சலுகை கொடுத்தால் சினிமா வாழும்!



-மை. பாரதிராஜா

பொது மக்களை விநியோகஸ்தர் ஆக்கும் புது ரூட்

‘‘மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ்கோபிக்கு பல ஹிட்களை கொடுத்த ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் நான் நடிக்கும் மூணாவது படம் இது. ‘எல்லாம் அவன் செயல்’ பார்த்துட்டு சுரேஷ்கோபி சார், ‘ஆர்.கே. நீங்க ரியல் லாயராகவே தெரிஞ்சீங்க’னு கட்டிப்பிடிச்சு பாராட்டினார்.

சந்தோஷமா இருந்தது. இப்ப ‘வைகை எக்ஸ்பிரஸ்’ பண்ணியிருக்கேன். இதுல இன்வெஸ்டிகேஷன் அதிகாரி. தமிழ்சினிமாவில் ட்ரெயினுக்கு எப்பவும் தனி மவுசு உண்டு. சில பெரிய இயக்குநர்கள் சக்சஸ் சென்டிமென்ட்டா அவங்க படங்கள்ல ஒரு சீன்லேயாவது ட்ரெயினை காட்டிடுவாங்க. ஆனா, இது முழுக்க முழுக்க ரயிலில் நடக்கற க்ரைம் த்ரில்லர்.

மொத்தப் படத்தையும் ரயில்லதான் ஷூட் பண்ணியிருக்கோம்...’’ ரிலீஸ் உற்சாகத்தில் வரவேற்கிறார் ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஹீரோ ஆர்.கே. ‘‘படத்துல நாசர், ஆர்.கே.செல்வமணி, சுமன், எம்.எஸ்.பாஸ்கர், நீது சந்திரா, இனியா, மனோபாலா, சித்திக், ரமேஷ்கண்ணானு பெரிய நட்சத்திரங்கள் நிறைய பேர் இருக்காங்க.

வைகை எக்ஸ்பிரஸில் பயணிக்கக் கூடிய ஆறு குடும்பங்களுக்கு நேரும் சம்பவங்கள்தான் படத்தின் கதை. அக்கா - தங்கைனு ரெண்டு ரோல்ல நீது சந்திரா. ஒரு நீது துப்பாக்கி சுடுதலில் சாம்பியன். இன்னொரு நீது பரதநாட்டியக் கலைஞர். நடிகையாகவே நடிச்சிருக்கார் இனியா. ஆர்.கே.செல்வமணி இதில் வில்லனாக பேசப்படுவார். கொலை நடக்கற ஏரியாவுல போலீஸ் அதிகாரியா நாசர் கலக்கியிருக்கார்...’’ சந்தோஷமாகச் சொல்கிறார் ஆர்.கே.

ஆர்.கே. - ஷாஜி கைலாஷ் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுதே?
மலையாளத்தில் ஐம்பது படங்கள்கிட்ட இயக்கியவர். ஷூட்டிங்கில் ஒருநாள் அவர், ‘ஆர்.கே.ஜி. உங்ககிட்ட நான் எளிதா வேலை வாங்குறதுக்கு காரணம், சில நேரங்கள்ல நீங்க மோகன்லால் ஸ்டைலை பிடிச்சிடுறீங்க. சில சமயங்கள்ல மம்மூட்டி மாதிரி ஒர்க் பண்றீங்க. எனக்கு ரெண்டும் மிக்ஸ் பண்ணின கேரக்டர் கிடைச்சிருக்கு’னு சொன்னார். ஒரு நடிகரோட ப்ளஸ், மைனஸ் என்னான்னு ஒரு இயக்குநருக்கு தெரிஞ்சா போதும். பிரமாதமா அந்த நடிகரைக் கொண்டு வந்திடமுடியும். ஷாஜி அந்த வித்தை தெரிந்தவர். 

படத்தோட இசை வெளியீட்டு விழாவில் ‘ஹிட் பாக்ஸ்’னு புது விநியோக முறை ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கீங்களே?
ஆமாம்ங்க. சினிமாவை ரொம்பவும் நேசிக்கறவன் நான். உலகத்துல அரசியல், ஆன்மீகம், சினிமா இந்த மூன்றும் மக்கள் இன்வால்வ் ஆகுற அற்புதமான களங்கள். சாதாரண குடிமகன்ல இருந்து கோடீஸ்வரர் வரை எல்லாருமே அதைப் பத்தி பேசுவாங்க.

அந்த களத்தை பயன்படுத்தி இந்த நாட்டையே ஆளமுடியும்னு நிறைய பேர் நிரூபிச்சிருக்காங்க. எல்லாருமே பொதுமக்களை பயன்படுத்திக்கிறாங்க. ஆனா, இதுல வியாபார முறையில யோசிச்சா மக்களுக்கு பயன்படுற விஷயங்கள் நிறைய இருக்கு. ‘ஒரு சட்டை வாங்கினா, ஒரு சட்டை இலவசம். 50 சதவிகித தள்ளுபடி விற்பனை’னு ஜனங்களை தங்கத்தட்டில் ஏந்துறாங்க. ஆனா, சினிமாகாரங்க தங்கத்தட்டில் அவங்க வாழ்வதற்காக மட்டும் மக்களுக்கு எதுவும் நல்லது பண்ணாமல் சுயநலமா பயன்படுத்திக்கிறாங்க.

