ஊஞ்சல் தேநீர்



யுகபாரதி - 17
 
காவி நிற ஜிப்பாவில் சோடாபுட்டி கண்ணாடியுடன் ஒரு தமிழ்பேசும் டில்லிவாலாவாக அவரிருந்தார். அந்த சித்திரமே இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. கீழ்ப்பகுதி முழுக்க சுருக்கமான அவருடைய ஜிப்பாவில் அவ்வப்போது கண்ணாடியைத் துடைத்துக்கொண்டார். ‘காஃபி சாப்புடுவோமா?’ என்றார். ‘டிகிரி காஃபி இருந்தால் பிரமாதமாயிருக்கும்’ என்றார்.

அங்கிருந்து ஆட்டோ பிடித்து பாண்டி பஜாரிலுள்ள கீதா கஃபேவுக்கு வந்தோம். நல்ல காஃபிக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் பிரயாணம் செய்ய அவர் தயாராயிருந்தார். நல்ல எழுத்துக்காக அதைவிட அதிக தூரம் பயணிக்கும் மனம் எனக்கிருந்தது. கிளிப்பிள்ளைக்கு சொல்லுவதைப்போல படிக்க வேண்டிய நூல்களைப் பட்டிய லிட்டார்.

அந்த சந்திப்புக்குப் பின் சிலகாலம் டில்லியிலிருந்து அவ்வப்போது கடிதம் எழுதினார். என்னை நேரில் சந்தித்த பிறகும் அவர் என்னை சின்ன பொடியனாக எண்ணாமல்தான் கடிதம் எழுதினார். ஓராண்டு இடைவெளியில் பணி ஓய்வு பெற்று சென்னைக்கே வந்துவிட்டார். தூரத்தில் இருந்தே தூண்டிக்கொண்டிருந்த அவர் அருகில் வந்ததும் அடிக்கொருதரம் அவரைப் பார்க்கவும் பேசவும் முடிந்தது.

மடிப்பாக்கத்தில் அமைந்திருந்த அவர் வீட்டிற்கு என்னுடன் பல இலக்கியத் தோழர்கள் வந்திருக்கிறார்கள். யாரை அழைத்துப்போனாலும் முகம் கோணாமல் பேசிக்கொண்டிருப்பார். ‘எப்பவுமே ஒம்ம சுத்தி ஆள் இருக்கு, அப்பறம் எப்படிய்யா எழுதுறீர்?’ என்பார். ‘எழுதறப்போ யாரும் இருக்கிறதில்ல’ என்றால் சிரித்துக்கொள்வார். ‘நம்புறேன் நம்புறேன்’ என்பார். தமிழ் இலக்கியத்தின் மூத்த விமர்சகர் அல்லது விமர்சன முன்னோடி ஒருவருடன் பழகுகிறோம் என்ற எண்ணத்தை அவர் எப்போதும் ஏற்படுத்தியதில்லை.

அவர் எழுதிய கட்டுரைகளைக் கொடுத்து ‘என்ன நினைக்கிறீர் இதுபற்றி’ என்பார். ‘நீங்களே பெரிய கருத்து கந்தசாமி, ஒங்க கட்டுரைக்கு நாங் கருத்து சொல்றதா’ என்று கலாய்ப்பேன். சிரித்துக்கொண்டே வழியனுப்பு வார். அவர் பழக எளியவரல்ல. சட்டென்று பிணங்கிக்கொள்வார் என்ற கூற்று என் விஷயத்தில் பொய்த்துப்போனது. உரிமையோடு அவருடன் பழக முடிந்தது. அவரைப் போல அவர் மனைவியான சரோஜா அம்மா, நான் போனதும் டபரா செட்டில் நுரைபொங்க டிகிரி காஃபியால் அன்பைப் பொழிவார்.

