காசிமேடு



அறிந்த இடம் அறியாத விஷயம்

-பேராச்சி கண்ணன்

தரை மேல் பிறக்க வைத்தான் - எங்களைத் தண்ணீரில் பிழைக்க வைத்தான்கரை மேல் இருக்க வைத்தான் - பெண்களைக் கண்ணீரில் துடிக்க வைத்தான்... - ஏனோ தெரியவில்லை. கடலில் படகுகளைப் பார்க்கும் பொழுதெல்லாம் உதடு தானாகவே இந்தப் பாடலை முணுமுணுத்துவிடுகிறது. காசிமேட்டுக்குள் நுழையும் போதும் இதே வரிகள்.

சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் இருக்கிறது காசிமேடு. சென்னையின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம். இங்கு செயல்படும் மார்க்கெட்டை மீன் சந்தைகளின் ‘Hub’ என்றுதான் அழைக்க வேண்டும். அந்தளவிற்கு இங்கு கிடைக்காத மீன் வகைகளே இல்லை.

வஞ்சிரம், வவ்வால், பாரை, சுறா, கடம்பா, கவளா, கடவரா, சங்கரா, காரப்பொடி, அயிரை, முழியன், சீலா, நெத்திலி, சூரை என மீன்களின் பெயர்கள் எல்லாம் கேட்டவையாகத்தான் இருக்கின்றன. ஆனாலும், அது எந்த மீன் என்பதை விற்பவர்கள் சொன்னால்தான் தெரிகிறது. இறாலிலும், நண்டு ஐட்டத்திலும் கூட விதவிதமான வெரைட்டிகள் நெளிகின்றன. ஃப்ரெஷ்ஷாக மீன் வாங்க நினைப்பவர்களுக்கு காசிமேடு ஒரு வரம்! 

ஞாயிற்றுக்கிழமை பொழுதில் சரியாக காலை ஆறு மணிக்கு அந்த உப்புக்காற்றை சுவாசித்தபடி காசிமேட்டிற்குள் நடந்தோம். கடலை ஒட்டி இருப்பதால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. கவிச்சி வாடையும் தூக்கலாகவே வீசுகிறது. வரிசையாக அணிவகுத்து நிற்கும் பெரியதும் சிறியதுமான விசைப்படகுகளில் இருந்து மீன்களை கட்டுமரங்களில் வைத்து மார்க்கெட் பகுதிக்குக் கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். அடுத்த நொடி வியாபாரம் களைகட்டுகிறது. இதை, ஆண்களை விட பெண்களே முன்நின்று நடத்துகிறார்கள்.

இங்கு ஆண்கள் ஒன்லி 33 பெர்சன்ட்தான்! ‘‘சங்கரா நூறு... கடம்பா நூறு... கொடுவா நூறு... கவளா நூறு... வா... வா... வா...’’ என கூடைகள் நிறைய கூறுகளாக மீன்களை போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார் ஒரு வியாபாரி. பஸ் கண்டக்டர் போல கையில் ரூபாய் நோட்டுகளை லாவகமாக மடித்து நிற்கிறார். அவர் அருகிலேயே, ‘‘கூடையெல்லாம் நூறு ரூபா... கூடையெல்லாம் நூறு ரூபா...’’ எனக் கூவிக் கொண்டிருக்கிறார் இன்னொருவர்.

அந்தக் கூடைகள் ஒவ்வொன்றிலும் ஒரு கிலோ மீன்கள். ‘‘எவ்வளவோம்மா...’’ வஞ்சிரத்தை வச்ச கண் எடுக்காமல் தொட்டுப் பார்த்துக் கேட்கிறார் பெண் ஒருவர். ‘‘ரெண்டு மீனு... ஆயிரத்து 200’’ என்கிறார் விற்பனைப் பெண்மணி. ‘‘800 ரூபாக்கு கொடு!’’ ‘‘போன வாரம் வந்திருந்தே... ரெண்டையும் ஐநூறு ரூபாக்கு தந்திருப்பேன். இன்னைக்கு படகு கம்மி. அதான் இந்த ரேட். வாங்கிக்கினு நகரு...’’ என்கிறார் அவர்.
 
