தனுசு லக்னம் - குரு - சூரியன் சேர்க்கை தரும் யோகங்கள்
கிரகங்கள் தரும் யோகங்கள் - 83
ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்
இரண்டு ராஜ கிரகங்களான சூரியனும் குருவும் ஒன்று சேருவதை சிவராஜ யோகம் என்பார்கள். ஆத்மகாரகனான சூரியன் குருவோடு சேருவதால் தியாகத்தால் பெரும் புகழ் பெறுவார்கள். நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் கூறுவார்கள். இதயத்திலிருந்து பேசுவார்கள். நாலு பேரை விரட்டி வேலை வாங்கும் வேலையில் அமர்வார்கள். தலைவனுக்கு ஆலோசனை சொல்லும் ராஜ குருவும் இவர்கள்தான்.
அதேபோல ஒரு விஷயத்தை தொடர்ந்து சென்று கையகப்படுத்திக் கொள்வதில் இவர்களுக்கு இணை எவருமிலர். தனுசுக்கு அதிபதியான குருவையே கோதண்ட குரு என்பார்கள். போர் வீரனுக்குரிய அனைத்து தகுதிகளோடு இருப்பார்கள். சொந்த ஜாதகத்தில் தனுசுக்குள் ஏதேனும் ஒரு நல்ல கிரகம் இருப்பது நல்லது. சொந்த ஜாதகத்தில் குரு கேந்திராதிபதி தோஷம் அடைந்திருந்தால் மாற்றாந்தாய் வளர்ப்பில் வளர வேண்டியிருக்கும்.
தாத்தா பாட்டி வாழ்ந்த இடம் என்று பூர்வீக சொத்துக்கள் எதையும் விற்காமல் வைத்திருப்பார்கள். தேர்ந்த வேடனின் சரியான இலக்குகள்போல, பெரிய விஷயங்களைத்தான் குறிபார்த்து நகருவார்கள். ராஜாளியைப் போல உயரவே பறப்பார்கள். மேலே சொன்னவை பொதுவான பலன்களாகும். அதுவே குருவும் சூரியனும் ஒவ்வொரு ராசிகளிலும் நின்ற பலன்களை இனி காண்போம்.
ஒன்றாம் இடமான லக்னத்திலேயே சூரியனும் குருவும் ஒன்றாக அமைந்தால் தோற்றமே கம்பீரமாக இருக்கும். நாலு பேருக்கு ஏதாவது அறிவுரை கூறியபடி இருப்பார்கள். தந்தையின் தொழிலை ஏற்றாலும் பலவித நவீன மாற்றங்களைச் செய்து இன்னும் உயர கொடிபறக்க விடுவார்கள். ஏதேனும் ஒரு விதத்தில் புரட்சியாளராக இருக்க வேண்டுமென விரும்புவார்கள். குப்பை கூளங்களற்ற ஊர், புகையற்ற தெரு என்றெல்லாம் யோசித்து நடைமுறைப்படுத்துவார்கள்.
மகர ராசியான இரண்டாம் இடத்தில் குருவும் சூரியனும் சேர்ந்தால் தெரியாத விஷயங்களிலிருந்து நகர்ந்து மேலே மேலே நகர்ந்து கொண்டேயிருப்பார்கள். பிறர் மனதை புண்படுத்துவது மாதிரி பேசுவதால் உங்களைச் சுற்றியுள்ளோர் வெறுப்பாகவே செயல்படுவார்கள். சித்த வைத்தியத்தில் ஈடுபாடோடு இருப்பார்கள். இவர்களின் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்கள் எப்படியிருந்தாலும் இவர்கள் சிறப்பாகப் படித்து விடுவார்கள். கண்களில் ஒரு தீட்சண்யம் இருந்து கொண்டேயிருக்கும்.
ஆளடிமை, நாணயம், கீர்த்தி, புகழ், இளைய சகோதரன், தைரியம், முயற்சி போன்ற இடங்களைக் குறிப்பது மூன்றாம் இடமாகும். கும்ப ராசியான மூன்றாம் இடத்தில் இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர்களின் வீட்டில், அண்ணன், தம்பி சேர்ந்து வெகுகாலம் இருப்பது உறவையே பாதிக்கும். அதனால், இரண்டு வீடு தள்ளியிருப்பது நல்லது. சில சமயத்தில் திறமையிருக்கும், அதை வெளிப்படுத்த முடியாத சோம்பலால் சூழப்பட்டிருப்பார்கள்.