‘தஞ்சாவூர்க்காரங்களுக்கு காஃபியும் இலக்கியமும் இருந்தால் போதும், பேசிக்கொண்டே இருப்பீர்கள்’ என்பார். இந்த நினைவுகள் எல்லாம் பத்து பனிரெண்டு ஆண்டுகளுக்கு முந்தியவை. பராமரிக்கப்படாத ஒரு பழைய சைக்கிளில் கொட்டிவாக்கத்திற்கும் மடிப்பாக்கத்திற்கும் அலைந்து திரிந்த காலத்தில் விளைந்தவை. ஒரு சிறு பத்திரிகையில் உதவி ஆசிரியர் என்னும் பதவி உடலையும் உள்ளத்தையும் வருத்தக்கூடியதென்னும் தெளிவை அப்போது நான் பெற்றிருக்கவில்லை.

அங்கும் இங்கும் தனி ஆளாக சைக்கிளில் பறந்து பறந்து வாழ்வையும் இலக்கியத்தையும் தேடிக்கொண்டிருந்தேன். எழுத்தாளர். சுஜாதாவின் வீடு அமைந்திருந்த ஆழ்வார்பேட்டையில் கடைசி பக்க கட்டுரை வாங்க கால்கடுக்கக் காத்திருக்கிறேன். எதிரே அமைந்திருந்த எழுத்தாளர் இந்திராபார்த்தசாரதி வீட்டில் தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீர் குடித்திருக்கிறேன். என்னவாகப் போகிறோம் என்ற தெளிவில்லாமல் சென்னைக்கு வந்திருந்தாலும் ஏதோ ஒன்றாக ஆகிவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

வெ.சா வேறு புதுமைப்பித்தனையும் பிச்சமூர்த்தியையும் ஒப்பிட்டுச் சொல்லிவிட்டதால் அவர்கள் இருவரில் ஒருவராக ஆகியே தீருவதென்ற ஏக்கம் என்னை துரத்திக்கொண்டிருந்தது. அது அவ்வளவு எளிதான காரியமில்லை என்று நான் சந்தித்த எந்த எழுத்தாளரும் எனக்குச் சொல்லவில்லை. வெ.சா மாதிரி வேறு யாரோ ஒருவர் பாரதிக்கும் மெளனிக்கும் இணையாக வருவீர்கள் என்று அவர்களைச் சொல்லியிருக்கலாம்.

சிறிது காலம் ‘கணையாழி’ பத்திரிகையோடு பிணக்குற்றிருந்த வெ.சா என்மீதுள்ள அன்பினால் அதில் எழுத சம்மதித்தார். தொடர் கட்டுரைகளாக நிறைய எழுதினார். சொன்ன தேதியில் கட்டுரைகளைத் தந்துவிடுவார். அடித்தல் திருத்தல் இல்லாமல் வெகு அழகாக அவர் எழுத்திருக்கும். குண்டு குண்டான எழுத்துக்களில் வாக்கியங்களையும் பத்திகளையும் நேர்த்தியாகப் பிரித்திருப்பார்.

இடையில் எதையாவது சேர்க்க வேண்டுமானால் கடைசி பக்கத்தில் சிவப்பு மையினால் எழுதி, இந்த இடத்தில் இதை சேர்த்துக்கொள் என்று அம்புக் குறியிட்டு அனுப்புவார். அப்போது ‘கணையாழி’யில் இலக்கிய ஆளுமைகள் குறித்து தனித் தனி சிறப்பிதழ் வெளியிடலாம் என ஆசிரியர் குழு முடிவெடுத்தது. ஆசிரியர் குழு என்றால் ஆசிரியர்தான். அவரைத் தாண்டி அங்கே குழுவெல்லாம் ஒன்றுமில்லை.

ஆலோசனைக் குழுவென்று சில பெயர்கள் அச்சாகியிருக்கும். அங்கு பணியாற்றிய ஆறு ஆண்டுக்காலத்தில் அந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த பலரை நானே சந்திக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். முதலில் கலைஞர் சிறப்பிதழ் கொண்டுவரலாம் என்றதும் எனக்கு திக்கென்றிருந்தது.

