காட்ஃபாதர் - போதை உலகின் பேரரசன்



யுவகிருஷ்ணா - 7

மீசைகூட ஒழுங்காக முளைக்காத பதினேழு வயது. சாதாரண விவசாய அப்பா. டீச்சர் அம்மா. அன்பான சகோதர சகோதரிகள். கட்டுக்கோப்பான மதப்பின்னணி அமைதியான கிராம வாழ்க்கையின் பின்னணியில் இருந்து ஒரு வன்முறையாளன் உருவாவது சாத்தியமில்லாத சம்பவம்தான்.

திடீரென ஒருவன், அத்தனை சட்டவிரோத செயல்களின் மீதும் மோகம் கொண்டு, மெதிலின் நகரின் மைனர் தாதாவாக வலம் வந்ததை நம்ப முடியவில்லை இல்லையா? பாப்லோ எஸ்கோபாரின் ஏழு வயதில் நடந்த ஒரு சம்பவமே, அவனை வாழ்க்கையை ‘ஜஸ்ட் லைக் தட்’ என்று வாழ்ந்து பார்க்கத் தூண்டியது.

உயிரின் மீது இருந்த அச்சத்தை முற்றிலுமாகப் போக்கியது. ரத்தத்தை கண்டு ரசிக்கும் மோகம் அவனுக்கு அப்போதுதான் ஏற்பட்டது. பாப்லோவின் அண்ணன் ராபர்ட்டோ எஸ்கோபார் அந்த நிகழ்வை விலாவரியாகவே விவரித்திருக்கிறார். அவர் குரலிலேயே அந்த ரத்த சரித்திரத்தை கேட்போமா? “நாங்கள் பிறந்த காலத்தில் கொலம்பியா நிஜமாகவே பற்றி எரிந்துகொண்டிருந்தது.

பழமைவாதிகளுக்கும், புரட்சிகர எண்ணம் கொண்ட கொரில்லாக்களுக்கும் இடையேயான சண்டை உச்சத்தில் இருந்தது. கொலம்பிய வரலாற்றில் ‘La violencia’ என்று அழைக்கப்பட்ட காலக்கட்டம் அது. இந்த உள்நாட்டுப் போர் முடிந்தபோது மொத்தம் மூன்று லட்சம் அப்பாவி மக்கள் பலியாகி இருந்தார்கள் என்றால், அந்த காலக்கட்டம் எப்படி இருந்திருக்குமென்று நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற ஒருவர் கொல்லப்பட்டதைத்  தொடர்ந்து இந்த வன்முறை வெறியாட்டம் தொடங்கியது. பத்து ஆண்டுகளுக்கு உக்கிரமாக நீடித்தது. கண்டம் துண்டமாக வெட்டி வீசப்பட்ட சடலங்களை சாதாரணமாகப் பார்த்துக்கொண்டேதான் நாங்கள் வளர்ந்தோம். திடீர் திடீரென எங்கள் தெருவில் வசிப்பவர்கள் காணாமல் போவார்கள்.

ஏதோ ஒரு குழு, சந்தேகத்தின் பேரில் அவர்களைக் கடத்திச் சென்றிருக்கலாம். அவர்களில் ஓரிருவர் உயிரோடு - பெரும்பாலும் கையோ காலோ இல்லாமல் - திரும்பினாலே அதிசயம்தான். பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு கணக்கு வழக்கே கிடையாது. துப்பாக்கி எடுத்தவனெல்லாம் புரட்சியாளன் ஆனான்.

இப்படிப்பட்ட சூழலில்தான் நாங்கள் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் வளரவேண்டும் என்று எங்கள் அம்மா விரும்பினாள். நாங்கள் வளர்ந்து பாதுகாப்பாக அமெரிக்காவுக்கோ அல்லது ஐரோப்பாவுக்கோ சென்று அமைதியான வாழ்வை வாழவேண்டும் என்பதுதான் அவளது ஆசை. அதற்கு ஏகப்பட்ட பணம் தேவை. சம்பாதிக்க வேண்டுமானால் நல்ல கல்வி அவசியம்.

