COFFEE TABLE



-குங்குமம் டீம்

சைலன்ட் கார்னர்

கேட்பவரே


லக்ஷ்மி மணிவண்ணன் [படிகம், 4/184, தெற்குத் தெரு, மாடத்தட்டுவிளை, வில்லுக்குறி - 629 180. கன்னியாகுமரி. விலை ரூ.320/- தொடர்புக்கு : 98408 48681] வாழ்க்கையை விடவும் பெரிய வகைமாதிரியை உருவாக்குவதே கலையின் நோக்கம். தமிழ் கவிதையின் தரிசனங்களில் வெகு அரிதாகவே லக்ஷ்மி மணிவண்ணன் போன்றவர்களை காண முடிகிறது. அது அப்படித்தான். கலைஞனது சுயசரிதையில் எஞ்சிக் கிடக்கும் சுவாரஸ்யம்தான் என்ன?

அவனது வாழ்க்கையா? ஒரு மனிதன், படைப்பாளனாகிற அந்தக் கணத்திலிருந்தே அவன் செல்லுகிற பாதை முன்கூட்டி நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. மணிவண்ணன் சூதாட்டப் பலகையில் சுற்றி வருகிற எண்களைப் பார்க்கிற அதி தீவிர கவனத்திலேயே வாழ்க்கையைப் பார்க்கிறார். பிரதி செய்யவே முடியாத அவரது மொழி ஆளுமை தன்னிகரற்றது.

சில சமயம் வாழ்க்கையைப் புனரமைக்கிறார். பல காலம் தூக்கி எறிகிறார். சமயங்களில் ஏந்தி கொண்டாடுகிறார். அப்புறம் ஏங்கித் தவிக்கிறார். சில சமயங்களில் அவரது ஒரு சொற்றோடர், எரிமலைக் குழம்பில் கல் விழுந்தது மாதிரி கலந்துவிடுகிறது. மனதில் ஏதாவது ஒரு ஒத்திசைவோ, அதிர்வோ, ஓவியமோ வந்து அமர்ந்துவிடுகிறது.

தடதடவென புரட்டிச் சென்று விட முடியாத கவிதைகளில் பூரணத்துவம் மிளிர்கிறது. கவிதையின் உட்பொருளை அறியவும், புரியவும், அவரை தொடர்ந்து சென்றாலே போதுமானது. அதற்கான எல்லா வழித்தடங்களையும் அவரே விட்டுச் செல்கிறார். சமயங்களில் கடவுளிடம் பேசுவதுேபான்ற சாத்தியமும் காணக்கிடைக்கிறது.

பூனம் பாண்டே app

பாலிவுட் கிளாமர் பாம் பூனம் பாண்டே செம பூரிப்பில் இருக்கிறார். பூனத்திற்கென ஸ்பெஷலாக இப்போது மொபைல் ஆப் வந்திருக்கிறது. சமீபத்தில் அவரது ஆப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் வந்ததுதான் இந்த பூரிப்பிற்கு காரணம். ‘wohoooooo!!! my app Trending No 1 on App Store..Muuuuuaah’ என ஃபிளையிங் கிஸ் வீசுகிறார் பூனம்.

ரீடிங் கார்னர்

தமிழ் திரைப்பட நூற்றாண்டு - 2018‘

பெ.வேல்முருகன் [ஒளிக்கற்றை வெளியீட்டகம், 9/2, காஞ்சிரம் பொற்றை, பனங்காலை, களிக்காவிளை - 629 153. தொடர்புக்கு : 9025038384] திரைப்படங்களின் ஆதி சித்திரங்களைத் தொகுத்திருக்கும் நூல். இந்தியாவில் திரைப்படத்திற்கான முயற்சிகள் எவ்விதம் ஆரம்பித்தது, அதற்கான முயற்சிகள் பற்றி தெளிவாகவும், சுருக்கமாகவும், மிகையின்றியும் சொல்லப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் முதல் திரைப்படம், நடராஜ முதலியாரின் ‘கீச்சுவதம்’, முதலில் தமிழ் பேசிய திரைப்படம் என விரிவாகவும் கட்டுரைகள் உள்ளன. ஒன்றை முற்றாக அறிந்து தெரிந்து கொள்வதற்கு முன், அதன் அடிப்படை தெரிதல் அவசியமானது. அரிதான சில போஸ்டர்கள், நாம் பார்த்தறியாத விளம்பரங்களின் கவனம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