இலக்கியவாதிகள், அதுவும், ‘கணையாழி’யை தொடர்ந்து வாசிக்கும் தீவிர இலக்கியவாதிகள் கலைஞரை இலக்கியவாதியாக ஒப்புக்கொள்ளாத நிலையில் இப்படியொரு சிறப்பிதழ் என்றால் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்றேன். ‘என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம். வெங்கட்சாமிநாதனிடம் கட்டுரை கேளுங்கள்’ என்றார் ஆசிரியர்.

ஏற்கனவே வெங்கட்சாமிநாதன் திராவிட இலக்கியங்களைத் திட்டித் தீர்த்திருக்கிறார். இந்த நிலையில் கலைஞரைப் பற்றி எழுதச் சொன்னால் என்ன சொல்வாரோ என்று தயக்கத்தோடு ‘கேட்டுப்பார்க்கிறேன்’ என்றேன். என்னுடைய தயக்கத்திலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்ட ஆசிரியர், ‘நீங்கள் சொல்வதும் சரிதான். கேட்டுப்பாருங்கள். தவிர்த்தால் விட்டுவிடலாம். வேறு யாரிடமாவது வாங்கிக்கொள்ளலாம்’ என்றார். அன்று மாலையே சைக்கிளை எடுத்துக்கொண்டு வெ.சாவைப் பார்க்க மடிப்பாக்கம் கிளம்பினேன்.

‘வாம்மய்யா என்ன விசேஷம்’ என்றார். ஆசிரியர் விருப்பத்தை தெரிவித்தேன். ‘நீ சொன்னா எழுதுறேன்ய்யா. அவரு எழுதின மொத்த புஸ்தகத்தையும் வாங்கிட்டு வா, படிச்சிப் பார்த்துட்டு சொல்றேன். ஆனா ஒண்ணு, எனக்கு புடிக்கலன்னா... வற்புறுத்தக்கூடாது. சரியா’ என்றார். இரண்டொரு நாளில் மொத்த புத்தகங்களையும் வாங்கிக்கொண்டுபோய் கொடுத்தேன். ‘இவ்வளோவாய்யா அவரு எழுதியிருக்காரு’ என்றார். இரண்டு மூன்று நூல் அச்சிலிருக்கிறதாம் என்றதும் பெருமூச்சுவிட்டார்.

புத்தகங்களைக் கொடுத்த இரண்டாவது வாரத்தில் மிக நீளமான கட்டுரை ஒன்றை எழுதிக்கொடுத்தார். சிறப்பிதழுக்குப் போதுமான கட்டுரை அது. கலைஞரின் மொத்த படைப்புகளையும் வரிவிடாமல் குறிப்பிட்டிருந்தார். ஒருவர் தன் ஆயுள் காலத்தில் இவ்வளவு எழுதியிருக்கிறார் என்பதற்காகவே பாராட்டப் பெறுவார் என்று கட்டுரையை முடித்திருந்தார். எங்கேயும் இலக்கிய நயத்தையோ இதுபோல் இலக்கியத்தில் எழுதப்பெறவே இல்லை என்றோ சிலாகிக்கவில்லை.

தொடர்ந்து எழுதுவதே பெரும்சாதனை என்பதோடு நிறுத்திக்கொண்டார். சிறப்பிதழ் வெளிவந்தது. பெரும் பரபரப்புக்கு உள்ளான அக்கட்டுரை கலைஞராலும் வாசிக்கப்பட்டது. வெ.சாவுக்கு என்ன ஆயிற்று, கலைஞரைப் பற்றியெல்லாம் எழுதுகிறாரே என்று பிற சிற்றிதழ்கள் விமர்சித்தன. தன்னை நேசிக்கும் ஒருவன் கேட்டதற்காக எழுதினேன் என்று அவர் எங்கேயும் இறுதிவரை சொல்லவில்லை. தன்னுடைய தராசு நிலை தாழ அவர் அக்கட்டுரையை எழுதவில்லை.

