சென்னையில் தெருவிளக்கு பொருத்தியவர்!



தமிழ்நாட்டு நீதி மான்கள்

-கோமல் அன்பரசன்

வி.சி. தேசிகாச்சாரியார் ‘அர்பத்நாட் வங்கி திவாலானது’ என்ற செய்தி ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் உலுக்கியது. பழைய மெட்ராஸ் மாகாணம் முழுக்க கிளைகள், ஆயிரக்கணக்கான ஊழியர்கள், பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் என முக்கியமான நிதி நிறுவனமாகத் திகழ்ந்த  வங்கி அது. அன்றைய ஆளுநர் உட்பட வங்கியில் கணக்கு வைத்திருந்த அத்தனை பேரின் பணமும் ஒரே நேரத்தில் பறிபோனது. மக்கள் இழந்த பணம், 110 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.3 கோடி என்றால், இன்றைய மதிப்பில் அது ரூ.3 ஆயிரம் கோடியைத் தொடும்.

பணத்தைப் பறிகொடுத்தவர்கள் படாதபாடு பட்டனர். ஆனால், அந்தப் பட்டியலில் இருந்த ஒரே ஒருவர் மட்டும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அப்போது சென்னை மாகாண காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக இருந்த வி.சி.தேசிகாச்சாரியார்தான் அவர். வங்கியில் இருந்த காங்கிரஸ் கட்சியின் பணம் ரூ.60 ஆயிரத்தை திவாலாவதற்கு முன்பே அதிலிருந்து எடுத்துவிட்டதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம்.

வங்கி லேசாக ஆட்டம் காணத்தொடங்கியதுமே நடையாக நடந்து கட்சியின் பணத்தை முதலில் மீட்டுவிட்டார். சொந்தப்பணத்தை எடுப்பதற்குள் எல்லாம் மூழ்கிப்போனது. தன் கைப்பணத்தை இழந்தாலும் பொதுப்பணம் பத்திரமாக இருந்தால் போதும் என்று நினைத்த தேசிகாச்சாரி, வாழ்க்கை முழுதுமே அப்படியொரு மனதோடுதான் வாழ்ந்தார்.

சட்டக்கல்லூரியில் இவரோடு படித்த டி.ஆர்.ராமச்சந்திர அய்யர் மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். புத்தகங்கள் வாங்குவதற்குக் கூட வசதி இல்லாதவர். அவரைத் தன் வீட்டில் தங்க வைத்து படிப்பதற்கான எல்லா உதவிகளையும் தேசிகாச்சாரி செய்து தந்தார். பி.எல். படிப்புக்கான தேர்வுகளின்போது மணிக்கணக்கில் நண்பனுக்கு புத்தகங்களைப் படித்துக் காட்டுவார்.

இதில் சோகம் என்ன தெரியுமா? ராமச்சந்திர அய்யர்முதல் வகுப்பில் பி.எல். தேறிவிட்டார். தேசிகாச்சாரி கோட்டைவிட்டுவிட்டார். ‘அதனாலென்ன. நண்பன் வென்றதே மகிழ்ச்சிதான்!’ என்று சொல்லி, மீண்டும் தேர்வெழுதி பட்டம் வாங்கினார்! வி.சி.(வெம்பாக்கம் கோமண்டூர்) தேசிகாச்சாரி என்பது இவரது முழுப்பெயர். இதில் வெம்பாக்கம் என்பது செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் கிராமம்.

அங்கிருந்து சென்னைக்கு வந்தவர்களில் நிறைய பேர் வக்கீலாக புகழ் பெற்றனர். அவர்களில் ‘வெம்பாக்கம் பிரதர்ஸ்’ எனப்பட்ட வி.ராஜகோபாலாச்சார்லு, வி.சடகோபாச்சார்லு ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இவர்கள் சென்னை உயர்நீதிமன்றம் உருவாக்கப்படுவதற்கு முன்பே வழக்கறிஞர்களாகத் திகழ்ந்தவர்கள். இதில் சடகோபாச்சார்லு அன்றைய சட்ட மேலவைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர்.