எனவேதான் எங்களுடைய கல்வியில் அம்மாவுக்கு அவ்வளவு அக்கறை. அந்த குறிப்பிட்ட ஓரிரவை மட்டும் நாங்கள் மறக்கவே முடியாது. எங்கள் வாழ்க்கையையே முற்றிலுமாக புரட்டிப் போட்ட இரவு. பாப்லோ, பிற்காலத்தில் உலகத்தையே அதிரச் செய்யும் காட்ஃபாதராக உருவெடுத்ததற்கு அச்சாரம் போட்ட இரவு.

வன்முறையை நேரடியாக நாங்களே நேர்கொண்ட அந்த இரவு, என்னை அதிர்ச்சியடைய மட்டும்தான் செய்தது. பாப்லோவையோ, அதுதான் வன்முறையை ரசிப்பவனாக உருவெடுக்க வைத்தது. அப்போது எனக்கு பத்து வயது. பாப்லோ, என்னைவிட மூன்று வயது சிறியவன். எனக்கு புதிதாக சைக்கிள் வாங்கிக் கொடுத்திருந்தார்கள். அதை மாற்றி மாற்றி ஓட்டிக்கொண்டு நானும் பாப்லோவும் பள்ளியில் இருந்து திரும்பியிருந்தோம்.

ஆயுதம் ஏந்திய சில கொரில்லாக்கள் எங்கள் வீட்டு முன்பாக ஏதோ சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். துப்பாக்கி முனையில் எங்கள் அம்மாவை மிரட்டிக் கொண்டிருந்தார்கள். எங்களைப் பார்த்ததுமே அம்மா, ‘வீட்டுக்குள்ளே போங்க’ என்று அவசர அவசரமாகத் துரத்தினாள். ஏனெனில் சிறுவர்களை கடத்திப்போய் ஆயுதப் பயிற்சி வழங்குவது அப்போது வழக்கமாக இருந்தது.

‘அவருக்கு அரசியலே தெரியாதுங்க. அவர் உண்டு, அவரோட பண்ணை உண்டு, பசு மாடுங்க உண்டுன்னு அப்பிராணியா கெடப்பாருங்க...’ என்று எங்கள் தந்தையைப் பற்றித்தான் அவர்களிடம் கெஞ்சலான குரலில் அம்மா பேசிக் கொண்டிருந்தாள். ‘பாருங்க டீச்சரம்மா. நீங்க நல்லவங்க. ரொம்பவே நல்லவங்க. அதனாலேதான் தலைவர் சும்மா போய் பேசிட்டு வரச் சொன்னாரு.

இன்னொரு வாட்டி உங்க புருஷனைப் பத்தி இதுமாதிரி கேள்விப்பட்டோம்னா, குடும்பம் மொத்தத்தையும் வெட்டிப் போட்டுட்டு பண்ணையை நாங்க எடுத்துப்போம்...’ இருபது வயது மதிக்கத்தக்க அந்த அண்ணன், கண்டிப்பான குரலில் மிரட்டினான். அவன் எத்தனையோ முறை அப்பாவைப் பார்க்கும்போதெல்லாம் பணிவாக சல்யூட் வைப்பதை பார்த்திருக்கிறேன்.

நானும், பாப்லோவும் ஜன்னல் வழியாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தோம். அம்மா கையைத் தூக்கி கும்பிட்டபடி அவர்களது காலில் விழப் போனாள். அவர்கள் அவளைத் தூக்கி நிறுத்திவிட்டு விறைப்பாகக்  கிளம்பினார்கள். அந்தக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அம்மா மேலே பரிதாபம்தான் வந்தது. ஆனால் - பாப்லோவோ கோபத்தில் முகம் சிவந்தான்.

