விஜயனின் வில்



கே.என்.சிவராமன் - 19

‘‘ஆதி... கமான் குயிக்... நம்மைத் தவிர வேற யார் கண்களுக்கும் ஹாபிட்ஸ் தெரியலை. அது இப்ப பிரச்னையுமில்ல... நமக்கு வேண்டியது இவங்களை யார் கைட் பண்ணறாங்க..? அது தெரிஞ்சாகணும்...’’ ‘‘அதுக்கு நான் என்ன செய்யணும் மாஸ்டர்?’’ ‘‘கோயிலைச் சுத்தி ஓடு. நாம மேற்கு வாசல்ல இருக்கோம். நிச்சயமா மத்த மூணு வாசல்கள்ல ஒண்ணுல யாராவது ஆர்டர் கொடுத்துட்டு இருக்கணும்...’’ தலையசைத்தபடி காரிலிருந்து இறங்கிய ஆதியின் கண் முன்னால் கோயில் மதில் சுவர் தட்டுப்பட்டது. இடமா வலமா? மைக்ரோ நொடி யோசித்தவன், க்ளாக் வைஸ் ஆக ஓட ஆரம்பித்தான்.

தெற்கு வாயிலை அவன் அடைந்தபோது அங்கு யாருமில்லை. மூச்சு வாங்கியபடியே நேராக ஓடியவன் மதில் சுவரை ஒட்டி வடக்கு பக்கம் திரும்பினான். சாலையின் மீது ஒரு கண்ணும் மதில் சுவரின் மீது மறு கண்ணும் பதித்திருந்தான். சாலையில் நடமாடியவர்கள் இயல்பாக இருந்தார்கள். வாகனங்களும் எந்த பரபரப்பும் இன்றி நகர்ந்தன.

ஆனால், மதில் மீது அப்படியில்லை. மன்னர் கால போர் முறைகள் எப்படியிருக்கும் என படித்திருந்தானோ... ஹாலிவுட் திரைப்படங்களில் கோட்டைச் சுவர் மீது எப்படி எதிரி நாட்டு வீரர்கள் கயிறு கட்டி ஏறுவார்களோ... அப்படி ஹாபிட்ஸ் மனிதர்கள் அல்லது விலங்குகளா... ஏதோ ஒன்று. இப்போதைக்கு மனிதர்கள் என்றே வைத்துக் கொள்வோம். ம்ஹும். மாஸ்டர் என்ன சொன்னார்..? சித்திரக் குள்ளர்கள்... ஆமாம். சித்திரக் குள்ளர்கள் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

மனமெல்லாம் தடதடக்க கிழக்கு வாயிலை கடந்து வடக்குப் பக்கம் திரும்பி மீண்டும் மேற்கு வாயிலை அடைந்தபோது வாயிலிருந்து மூச்சு விட ஆரம்பித்திருந்தான். காரில் ஏறும்படி மாஸ்டர் செய்கை செய்யவே அதை ஏற்று கதவைத் திறந்து சீட்டில் அமர்ந்தான். ஏசி முகத்தில் அறைந்தது. தண்ணீர் பாட்டிலை முழுமையாக காலி செய்துவிட்டு மாஸ்டரை ஏறிட்டான். அவர் பார்வை மதிலையே ஆராய்ந்துக் கொண்டிருந்தது. கடைசி சித்திரக்குள்ளன் அப்போதுதான் மதில் மீது ஏறியிருந்தான்.

அதன்பின் எந்த ஹாபிட்ஸும் கண்ணில் படவில்லை. ஆதியை நோக்கி திரும்பினார். ‘‘சந்தேகப்படும்படி யாராவது இருந்தாங்களா?’’ ‘‘இல்லை மாஸ்டர். வெறும் பக்தர்கள்தான்...’’ ‘‘நோ. நல்லா கண்ணை மூடு...’’ மூடினான். ‘‘மனக்கண்ணுல ஒவ்வொரு வாயிலா கொண்டு வா...’’ வந்தான். ‘‘இப்ப எங்க இருக்க..?’’ ‘‘தெற்கு வாசல்ல...’’ ‘‘குட். என்ன தெரியுது..?’’ ‘‘பக்தர்கள் கோயிலுக்குள்ள போயிட்டு இருக்காங்க...’’