இத்தகைய சிறப்புமிக்க குடும்பத்தில் ராஜகோபாலாச்சார்லுவின் மகனாக, 1861 டிசம்பர் 31ல் பிறந்தவர் தேசிகாச்சாரி. படித்து முடித்துவிட்டு மயிலாப்பூர் பகுதியில் ‘நேடிவ் மிடில் ஸ்கூல்’ என்ற பள்ளியை தேசிகாச்சாரி தொடங்கி நடத்தினார். அவரே மாணவர்களுக்கு பாடமும் எடுத்தார். வக்கீலான பிறகும் கிடைத்த நேரங்களில் ஆசிரியப்பணி ஆற்றுவதற்கு அவர் தவறவில்லை.

பிற்காலத்தில் வழக்கறிஞர் பென்னாத்தூர் சுப்ரமணியன் பெயரால் பி.எஸ்.ஹைஸ்கூல் உருவாக்கப்பட்டதும் அதோடு தமது பள்ளியை இணைத்துவிட்டார். சட்டம் முடித்தவுடன் உறவினரான வி.பாஷ்யம் அய்யங்காரிடம் தொழில் பழகுநராக சேர்ந்த தேசிகாச்சாரி, 1887ல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பதிவு பெற்றார். பின்னர் அய்யங்காரிடமே 5 ஆண்டுகள் ஜூனியராக இருந்தார். 

அவரிடம் தொழிலைத் தெளிவாக உள்வாங்கிக்கொண்ட பிறகு தனியாக வழக்கறிஞர் பணியாற்றத் தொடங்கினார். இவருக்கு முன்பே தொழிலில் ஜாம்பவான்களாக இருந்தவர்களோடு இணக்கத்தைக் கடைப்பிடித்து, தனக்கென தனிஇடத்தை உருவாக்கிக் கொண்டார். பி.எஸ்.சிவசாமி அய்யர் போன்றோருடன் தேசிகாச்சாரி நெருங்கிய நட்பு பாராட்டினார்.

அப்போதெல்லாம் வழக்கறிஞர்களிடம் போட்டி இருக்குமே தவிர, பொறாமை இருக்காது. இதனால் சடகோபாச்சாரி போன்ற புதியவர்கள் எளிதில் முன்னேற முடிந்தது. தமிழகத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த ஜமீன்தார்கள், செல்வந்தர்கள் இவரது கட்சிக்காரர்களாக மாறினர். அவர்களில் சூணாம்பேடு ஜமீன்தார் முத்துக்குமாரசாமி போன்ற சிலர் நெருக்கமான நண்பர்களாயினர்.

வக்கீல் தொழிலில் முன்னேறிய நேரத்தில் தேசிகாச்சாரிக்கு அரசியலிலும் பொதுச் சேவையிலும் பெரும் ஆர்வம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த இவர், அப்போதைய சென்னை நகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றினார். மயிலாப்பூர், ராயப்பேட்டை பகுதிகளின் பிரதிநிதியாக இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில்தான் சென்னையில் தெருவிளக்குகளை அமைப்பது பற்றிய பேச்சு எழுந்தது. இதனை கவுன்சிலர்கள் சிலர் எதிர்த்தனர். ‘மின்சார விளக்குகள் மிகுந்த செலவு பிடிப்பவை; ஆடம்பரமானவை; சென்னைக்கு அவை தேவையில்லை. அதற்குப் பதிலாக குப்பைத்தொட்டிகளும், கழிவுநீர் வழிகளும், குப்பை வண்டிகளும்தான் தேவை’ என்று மற்றொரு கவுன்சிலரான முசிருதீன் வாதிட்டார்.

ஆனால், மேலை நாடுகளைப்போல சென்னையிலும் தெருவிளக்குகளை ஏற்படுத்துவது அவசியம் என தேசிகாச்சாரி கூறினார். ‘சுகாதாரத்திற்கான பணியோடு, மின் விளக்குகள் அமைப்பதைத் தொடர்பு படுத்தக்கூடாது’ என்றார். இப்போது விட்டுவிட்டால் இன்னும் பல ஆண்டுகள் நாம் பின்தங்கிப் போக நேரிடும் எனவும் வாதம் செய்தார்.

