‘‘தீவிரவாதம் என்பது தனி மனித உளவியல் சார்ந்தது. அதற்கு மத / மொழி வர்ணம் தீட்டுவதை கடுமையாக எதிர்க்கிறேன்!’’



அடித்துச் சொல்கிறார் அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் வளரி கவுர் சிங்!

-ஷாலினி நியூட்டன்

ஒரேயொரு வீடியோதான். வளரி கவுர் சிங்கை (Valarie Kaur Singh) பிரபஞ்சம் முழுக்க பிரபலமாக்கி இருக்கிறது. காரணம், அந்த வீடியோவில் அவர் தெரிவித்த கருத்துகள். சரியாக அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றபோது அமெரிக்க - ஆப்பிரிக்க தேவாலயம் முன் வளரி கவுர் சிங் பேசினார். அந்த உரையை அப்படியே வீடியோவாக பதிவு செய்து யூ டியூப்பில் அவர் ஏற்ற... பார்த்தவர்களும் கேட்டவர்களும் அதை ஷேர் செய்ய... உலகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. 

கலிபோர்னியா மாகாணத்தில் பிறந்த வளரி கவுர் சிங்கின் பூர்வீகம் இந்தியாவிலுள்ள பஞ்சாப் மாநிலம். இறையியலில் முதுகலை பட்டமும் சட்டப் படிப்பும் படித்தவர். ஆவணப் பட இயக்குநர். போராளி. வழக்கறிஞர். பல்கலைக்கழக விரிவுரையாளர். எழுத்தாளர். தொலைக்காட்சி தொகுப்பாளர். அமெரிக்க சீக்கிய நீதித் தலைவர்.

இப்படி பன்முகம் கொண்ட இவர் கடந்த 15 வருடங்களாக அமெரிக்காவில் தெற்காசிய மக்களுக்கு எதிராக நடக்கும் துப்பாக்கிச் சூட்டை எதிர்த்து தனி ஆளாக போராடி வருகிறார். 2007ம் ஆண்டு வெளியான இவரது ‘Divided We Fall: Americans in the Aftermath’ என்ற ஆவணப்படம் சர்வதேச அளவில் பல விருதுகளைப் பெற்றிருக்கிறது. அன்பான குடும்பம், அழகான குழந்தை என இருந்தும் கூட பொது நலனுக்காக முழுமூச்சுடன் போராடி வருபவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டோம். 

ஏன் இந்தக் கோபம்? எங்கு ஆரம்பித்தது இந்தப் போராட்டம்?
15 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த போராட்டப் பயணம் இது. நான் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவள். அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டிலாகி இருக்கிறோம். ஆனாலும் மதமும் அது நமக்குக் கற்றுக் கொடுத்த / கொடுக்கும் பாடமும் எப்படி நம்மை விட்டு நீங்கும்? தாத்தாவும் பாட்டியும் எனக்கு அவ்வளவு சீக்கியக் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

அவற்றை எல்லாம் கேட்டபடிதான் நான் வளர்ந்தேன். உண்மையைச் சொல்வதென்றால் மதம் தொடர்பான தீவிரம் எல்லாம் என்னிடம் அப்போது இல்லை. எப்போது அமெரிக்க அரசாங்கம் அடக்குமுறையை கையில் எடுத்ததோ அப்போது என்னிடம் மதப் பற்றும் அதிகரித்தது. அமெரிக்க அடக்குமுறையால் எங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்தோம்.

ஏன் இந்த உயிர்வதை? சக மனிதனின் முகத்துக்கும் இதயத்துக்கும் நேராக ஆயுதத்தை நீட்டுவது என்ன விதமான மனநிலை? சொந்த மொழியை நாங்கள் பேசக் கூடாதா? இப்படி பல கேள்விகள். இழப்புகள் அதிகமும் என்னை பாதித்தது. எங்களுடன் சிரித்துப் பேசிப் பழகிய நண்பர்கள் திடீரென்று ஒருநாள் குண்டுகளுக்கு பலியாகி எங்கள் முன்னால் ரத்த வெள்ளத்தில் மிதந்தார்கள். இதை எல்லாம் பார்த்த பிறகும் எப்படி சும்மா இருக்க முடியும்? என் குரலை நான் உயர்த்தியது இதன் பிறகுதான்.

இப்போதும் மதம், இனம், மொழி சார்ந்த பிரச்னைகள் அமெரிக்காவில் நடந்து கொண்டுதான் இருக்கிறதா?
என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? ‘9/11’ என்ற அமெரிக்க ஆணையம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அமெரிக்காவின் தேசிய தீவிரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு ஆணையம் அது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு தொடங்கப்பட்ட ஆணையம். எதிர்காலத்தில் தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்க உருவாக்கப்பட்ட இந்த ஆணையத்தின் சில பரிந்துரைகள் இப்போது நிறைவேறியுள்ளது.

