400 கார்களை வைத்திருக்கும் பார்பர்!



-ரோனி

ஐ.டி வேலைக்கு ஆண்டவன் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் கொடுத்தாலும் கூட நம்மில் பலருக்கும் இஎம்ஐ லைஃபில்தான் பைக், கார், ஃபிளாட்... என சகலமும் ஸ்டெப் பை ஸ்டெப்பாக நிஜமாகிறது.

ஆனால், ரமேஷ்பாபுவுக்கு அப்படியல்ல. பெங்களூரில் பார்பர்ஷாப் உரிமையாளரான இவருக்கு 9 கிரகங்களும் இன்ஸ்டன்டாக உச்சம் பெற்றதால் இன்று 400 கார்களுக்கு சொந்தக்காரராக இருக்கிறார்! ஆடி, பென்ஸ், பிஎம்டபிள்யூ என உலக லெவல் சொகுசு கார்கள் அனைத்தும் இவரிடம் இருக்கின்றன. இப்போது புதிதாக வாங்கியிருக்கும் S600 பென்ஸ் காரின் விலை ரூ.3.2 கோடி!

பெங்களூரில் இந்த காரை வைத்திருப்பவர்கள் கிங் ஃபிஷர் மல்லையா (அதாவது பெங்களூரில் இவர் இருந்தபோது இதை வைத்திருந்தார்!) மற்றும் கட்டுமான அதிபர் ஒருவருக்கு அடுத்து லிஸ்ட்டில் உள்ளவர் ரமேஷ்பாபு மட்டும்தான். பார்பர் தொழிலோடு 1990 முதல் சொகுசு கார்களை வாடகைக்கு விட்டுவருகிறார். ஆக, இரு பிசினஸ். 200 மடங்கு லாபம்! முதன்முதலில் 1979ல் தன் தந்தைக்குப் பின் பார்பரான இவர் பெற்ற முதல் வருமானம் எவ்வளவு தெரியுமா? ரூபாய் ஐந்து!