தேசிகாச்சாரியின் தீர்க்கதரிசனம் வென்றது. தெருவிளக்குகள் அமைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சென்னை பேசின்பிரிட்ஜ் பகுதியில் ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிலையம் 1909ல் உருவாக்கப்பட்டது. மாநகராட்சியில் ஆற்றிய சிறப்பான பணிகளினால், அதன் சார்பாக இரண்டு முறை சென்னை மாகாண சட்ட மேலவைக்கு (எம்.எல்.சி) தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது மட்டுமா..? 100 ஆண்டுகளைக் கடந்து இப்போதும் சேவையாற்றி வரும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியைத் (டி.என்.எஸ்.சி பேங்க்) தொடங்கியது, தேசிகாச்சாரி நிகழ்த்திய மிகப்பெரிய சாதனை. இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி இதுதான்.

கூட்டுறவு சங்கங்களுக்கான முதல் பதிவாளரான பி.ராஜகோபாலாச்சாரியார் இதற்கான எண்ணத்தை வெளிப்படுத்தி இருந்தாலும், அதற்கு செயல்வடிவம் கொடுத்தவர் தேசிகாச்சாரியார். 1905ல் ‘மெட்ராஸ் சென்ட்ரல் அர்பன் பேங்க்’ என்ற பெயரில் உருவான இந்த வங்கியில் தேசிகாச்சாரியாரின் தம்பியும் வழக்கறிஞருமான வி.சி.சேஷாச்சாரி, நவாப் சையது முகம்மது பகதூர், என்.சுப்பாராவ் பந்துலு, வி.ராமேசம், நீதிபதி எஸ். சுப்ரமணிய அய்யர், பி.தியாகராஜ செட்டியார் உட்பட 16 பேரை இயக்குநர்களாக ஒன்று சேர்த்தார்.

தொடக்க காலத்தில் அவரது வீட்டு வராண்டாவிலேயே வங்கி செயல்பட்டது. 6 ஆண்டுகள் வங்கியின் கௌரவ செயலாளராக அவர் இருந்தார். முதல் ஆண்டு ரூ.20 லாபம் ஈட்டிய வங்கி, தேசிகாச்சாரி பொறுப்பில் இருந்து வெளியே வந்த ஆண்டில் ரூ.29 ஆயிரம் லாபம் பார்த்தது. 16 லட்ச ரூபாயை நடப்பு மூலதனமாகக் கொண்டிருந்தது.

‘ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தின் கூட்டுறவு இயக்கத்தின் வரலாற்றில், அதன் முன்னோடியான தேசிகாச்சாரியாரின் பணி மிக முக்கியமானது’ என்று கூட்டுறவு இயக்கத்தின் ஆவணங்கள் இன்றைக்கும் சொல்கின்றன. ஒரு வழக்கறிஞரின் ‘நிதி மூளை’யும், நிர்வாகத்திறனும் இன்றைக்கு மிகப்பெரிய ஆலமரமாக கிளை பரப்பி ஏழை, நடுத்தர மக்களுக்கு பயன் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

கூட்டுறவு வங்கிக்கு மட்டுமல்லாது, மெட்ராஸ் விவசாய தோட்டக்கலை சங்கம், விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், மெட்ராஸ் காஸ்மோபாலிட்டன் கிளப் போன்றவற்றுக்கும் தேசிகாச்சாரி நிதி ஆலோசகராகத்  திகழ்ந்தார். கூட்டுறவு வங்கிப் பணியில் தேசிகாச்சாரி மும்முரமாக இருந்தபோதுதான் 1906ல் அர்பத்நாட் என்ற வெள்ளைக்காரர் நடத்திய ‘அர்பத்நாட் வங்கி’ திவாலாகிப்போனது.

இதில் தன் பணத்தை இழந்தாலும் காங்கிரஸ் கட்சியின் பணத்தை தேசிகாச்சாரி மீட்டிருந்தார். ஆனால், வங்கி திவாலானபிறகு நடந்த காங்கிரஸ் மாநாட்டில் உண்மை நிலவரம் தெரியாமலேயே தேசிகாச்சாரி மீது சிலர் மானாவாரியாக குற்றஞ்சாட்டினர். பொருளாளரான அவரது தவறான முடிவால்தான் காங்கிரஸ் கட்சியின் பணம் அர்பத் நாட் வங்கியில் மூழ்கிப்போனதாகப் புழுதி வாரி இறைத்தனர்.

