புவி வெப்பமாதலுக்கு அண்டார்டிகாவும் ஒரு காரணம்!



தமிழக மாணவரின் அசத்தும் ஆராய்ச்சி

-புதூராள் மைந்தன்

இந்துக்களுக்கு காசி போன்று, இஸ்லாமியர்களுக்கு மெக்கா போன்று, கிறிஸ்தவர்களுக்கு ரோம் போன்று புவி அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு பிடித்த தேசம் அண்டார்டிகா பனிக் கண்டம். இதனை உலக தட்பவெட்பத்தின் மூளை என்பார்கள். ஆராய்ச்சிக்காக மட்டுமே அங்கு செல்ல முடியும். அப்படியான ஒரு வாய்ப்பு தமிழ் நாட்டைச் சேர்ந்த கதிரவனுக்கு கிடைத்திருக்கிருக்கிறது.

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் விஞ்ஞானக் கழக மாணவரான இவர், இரண்டு மாத அண்டார்டிகா ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டு திரும்பியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

இன்றைய மாணவர்கள் டாக்டர், என்ஜினியர் என்று ஓடிக்கொண்டிருக்கும்போது அதிக கவனம் பெறாத புவியியல் துறையைத் தேர்வு செய்தது ஏன்?
எனக்கு ஆரம்பத்திலிருந்தே புவியியல் மீதுதான் ஈர்ப்பு. டாக்டர், என்ஜினியர் முதல் சாதாரண கூலித் தொழிலாளி வரை எல்லோரும் வாழ்வதற்கு பூமி வேண்டும். எனவே மற்ற படிப்புகளை விட புவியியல் எனக்கு முக்கியமாகத் தெரிந்தது. இதனால் பல நல்ல வாய்ப்புகள் கிடைத்தும் அதை மறுத்துவிட்டு திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் புவியியல் தொழில்நுட்பம் படித்தேன். அதை முடித்து விட்டு கேட் தேர்வின் மூலம் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் புவி அறிவியலில் முதுகலைப் பட்டம் படிக்கச் சேர்ந்தேன்.

அண்டார்டிகா பயண வாய்ப்பு எப்படி கிடைத்தது?
தேசிய அண்டார்டிகா மற்றும் கடல் ஆராய்ச்சி மையம் ஒன்றை இந்திய அரசாங்கம் நடத்துகிறது. இந்த மையத்தின் மூலம் அவ்வப்போது ஆராய்ச்சியாளர்களை அண்டார்டிகா அழைத்துச் செல்வார்கள். இதற்கான அறிவிப்பை இந்த மையம் வெளியிடும். செல்ல விரும்புகிறவர்கள் தாங்கள் செய்ய இருக்கும் ஆராய்ச்சி குறித்த செயல்முறை விளக்கத்தை அந்த மையம் நிர்ணயிக்கும் விஞ்ஞானிகள் முன் செய்து காட்ட வேண்டும்.

அதில் திருப்தி ஏற்பட்டால் பயணத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். எங்கள் இன்ஸ்டிடியூட் பேராசிரியர் புரொசிஞ்சித் கோஷ் இந்தப் பயணத்துக்கு என்னை அனுப்பி வைத்தார். நான் ஏற்கெனவே அண்டார்டிகா பற்றிய ஆய்வில் இருந்ததால் எனக்கு இந்த வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார்.

அண்டார்டிகா பயணம் பற்றி..?
மிகக் கடுமையானது. பலமுறை இந்தப் பயணம் தோல்வி அடைந்திருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டு அண்டார்டிகா பயணத்துக்கு தயாராகி மொரீஷியஸ் தீவு சென்று விட்டோம். ஆனால், பனியை உடைத்துக் கொண்டு செல்லும் கப்பல் பழுதானதால் பயணத்தைத் தொடர முடியவில்லை. இப்படி பல ஆண்டுகள் பல காரணங்களுக்காக பயணம் தடைபட்டிருக்கிறது.