ஆனால், இந்த ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகுதான் பிரச்னைகளின் தீவிரம் அதிகரித்திருக்கிறது. இஸ்லாமிய, சீக்கிய மக்கள் மீது அமெரிக்கா இதன் பிறகே கடுமையாக நடந்து கொள்கிறது. நிறைய அப்பாவி பொதுமக்கள் இதனால் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மதம் / கலாசாரம் சார்ந்த அவமானங்கள் தொடர்கதையாக நீள்கின்றன. இவை எல்லாம் எந்த விதத்தில் நியாயம்? இதைத்தான் நாங்கள்/ நான் கேட்கிறேன்.

உலகமே மதமும் சாதியும் வேண்டாம் என்று சொல்கிறது. அந்த இலக்கை நோக்கி பயணப்படுகிறது. இந்தச் சூழலில் நீங்கள் அதை ஆதரிப்பது போல் இருக்கிறதே..?
தவறு. நான் மதத்தை ஆதரிக்கவில்லை. அடிப்படையான உரிமைகளுக்காக குரல் கொடுக்கிறேன். பிறப்பால் வந்து சேர்ந்த பழக்க வழக்கங்களைப் பின்பற்றி நடக்க அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இதற்கு தடை விதிப்பதையே நான் எதிர்க்கிறேன். தாய்மொழியில் பேசவும் எழுதவும் அனைவருக்கும் உரிமை இருக்கிறது. இதைத் தடுக்க ‘இவர்கள்’ யார்? மதமும் மொழியும்தானே இன்று உலக அமைதிக்கே வேட்டு வைக்கிறது? அப்படியிருக்கும்போது அவரவர் மொழி, மதத்தைப் பின்பற்ற  தடை விதித்தால் அது மேலும் மேலும் பிரச்னைகளைத்தானே அதிகரிக்கும்? சாதாரணமாக கேட்கிறேன்.

தெற்காசிய மக்கள் மீது அமெரிக்கர்கள் ஏன் வன்மம் பாராட்டுகிறார்கள்? ஒவ்வொருமுறையும் ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படும்போது அதற்கு காரணமாக மதமும் மொழியும்தானே முதன்மைப்படுத்தப் படுகிறது? நிஜம் இப்படி முகத்தில் அறையும்போது ‘நம்’ மதமும் ‘நம்’ மொழியும் ‘நமக்கு’ உயர்வாகத்தானே தெரியும்? அதை விட்டுக் கொடுக்க எப்படி மனம் வரும்? தீவிரவாதம் என்பது தனி மனித உளவியல் சார்ந்தது. அதற்கு மத/ மொழி வர்ணம் தீட்டுவதை கடுமையாக எதிர்க்கிறேன்!

இந்தியாவின் பஞ்சாப் முதல் அமெரிக்கா வரை - உங்கள் தாத்தாவின் கதையைச் சொல்லுங்கள்..?
மின்னஞ்சல் வழியே நீங்கள் என்னை தொடர்பு கொள்ள காரணமாக இருக்கும் வீடியோவில் இது குறித்து விரிவாக பேசியிருக்கிறேன். என்றாலும் சுருக்கமாக அதை மீண்டும் இங்கே சொல்கிறேன். நூறு வருடங்களுக்கு முன் பஞ்சாப்பில் இருந்து கிளம்பி கப்பல் வழியாக அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தார் என் தாத்தா.

உடனே அவரை குடியேற்ற (immigration) அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பல மாதங்களுக்குப் பின் அவருக்கு விடுதலை கிடைத்தது. புதிய மனிதராக அமெரிக்காவில் தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பல போராட்டங்களைச் சந்தித்தார். கைதுக்கு காரணமாக சொல்லப்பட்ட சீக்கிய அடையாளம் வாழ்நாள் முழுக்க அவரை துரத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர் என்னிடம் சொன்ன சம்பவங்களும் சீக்கிய மதம் தொடர்பான கதைகளும்தான் எனக்கு எங்கள் மதம் மேல் ஈர்ப்பு வரக் காரணம்.

அமெரிக்காவில் வசிக்கும் மற்ற நாட்டு மக்களுக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் நாம் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டும். அன்பு செலுத்திட வேண்டும் என்று எங்களுக்குப் புரிய வைத்தார். 2001ம் ஆண்டு இரட்டை கோபுர நிகழ்வுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் மட்டுமே அமெரிக்கர்களுக்கு ஆபத்தானவர்களாகத்  தெரிந்தார்கள். ஆனால், ‘9/11’ ஆணைய நிறைவேற்றத்துக்குப் பின் சீக்கியர்கள், அரேபியர்கள் மற்றும் தெற்காசிய மக்களும் ‘ஆபத்தானவர்களின்’ வரிசையில் இணைக்கப்பட்டோம்.

