சக்சஸ் சீக்ரெட்!
-ச. அன்பரசு
அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் வரலாறு காணாத அளவுக்கு பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் சக்சஸ். பணமதிப்பு நீக்கம் அமலுக்கு வந்த சில மாதங்களிலேயே எப்படி பாஜகவால் இமாலய வெற்றியைப் பெற முடிந்தது?
முதல் காரணம் மோடி. இன்றைய உ.பி, உத்தரகாண்ட் வெற்றிக்கு காரணமான அமித்ஷாவை குஜராத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறிந்து பட்டை தீட்டியவர் நமோதான். அமித்ஷாவும் லேசுப்பட்டவரல்ல. பேச்சைவிட செயலில் நம்பிக்கை கொண்டவர். பல்வேறு திட்டங்களைத் தீட்டி, அடுத்த கட்ட தலைவர்களோடு சேர்ந்து கட்சியை வளர்ப்பதில் சமர்த்தர். பல்லாண்டுகளாக கட்சிக்கு உழைத்த பெயர் தெரியாத பலருக்கும் இன்று அமர இருக்கை கிடைத்திருப்பதற்கு அந்த குணம்தான் காரணம்.
ஜூலை 2014 அன்று பாஜக கட்சித்தலைவராக பொறுப்பேற்ற அமித்ஷாவின் முதல் பணி, தில்லி அசோகா சாலையிலுள்ள கட்சி அலுவலகத்தை ராணுவ ஒழுங்கோடு நேர் செய்ததுதான். நேர ஒழுங்கு, மக்களை சந்திக்க கட்சி பணியாளர்களை அனுப்புவது, சமூக வலைத்தள பிரச்சாரம், பிற கட்சி குறித்த விவரங்கள் என அதன்பிறகு பாஜகவில் நடந்தது எல்லாமே அமித்ஷா செயல்.
இதில் ஒவ்வொரு அமைச்சரும் வாரம் ஒருமுறையேனும் கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களையும் மக்களையும் சந்தித்து பேசுவதை கட்டாயமாக்கியதை குறிப்பிட்டுச் சொல்லலாம். எதிர்ப்புகளும் இல்லாமலில்லை. 2015ம் ஆண்டில் பீகார், தில்லி தேர்தல் களில் பாஜக சோபிக்காததைச் சொல்லி அமித்ஷாவை பல மூத்த தலைவர்கள் மட்டம் தட்டினார்கள். என்றாலும் இலக்கை நோக்கி நகர அவர் தயங்கவேயில்லை.
அதன் முதல்படியாக டிவி விவாதங்கள், பத்திரிகைப் பேட்டிகள் கடந்து தில்லி பாஜக அலுவலகத்திலிருந்த கட்சியை இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் கொண்டு சென்றதைச் சொல்லலாம். உ.பியில் அகிலேஷின் சைக்கிளை பஞ்சராக்கி, காங்கிரசின் கைகளை முறித்து, மாயாவதியின் யானையை குழியில் வீழ்த்தியதில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உஜ்வால திட்டத்துக்கு பெரும் பங்குண்டு.
உ.பி.யின் பலியா நகரில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த இத்திட்டம் இன்று இந்தியா முழுவதும் 693 மாவட்டங்களிலுள்ள 1.91 கோடி பேர்களை அடைந்திருக்கிறது. ஏழைப்பங்காளன் என்று பாஜகவை உலகிற்கு காட்டும் உஜ்வாலா திட்டத்தால் பயனடைந்தவர்களில் உ.பி.யைச் சேர்ந்த தலித்துகள் மட்டுமே 40% என்பது வெறும் புள்ளிவிபரம் மட்டுமல்ல.
உ.பி.யின் பல்வேறு பகுதிகளுக்கும் தனித்தனி செயலாளர்களை நியமித்து அவர்களின் தலைமையில் தொண்டர்களை பணிபுரிய வைத்தது நல்ல ரிசல்ட்டை கொடுத்திருக்கிறது. ஊடகங்களோடு கலந்துரையாடுவது, தேர்தல் அறிக்கை உருவாக்கம் என அனைத்தும் வளர்ந்துவரும் பாஜக கட்சி இளைஞர்களிடம் கொடுக்கப்பட்டு, அவர்களுக்கு அவை நல்ல பயிற்சியாகவும் அமைந்துவிட்டன. இன்று பாஜகவின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இது நடக்குமா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
* உ.பி தேர்தலுக்கென பணியாற்றிய உறுப்பினர்கள் 1 கோடி * பரிவர்த்தன் யாத்திரை நடைபெற்ற தூரம் 8,138 கி.மீ * நடைபெற்ற மாநாடுகள் 233 * அறிமுக கூட்டங்கள். 2,537 * தேர்தல் அறிக்கைக்காக பெறப்பட்ட ஆலோசனைகள் 30 லட்சம் * உ.பியில் மோடி 24 கூட்டங்களிலும் பங்கேற்ற மக்கள் 50 லட்சத்திற்கும் கூடுதல். * அமித்ஷா 150க்கு மேற்பட்ட கூட்டங்களிலும் கலந்துகொண்டுள்ளனர். * வெற்றி பெற்ற இடங்கள் 325 * ஓட்டு சதவிகிதம் 41.5% * மக்களவை உறுப்பினர்கள் 80 * மாநிலங்களவை உறுப்பினர்கள் 31
|