ஸ்கிரிப்டும் இயக்குநர்களும்தான் நடிகர்களை உச்சத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள்!



தமிழ் சினிமா சிக்கல்கள்

-நா. கதிர்வேலன்

தமிழில் ஹீரோக்களுக்கு பஞ்சமா? ஏன் குறிப்பிட்ட சில நடிகர்களின் கால்ஷீட் வாங்கவே இயக்குநர்கள் மெனக்கெடுகிறார்கள்? கேள்வியை இயக்குநர்கள் லிங்குசாமியிடமும் கரு.பழனியப்பனிடமும் முன்வைத்தோம். ‘‘தமிழில் நல்ல நடிகர்களுக்கு குறைவே இல்லை. ஒரு தனுஷ், ஹாலிவுட் வரைக்கும் போய்விட்டார். கமல் சார் உயரங்களுக்கு எடுத்துக்காட்டுகள் நிறைய இருக்கிறது. ரஜினி சாரால் ‘ராகவேந்திரா’விலும் நடிக்க முடியும், ‘கபாலி’யிலும் நடிக்க முடியும். ஹீரோக்கள் தங்களை நன்றாக வெளிப்படுத்தக்கூடிய இயக்குநர்களை மிகவும் விரும்புகிறார்கள் என்பது உண்மைதான்.

நான் அதே விஷாலை வைத்து ‘சண்டக்கோழி 2’ செய்கிறேன். சீனு ராமசாமிக்கு எப்போது கேட்டாலும் விஜய் சேதுபதி கால்ஷீட் கொடுத்து விடுகிறார். ஷங்கர் சாருக்கு ரஜினி மூன்றாவது படத்தையும் கொடுத்துவிட்டார். பாலா மாதிரி டைரக்டர்கள் விக்ரம், சூர்யா மாதிரியான நடிகர்களை ஒரு இடத்திற்கு கொண்டு வந்து வைத்து விடுகிறார்கள். அஜீத், சிவாவை நம்பி இப்போது மூன்றாவது படம் வரைக்கும் கொடுத்து விட்டார். அஜீத், விஷ்ணுவர்தனுக்கு அடுத்த படமும் செய்கிறார்.

அதனால் நல்ல ஸ்கிரிப்டுக்காக நடிகர்களும் கவலைப்படுகிறார்கள் என்பதே உண்மை. இப்போது கதைப் படங்கள் அதிகம் வந்து விட்டன. அதற்காக பிரத்யேகமான புது நடிகர்கள் தேவைப்படுகிறார்கள். ‘சதுரங்க வேட்டை’யில் நட்டியின் பங்கு சிறப்பாக இருந்தது. மக்களுக்கு அதிகம் பரிச்சயம் இல்லாத ஒரு புது நடிகர் சரியான ஸ்கிரிப்டில் மிளிர முடியும். நீங்க கேட்டதற்குப் பிறகு யோசித்துப் பார்த்தாலும் நமக்கு போதுமான ஹீரோக்கள் கைவசம் இருக்கிறார்கள் என்பதே உண்மை.

சிம்பு படங்கள் அடிக்கடி வருவதில்லை என்றாலும், அவருடைய திறமைக்கும் குறைவில்லை. குறுகிய காலத்தில் சிவகார்த்திகேயன் மேல்நோக்கி வந்ததற்கு அதிர்ஷ்டம் காரணமில்லை. தேர்ந்தெடுத்த ஸ்கிரிப்ட், பழக்கமான, இயல்பான இளைஞனுக்கு அவரே அடையாளமாக  இருந்தது எல்லாம் காரணம். ஹீரோக்கள் இருக்கிறார்கள். அவர்களை சிறப்புச் செய்வதற்கான ஸ்கிரிப்டுகளே முதல் தேவை...’’ என்கிறார் டைரக்டர் லிங்குசாமி.

இதை ஆமோதிக்கும் இயக்குநர் கரு. பழனியப்பன், ஸ்கிரிப்டுடன் டைரக்டர்களும் முக்கியம் என்கிறார். ‘‘ஹீரோக்கள் அதிகமில்லை என சொல்ல முடியாது. ஒரு ஹீரோ தனியாக உருவாக முடியாது. அவர் யாரையாவது சார்ந்துதான் உருவாகணும். எம்ஜிஆருக்கு தேவர் பிலிம்ஸ், ப.நீலகண்டன்னு ஒரு செட் இருந்தது. சிவாஜிக்கும் பி.மாதவன், ஏ.சி.திருலோக்சந்தர்னு ஒரு அணி. சிவகார்த்திகேயனை தனுஷ் நம்பியதால் அவர் வந்தார்.

மலையாளத்தில் நிவின் பாலி, துல்ஹர் போன்றவர்களின் பெரிய வெற்றிக்கு எல்லாம் டைரக்டர்கள்தான் காரணம். அவர்கள் இயக்குநர்களை மனதார நம்புகிறார்கள். இந்த வகையில் இங்கே விஜய் சேதுபதிதான் அதிகமாக வித்தியாசப்படுகிறார். ஒரு படத்தில் திடீரென வெளியே வந்தவர், தன்னை வைத்து படமெடுத்த இயக்குநர்களை வெளியே விடுவதில்லை.

கொஞ்சம் இருங்க என்று சொல்லிவிட்டு அவர்களுக்கு படம் பண்ணிக் கொடுத்துவிடுகிறார். முன்பு சத்யராஜ் அப்படித்தான் மணிவண்ணனை நிறுத்தி வைத்திருந்தார். அவருடைய நல்ல ஸ்கிரிப்ட்கள் வெளியே தப்பிச் சென்றுவிடாதபடி பார்த்துக் கொண்டார். எப்பவும் இயக்குநர் இல்லாமல் ஹீரோக்கள் தங்கள் இருப்பிடத்தை தக்க வைப்பது கடினம். என்னதான் நவரசத்தை சாறாக பிழிந்து கொடுத்தாலும் இயக்குநர் இல்லாமல் படத்தை நெறிப்படுத்த முடியாது.

ஹீரோவை நேசிக்கிற, ரசிக்கிற, காதலிக்கிற டைரக்டர்கள்தான் மிக நல்ல படங்களைத் தந்ததாக வரலாறு இருக்கிறது. இப்போது நடிகர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு நூறு டைரக்டர்கள் வருகிறார்கள். அவர்களில் யாரை நம்புவது என்ற தயக்கமும் நடிகர்களுக்கு இருப்பது ஓரளவு நியாயம்தான். இந்தக் காலம் ஒரு கலங்கலாகத்தான் தெரிகிறது. இது சீக்கிரமே தெளிந்து விடும்...’’ என்கிறார் கரு.பழனியப்பன்.