இதற்கு எதிராகத்தான் நான் உட்பட அனைவரும் போராடி வருகிறோம். என்ன பயன்? கடந்த பிப்ரவரி 22 அன்று ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா என்ற இந்தியனை ஓர் அமெரிக்கன், ‘உன் நாட்டுக்குத் திரும்பு’ எனக் கத்தியபடியே சுட்டுக் கொன்றிருக்கிறான். இந்தக் கொலை என் குடும்பத்தில் இருந்த பால்பிர் மாமாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்திருக்கிறது. 15 வருடங்கள் பின்னோக்கிச் சென்றது போலிருக்கிறது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும் இன்னமும் நிலை மாறவில்லை என்பதை நினைக்க நினைக்க வேதனை அதிகரிக்கிறது. உரிமைக்காக எழுப்பப்பட்ட அனைத்துக் குரல்களும் வீணாகி விட்டதா? விரக்தி எங்களை சூழ்ந்திருக்கிறது.

பொதுவாக தங்கள் மதத்தைத் தாண்டி வேற்று மதத்தினருக்கு பிரச்னை என்றால் அவ்வளவு சுலபத்தில் இந்தியர்கள் பேசமாட்டார்கள் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கு மாறாக நீங்கள் குரல் கொடுத்துள்ளீர்கள். இதற்கு மற்றவர்களிடமிருந்து போதுமான ஆதரவுகள் கிடைத்திருக்கிறதா?
முதன் முதலில் இந்த உரிமைக்காக நான் குரல் கொடுத்தபோது என்னுடன் சிலர்தான் இணைந்தார்கள். இப்போது அப்படியில்லை. அமெரிக்காவில் குடியேறியிருக்கும் பிற நாட்டைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் சட்டம், அரசியல், சமூக பிரச்னைகள் சார்ந்து படிக்கிறார்கள். எனவே நிறைய இளைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளைத் தெரிவிக்கிறார்கள்.

உரிமையை நிலைநாட்ட முற்படுகிறார்கள். இது போதாது. இன்னும் நிறைய மக்கள் வரவேண்டும். இணைய வேண்டும். அமெரிக்காவில் மட்டுமில்லை. வடகத்திய கலாசார நாடுகளில் எல்லாம் தெற்காசிய மக்கள் மதங்கள் / மொழிகள் சார்ந்து படுகொலை செய்யப்படுகிறார்கள். இது நிறுத்தப்பட வேண்டும்.  கடல் கடந்து படிக்கவும், சம்பாதிக்கவும் வரும் மக்கள் மேல் ஆதிக்கம் செலுத்துவதை மண்ணின் மைந்தர்கள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்பவர்கள் நிறுத்த வேண்டும்.

இதற்காகவே ‘Revolutionary Love’ என்ற ப்ராஜெக்ட்டை தொடங்கியிருக்கிறேன். மற்றவர்களுக்காகவும் நமக்காகவும் அன்பை அர்ப்பணிக்கும் வாழ்க்கை. ஆபத்தையும் பயத்தையும் அன்பால் கட்டுப்படுத்தலாம். நமக்கு நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவதும், அச்சப்பட்டு வாழ்வதும் தவறு. ஒற்றுமையாக நாம் கைகோர்த்தாலே போதும். இந்த ஒற்றுமைக்கு அன்புதான் முதல் தேவை. அதுதான் என்னுடைய ‘Revolutionary Love’ ப்ராஜெக்ட். இதன் ஒரு பகுதியாக கடந்த பெண்கள் தினத்தன்று அமெரிக்காவில் வாழும் பிறநாட்டுப் பெண்களை ஒன்றுதிரட்டி ‘Day without a woman’ என்ற அறப்போராட்டத்தை நடத்தினோம்!             

‘Divided We Fall: Americans in the Aftermath’ ஆவணப்படம் சொல்வது என்ன?

டர்பன் கட்டப்பட்ட மனிதர் ஒருவர் கொலையுற்ற 2001ம் ஆண்டில் - ஒரு கல்லூரி மாணவியாக கையில் கேமராவுடன் வளரி கவுர் சிங் அமெரிக்கா முழுவதும் சுற்றியுள்ளார். சீக்கிய குடும்பங்கள் மீது அமெரிக்கர்கள் நடத்திய கொடூர கொலைகளையும் அவை சார்ந்த பிரச்னைகள், மக்களின் இழப்பு என அனைத்தையும் இதில் பதிவு செய்திருக்கிறார். இதுவரை எந்த ஆவணப்படமும், எந்த புத்தகமும் சொல்லாத நூற்றுக்கும் மேலான உயிர்ப்பலி கதைகளையும், தன் குடும்பத்தில் ஒருவரை இழந்த சோகத்தைக் கூறும் மனிதர்களுமாக பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது இந்த டாக்குமென்டரி.