லூமியர் சகோதரர்களின் திரைப்படக்காட்சி நடைபெற்ற விக்டோரியா ஹாலின் சித்தரிப்பு இருக்கிறது. சினிமாவின் வசதியான கட்டத்தில் நாம் இருக்கிற இந்த வேளையில், அதன் ஆரம்ப கடினம் இந்தப் புத்தகத்திலிருந்து புரிபடுகிறது. மவுனப் படங்களின் வரிசைப்பட்டியல் நீங்கள் இதற்குமுன் பார்த்தறியாதது.

நம் முன்னோர்களை மறப்பதற்கில்லை. அவர்களின் கடின உழைப்பில் வந்த சிறுபாதையையே நாம் ராஜபாட்டையாக மாற்றியிருக்கிறோம். சிறு புத்தகம்தான். உள்ளே சென்று விரைவில் வெளிவந்துவிட முடியும். ஆனால், கிடைக்கும் தகவல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

பாஸ்வேர்டு சீக்ரெட்

கணவரது செல்போனில் என்னென்ன ரகசியங்கள் புதைந்திருக்கும்? அவரது பாஸ்வேர்டாக எந்த விரலின் finger print இருக்கும் என்ற சந்தேகம் மனைவிக்கு இருப்பது நம்மூரில் மட்டுமல்ல... உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் போல. அதற்கு உதாரணம் இந்த வீடியோ. சோபாவில் தூங்கிக் கொண்டிருக்கிறார் கணவர். அவரருகே செல்போன் இருப்பதைப் பார்க்கிறார் மனைவி.

தூங்கிக்கொண்டிருந்த கணவருக்குத் தெரியாமல் அந்த செல்போனை எடுத்து அவரது finger printகளை வைத்து ஆன் செய்யப்பார்க்கிறார். ஒரு கட்டத்தில் எந்த விரல்களும் பொருந்தாமல் போனதால் வெறுப்பில் எஸ்கேப் ஆகிறார். இதையெல்லாம் பார்த்து, தூங்குவது போல் பாசாங்கு செய்த கணவர் நமட்டுச் சிரிப்பை சிந்துகிறார்.

அவர் finger print ஆக எதை வைத்திருந்தார் என்பதை சுவாரஸ்யமான வீடியோவாக ஃபேஸ்புக்கின் ‘Kakaki Africa’ பக்கத்தில் ‘girls can go any extent to get your password...’ என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளனர். 65 லட்சம் பார்வையாளர்கள், 88 ஆயிரம் ஷேர்கள் என வைரல் ஹிட் ஆகியுள்ளது அந்த வீடியோ.

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்!

இந்தியாவில் வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காது என்கிறது ஓர் ஆய்வு. 2011ம் ஆண்டில் சுமார் 9.3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. ஆனால், 2015ல் வெறும் 1.35 லட்சம் வேலைகள்தான் உருவாக்கப்பட்டுள்ளது.

இதனால் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இந்தப் பிரச்சனையை தீர்க்கவேண்டுமென்றால் நவீன தொழிற்சாலைகளுக்குத் தேவையான தொழிலாளர்களை படித்தவர்களிடமிருந்து மட்டும் பெற்றால் போதாது. படிக்காத விவசாயத் தொழிலாளர்களுக்கும் நவீன தொழிலின் சூட்சுமங்களைக் கற்றுக் கொடுத்து அவர்களையும் உள்ளிழுக்க வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.