ஐந்து கரங்களைக் கொண்டவனே என் ஹீரோ!



ஈட்டி - ரவி அரசு அதகளம்

-மை.பாரதிராஜா

ஆரஞ்சும் கோல்டும் கலந்துகட்டும் பார்டர் மினுமினுக்க... மஞ்சள் நிற டிசைனர் சேலையில் கண்கள் நிறைய காதல் பார்வையை வீசும் மகிமா. இதற்கு மேட்ச்சிங்கான கலர் காம்பினேஷன் காஸ்ட்யூமில் பக்கத்தில் புன்னகைக்கும் ஜி.வி.பிரகாஷ். சென்னையில் உள்ள கல்யாண மண்டபம் ஒன்றில் ‘ஐங்கரன்’ படத்திற்கான ஷூட்டிங் பரபரத்துக் கொண்டிருந்தது. ஸ்பாட்டில் நம்மை கண்டதும் பிரேக் விட்டுவிட்டு வந்தார் ரவி அரசு.

‘ஈட்டி’ மூலம் அதர்வாவுக்கு கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர், இப்போது ஜி.வி.பிரகாஷுக்கு சக்சஸ் பொக்கே கொடுக்க பம்பரமாக சுற்றுகிறார். ‘‘2015 டிசம்பர்ல ‘ஈட்டி’ ரிலீஸ் ஆச்சு. கரெக்ட்டா சென்னையே பெரு மழைல மிதந்த நேரம் அது. அப்படியும் படம் நல்லா போச்சு. ஒரு தடகள வீரன் எதிர்கொள்ளும் பிரச்னைகளை என் பாணில சொல்லியிருந்தேன். அது எல்லோரோட கவனத்தையும் ஈர்த்தது.

படம் பார்த்துட்டு என்னோட குரு வெற்றிமாறன், பி.சி.ஸ்ரீராம் சார்னு நிறைய பேர் பாராட்டினாங்க. மும்பைல படம் பார்த்துட்டு பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ‘டெக்னிகல் கான்சப்ட் நல்லா இருந்தது’னு ஆச்சரியப்பட்டார். ரெண்டு வருஷம்கிட்ட ஆகியும் மக்கள் இன்னமும் ‘ஈட்டி’யை ஞாபகத்துல வச்சிருக்காங்க. சந்தோஷமா இருக்கு...’’ வார்த்தைகளில் நிதானம் கலந்து பேசுகிறார் ரவி அரசு.

ஏன் இவ்வளவு தாமதம்?
இந்தக் கேள்வியை என் ஃப்ரெண்ட்ஸும் கேட்கறாங்க. ‘ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்துட்டு ஏன் இவ்வளவு நிதானம்’னு. ‘ஈட்டி’ முடிஞ்சதும் உடனே நிறைய ஸ்கிரிப்ட்கள் ரெடி பண்ணினேன். எல்லாமே மாஸ் ஹீரோக்களுக்கான ஆக்‌ஷனும் கமர்ஷியலுமானது. ஜி.வி.பிரகாஷோட இணைஞ்சது எதிர்பாராம அமைஞ்சது. ‘ஈட்டி’யோட சக்சஸ்தான் அவர்கிட்ட என்னை கொண்டு சேர்த்தது. அந்தப் படத்துக்கு அவர் இசையமைக்கும் போதே என் ஒர்க்கை பார்த்திருக்கார்.

நான் ஒரு ஸ்கிரிப்ட்டை மேலோட்டமா பண்ணாம, சொல்லப்படுற பிரச்னையோட ஆணிவேருக்கு பக்கத்துல போய் எழுதுவேன்னு அவருக்கு தெரியும். அதனால கதை கேட்காமலே இதுல கமிட் ஆனார். சேஸிங், ஆக்‌ஷன்களுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கார். ஸ்கிரிப்டுக்காக அவர் கொடுத்த உடல் உழைப்பு நிச்சயம் பேசப்படும்.

