காமெடி இருக்க பயமேன்!
-மை. பாரதிராஜா
விஜய்க்கு ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித்துக்கு ‘பூவெல்லாம் உன் வாசம்’ என எவர்க்ரீன் ஹிட்ஸ் கொடுத்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ எழில், அடுத்து உதயநிதியை வைத்து ‘சரவணன் இருக்க பயமேன்’ என்ற காமெடி செலிபிரேஷனுக்கு ரெடியாகிவிட்டார். ‘‘ஒரு படத்தோட வெற்றி அதோட போஸ்ட் புரொடக்ஷன் ஒர்க் நடக்கும் போதே தெரிஞ்சுடும்.
டப்பிங் ஸ்டூடியோவில் கிரவுட் டப்பிங்கின் போது கூட்டமா ஒர்க் போகும். அங்கே இருப்பவர்கள், ‘அந்த சீன் சூப்பர்... இந்த சீன் அசத்தல்’னு ஃப்ரெஷ் சிரிப்பில் அப்ளாஸை அள்ளி வீசுவாங்க. இன்னொரு இடம், ரீ-ரெக்கார் டிங் ஸ்டூடியோ. படத்தோட பின்னணி இசைக்கோர்ப்பு வேலைகள் நடக்கும் போது மியூசிஷியன்ஸ் நிறைய பேர் வந்திருப்பாங்க. ‘நிறைய இடங்கள்ல சிரிச்சிட்டோம்’னு சந்தோஷமா சொல்லுவாங்க. அப்பவே அதோட சக்சஸ் ரேட் தெரிஞ்சிடும்...’’ திருப்தியாகப் பேசுகிறார் இயக்குநர் எழில்.
‘சரவணன் இருக்க பயமேன்’ எப்படி உருவாச்சு? ‘வே.வ.வெ.’ ரிலீஸுக்கு முன்னாடியே இந்தப் படத்தோட ஸ்கிரிப்ட் ஒர்க்கை ஆரம்பிச்சிட்டேன். என் உதவி இயக்குநர்கள் பலருக்கும் இந்த சப்ஜெக்ட் ரொம்ப பிடிச்சிருந்தது. அந்தப் பட புரொமோஷனுக்காக கலைஞர் டி.வி. போயிருந்தேன். அங்கே என்னைப் பார்த்த உதய் சார், ‘நமக்கும் காமெடி ஸ்கிரிப்ட் இருந்தா சொல்லுங்க. ‘ரெட் ஜெயண்ட்’லயே பண்ணிடலாம்’னு சொன்னார்.
ஆச்சரியமாகிடுச்சு. பத்து நாட்கள் டைம் கேட்டேன். என்கிட்ட இருந்த ஸ்கிரிப்ட்ல உதய் சாருக்கான மாஸ் விஷயங்களை சேர்த்தேன். இப்ப உள்ள ஜெனரேஷனுக்கும் பிடிக்கற மாதிரி சீன் மாத்தி அமைச்சிட்டு அவர்கிட்ட சொன்னேன். இம்ப்ரஸ் ஆகிட்டார். படமும் டேக் ஆஃப் ஆகிடுச்சு.
உங்க படம்னாலே நிறைய நட்சத்திரங்கள் ஜொலிப்பாங்களே..? இதுலயும் நடிகர்கள் நிறையவே இருக்காங்க. சிருஷ்டி டாங்கே, மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், சூரி, யோகிபாபு, ரவிமரியா, சாம்ஸ், ரோபோ சங்கர்னு காமெடி நட்சத்திரங்கள் அதிகளவுல இருந்தாலும் படத்துல அழகான ஒரு லவ் ஸ்டோரி இருக்கு. என்னோட சமீபத்திய படத்துல கண் கலங்க வைக்கற காட்சி இருக்காது. இதுல சென்டிமென்ட் சீன் ஒண்ணு இருக்கு. ஊர்ல பிசினஸ் பண்ணிட்டிருக்கறவர் சரவணன்.