‘அந்த பொறுக்கிங்க காலில் அம்மா எதுக்கு விழணும்?’ சீற்றத்தோடு என்னைக் கேட்டான். அவன் உணர்ச்சிவசப்படும் போதெல்லாம் லேசாக திக்கித் திக்கிப் பேசுவான். அன்றும் திக்கினான். கொஞ்ச நேரத்தில் அம்மாவோடு, அப்பாவும் பதட்டமாக ஓடி வந்தார். கதவு, ஜன்னல் அத்தனையையும் சாத்தினார்.

‘நிச்சயமா அவனுங்க ராத்திரி வருவானுங்க. நம்மளையெல்லாம் வெட்டிப் போட்டுடுவானுங்க...’ குரல் கம்ம அம்மாவிடம் சொன்னார். குழந்தைகள் எல்லோரும் கட்டிலுக்கு அடியே பதுங்கிக் கொண்டோம். என்னுடைய விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. சிறியவன் என்றாலும் பாப்லோதான் என்னை தைரியப்படுத்திக் கொண்டிருந்தான்.

அப்பா, அந்த கொரில்லாக் குழுக்களின் ரகசியங்களை எதிரிகளின் குழுக்களுக்கு சொல்கிறார் என்று தலைவனுக்கு சந்தேகமாம். உண்மையில் எங்கள் குடும்பத்துக்கு எவ்வித அரசியல் ஆர்வமும் இல்லை. நாங்கள் உண்டு, எங்கள் பண்ணை வேலைகள் உண்டு என்று வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஆனால் - இப்படித்தான் அடிக்கடி யாராவது அப்பாவி மீது சந்தேகப்பட்டு, அந்தக் குடும்பத்தையே அழித்தொழிப்பது இந்த கொரில்லாக்களின் வழக்கம். அப்பா எதிர்பார்த்தபடியே நடுராத்திரியில் எங்கள் வீட்டின் மீது தாக்குதல் தொடங்கியது. ‘கதவைத் திறடா’ என்று அந்த கொரில்லா குழுவின் தலைவன் ஆவேசமாகக் கத்தியவாறே துப்பாக்கியை திருப்பிப் பிடித்து கதவின் மீது டொம் டொம்மென்று இடித்துக் கொண்டிருந்தான்.

அம்மா அழுது கொண்டிருந்தாள். அப்பா தலையில் அடித்தபடி, நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கதவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘போச்சு. எல்லாம் போச்சு. நான் செத்தா பரவாயில்லை. குழந்தைங்களாவது உசுரோட மிஞ்சணும். ஹெர்மில்தா, நான் அவனுங்களோட போயிடறேன். திரும்ப வருவேனான்னு தெரியாது. குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோ...’ சொன்னபடியே கதவைத் திறக்க அப்பா நகர்ந்தார்.

அம்மா வழியை மறித்துக் கொண்டு, ‘செத்தா எல்லாருமா சாவோம். ப்ளீஸ், நீங்க இல்லாமே நாங்க மட்டும் இருந்து என்ன பண்ணுறது?’ என்று அழுதவாறே அவரைத் தடுத்துக் கொண்டிருந்தாள். அந்தக் காலத்து கொலம்பிய கிராமங்களில் வீடுகள் உறுதியாக இருக்கும். நல்ல வலுவான காட்டு மரங்களில் உருவாக்கப்பட்டிருக்கும். சுலபமாக யாரும் உடைத்துவிட முடியாது.

கதவை உடைக்க முயற்சித்துக் கொண்டிருந்தவன், அது முடியாமலோ என்னவோ ஆங்காரமாகக் கத்தினான். ‘டேய் வெளியே வாங்கடா. இல்லேன்னா மொத்த வீட்டையும் தீ வெச்சு கொளுத்திடுவோம்...’ இவ்வளவையும் பார்த்துக் கொண்டிருந்த பாப்லோ திமிறத் தொடங்கினான். அவனை அடக்குவதே எனக்கு பெரும்பாடாகப் போய்விட்டது. ஏழு வயதுச் சிறுவனால் ஆயுதம் ஏந்திய ஆட்களை எப்படிச் சமாளிக்க முடியும்?