இளைய சகோதர, சகோதரிகளிடம் ஒரு ஒதுக்கம் இருக்கும். அடிக்கடி பேசிக் கொள்ள மாட்டார்கள். காது வலி வந்தால் உடனே பார்க்க வேண்டும். மீன ராசியான நான்காம் இடத்தில் இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்திருக்கும்போது ஒரு பகுதியையே ஆளும் யோகம் உண்டு. பங்குச் சந்தையில் நன்கு சம்பாதிப்பார்கள். தாயார் எவ்வழியோ வாரிசுகளும் அவ்வழியே செல்வார்கள்.
சிலர் தாயாரின் பூர்வீகத்தையே தங்களின் பூர்வீகமாக சொல்லிக் கொள்வார்கள். வாகன விற்பனையையும் தனியாகச் செய்வார்கள். அரசுத் துறையில் உயர்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளோடு எப்போதும் தொடர்பிலேயே இருப்பார்கள். இந்த அமைப்பில் பிறந்தோர் பாட்டன், பாட்டி வளர்ப்பில் வளருவார்கள்.
இவர்கள் பூர்வீகச் சொத்து விஷயமாக வழக்குகள் தொடுக்காமல் இருக்க வேண்டும். பித்தக் கல் பிரச்னை இருக்கும். பார்த்துக் கொள்ளுங்கள். மேஷ ராசியில் குருவும் சூரியனும் ஒன்றாக இருந்தால் நல்ல வாரிசு அமையும். வாரிசுகள் பார்போற்றும் பிள்ளைகளாக இருப்பார்கள். ஆனால், புத்திரனுக்குரிய குருவே புத்திர ஸ்தானத்தில் அமர்வதால் தாமதமாக வாரிசுகள் உருவாகும் வாய்ப்பும் உண்டு.
குல தெய்வம், சொந்த ஊர் கோயில்களுக்கு தங்களால் முடிந்த அளவு உதவி செய்வார்கள். குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்தால் உள்ளுணர்வு பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும். இந்த அமைப்பை ராஜ குரு என்று சொல்லலாம். ரிஷபத்தில், அதாவது ஆறாம் இடத்தில் குருவும் சூரியனும் சேர்ந்திருந்தால் வீண்பழி, சண்டை சச்சரவு ஏற்பட்டு நீங்கும். சகோதர வகையில் மட்டும் அவ்வப்போது மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மின்சார விபத்துக்கள், நெருப்புக் காயங்கள் போன்ற விஷயங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கடன் வாங்குவதை ஒரு கட்டத்திற்கு மேல் நிறுத்திக் கொள்வதும் நல்லது. பிள்ளைகள் தங்கள் இஷ்டத்திற்கு எதையாவது செய்தபடி இருப்பார்கள். ஆனால், தந்தையோ தங்களின் பேச்சைத்தான் குழந்தைகள் கேட்க வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். மிதுன ராசியான ஏழாம் இடத்தில் குருவும் சூரியனும் அமர்ந்திருந்தால் திருமணம் தாமதமானாலும் நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.
கூட்டுத் தொழில் செய்வோர் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திடீரென்று செல்வந்தராகும் நபர்களோடு சேர்ந்து கூட்டுத் தொழில் செய்யக் கூடாது. புத்தி சாதுர்யம் மிக்கவராக இருப்பார். ஏழில் சூரியன் இருப்பதால் வாழ்க்கைத் துணைவர் மிக உயர்ந்த தலைமைப் பதவியில் அமர்வார். இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர்களுடைய சகோதரர்களுக்கும் உடனடியாக திருமணம் செய்து வைக்கவேண்டும்.
இல்லையெனில் குடும்பத்தில் பிரச்னை மையங் கொள்ளும். கடக ராசியான எட்டாம் இடத்தில் குருவும் சூரியனும் ஒன்றாக இருந்தால் வாகனங்களில் செல்லும்போதும், இரவு நேரப் பிரயாணங்களின்போதும் எச்சரிக்கை வேண்டும். தலையில் அடிபடாமல் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். மாறுபட்ட சிந்தனைகளோடு எப்போதும் இருப்பார்கள். ஓர் அமைப்பை உடைக்க வேண்டுமெனில் இவர்களை அனுப்பலாம். இவர்களுக்கு குடல்வால் பிரச்னை, பிறப்புறுப்பில் புண் அல்லது வீக்கம் வந்து நீங்கும்.
சிம்மத்தில் சூரியனும் குருவும் சேர்ந்திருந்தால் தந்தையை விஞ்சிய மகனாக வருவார். தந்தை மிகுந்த செல்வாக்கோடு இருப்பார். பாக்கிய ஸ்தானத்தில் குரு இருப்பதால் அடிப்படையான வாழ்க்கைக்குரிய தேவைகளுக்கு எந்தக் குறையுமிருக்காது. ஓரிடத்தில் கௌரவக் குறைவு ஏற்படுமானாலும் கடைசி வரையிலும் அந்த இடத்திற்குப் போக மாட்டார். கன்னி ராசியான பத்தாம் இடத்தில் குருவும் சூரியனும் அமர்ந்தால் நிச்சயம் அரசியலில் அதீத ஆர்வம் காட்டுவார்கள்.