மிக ஜாக்கிரதையாகவே எழுதியிருந்தார். என்றாலும், அக்கட்டுரையை எழுத வேண்டிய அவசியம் என்மீது வைத்திருந்த அன்பினால் நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. விருப்பமில்லாமல் செய்ததாக அவர் நேர்ப்பேச்சிலோ கட்டுரையிலோ வெளிப்படுத்தவில்லை. உண்மை விபரீதமானதே அய்யா என்றுதான் அங்கலாய்த்தார். நான் எழுதுவதில் கசப்பு ஏற்பட்டால் உமக்கும் ஆசிரியருக்கும் பங்கம் வருமே என்றுதான் வருத்தப்பட்டார்.

அதன்பின் திரைத்துறையில் நான் பாடலாசிரியனாக மாறினேன். என்னுடைய பாடல்களைக் கேட்டுவிட்டு அவ்வப்போது தொலைபேசியில் வாழ்த்துவார். ‘சிநேகா என்னய்யா சொல்றாங்க’ என்பார். ‘மீரா ஜாஸ்மின் மலையாளப் பெண்தானே. அதையேன் பிசாசு என்று வர்ணித்து இருக்கிறீர்’ என்பார். ‘கேரள நாட்டிளம் பெண்களுடனேன்னு அந்த பாரதி எழுதினத  நீர் படிச்சதில்லையோ’, ‘இன்னும் உயரம் போகணுமய்யா, எடுத்ததில் பின் வாங்காதே. என்ன இருக்குதுன்னு பாரு.

கம்பதாசனப் பத்தி க.நா.சு. சொல்லியிருக்கிறார் தெரியுமோ?’ என்பார். தீவிர இலக்கியத்தில் இருந்து வெகு மக்களை நோக்கி நகர்ந்துவிட்ட பிற்பாடும் அதே அன்போடுதான் அவர் என்னிடம் நடந்துகொண்டார். ‘சினிமா சினிமான்னு இலக்கியத்த விட்டுடாத ஓய்’ என்று எச்சரித்தார். அவரை எண்ணவும் சொல்லவும் எவ்வளவோ இருக்கின்றன.

அரை நூற்றாண்டு இலக்கியத்திற்காக உழைத்த அவருடைய அன்பு இலக்கியக் கருதுகோள்களுக்கு அப்பாற்பட்டது. திடீரென்று ஒருநாள் மதியம் அவரிடமிருந்து தொலைபேசி வந்தது. ‘என்னுடைய கட்டுரைகளை எல்லாம் தொகுத்து முழு புத்தகமாகப் போடவேண்டும். உனக்குத் தெரிந்த பதிப்பகம் இருந்தால் சொல்லேன்’ என்றார். ‘நிச்சயமாக சொல்கிறேன், அல்லது நாமே பதிப்பிக்கலாம்’ என்றேன்.

அதுதான் அவரும் நானும் கடைசியாக உரையாடியது. தொகுத்துவிட்டு கூப்பிடுவதாக தொலைபேசியை துண்டித்தார். அது, கடைசி உரையாடலாக, கடைசித் துண்டிப்பாக இருக்கும் என்று நான் அறிந்திருக்கவில்லை. கிராமத்திலிருந்து பஞ்சம் பிழைக்க வந்து, பல்வேறு வேலைகளைச் செய்து, கொஞ்சம் கவிதைகளையும் எழுதி, இறுதியில் பாடலாசிரியனாக அறியப்படும் நான், வயது வித்தியாசமில்லாமல் எல்லா இலக்கியவாதிகளிடமும் பழகிக் கொண்டிருக்கிறேன்.

நான் அவர்களுடன் பழகிக்கொண்டிருக்கிறேன் என்பதைவிட அவர்கள் என்னை அனுமதிக்கிறார்கள் என்பதுதான் விசேஷம். ஒருவர் மீது அன்பு செலுத்த இலக்கியத் தகுதிகளோ இன்னபிற காரணங்களோ அவசியப்படுவதில்லை. வெ.சா தன்னுடைய காலத்தில் கண்டடைந்த உண்மையாக என்னிடம் பகிர்ந்துகொண்டதும் அதுதான். சத்தியத்தை விமர்சிக்க வாய்ப்பில்லை. காரணம், விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதே சத்தியமும்.

(பேசலாம்...) 

ஓவியங்கள்: மனோகர்