‘என்னுடைய ஐம்பது படங்களையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். என்னுடைய 51வது படத்தை தமிழ்த் திரையுலகிற்கு அர்ப்பணிக்கிறேன். நீங்க இலவசமா பார்த்து மகிழுங்கள்’னு ஒரு ஹீரோவாவது சொல்லியிருக்காங்களா? நான் திரும்பத் திரும்ப கால்ல விழுறேன். கட் அவுட்டுக்கு பால் ஊத்துறேன். என்னை என்னிக்காவது அங்கீகாரம் பண்ணியிருக்கீங்களாங்கிற ஆதங்கம் ரசிகர்களுக்கு உண்டு.

இப்ப சூழ்நிலை என்னாச்சு? படங்கள் ஓடமாட்டேங்குது. ஒரு வாரம் கூட வசூல் ஆகலை. படம் பார்க்க வர்றவங்களை கறிவேப்பிலை மாதிரி என்னிக்கு பயன்படுத்தத் தொடங்கினாங்களோ அப்ப முதல் சினிமா சரிவை நோக்கி போய்டுச்சு. நகைக்கடையில கூட்டம் வருது. துணிக்கடையில கூட்டம் வருது. ஆனா, தியேட்டருக்கு மட்டும் கூட்டம் வரமாட்டேங்குது. ஆடி மாசம் எதையும் துவங்கக்கூடாதுனு முன்னாடி சொன்னாங்க. இப்ப ஆடிமாசம்னாலே விழா கொண்டாட்டமா இருக்கு.

மக்களைப் பயன்படுத்திக்கிட்ட சினிமா வேறு. மக்களை கைக்குள்ள வச்சுக்க தவறிய சினிமா வேறு. இந்த ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. ஒரு படத்தோட டிக்கெட் விலை 120 ரூபாய். அதை ஆன்லைன்ல புக் பண்றதுக்கு கூட 30 ரூபாய். தியேட்டர்ல பார்க்கிங் செலவு பைக்கிற்கே 50 ரூபாய். பார்கார்ன் விலை ரூ.80னு தியேட்டருக்கு தப்பித்தவறி வர்றவனைக் கூட அவன்கிட்ட இருக்கறதையும் பறிச்சிட்டு விடணும்னுதான் நினைக்கறாங்க.

ஃபேமிலியா படம் பார்க்கணும்னா சாதாரணமாகவே ரெண்டாயிரம் ரூபா ஆகுது. இதை தட்டிக் கேட்டால், ‘நீ வந்தா வா... வரலைனா போ’னு இந்த திரையுலகம் சொல்லுது. அப்ப மக்களுக்கு எளிதா கிடைக்கறது பைரஸி சி.டி.க்கள்தான். 25 ரூபாய்ல குடும்பமா படம் பார்த்துடுறாங்க. கொஞ்சம் மாத்தி யோசிச்சு பாருங்க. மூணு டிக்கெட் வாங்கினால் ரெண்டு டிக்கெட் இலவசம் கொடுங்க.

குழந்தை குட்டிகளோட கொண்டாட்டமா படம் பார்க்க விரும்புவாங்க. மூணு முறை படம் பார்த்த கூப்பன் வச்சிருந்தா பார்க்கிங் இலவசம்னு சொல்லிப்பாருங்களேன். மூணு படம் பார்த்திருக்கேன். காஃபி குடிச்சிருக்கேன்னு ஒருத்தர் சொன்னா நாலாவது படமும் காஃபியும் அவருக்கு இலவசமா கொடுங்க. இப்படி செஞ்சா தியேட்டருக்கு கூட்டம் அள்ளும்.

எல்லாருமே டிஸ்ட்ரிபியூஷன் பத்தி யோசிக்கறோம். ஆனா, மார்க்கெட்டிங் பண்றாங்களா? முன்னாடி லாட்டரி இருந்தது. கூவிக்கூவி அதை வித்தது மாதிரி ஆறு மாசத்துக்குப் பிறகு பார்க்க வேண்டிய படத்தோட டிக்கெட்டையும் இப்பவே விற்க ஆரம்பித்தால், நூறு நாட்களுக்கான டிக்கெட் கூட விற்றுத் தீர்ந்து விடும். லாட்டரி டிக்கெட் விற்றவன் எல்லாரும் சும்மாதான் இருக்கான்.

அவன் கடை போட்டு இந்த டிக்கெட்டுகளை விற்பான். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஃபைனான்ஸியரிடம் வட்டிக்கு வாங்கி தயாரிப்பாளர்கள் அவதிப்படக் கூடிய நிலையும் மாறும். படங்கள் ஓடும். ஜனங்க வருவாங்க. இன்னொரு விஷயம். கூட்டமா இருக்கற இடங்களுக்குதான் ஜனங்க எப்பவும் வருவாங்க. சென்னையில இருந்து கன்னியாகுமரி வரை கடல் இருக்கு. ஆனா, மெரீனாவுக்கு மட்டும் ஜனங்க ஏன் குடும்பமா வர்றாங்க? கூட்டத்தோட இருக்கறதுல ஆனந்தப்படுறவங்க மக்கள். ஸோ, அந்த மக்களுக்கு சலுகைகள் வழங்கினா கூட்டம் வரும். மவுத் டாக் பெருகும். சினிமா வாழும்.