இவர்தான் எய்தவன்



-மை.பாரதிராஜா

கல்லூரி முறைகேடுகள் பற்றி கமர்ஷியலாக சொன்ன விதத்தில் சமீபத்தில் பேசப்பட்ட படம், ‘எய்தவன்’. ‘‘முதல் படமே நேர்மையான ஒரு படமா, bold attempt ஆக இருக்கணும்னு நினைச்சேன். அப்படித்தான் இந்த ஸ்கிரிப்டை ரெடி பண்ணினேன். அப்ப, ‘அப்பா’, ‘பைரவா’னு கல்வி நிறுவனங்களைப் பத்தின படங்கள் வந்திருந்தது. ஆனாலும் தைரியமா இருந்தேன்.

ஸ்கிரிப்ட் மேல நான் வைச்ச நம்பிக்கை வீண் போகலை. ‘எய்தவன்’ பார்த்துட்டு இயக்குநர்கள் ரஞ்சித், விக்ரம் சுகுமாரன் தவிர சமீபத்தில் வெளியான பல புதுப்பட இயக்குநர்களும் பேசினாங்க, பாராட்டினாங்க. சந்தோஷமா இருக்கு!’’ தியேட்டர் விசிட்டுக்கு நடுவே, திருப்தியாகப் பேசுகிறார் சக்தி ராஜசேகரன்.

‘‘திருவண்ணாமலை மாவட்டத்துல இருக்கிற ஆரணிலதான் பிறந்து வளர்ந்தேன். சினிமா வாசனையே அறியாத ஊரு எங்க ஊரு. தியேட்டர்ல போய் படம் பார்க்கறது மட்டுமே எங்களுக்கும் சினிமாவுக்குமான உறவு. பி.எஸ்சி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிக்கிறப்ப சினிமா ஆசை வந்தது. சென்னைக்கு வந்தேன். நிறைய தேடல்கள்... போராட்டங்கள். அப்புறம் ரெண்டு படத்துல வேலை செஞ்சேன். அதெல்லாம் ரிலீஸே ஆகலை.

என்னடா இதுனு திணறிட்டிருந்தப்ப ‘மதயானைக் கூட்டம்’ல விக்ரம் சுகுமாரன் சார்கிட்ட ஒர்க் பண்ற வாய்ப்பு கிடைச்சது. என் படத்தோட திரைக்கதை ரொம்ப டீடெயில்டா இருக்குனு எல்லாருமே சொல்றாங்க. இந்தப் பாராட்டு கிடைக்க காரணமே ‘மதயானைக் கூட்டம்’ல நான் வேலை பார்த்ததுதான்.

அங்கதான் கலையரசன் பழக்கமானார். அப்ப அவர் ஹீரோ ஆகலை. அதனால ‘எய்தவன்’ல தருமன் கேரக்டருக்குதான் அவர் முடிவாகியிருந்தார். ஆனா, எதிர்பாராத விதமா அவரே ஹீரோவா நடிச்சதுல எங்க எல்லாருக்குமே ஹேப்பி. மொதல்ல வேற சில ஹீரோக்களுக்கு இந்தக் கதையைச் சொல்ல முயற்சி பண்ணினேன். அது பெரிய பிராசஸ்னு புரிஞ்சது.

நான் தயாரிப்பாளரைத் தேடி போராடின டைம்லதான் என் நண்பர் சுதாகரை சந்திச்சேன். ‘நானே தயாரிக்கறேன் சக்தி’னு அவரே சந்தோஷமா முன்வந்தார். இப்பெல்லாம் வருஷத்துக்கு 200 படமாவது வந்திடுது. நல்லா இருக்குதுனு சொல்ற படங்களுக்கு போட்ட காசு திரும்பி வர்றதில்லை.

ஆனா, ‘எய்தவன்’ ஒரு இயக்குநரா எனக்கு நல்ல பெயரையும், என்னோட தயாரிப்பாளருக்கு நல்ல ரெவன்யூவையும் கொடுத்திருக்கு. இந்த உற்சாகத்தோட அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஆரம்பிச்சிட்டேன். அதிலும் முக்கியமான ஒரு பிரச்னையைப் பற்றி பேசுவேன்!’’ என்கிறார் சக்தி ராஜசேகரன்!