடக்கவில்லை; கீழ் நிலைப் பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள்’ உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கக்கோரி வேதநாயகம் பிள்ளைக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

அவரும் எழுத்து வழியே விளக்கம் அளித்தார். நேரில் வந்துதான் விளக்கம் தரவேண்டுமென நெல்சன் துரை உத்தரவிட்டார். தஞ்சாவூருக்குப் பயணம் செய்ய முடியாத உடல் நல பாதிப்பில் இருந்த வேதநாயகர், அதற்கான மருத்துவ சான்றிதழோடு பதில் அனுப்பினார். குற்றச்சாட்டில் தொடர்புடைய நீதிமன்றப் பணியாளர்களை அனுப்பி விளக்கம் சொல்ல வைத்தார். இப்போதும் வராத வேதநாயகம் மீது கடுங்கோபம் கொண்ட மாவட்ட நீதிபதி நெல்சன் அவரை பதவி நீக்கம் செய்தார்.

உண்மை நிலையை விளக்கி உயர்நீதிமன்றத்திற்கு வேதநாயகர் முறையீடு செய்தார். அங்கே அவர் அலுவல் ரீதியாக குற்றமற்றவர் என்று முடிவு செய்தார்கள். ஆனால், மேலதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாதது குற்றம் என்றார்கள். அதற்குத் தண்டனையாக, ‘வேறு இடத்திற்கு மாற்றலாகிப் போகிறீர்களா? அல்லது மாதம் நூறு ரூபாய் ஓய்வூதியத்துடன் ஓய்வு பெற்றுக்கொள்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.

உடல் நலம், மனசுக்குப் பிடித்துப் போன மாயூரத்தை விட்டுப் போக விரும்பாமை போன்ற காரணங்களால் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டார். ஓய்வுக்குப் பிறகும் அதே ஊரிலேயே வேதநாயகம் வாழ்ந்தார். ஆந்திரா, மலபார் உட்பட பழைய மெட்ராஸ் மாகாணத்தில் வெள்ளைக்காரர்களால் முதன் முறையாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளில் ஒன்றான மாயூரம் நகர்மன்றத்தின் தலைவராக வேதநாயகம் பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நடைபாதைகளையும், சாலைகளையும் உருவாக்கினார். மருத்துவ வசதிக்காக நகராட்சியின் சார்பில் இலவச வைத்தியசாலைகளை ஆரம்பித்தார். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார். அதிலும் பெண் கல்வியின் மீது கூடுதல் அக்கறை காட்டிய வேதநாயகர், தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பெண்களுக்கு என தனி பாடசாலையைத் தொடங்கினார்.

இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் வசதியாக சிலம்பாட்டக் கூடங்களையும் உடற்பயிற்சி மன்றங்களையும் அமைத்துத் தந்தார். பிறந்த ஊர் வேறாக இருந்தாலும் மாயூரம் என்பதைத் தன் பெயரோடு சேர்த்துக்கொண்டது மட்டுமின்றி, அந்த ஊரை உளப்பூர்வமாக நேசித்தார். 1876ல் ஏற்பட்ட தாது வருச பஞ்சத்தின்போது தம் சொத்துக்களை விற்று மக்களின் பசியைப் போக்கியதே மாயூரம் மண்ணின் மீதான வேதநாயகரின் அன்புக்குச் சான்று.

இன்னொரு பக்கம் தமிழிலக்கியத்திற்கு பெரிய பங்களிப்புகளையும் வேதநாயகம் வழங்கியிருக்கிறார். சிறுவயது முதலே கவிதைகள் எழுதிய அவரது முறையான இலக்கியப் பணி சீர்காழியில் நீதிபதியாக இருந்தபோது தொடங்கியது. மாயூரத்திற்குச் சென்றபிறகு நிறைய எழுதிக் குவித்தார். தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நூலை 1879ம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

‘சுகுண சுந்தரி’ எனும் இரண்டாவது நாவல் 1887ல் வெளிவந்தது. 150 ஆண்டுகளுக்கு முன்பே (1869) ‘பெண்கல்வி’ என்ற சொல்லை உருவாக்கியதோடு, அதே பெயரில் புத்தகம் ஒன்றையும் எழுதினார். நூல்கள் போக ஏராளமான தனிப்பாடல்களையும் எழுதிக் குவித்தார். ஆங்கிலேயர் ஆட்சியின் அவலங்களை, மலிந்து கிடந்த ஊழல்களை பாடல்கள் வழியாக தோலுரித்துக் காட்டினார்.