பிளாஸ்டிக் பெட்டிகளில் மிதக்கும் இறால்கள். கிலோ ரூ.240 எனச் சத்தம் கொடுக்கிறார் இன்னொருவர். தொடர்ந்து மரப்பெட்டியின் மேல் மீன்களை அடுக்கி வரிசையாக ‘எஸ்’ வடிவில் வளைந்திருக்கிறார்கள் பெண்கள். இதில் பெரும்பாலானவர்கள் அருகிலுள்ள மீனவ குப்பங்களைச் சேர்ந்தவர்கள். ‘‘ஆயிரம்... ஆயிரம்... ஆயிரம்...’’ கடலையொட்டி வட்டமாகச் சுற்றி நிற்கும் கூட்டத்திலிருந்து வருகிறது சத்தம். எட்டிப் பார்த்தோம். ஐந்தாறு கூடைகளில் கிலோ கணக்காக மீன்கள். அதனை போட்டி போட்டு ஏலம் எடுக்கிறார்கள் வியாபாரிகள். இந்த ஏலத்தை பெண் ஒருவர் நடத்திக் கொண்டு இருந்தார். சென்னை முழுவதும் உள்ள ஏரியா மீன் வியாபாரிகள் இந்த ஏலத்தில் மீன்களை எடுக்கிறார்கள்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட கூடைகளைத் தூக்கிச் செல்பவர்கள் விழுப்புரம், திருவண்ணாமலைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாம். ஒவ்ெவாரு மீன் கடைகளுக்கு முன்பும் மீன் வாங்குபவர்களைக் குறி பார்த்து நிற்கிறது பெண்கள் கூட்டம் ஒன்று. மீன்களை அறுத்துக் கொடுப்பதை வேலையாகச் செய்பவர்கள். சைஸுக்கு ஏற்றவாறு ரூ.30 முதல் ரூ.50 வரை பெற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்காகவே அருவாமணை கடைகள் கூட பக்கத்திலேயே இருக்கின்றன. 

‘‘மீடியாவா...’’ ஒருவர் நம்மை விசாரித்தார். மீனவர் சங்கத்தைச் சேர்ந்தவர். ‘‘ஆமாம்...’’ ‘‘செய்தியை ஆய்வு பண்ணி வெளியிடமாட்டீங்களா..?’’  ‘‘என்னாச்சு?’’ ‘‘எண்ணெய் கசிவு... மீன் சாப்பிடக்கூடாதுனு பொதுவா போட்டு எங்க வாழ்க்கையையே இப்படி பண்ணிட்டீங்களே... இதனால, ஒருமாசமா எங்களுக்கு வியாபாரமே இல்ல. கசிவான எண்ணெய் எல்லாம் கரையோரம்தானே மிதந்துச்சு? இங்க இருக்கிற மீனவர்கள் எல்லோருமே ஆந்திரா பக்கமா போய்தான் மீன் பிடிக்கிறோம்.

ஆழ்கடல்ல போய் பிடிக்கிறவங்க நிறைய பேர். அங்க பிடிக்கிற மீன்கள்ல எப்படி பாதிப்பு வரும்?’’ தட தடவென கேட்கும் புல்லட் சத்தம் கேட்டு ஒதுங்கி நின்றோம். புல்லட்டின் பின்னால் உட்கார்ந்திருப்பவரின் கைகளில் நீளமான இரண்டு பெரிய மீன்கள் தரையை உரசிச் செல்கிறது. ‘கடலோரக் கவிதை’ சத்யராஜ்தான் அப்போது நினைவுக்கு வந்தார்.

காசிமேட்டில் 1970களிலிருந்து மீன்பிடித் தொழில் செய்யும் மகேந்தினுக்காகக் காத்திருந்தோம். தென்னிந்திய மீனவர் நலச் சங்க துணைச் செயலாளராக இருப்பவர். ஷார்ட்ஸ், டி ஷர்ட் சகிதம் ஆஜரானவர் தந்த தகவல்கள் ‘நச்’ ரகம்!  ‘‘நாங்க இந்த வஞ்சிரம், வவ்வால் எல்லாம் விரும்பிச் சாப்பிடறதில்ல. காரப்பொடினு ஒரு மீன் இருக்கு. மிளகு போட்டு குழம்பு வப்பாங்க பாருங்க... அவ்வளவு டேஸ்ட்டா இருக்கும்.

