அப்பொழுதில்...அச்செயலில்...
நேற்றைப் போன்றதொரு நாளில் இரவைப் போன்றதொரு பொழுதில் கடலைப் போன்றதொரு வடிவில் நீர்த்திரள் கூட்டமொன்று என் வீட்டிற்கு வந்திருந்தது
என்னைத் தேடி தூரமாய் நின்று ஆதுரமாய்ப் பார்த்துவிட்டு அருகில் வந்து என் நெஞ்சை வருடியது ரோமங்கள் புல்லரித்தன திரேகமெங்கும் நெற்றியில் குனிந்து முத்தமிட்டது ரத்த ஓட்டம் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டது. ஒரு நாலடி கடவுளை என் காலடியில் காணிக்கை வைத்து கரம் கூப்பி வணங்கியது கற்று மட்டும் தாருங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றது பணிவாக நீருக்கு நீச்சல் தெரியாதென்ற உண்மையை தெரிந்து கொண்ட கணத்தில் என் முகத்தில் குப்பென்று வியர்த்துக் கொட்டிய வேர்வைத் துளிகளை ஒரு கன்னிப் புயலின் தாவணியைக் கொண்டு மெது மெதுவாக ஒற்றி ஒற்றியெடுக்கத் தொடங்கியது அது அச்செயலில் அப்பொழுதில் முற்றிலும் மறந்து போனது எனக்கு நான் யாரென்று!
பிரான்சிஸ் கிருபா
|