வடநாட்டுல உள்ள ஒரு கட்சிக்கு தலைவராக வேண்டியவர் சூரி. அவரோட போஸ்ட் திடீர்னு உதய் சாரை தேடி வர, அவர் கட்சித்தலைவர் ஆகிடுறார். ஆனா, இதுக்கு அப்புறம் அடுத்த பத்தாவது நிமிஷத்துல இருந்து அழகான லவ் ஸ்டோரி தொடங்கிடும். ரெஜினா ஹீரோயின். சின்ன வயசுல இருந்து ஹீரோவோட எலியும் பூனையுமாக இருக்கற கேரக்டரில் கலக்கியிருக்காங்க. இந்தப் பொண்ணோட சித்தப்பா சூரி. அவரோட போஸ்ட் ஹீரோவுக்கு போனதால, செம கடுப்புல இருப்பாரு.
சூரியும் ரெஜினாவும் சேர்ந்து ஹீரோவை பழி வாங்க புறப்படுவாங்க. இவ்வளவுதான் கதை. இதுல மன்சூர் அலிகான் காமெடி வில்லனா வர்றார். ரவிமரியா, யோகிபாபு, சூரினு காமெடி நடிகர்கள் எல்லார்கிட்டேயும் ஆரோக்கியமான ஒற்றுமை இருக்கு. சீன் நல்லா வரணும்னு விட்டுக்கொடுத்து ஒர்க் பண்றாங்க. படத்துக்கு ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ். ‘தேசிங்கு ராஜா’ படத்துக்கு பேட்ச் ஒர்க் பண்ணிக்குடுத்தவர்.
என்ன சொல்றார் உதயநிதி..? அவர் சினிமா நுட்பங்களைப் பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்கார். ஒரு ஹெவி ஃபைட் சீன் எடுக்க வேண்டியிருந்தது. ‘சார் நான் என் படங்கள்ல ஃபைட்டே பண்ண மாட்டேன். உங்க படத்துலதான் ஃபர்ஸ்ட் டைம் ஃபைட் பண்றேன்’னார். திலீப் மாஸ்டர்கிட்ட, ‘இது ஹெவி ஃபைட் மாஸ்டர். நல்லா வரணும்’னு சொல்லியிருந்தேன்.
மூணு நாள் ஃபைட் போச்சு. கடைசி நாள் அன்னிக்கு உதய் சார்கிட்ட எமோஷனல் கம்மியா இருந்தது. உடனே மாஸ்டரைக் கூப்பிட்டு ‘சார்கிட்ட எமோஷனல் குறைவா இருக்கு. கொஞ்சம் தூக்கி அடிக்க சொல்லுங்க’னு சொன்னேன். சாரும் மாஸ்டர் சொன்னதைப் பண்ணிட்டு எங்கிட்ட வந்தார். சிரிச்சுக்கிட்டே ‘மூணாவது நாள் ஃபைட்டிலும் ஹீரோ ஓவர் எமோஷனலா அடிச்சா, அடி வாங்கினவன் இன்னும் பத்து பேரை கூட்டிட்டு வருவானே சார்.
அதான் எமோஷனலை கம்மி பண்ணினால் ஃபைட்டை முடிச்சிடுவாங்கனு அப்படி உணர்ச்சியை குறைச்சேன்’னார். இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்காரேன்னு எனக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு. ஃபைட் டெம்போவை டெக்னிக்கலாகவும் தெரிஞ்சு வச்சிருக்கார். இன்னொரு உதாரணம். பாடல் ஷூட் அப்ப டான்ஸ் நல்லாவே ஆடினார். தினேஷ் மாஸ்டர்கிட்ட கேட்டால் ‘அவருக்கு ஸ்லோ மூவ்மென்ட்ஸ் எல்லாம் வைக்க வேண்டியதில்லை. அவர் எங்கே இருந்தாலும் அசிஸ்டெண்டை கூட்டிட்டு சின்ஸியரா பிராக்டீஸ் பண்ணிட்டு வந்துடுவார்’னு சொன்னார்.
