முடிவேடுக்கும் போது...



-மனுஷ்யபுத்திரன்

ஒரு சிறிய முடிவை
எடுப்பதற்குமுன்
‘நான் இந்த முடிவை
எடுக்கட்டுமா?’
என்றாள் குழப்பத்துடன்

எனக்கு சிரிப்பு வந்துவிட்டது
எவ்வளவு பெரிய முடிவுகளையெல்லாம்
ஒரு தீக்குச்சியை உரசுவது போன்றோ
ஒரு விளக்கை அணைப்பது போன்றோ
எடுத்தவள் நீ
தன்னந்தனியாக
மறு யோசனையின்றி
பாழும் கிணறுகளில் குதித்திருக்கிறாய்
 
பணயம் வைக்கக் கூடாத ஒன்றை
ஒவ்வொரு முறை பணயம் வைக்கும்போது
உன் கண்களை இறுக மூடிக்
கொண்டிருந்திருக்கிறாய்
 
ஒரு கதவை சட்டென திறந்துகொண்டு வெளியேறும்போது
அந்தக் கதவை எத்தனை கனவுகளுடன்
தட்டி உள்ளே வந்தாய் என்பதை
ஒரு கணம் நீ யோசித்ததில்லை
 
என்னவாயிற்று
உனக்கு?
‘என்ன செய்யட்டும் நான்?’
என்று நீ இன்று கேட்பது
ஒரு ஆடையின் வண்ணத்தைத்
தேர்வு செய்வதுபோன்றோ
ஒரு புதிய நண்பனுடன்
மதிய உணவுக்கு செல்வதுபோன்றோ
அத்தனை எளியது அது
இருந்தும் நீ கேட்கிறாய்
 
உடைந்த குரலில்
நீ என்னிடம் சொல்ல விரும்புவது
இதுதான் இல்லையா?
‘முடிவுகளை எடுப்பது சுலபம்
முடிவுகளுக்கு விலை கொடுப்பதும் சுலபம்தான்
எல்லா முடிவுகளுக்கும்
நான்தான் பொறுப்பேற்றுக் கொண்டிருந்திருக்கிறேன்
ஆனால் முடிவுகள் எடுக்கும்போது
தனியாக இருப்பது பயங்கரமானது
வெறுமனே தனியாக இருப்பதன் பயங்கரத்தைவிட
முடிவுகள் எடுக்கும்போது நிகழும்
தனிமையின் பயங்கரம் எல்லையற்றதாக இருக்கிறது
நான் உன்னிடம் கேட்பது
முடிவெடுக்கும்போது
நான் அப்படி ஒன்றும் தனியாக இல்லை
என்று என்னை நானே நம்பவைப்பதற்கே அன்றி
நீ எனக்கு வழிகாட்டக்கூடும் என்பதால் அல்ல’