‘‘ம்... வேற..?’’ ‘‘அதைப் பார்த்துகிட்டே நான் ஓடறேன்...’’ சொன்ன ஆதியின் புருவங்கள் சுருங்கின. பார்த்த மாஸ்டர் நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘ஏன் நிறுத்திட்ட ஆதி? அங்க என்ன தெரியுது..?’’ ‘‘ரெண்டு பேர் பயத்தோட மதில் சுவரை பார்த்துட்டு இருக்காங்க...’’ ‘‘...’’ ‘‘அதுல ஒருத்தன் ஆண். அவனை நான் வேற ஒரு இடத்துல பார்த்திருக்கேன்...’’ ‘‘எங்க..?’’ நெற்றியை சுருக்கிய ஆதி சட்டென்று கண்களைத் திறந்தான். ‘‘விழுப்புரத்துல...’’ ‘‘என்னது..?’’

‘‘ஆமாம் மாஸ்டர். ஆரம்ப சுகாதார மையத்துல வேற்று கிரக வாசிகள் கரிக்கட்டையா எரிஞ்சாங்களே... அங்க..?’’ ‘‘அவன் கூட யார் இருக்காங்க..?’’ மீண்டும் கண்களை மூடியவன் மனதளவில் தெற்கு வாயிலுக்கு சென்றான். ‘‘ஒரு பொண்ணு. அவன் தோளை இறுகப் பிடிச்சிருக்கா. அநேகமா அவங்க கண்ணுக்கும் சித்திரக் குள்ளர்கள் தெரியறாங்கனு நினைக்கறேன். ஏன்னா அச்சத்தோட அவங்க ரெண்டு பேரும் மதிலை பார்த்துட்டு இருக்காங்க...’’

‘‘கண்ணைத் திறக்காத...’’ கட்டளையிட்ட மாஸ்டர், ‘‘அப்படியே அடுத்த வாசலுக்கு வா...’’ என்றார். நிமிடங்களை பின்நோக்கி நகர்த்திவிட்டு மனக்கண்ணில் அடுத்த வாயிலை தொட்டான். ‘‘கிழக்கு வாசல் மாஸ்டர். இங்க யாருமே இல்ல...’’ ‘‘நகராத. அங்கயே நில்லு...’’ மாஸ்டர் கட்டளைக்கு அடிபணிந்து கிழக்கு வாயிலில் நின்றான். ‘‘360 டிகிரில பார்வையை நகர்த்து...’’ நகர்த்தினான்.

‘‘இப்ப சொல்லு என்ன தெரியுது..?’’ பார்வையை கூர்மையாக்கி சுழற்றினான். ‘‘மாஸ்டர்... மாஸ்டர்...’’ ‘‘சொல்லு... என்ன தெரியுது...’’ ‘‘ஒரு பொண்ணு...’’ ‘‘ம்...’’ ‘‘அவ கைல கத்தி. இல்ல... இல்ல... அது வாள்...’’ ‘‘ம்...’’ ‘‘அதை அசைச்சு அசைச்சு மதில் மேல இருக்கிற ஹாபிட்ஸுக்கு செய்கை காண்பிக்கிறா...’’ ‘‘யார் அவ..?’’ ‘‘உருவம் மங்கலா தெரியுது மாஸ்டர்...’’ ‘‘பார்வையை இன்னும் கூர்மைப்படுத்து.

உன்னால முடியும். நல்லா உத்துப் பார். யாரது..?’’ மூன்று நொடிகள் சென்றிருக்கும். உடலெல்லாம் அதிர ஆதி கண்களைத் திறந்தான்.
‘‘என்ன..?’’ ‘‘தாரா..!’’ ‘‘வாட்?’’ ‘‘கைல வாளை ஏந்தி சித்திரக் குள்ளர்களுக்கு கட்டளையிட்டுட்டு இருக்கறது வேற யாருமில்லை மாஸ்டர்... நாம கொல்லணும்னு முயற்சி செய்யற தாராதான்!’’ உதட்டைக் கடித்தபடி மாஸ்டர் சற்றுநேரம் அமைதியாக இருந்தார். ஒரு முடிவுடன் ஆதியின் தோளில் தட்டினார்.