கேரளாவில் கண்ணனூர்ல பாடல் ஷூட். ஸாங் சீக்குவென்ஸை மாத்த வேண்டியிருந்தது. உடனே அதை ரைட்டர்கிட்ட சொன்னேன். ‘நல்லா இருக்குதுண்ணே’னு சொல்லிட்டு அவரும் சின்னதா ஒரு கரெக்ஷன் சொன்னார். ஸ்பாட்டுக்கு போனதும் வேற ஒரு சேன்ஜ் பண்ணிட்டேன். இந்த அப்டேட்ஸ் எல்லாம் சிறப்பானதா வர்றதுக்குத்தான்னு உதய் சாருக்கு தெரியும். கூட நடிக்கிற காமெடி ஆர்ட்டிஸ்ட்களை நல்லா என்கரேஜ் பண்ணுவார்.
இந்தப் படத்துலதான் ரெஜினா, ரொம்ப அழகா இருக்காங்க... அவங்க சின்ஸியர் ஹீரோயின். காஸ்ட்யூம் சென்ஸ் அவங்களுக்கு இயல்பாகவே அதிகம். எல்லா காஸ்ட்யூமும் அவங்களுக்கு பொருந்தும். நகரத்துல படிச்சிட்டு வர்ற பொண்ணு கேரக்டர். ரெஜினா, புரொடக்ஷன்ல சாப்பாடே வாங்கிக்கறதில்லைனு தெரிஞ்சது. ஃபுட் யூனிட்ல அவங்க ஆர்டர் பண்ணினது கொடுக்காம விட்டுட்டாங்களான்னு விசாரிச்சேன். ‘இல்ல சார்.
அவங்க ஸ்பெஷலா லிக்யூட் ஃபுட் ஏதோ சாப்பிடுறாங்க....’னு சொல்ல ஆச்சரியமாகிடுச்சு. ஸ்கின்னுக்கு ஸ்பெஷல் கேர் எடுத்துக்கறாங்க. ரெஜினா அம்மா, ஹைதராபாத்ல பேக்கரி வச்சிருக்காங்க. வேளாங்கண்ணி போறதுக்காக சென்னை வந்திருந்தவங்க எல்லாருக்கும் கேக் கொண்டு வந்து கொடுத்தாங்க!
எழில் - இமான் - யுகபாரதி வெற்றிக் கூட்டணியாச்சே? இமானுடன் நான் ஒர்க் பண்ற நாலாவது படம் இது. ‘உடனே கொடு ங்க... நாளைக்கு வர்றேன்’னு என்னிக்கும் நான் அவரை அவசரப்படுத்தினதில்ல. அப்படி ஒரு புரிதல் எங்களுக்குள்ள இருக்கு. அவரோட பிஸி ஒர்க் எல்லாம் முடிச்சிட்டு ஃப்ரீ டைம்ல கூப்பிடுவார். ரசனையா நான் எதிர்பார்க்கறதை கொடுத்திடுவார்.
ஒரு பாடல் ட்யூன் போடும் போதே, அது யார் பாடினால் செட் ஆகும்னு யோசிச்சிடுவார். ‘எம்பூட்டு இருக்குது ஆசை...’ பாடலை ஷான்ரோல்டன் பாடினா சரியா இருக்கும்னு அவருக்காக ஒரு மாசம் வெயிட் பண்ணினார். அவுட்புட் அவ்வளவு பிரமாதமா வந்திருக்கு. ‘கம்போஸிங்க்காக வெளியே போகலாமா’ன்னு கேட்டா கூட வரமாட்டார்.
இமான்கிட்ட எனக்கு பிடிச்ச இன்னொரு விஷயம் அவர் ரசனையான சாப்பாட்டுப் பிரியர். டேஸ்ட்டி ஃபுட் எங்கே இருந்தாலும் குழந்தை மாதிரி குதூகலமாகிடுவார். உடனே அங்கேயே போய் சாப்பிட விரும்புவார். எந்த ஸ்டேட்ல என்ன ஃபுட் ஸ்பெஷல்னு அவர்கிட்ட கேட்டா தகவல்களைக் கொட்டுவார்!
|