அண்டார்டிகா கடல் வரை சென்று விட்டு தரைப்பகுதிக்குச் செல்ல முடியாமல் பலர் திரும்பி வந்திருக்கிறார்கள். 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறைதான் வெற்றி கரகமாக அண்டார்டிகா தரைப்பகுதி வரை சென்று விட்டு திரும்பியிருக்கிறோம்.

பயணத் திட்டம் எப்படி..?
இந்தியா முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் கோவாவில் கூடினார்கள். அங்கிருந்து விமானம் மூலம் மொரீஷியஸ் சென்றோம். பிறகு தனியாக உருவாக்கப்பட்ட ஆராய்ச்சிக் கப்பல் மூலம் அண்டார்டிகா பயணம் தொடங்கியது. விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கடல் வல்லுனர்கள், ஒரு டாக்டர், ஒரு வெளிநாட்டு மாணவி என நாங்கள் 24 பேர்; கப்பல் பணியாளர்கள் சுமார் 30 பேர் எங்கள் குழுவில் இருந்தோம்.

நாங்கள் சென்ற அகுல்ஹாஸ் என்ற கப்பல் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தது. கப்பல் கேப்டன், பணியாளர்கள் அனைவருமே தென் ஆப்பிரிக்க குடிமக்கள். 60 நாட்களுக்குத் தேவையான உணவு, பனிப் பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட அனைத்தையும் எடுத்துக் கொண்டோம். தென் ஆப்பிரிக்க சமையல்காரர்கள் இந்திய உணவு வகைகள் அனைத்தையும் செய்யக் கூடியவர்கள். அரிசி சாதமும், தோசையும், சட்னி, சாம்பாரும் பிரமாதமாக சமைப்பார்கள்.

அண்டார்டிகா நோக்கிப் போகும்போது எந்த ஆராய்ச்சியிலும் ஈடுபடவில்லை. பனிப்புயலுக்கு முன்னால் இலக்கை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. 20 நாட்கள் கடலில் பயணம் செய்து அண்டார்டிகாவை அடைந்தோம். அங்கு எல்லா நாட்டு ஆய்வுக் கூடங்களும் இருக்கிறது.

நம் நாட்டு ஆய்வுக்கூடத்திற்கு ‘பாரதி ஸ்டேஷன்’ என்று பெயர். ஹெலிகாப்டரில் அங்கிருந்த விஞ்ஞானிகள் வந்திருந்து எங்களை சந்தித்து விட்டுச் சென்றார்கள். அண்டார்டிகாவை ஒட்டியுள்ள கடல் பகுதியில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியை மேற்கொண்டோம். திரும்பி வரும் வழியில் இருந்த அண்டார்டிகா கடலில் ஆங்காங்கே கப்பலை நிறுத்தி ஆய்வு செய்தோம். ஓர் ஆய்வுக்கு 10 மணி நேரம் வரை செலவாகும். வரும் வழியில் நிறைய ஆய்வுகள் இருந்தது. இதனால் நாங்கள் மொரீஷியஸ் திரும்ப 35 நாட்கள் ஆனது.

திகில் அனுபவம் ஏதாவது..?
பனிப்புயல்தான். காற்றுதான் மிகப்பெரிய வில்லன். திடீரென புயலை உருவாக்குவது, அலைகளை உயர எழுப்புவது எல்லாமே காற்றுதான். பல நேரங்களில் கப்பலின் உயரத்தையும் தாண்டி அலைகள் எழும்பும். தண்ணீர் கப்பலுக்குள் வந்து விழும். கப்பல் தலைகுப்புற கவிழ்வது போல சென்று பிறகு செங்குத்தாக நிமிரும். இது நள்ளிரவு நேரத்தில் நடந்தால் பயங்கர திகிலாக இருக்கும். கில்லிங் திமிங்கிலங்கள், பனிக்கரடிகள், டால்ஃபின்கள், பெங்குவின்களை எங்கும் பார்க்கலாம். பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்றதால் எந்த அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

உங்கள் ஆய்வு என்ன?
ஒவ்வொருவரும் தனித்தனியாக ஆய்வுகளை மேற்கொள்வார்கள். என்னுடைய ஆய்வு அண்டார்டிகா கடலில் உள்ள காற்றும், நீரும். உலகம் முழுவதும் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடை உறிந்து வைத்துக் கொள்வது அண்டார்டிகா கடல்தான். இதனால்தான் புவி வெப்பமயமாதலில் இருந்து தடுக்கப்படுகிறது. ஆனால், அண்டார்டிக் கடல் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவதை சமீபத்தில் கண்டுபிடித்தனர்.