‘‘எஞ்சி இருக்கறது வடக்குப் பக்கம். அதையும் பாரு...’’ ‘‘மாஸ்டர்...’’ ‘‘பேச வேண்டியதை பிறகு பேசலாம். இப்ப வடக்குக்கு போ...’’இருமுறை தடை ஏற்பட்டதால் மனதை ஒருமுகப்படுத்துவது ஆதிக்கு கடினமாக இருந்தது. கார்க்கோடகரை மனதில் துதித்தபடி உள்நோக்கி பார்வையை கூர்மைப்படுத்தினான். வடக்கு வாயில் விரிந்தது. தென்பட்ட காட்சிகளை இம்முறை மாஸ்டரிடம் சொல்வதற்கு முன் இன்ச் பை இன்ச் ஆக ஆராய்ந்தான். சுண்டி விட்டது போல் உடல் அதிர்ந்தது.

‘‘மாஸ்டர்... மூணு பேர் நிக்கறாங்க. அதே பயம் அவங்க முகத்துல தெரியுது. பார்வையும் மதில் மேலதான் பதிஞ்சிருக்கு...’’ ‘‘ம்...’’ ‘‘அவங்க மூணு பேரும் நேரா நிக்கறாங்க...’’ ‘‘ம்...’’ ‘‘இடுப்போ கால்களோ எங்கயும் வளையலை...’’ ‘‘ம்...’’ ‘‘குறிப்பா மூணு பேரோட இமையும் அசையலை...’’ ‘‘ஆதி என்ன சொல்ற?’’ அவன் தோளை மாஸ்டர் உலுக்கினார்.

நிதானமாக நடப்புக்கு வந்தவன் கண்களைத் திறந்தான். ‘‘வேற்று கிரக வாசிகளா அவங்க இருக்கலாம் மாஸ்டர். ஊகம்தான். ஆனா, பொய்யாக வாய்ப்பில்லை. ஏன்னா மூணு பேரோட உடல் மொழியும் அப்படித்தான் சொல்லுது...’’ மாஸ்டரும் ஆதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டபோது - ‘குவாக்... குவாக்...’ என்ற சத்தம் கண்ணாடிக் கதவை மீறி காரினுள் எதிரொலித்தது. குழப்பத்துடன் ஒலி வந்த திசையை பார்த்தார்கள்.

எப்படி வரிசையாக மதிலின் மீது சித்திரக் குள்ளர்கள் ஏறினார்களோ அப்படி சாரி சாரியாக இறங்க ஆரம்பித்தார்கள். ‘‘போன வேலை முடிஞ்சிருக்கும் போல தெரியுதே மாஸ்டர்?’’ ‘‘ம்... ஆனா, எதுக்காக உள்ள போனாங்க..?’’ மாஸ்டரின் கேள்விக்கான விடை அடுத்த சில நொடிகளில் தெரிந்தது. மதில் மேலிருந்து கயிற்றால் இறுக கட்டப்பட்ட ஓர் உருவத்தை பாதுகாப்புடன் சித்திரக் குள்ளர்கள் இறக்கத் தொடங்கினார்கள். அதுவும் சரியாக ஆதியும் மாஸ்டரும் அமர்ந்திருந்த காருக்கு முன்பாக. ‘‘யாரை இப்படி கட்டி இழுத்துட்டு வர்றாங்க...’’ கேட்ட ஆதி சீட்டிலிருந்து எக்கி கார் கண்ணாடி வழியே பார்த்தான். அதிர்ந்தான்.
காரணம் கயிற்றால் இறுக கட்டப்பட்டிருந்தவர் - கார்க்கோடகர்!

(தொடரும்)

ஓவியம்: ஸ்யாம்