கவிதை வனம்



எப்போது பெய்யும் மழை?

ஒரு நீள்சாலையென நீண்டிருக்கிறாய்
பகலின் நீலவானமென விரிந்திருக்கிறாய்
இரவில் நட்சத்திரங்களென நிறைந்திருக்கிறாய்
அழகான காட்சிகளின் ஜீவனாயிருக்கிறாய்

இருதய ஒலியின் ஜீவிதமாயிருக்கிறாய்
எண்ணங்களின் வண்ணங்களாயிருக்கிறாய்
காலத்தின் எல்லா வினாடிகளுமாயிருக்கிறாய்
இயற்கையின் பூக்களாயிருக்கிறாய்
பாடல்களின் இசையாயிருக்கிறாய்
நதிகளில் நீராயிருக்கிறாய்
உயிரின் வேராயிருக்கிறாய்
எப்போதும் பேசிக்கொண்டேயிருக்கிறாய்
எங்கு சென்றபோதும் வந்துவிடுகிறாய்
ஆத்மாவின் உயிராயிருக்கிறாய்
மனதின் கவிதைகளாயிருக்கிறாய்
மேனியெங்கும் முத்தங்களாயிருக்கிறாய்
இத்தனைக்குப்பின்னும்
மேகத்துள் மறைந்திருக்கிறாய்
எப்போது மழையொன்று பொழியும்?
                                   
- சௌவி

வேடிக்கை
நகரப்பேருந்தின்
அழுக்கடைந்த பின்னிருக்கையில்
சிறியகூடை ஒன்றை மடியில் வைத்தபடி
பயணிக்கிறாள் ஒரு பெண்.
நனைந்த வெண்ணிறத் துணியில் சுற்றப்பட்டு
கூடையில் அடுக்கப்பட்டிருக்கிற
வெள்ளரிப் பிஞ்சுகளில் ஒன்று
சிறிது தலை நீட்டி, குறுகுறுப்போடு
வேடிக்கைப் பார்த்துக்கொண்டு வருகிறது சாலையை.
                                               
- தீபு ஹரி