அதனாலும் உலக வெப்பமயமாதல் அதிகரிக்கிறது என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அண்டார்டிகா கடல் நீர் மற்றும் காற்றை பல இடங்களில் சேகரித்து அது எந்த அளவுக்கு கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது, வெளியிடுகிறது என்பதைக் கண்டறிவதுதான் எனது ஆராய்ச்சி. காற்று மற்றும் நீரைச் சேகரித்து வந்திருக்கிறேன். 4 கிலோமீட்டர் ஆழம் வரையில் துளையிட்டு நீரைச் சேகரித்தேன். இதன் முடிவுகள் தெரிய ஒரு வருடம் வரை ஆகும்.

இந்தப் பயணத்தில் மறக்க முடியாத தருணம் எது?
மொரீஷியஸ் ஜனாதிபதி ஆமீனா குரீப் பஃக்கீமை சந்தித்ததுதான். அவர் எங்கள் குழுவை அவரது மாளிகைக்கு அழைத்து கவுரவித்தார். எங்கள் ஆய்வுகள், அதன் முடிவுகள் பற்றி கேட்டறிந்தார். ‘அடுத்த முறை எங்கள் நாட்டிலிருந்து விஞ்ஞானிகளை உங்களுடன் அனுப்புவேன்’ என்றார். ‘பூமியைக் காக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’ என்று எங்களை வழி அனுப்பி வைத்தார். அவரும் ஒரு விஞ்ஞானி, மொரீஷியசின் முதல் பெண் ஜனாதிபதியும் அவர்தான்.

புவிப் பாதுகாப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
புவிப் பாதுகாப்பு பற்றி மேல் நாடுகளில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நம் நாட்டில் புவியின் எதிர்காலம் பற்றிய எந்தப் புரிதலும் இல்லை. இன்றைக்கு நம்மிடம் இருக்கிற பூமியை எந்த சேதாரமும் இல்லாமல் வருங்காலத் தலைமுறையிடம் கொடுக்க வேண்டும் என்கிற அக்கறை ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

ஆற்று மணல் அள்ளுவதிலிருந்து ஏரியைத் தூர்த்து வீடு கட்டுவது வரை பூமியை நாம் ஒவ்வொரு நாளும் அழித்துக்கொண்டே இருக்கிறோம். பூமியின் கடைசி ஆழம் வரை சென்று பெட்ரோல் எடுப்பதுடன் அதை அதிகமாக பயன்படுத்தி காற்றையும் மாசுபடுத்துகிறோம். மரங்களை வெட்டி பூமியை மலடாக்குகிறோம். பூமி என்பது இப்போது வாழும் தலைமுறையான நமக்கு மட்டும் சொந்தமானதல்ல. இனிவரப்போகும் பல லட்சம் தலைமுறைகளுக்கும் சொந்தமானது. இதை நாம் உணர வேண்டும்.

உங்கள் அடுத்த திட்டம் என்ன?
புவி அறிவியில் படிப்பு என்பது பூமியை விட பெரிதானது. அதற்கு எல்லையே இல்லை... தொடர்ந்து படிக்க வேண்டும், பூமியின் கார்பன் சுழற்சி பற்றி பிஎச்.டி ஆய்வு செய்ய இருக்கிறேன். பூமி நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது. அதற்கு என்னால் முடிந்ததைத் திருப்பிச் செய்ய வேண்டும். பணம் சம்பாதிக்க படிக்கவில்லை. அது நோக்கமும் இல்லை. எனது படிப்பு மற்றும் ஆய்வுக்கு இடையில் படிப்போடு தொடர்புடைய பணி கிடைத்தால் அதைச் செய்வேன்.