கொழந்த பெத்தவங்களுக்கு கொடுக்குறதுக்குனே உள்ள மீன் அது...’’ என்றபடி அதைக் காட்டுவதற்காக அழைத்துப் போனார். ஆனால், எந்தக் கடையிலும் அன்றைக்கு காரப்பொடிஇல்லை. ‘‘இன்னைக்கு சீக்கிரம் வித்திருக்கும்!’’ என்றவரிடம், ‘‘இந்த சிகப்பு இறால் பார்க்க நல்லாயிருக்கே’’ என்றோம். ‘‘இது ஆழ்கடல் இறா. ஆனா, இதைவிட பழவேற்காடு முகத்துவாரத்துல இருந்து வரும் இறால்களுக்குத்தான் டேஸ்ட் அதிகம்...’’ என்கிறார்.

அவரோடு, மீன் மார்க்கெட்டிற்கு எதிர்ப்புறமாக இருக்கும் இறால் சேமிப்பு பகுதிக்குச் சென்றோம். ‘‘இது ஆத்து இறால். ‘ஃப்ளவர்’னு சொல்வோம். இதன் டேஸ்ட்டை அடிக்க முடியாது. சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுங்க. கிலோ 400 ரூபா’’ என்கிறார் அந்த வியாபாரி. இறால்களை இங்கிருந்து கேரளா வழியாக சவுதி அரேபியாவிற்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சுமார் பதினைந்து வகையான இறால்களும், பதினைந்து வகையான மீன்களும் ஏற்றுமதியாகிறதாம்.

‘‘இந்த மீன்பிடித்துறைமுகம் தரமா இல்லனு நமக்கு ஏற்றுமதிக்கான சான்றிதழ் கிடைக்கலை. அதனால, கேரளாவுக்கு அனுப்பி அங்கிருந்துதான் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி பண்ணிட்டு இருக்கோம்’’ என்கிறார் மகேந்திரன். கிட்டத்தட்ட நாற்பது கம்பெனிகள் படகுகளுக்கு ஐஸ் சப்ளை செய்கின்றன.

‘‘பெரிய விசைப்படகுகள் எல்லாம் பதினைஞ்சு நாட்கள் வரை கடல்ல தங்கியிருந்து மீன்பிடிப்பாங்க. அதுக்காகவே ஐஸ் கிடங்கு ஒவ்வொரு படகிலும் வச்சிருப்போம். ஒரு தடவை கடலுக்குப் போக பெரிய விசைப்படகுக்கு மட்டும் நாலரை லட்சம் ரூபாய் செலவாகும். டீசலே ஆறாயிரம் லிட்டர் கொண்டு போவோம். அது, இன்னைய தேதிக்கு மூன்றரை லட்சம் ரூபாய்.

எட்டு பேர் சாப்பிட 20 ஆயிரம், ஐஸ் பார் 40 ஆயிரம்னு செலவாகிடும். அதனால வியாபாரம் ஆறேழு லட்சத்துக்கு நடந்தாதான் ஓனர், தொழிலாளிகள்னு எல்லோருக்கும் சம்பளம் கிடைக்கும். அதுக்கு நாங்க படுறபாடு சொல்லிமாளாது. இயற்கைச் சீற்றங்கள் ஏதாவது வந்தா அவ்வளவுதான். கடந்த வர்தா புயல்ல 9 பேர் இறந்து போனாங்க.

இதுல, 7 பேர் காசிமேடு ஆளுங்க. என்ன செய்ய? வருத்தமா இருந்தாலும் கடல்லதானே எங்க வாழ்க்கை’’ என நெகிழ்கிறார் மகேந்திரன். ‘‘ஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம் அரைஜாண் வயிற்றை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்...’’ மீண்டும் அதே பாடல் வரிகள் மனதை என்னவோ செய்கிறது.

