COFFEE TABLE



- குங்குமம் டீம்

காற்றினிலே வரும் கீதம்


சைலன்ட் கார்னர்

இளவரசியின் வாழ்க்கைப் பயணம்
ரமணன் [கவிதா பப்ளிகேஷன், 8, மாசிலாமணி தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை - 600 017] விலை ரூ. 800/- தொடர்புக்கு : 044 -2436 4243] அட்டையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கோடி பெறும் புன்னகையிலிருந்தே புத்தகத்தின் வாசிப்பு தொடங்கிவிடுகிறது. எவரும் கேள்வி கேட்க முடியாதபடிக்கு எம்.எஸ். அவர்களின் இசையும், பாடலும் அபரிமிதமான அழகுடையது. அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் அவர்.

அவ்வளவு நேர்த்தியான இசையரசியின் வாழ்க்கையை எழுத்தில் வைப்பது சுலபமான காரியம் இல்லையே என நினைத்தபடி படிக்க ஆரம்பித்தால், ரமணன் சொல்லோவியம் தீட்டுகிறார். அவ்வளவு நிறைவாக தளும்பி நிற்கும் வாழ்க்கை. முழு அர்ப்பணிப்பாக இசைக்கு தன்னைத் தந்துவிட்ட அர்ப்பணம். ரமணனுக்கு ஒரு குழப்பமும் இல்லை. மானசீகமாக ெகாண்டாடப்பட்ட இசைப்பயணியை ரமணன் அசாதாரணமாக பின்தொடர்ந்திருக்கிறார். எம்.எஸ். அவர்களின் பிரத்யேக படங்கள் புத்தகம் எங்கும் மிளிர்கின்றன. புத்தகம் முழுவதும் நிறைந்து நிற்கும் சம்பவங்கள். தகவல்கள்... அனுபவத் தேர்வில் ஜொலிக்கின்றன.   

காஜல் -10

செம ஹேப்பியில் இருக்கிறார் காஜல் அகர்வால். சினிமாவில் அவர் காலடி எடுத்து வைத்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன. தமிழில் விஜய், அஜித் படங்கள் தவிர டோலிவுட்டில் ராணாவுடன் ஒரு படம் என பத்தாவது ஆண்டிலும் பிஸியாக இருக்கிறார். ‘‘I’m thankful for my struggle because without it I wouldn’t have stumbled across my strength!#10YearsInFilmIndustry’’ என உற்சாகக் கொண்டாட்டத்தில் மிதக்கிறார் காஜல்.

ரீடிங் கார்னர்

உரையாடல்கள் மூலம் முக்காலமும் அறிதல்
அருணன் [வசந்தம் வெளியீட்டகம், 69-24ஏ, அனுமார் கோவில் படித்துறை, சிம்மக்கல், மதுரை - 625 001. விலை ரூ.180. தொடர்புக்கு: 94427 61555] அருணனின் மிக முக்கியமான புத்தகம். செறிந்த அனுபவத்தில் இந்த பூமியின் மீதான அனைத்து பிரச்னைகளின் மீதும் விவாதம் நடத்துகிறார். அவரது நேர்த்தியான ஆளுமையின் கீழ் நமக்கு அனைத்து கதவுகளும் திறக்கின்றன. அவர் தொடாத துறையே கிடையாது. எல்லாம் தெரிந்தவர் போல எந்த இடத்திலும் காட்டிக் கொள்ளாமல், தோழமையோடு அணுக்கமாக பேசுவது போன்ற இயல்பு. ஓர் இடத்திலும் நெருடல் இல்லை.

தனக்கு சாதகமான விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஒரு விஷயத்தின் நான்கு திசைகளையும் சேர்த்து விவாதிக்கிறார். தீராத அறிவுத் தேடலுக்குள் புகுந்த மாதிரி இருக்கிறது. நிதானமாக, தெளிவாக காலம் பற்றிய விசாரணையில் இறங்கியிருக்கிறார். யோசிக்காமல் வாங்கி, நம் இருப்பில், சேகரத்தில் இருக்க வேண்டிய புத்தகம். இதெல்லாம் ஓர் அர்ப்பணிப்பு. அய்யா அருணனுக்கு அதுவே வாழ்க்கை.

ஊட்டச்சத்து இல்லாத ஊட்டச்சத்து உணவுகள்!

ஊட்டச்சத்துப் பிரச்னையால் இந்தியர்கள்... அதுவும் குழந்தைகள் இரு விதமான சிக்கல்களால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஒன்று இந்தியாவில் இருக்கும் 5 வயதுக்கும் குறைவான குழந்தைகளில் சுமார் 38.5%தினர் தங்கள் வளர்ச்சிக்கு ஏற்ப எடை இல்லாமல் இருப்பது. இரண்டாவது இந்திய மக்கள் தொகையில் சுமார் 13.5 கோடிப் பேர் ஒபீசிட்டி எனும் உடல் பருமனால் அவதிப்படுவது.

இந்த இரண்டு பிரச்னைகளையும் தீர்க்கும் பொறுப்பு நமது உணவுகளில்தான், அதுவும் ஊட்டச்சத்து உணவுகளில்தான் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் இன்று ஜங்க் ஃபுட் அயிட்டங்களும் ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரமுமே நிக்கமற நிறைந்திருக்கின்றன. இந்த ஜங்க் ஃபுட்ஸை விற்கும் சுமார் 9 பிராண்டட் நிறுவனங்களின் தயாரிப்புகளில் எவ்வளவு ஊட்டச்சத்துகள் உள்ளன என்பதை ஆய்வு செய்த டச்சு நிறுவனம் ஒன்று, டாப் நைன் பட்டியலை வெளியிட்டுள்ளது.

டாப் ஒன்றில் உள்ள மதர்ஸ் டெய்ரி உணவுகளில் - அதன் பால்பொருட்களில் - 77% ஊட்டச்சத்து இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது. பொதுவாக இதுபோன்ற பொட்டலங்களில் வரும் விலை மலிவான பாக்ெகட் உணவுகளில் 100% உடலுக்குத் தேவையான எல்லாவகையான ஊட்டச்சத்தும் இருக்கவேண்டும். டாப் நைனில் அப்படி இல்லை!

ஸ்மார்ட் பாடிபில்டர்

சமந்தாவும், இலியானாவும் ஜிம்முக்கு போனால்தான் பார்ப்போமா என்ன? ஒரு குட்டிப்பையன் வீட்டில் செய்யும் சுட்டித்தனம் இப்போது வைரல் ஹிட் ஆகியிருக்கிறது. பாடிபில்டர் போல ஒரு வெயிட் லிஃப்ட்டை தலைக்கு மேல் தூக்கியவன்... அதை ஒரே ஜம்ப்பில் தூக்கிக் கடாசிவிட்டு தம்ஸ் அப் என குதூகலிக்கிறான். அசத்தலான அவனது சேட்டையை வீடியோவாக ஃபேஸ்புக்கின் GYM பக்கத்தில் தட்டி விட்டுள்ளனர். வெறும் 30 செகண்ட் ஓடக்கூடிய வீடியோ. பதிவிட்ட ஒரே வாரத்தில் 19 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். World’s smallest weight lifter என நீங்கள் தட்டினால் வந்துவிடுவான் இந்த ஸ்மார்ட் பேபி.