பெட்ரோல் வாசனை எங்கள் நாசியைத் தொட்டது. வீட்டின் மேல் ஊற்றி தீ வைத்திருக்கிறார்கள். வெளியே தாழ்வாரம் திகுதிகுவென்று எரியத் தொடங்கியது. பட் படாரென்று சப்தத்தோடு தீயில் மரங்கள் கருகி தாழ்வாரமே விழ ஆரம்பித்தது. கதவில் தீப்பற்றினால் அவர்கள் சுலபமாக உள்ளே வந்துவிடுவார்கள். ஜன்னல் வழியே நெருப்பின் மஞ்சள் ஒளி ஊடுருவியது. வீட்டில் அனைவரின் முகத்திலும் அப்பட்டமான பீதி உறைந்திருந்தது.

பாப்லோ மட்டும்தான் கோபத்தில் முகம் சிவந்து கொண்டிருந்தான். ‘தொலைந்தோம்’ என்றுதான் நினைத்தோம். அம்மா முழங்காலிட்டு குழந்தை இயேசுவைப் பிரார்த்திக்கத் தொடங்கினாள். அவளது பிரார்த்தனை, பரலோகத்தில் இருக்கும் பிதாவுக்கு கேட்டதோ என்னவோ, அந்த அதிசயம் நிகழ்ந்தது. மெஷின்கன் முழக்கம். சர்சர்ரென்று ஜீப்புகள் தெருவில் நுழையும் சப்தம்.

‘ஆஹா. மிலிட்டரி வந்துடிச்சி...’ அப்பா பரவசமாக சொன்னார். கொரில்லாக்கள் தப்பி ஓடும் சப்தமும், அவர்கள் மீது ராணுவத்தினர் நடத்தும் துப்பாக்கிச்சூடு சப்தமும் தெளிவாகக் கேட்டது. ‘யாராவது இருக்கீங்களா?’ வெளியே மிலிட்டரிக்காரர் ஒருவர் குரல் கொடுக்க, எங்கள் குடும்பமே ‘காப்பாத்துங்க...’ என்று அபயக்குரல் எழுப்பியது.

வெளியே வந்து பார்த்தால் - எங்கள் தெருவே எரிந்து கொண்டிருந்தது. காடுகள் தீப் பிடித்தால் அப்பகுதியே இரவிலும் பகலாகத் தெரியுமே... அப்படி இருந்தது. சாலையோரங்களில் மனிதர்கள் செத்துக் கிடந்தார்கள். பச்சையான மாமிசமும், ரத்தமும் கலந்த நெடியில் நான் வாந்தியெடுத்து விட்டேன்.

கொல்லப்பட்டவர்கள் அத்தனை பேருமே விவசாயம் செய்து கொண்டோ, மாட்டுப் பண்ணை வைத்துக் கொண்டோ வாழ்ந்து கொண்டிருந்த அப்பாவி குடியானவர்கள். பாழாய்ப்போன அரசியலுக்கு எவ்விதத்திலும் சம்பந்தப்படாதவர்கள். எல்லாவற்றையும் இழந்து எங்கள் குடும்பம் நடுத்தெருவில் நின்றது...

பொதுவாக பாப்லோ பற்றி எழுதப்படும் கதைகளில் இந்த சம்பவம் பதிவாவதில்லை. அந்த கெட்ட கனவை நாங்கள் எல்லோரும் விரைவிலேயே மறந்துவிட்டோம். அவன் மட்டும் மறக்கவேயில்லை என்பதால்தான் அவனும் வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்தான். கையில் துப்பாக்கியை ஏந்தினால்தான் மற்றவர்கள் நமக்கு பயப்படுவார்கள், மரியாதை தருவார்கள் என்கிற எண்ணம் அவனது உள்ளத்தில் வலுவாகப் பதிந்துவிட்டது...”

(மிரட்டுவோம்)

ஓவியம்: அரஸ்