‘தமிழ் புதினத்தின் தந்தை’, ‘சட்டத்தமிழின் தந்தை’ என்றெல்லாம் அழைக்கப்பட்ட மாயூரம் வேதநாயகம் பிள்ளையைத் தமிழகம் சரியாகக் கொண்டாடவில்லை. அவரது நினைவைப் போற்றும் வகையில் எதையுமே நாம் செய்யவில்லை. வேதநாயகர் வாழ்ந்த ஊரான மயிலாடுதுறையில் கூட அவருக்கென்று ஒரு மணிமண்டபமோ, நினைவு இல்லமோ கிடையாது.

கல்லறைகளுக்கு இடையே பத்தோடு பதினொன்றாக இருக்கும் அவரது சிலையை வேதநாயகர் பணியாற்றிய மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையைச் செவிகொடுத்து கேட்கக்கூட நாதியில்லை. சொல்லப்போனால் வேதநாயகர் ஆற்றியிருக்கும் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றத்திலேயே அவருக்கு சிலை வைக்க வேண்டும். அவர் மிகவும் நேசித்த மண்ணில் கூட அதனைச் செய்யவில்லை நாம். ஆனாலும் தமிழ்நாட்டில் நீதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழரான மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பன்முகச் சிறப்புகளையும், புகழையும் காலம் கட்டாயம் காப்பாற்றி வைக்கும்.

(முற்றும்)

ஓவியம்: குணசேகர்

சினிமாவுக்கு வந்த கொள்ளுப்பேரன்!

வேதநாயகரின் குடும்ப வாழ்வு சோதனை மிகுந்ததாக இருந்தது. திருமணம் செய்த சில காலத்திலே மனைவிமார்கள் இறந்துவிட அடுத்தடுத்து அவர் 5 முறை மணம் புரிந்து கொள்ள வேண்டி வந்தது. அவர்களில் மூன்றாவது மனைவிக்கு மட்டும் ஞானப்பிரகாசம் பிள்ளை உள்ளிட்ட இரண்டு மகன்களும் ஒரு மகளும் வாரிசாக வந்தனர். இப்போது தமிழ்த்திரையுலகில் இசை அமைப்பாளராகவும் நடிகராகவும் திகழும் விஜய் ஆண்டனி, வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப்பேரன்.

நக்கலும் நையாண்டியும்!

வேதநாயகரின் கவிதைகளில் நக்கலும் நையாண்டியும் நிறைந்திருக்கும். அதற்கு உதாரணமாக, நீதிமன்றத்தில் நடப்பவற்றைப் பற்றிய அவரது தனிப்பாடல் இது:

‘அண்டப் புரட்டன் அந்த வாதி அகி
லாண்டப் புரட்டன் அப்பா அவர் பிரதிவாதி
சண்டப் பிரசண்டன் நியாயவாதி  நாளும்
சாஸ்திரப் புளுகன் சாட்சிக்காரன் எனும் வியாதி’

- ஆறுமுக நாவலர் போன்ற சமகாலத்து தமிழறிஞர்களுடன் வேதநாயகம் பிள்ளை நட்புறவு கொண்டிருந்தார். அத்தகையோரில் இளைய கம்பர் என்றழைக்கப்பட்ட மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவரது நெஞ்சத்திற்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தார். அவர் எழுதிய ‘சீகாழிக் கோவை’ என்ற நூலை சீர்காழியில் நீதிபதியாக இருந்தபோது வேதநாயகர் வெளியிட்டார்.

1876ல் மகாவித்துவான் மறைந்த பிறகு அவரது குடும்பம் வறுமையில் வாடியது. இதுகுறித்து தமது நண்பரான திருவாவடுதுறை ஆதீனம் சுப்ரமணிய தேசிகருக்கு கவிதை வடிவில் கடிதம் எழுதி மகாவித்துவான் குடும்பத்திற்கு உதவிகளைப் பெற்றுத்தந்தார். அதோடு அவரது மகன் சிதம்பரம் பிள்ளைக்கு மாயூரத்தில் வேலையும் வாங்கித்தந்தார். நட்புக்கு வேதநாயகர் கொடுத்த முக்கியத்துவம் இது.