அதென்ன ‘ஐங்கரன்’?
இது ஆக்‌ஷன் த்ரில்லர். ஐந்து கரங்களை உடையவன் ‘ஐங்கரன்’. அப்படி அஞ்சு கைகள் உள்ளவன் பண்ற வேலையை, ஹீரோ ஒருத்தரே பண்றார். அது என்ன வேலை... எதுக்காக அதை அவர் பண்ண வேண்டியிருக்கு..? இதெல்லாம்தான் படம். எப்படி ‘ஈட்டி’ல முக்கியமான ஒரு பிரச்னையை தொட்டேனோ அப்படி இதுல ரெண்டு பிரச்னைகளை கையாண்டிருக்கேன்.

படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷத்துல இருந்து த்ரில்லர் பரபரக்கும். ஜி.வி.பிரகாஷ், இதுல மெக்கானிகல் என்ஜினீயர். அந்தக் கேரக்டருக்காக அவரது லுக்கை ரொம்பவே மாத்தியிருக்கார். அடர்த்தியான தாடி, மூக்கு கண்ணாடி, படிய வாரி சீவிய தலைனு நிஜ மெக்கானிகல் என்ஜினீயரையே பிரதிபலிச்சிருக்கார். இந்தப்படம் அவரோட இமேஜையே மாத்திக் காட்டும். என்ஜினீயரிங் மாணவர்களுக்கு இது உத்வேகம் கொடுக்கக்கூடிய படமா அமையும். மகிமா நம்பியார், ஹீரோயின். தவிர நரேன், காளி வெங்கட், ஹரீஸ் பெராடி, சித்தார்த் ஷங்கர்னு நிறைய பேர் நடிச்சிருக்காங்க.

மகிமா ரொம்ப ஹோம்லியா இருக்காங்களே..?
இதுல அவங்க நர்ஸா நடிச்சிருக்காங்க. முதல் நாள் ஷூட்டிங்ல சின்னதா நர்வஸ் ஆனாங்க. ஆனா, அடுத்தடுத்த நாட்கள்ல பர்ஃபாமென்ஸ்ல பின்னியெடுத்தாங்க.

நீங்க டெக்னிக்கலாகவும் முக்கியத்துவம் கொடுக்கறவர்...
தேங்க்ஸ். ‘ஈட்டி’ல என்னோட ஒர்க் பண்ணின டெக்னீஷியன்ஸ்தான் இதுலயும் இருக்காங்க. நான் நினைக்கறதை ஸ்கிரீனில் கொண்டு வர்றதுல சரவணன் அபிமன்யு கில்லாடி. ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதால் நைட் எஃபெக்ட் காட்சிகள் அதிகம். அதையெல்லாம் சரவணன் சரியா கொண்டு வந்திருக்கார். சென்னை, சேலம், நாமக்கல்ல மொத்த ஷூட்டிங்கும் முடிச்சிட்டோம்.

ஆர்ட் டைரக்டர் துரைராஜ், எடிட்டிங் ராஜா முகம்மதுனு எல்லாரோட ஒர்க்கும் பேசப்படும். ‘றெக்க’ கணேஷ் சார்தான் இந்தப் படத்தை தயாரிச்சிருக்கார். ஜி.வி.பிரகாஷே இசையமைச்சிருக்கார். படத்துல மொத்தமே மூணே மூணு பாடல்கள்தான்.

கமர்ஷியலா யோசிக்கறீங்க... மாஸ் ஹீரோக்கள் பக்கம் எப்ப கவனம் செலுத்தப் போறீங்க?
விஜய் சேதுபதிகிட்ட நாலு ஒன் லைன்ஸ் சொல்லியிருக்கேன். விஜய், அஜித்னு பெரிய ஹீரோக்களுக்கான கதை என்கிட்ட இருக்கு. சினிமாவில் தொடர்புகள் ரொம்ப அவசியம். சரியான contacts இருந்தாதான் அவங்களை எளிதா அணுக முடியும். என்னுடைய உழைப்பும் பயணமும் அடுத்த கட்டமும் அதை நோக்கித்தான் நகருது.