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

காசிமேடு டேட்டா

* ஆரம்பத்தில், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் சென்னை துறைமுகத்துக்கு உள்ளே இருந்தது. துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும் போது காசிமேடு மீன்பிடித் துறைமுகம் உருவாகி, 1984ல் இருந்து தனித்து இயங்க ஆரம்பித்தது.
* பெரிய, சிறிய விசைப்படகுகள், ஃபைபர் படகு, கட்டுமரம் என சுமார் 4 ஆயிரம் படகுகள் உள்ளன. இதனை நம்பி 50 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். இவர்கள் கில்நெட், இழுவை வலை, தூண்டில் போன்றவற்றின் மூலம் மீன்பிடிக்கிறார்கள். இதில், கில்ெநட் வலை சுமார் ஐந்து கிமீ தூரம் நீளம் கொண்டது. கோவளத்தில் வலை கட்டினால், ஹரிகோட்டா வரை போகுமாம்! 
* ஞாயிறு மற்றும் புதன் கிழமைகளில் மார்க்கெட் விறுவிறுப்பாக இயங்கும். அன்று மட்டும் தோராயமாக ரூ.7 கோடி வரை இங்கே புழங்குமாம்.
* ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு ஒரு மணிக்கே வியாபாரம் தொடங்கிவிடும். அன்றைய தினம் சுமார் 40 ஆயிரம் பேர்கள் வந்து செல்கிறார்கள்.
* ஏப்ரலில் தொடங்கும் 45 நாட்கள் தடைக்காலத்தில் எந்த வேலையும் செய்யாமல் இருக்கிறார்கள். அப்போது, வலை, படகு பழுது பார்க்கும் பணிகள் நடக்கின்றன.
* மே, ஜூன், ஜூலை மாதங்களில் சீசன் களைகட்டும். அந்தக் காலங்களில் குறைந்தது ஒரு நாளைக்கு ஐந்து கோடி ரூபாய் வரை turn over செய்கிறார்கள்.
* இங்கு தூத்துக்குடி தருவைகுளம் மீனவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். முப்பதாண்டுகளுக்கு முன்பே செட்டிலானவர்கள். அதனால், ‘ஏலே’, ‘அண்ணே’ போன்ற வார்த்தைகளை சகஜமாகக் கேட்க முடிகிறது. தவிர, ஆந்திரா மீனவர்களும் கணிசமாக உள்ளனர். 
* ஒரு விசைப்படகு மீனவர்கள் குறைந்தது 5 டன் மீன்களைப் பிடிக்கிறார்கள். இது தினமும் கிடைக்கும் எனச் சொல்ல முடியாது. சுமாராக, ஒரு நாளைக்கு 200 டன் மீன்கள் காசிமேட்டுக்கு வருகின்றன.

கோரிக்கைகள்

* போதுமான கழிப்பிட வசதிகளும், ஓய்வறைகளும் இங்கில்லை.
* கடந்த 45 வருடங்களாக மீன்பிடித் துறைமுகம் அருகிலேயே மார்க்கெட் நடத்துகிறார்கள். சில காலங்களுக்கு முன் இங்கிருந்து கொஞ்ச தூரம் தள்ளி கூடாரத்தோடு புதிதாக மார்க்கெட் ஏற்படுத்தித் தந்திருக்கிறார்கள். அங்கு சென்று வியாபாரம் செய்ய யாருக்கும் விருப்பமில்லை. இப்போதிருக்கும் இடத்திலேயே மார்க்கெட் ஏற்படுத்தி தரும்படி கேட்கிறார்கள்.
* எஸ்.டி. பிரிவில் சேர்க்கும்படி வலியுறுத்துகிறார்கள். தங்கள் வாழ்க்கை நிச்சயமில்லாதது. எஸ்.டி பிரிவில் சேர்த்தால் குழந்தைகளின் படிப்பிலிருந்து மற்ற விஷயங்களுக்கு நிறைய சலுகைகள் கிடைக்கும் என காரணம் சொல்கிறார்கள்.
* 1500 லிட்டர் டீசலுக்கு அரசு மானியம் தருகிறது. மானியம் என்பது இலவசம் அல்ல. ஒரு லிட்டருக்கு பத்து ரூபாய் குறைத்துத் தருகிறார்கள். இது போதாது என்கிறார்கள்.
* இங்கிருந்தே ஏற்றுமதி செய்வதற்கான வசதி வாய்ப்புகளும், அதற்கான சான்றிதழ்களும் வழங்க வேண்டும் எனக் கேட்கிறார்கள்.