காவல்துறை, ராணுவம், வங்கி அதிகாரிகள் என்று அமர்வார்கள். சூரியனும் குருவும் முதல் 16 டிகிரிக்குள் இந்த ராசிக் கட்டத்திற்குள் அமர்ந்திருந்தால் மாபெரும் தொழிற்சாலையை அமைப்பார்கள். சொத்துச் சேர்க்கை, தோப்பு, பங்களா என்று ஏகபோகமான வாழ்க்கை அமையும். சிலர் அரசாங்கத்தில் வலிமையான பதவிகளை பிடிப்பார்கள். அமைச்சர்களாகவும் அமர்ந்திருப்பார்கள்.
துலா ராசியான பதினொன்றாம் இடத்தில் சூரியனும் குருவும் அமர்வது ஓரளவு பரவாயில்லை. கூடாப் பழக்க வழக்கங்கள் வந்து அலைக்கழிக்கும். மூத்த சகோதரர்களோடு சரியாக வராது. நீங்கள் நேசித்தாலும் அவர்கள் நேசிக்க மாட்டார்கள். தந்திரத்தோடு பல விஷயங்களை மறைத்துப் பேசுவார்கள். பிரபலங்களுக்கு பினாமியாக இருப்பார்கள். வெற்றிகளை அதிகம் கொடுத்துவிட்டு அவ்வப்போது வரும் தோல்வியால் தன்னம்பிக்கையை இழக்க மாட்டார்கள்.
சேமிக்க முடியாதபடி ஏதேனும் செலவும் துரத்தியபடி இருக்கும். அவசரத்திற்கென்று எடுத்து வைத்த பணத்திலும் கையை வைத்து விடுவார்கள். விருச்சிக ராசியான பன்னிரெண்டாம் வீட்டில் ஆத்ம காரகனான சூரியனும் குருவும் சேர்ந்து அமர்ந்திருந்தால் அடுத்த பிறவியே இருக்காது. ஆரம்பத்தில் மானுட சேவையே பெரிதென்று பேசுவார்கள். பின் வயதில்தான் ஆன்மிகத்தில் முழு ஈடுபாடு காட்டுவார்கள்.
சூட்சும சக்தி இருக்கும். பிரமாண்டமான உலகம் நிலையற்றது. பிரம்மமே நிலையானது என்பார்கள். எப்போதுமே ஒரு விஷயத்தை தொடங்கும்போது தொடக்க சிரமங்கள் இருக்கும். பொதுவாகவே இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்த அமைப்பு அதிக அளவிலான நற்பலன்களையே தரும். ஏனெனில், இரண்டு ராஜ கிரகங்கள் ஒன்று சேரும்போது சொத்து, அந்தஸ்து என்று குறைவில்லாத வாழ்க்கை அமையும்.
சில இடங்களில் நீசமானாலோ, பகை பெற்றாலோ மட்டுமே எதிர்மறை பலன்களைத் தரும். அப்படிப்பட்ட சமயங்கள் மற்றும் பொதுவாகவே இந்த அமைப்பைப் பெற்ற ஜாதகர்கள் சித்தர்களின் ஜீவசமாதியை வணங்கி வருதல் மிகவும் சிறந்தது. அப்படிப்பட்ட சித்தர்தான் பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள். நேபாள மன்னரும் பைரவ உபாசகருமான ராஜாராம் சுவாமிகள் இவருக்கு பைரவ மந்திரத்தை உபதேசமாக சொல்லி வைத்தார். நாய்கள் அனைத்தும் இவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நிற்கும்.
சிறு வயதிலேயே துறவை மேற்கொண்டு விட்டார். நிறைய மக்களின் குறைகளைத் தீர்த்தபடி இருந்தார். எப்போதும் மக்கள் இவரைச் சுற்றிச்சுற்றியே வந்தனர். கும்பகோணத்திலேயே இருந்த சுவாமிகள் சென்னை வந்தார். 1949ம் ஆண்டு ஆடிப் பூரத்தன்று திருவொற்றியூரில் ஜீவசமாதி அடைந்தார். சென்னை, திருவொற்றியூரிலுள்ள பட்டினத்தார் கோயில் தெருவில் இவரது ஜீவசமாதி அமைந்துள்ளது. தரிசித்து அங்கேயே அமர்ந்து தியானித்து வாருங்கள்.
(கிரகங்கள் சுழலும்...)
ஓவியம்: மணியம் செல்வன்
|