எல்லாவற்றையும் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்த தேசிகாச்சாரி, கடைசியில் எழுந்து, பணம் மீட்கப்பட்டு, ‘பாங்க் ஆஃப் மெட்ராஸ்’ கணக்கில் பத்திரமாக இருப்பதற்கான ஆவணங்களைக் கொடுத்தார். அதோடு, ‘இப்படிப்பட்ட நன்றி கெட்டவர்கள் இருக்கிற காங்கிரஸ் கட்சியில் இனிமேல் பணியாற்ற விருப்பமில்லை’ எனக் கூறி பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து வெளியேறிவிட்டார்.

அதேநேரம் அர்பத் நாட் வங்கியில் தங்கள் பணத்தை இழந்த ஆயிரக்கணக்கானோருக்காக குரல் கொடுத்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பணத்தைப் பறிகொடுத்த ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்காக நிதி திரட்டும் அமைப்புக்கு தேசிகாச்சாரி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். வசதி படைத்த கட்சிக்காரர்களிடம் நன்கொடை வசூலித்து, சேமிப்பு பணத்தை மொத்தமாக தொலைத்து நின்றவர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.

தேசிகாச்சாரியார் கேட்டுவிட்டாரே என்பதற்காக, அர்பத் நாட் வங்கியில் ஏற்கனவே பணத்தை இழந்த பெரும் செல்வந்தர்களும் கூட நன்கொடை கொடுத்தனர். தேசிகாச்சாரி மீது அவர்களுக்கு அவ்வளவு மரியாதை.! வழக்கறிஞர் தொழிலில் ஒளிர்ந்து கொண்டிருந்தபோது திடீரென சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் நீதிபதியாக 1908ல் பதவி ஏற்றுக்கொண்டார். அன்றைக்கு இந்த ‘ஸ்மால் காஸ் கோர்ட்’டில் வாதாடுவதையே வக்கீல்கள் கௌரவக் குறைச்சலாக நினைத்தனர்.

அங்கே தேசிகாச்சாரி நீதிபதியானது சட்டத்துறை வட்டாரத்தில் புரியாத புதிராக பேசப்பட்டது. ‘சாரியார் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு, இந்த நீதிபதி பதவியை ஏற்றுக்கொண்டதுதான்’ என்று பிற்காலத்தில் தேசிகாச்சாரியாரைப் பற்றிய கட்டுரை ஒன்றில் பிரபல வழக்கறிஞர் சி.பி.ராமசாமி அய்யர் குறிப்பிட்டிருந்தார். இதைப் பற்றி எல்லாம் அவர் அலட்டிக் கொள்ளவில்லை.

அவருக்குப் பிடித்திருந்தது. நீதிபதி பதவியில் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். அதற்கு அடுத்த ஆண்டு, 1919 நவம்பர் 14 ஆம் தேதி இதய நோய் பாதிப்பினால் தேசிகாச்சாரி மரணமடைந்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் இப்போதும் தேசிகாச்சாரி மற்றும் லேடி தேசிகாச்சாரி பெயரிலான சாலைகள் அவரையும் அவரது மனைவியையும் நினைவு கூருகின்றன. இந்தப் பகுதியில்தான் அவரது மகனும் பன்முகத்திறமை கொண்ட வழக்கறிஞருமான வி.சி.கோபால்ரத்னம் மற்றும் தேசிகாச்சாரியின் மருமகனும் முன்னாள் சட்ட அமைச்சருமான வக்கீல் கே.பாஷ்யம் உள்ளிட்ட வாரிசுகள் வாழ்ந்தனர். 

(சரித்திரம் தொடரும்...)

ஓவியம்: குணசேகர்

தந்தையின் சோக முடிவு

தேசிகாச்சாரியாரின் தந்தை ராஜகோபாலாச்சார்லு இளம் வயதிலேயே புகழ் பெற்ற வழக்கறிஞர். ஒரு முறை அவர்  விளையாட்டாக துப்பாக்கியை வைத்து பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென வெடித்து எதிரே நின்றிருந்த தங்கையின் கணவர் மீது குண்டு பாய்ந்து, இறந்து போனார். பதறித் துடித்த ராஜகோபாலாச்சார்லு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் முன்பு துப்பாக்கியுடன் சரணடைந்தார்.

தற்செயலாக நடந்த சம்பவம் என்பது நிரூபிக்கப்பட்டதால் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். எனினும் குற்ற உணர்ச்சி அவரை வாட்டி வதைக்க, அடுத்த 6 மாதங்களில் உயிரிழந்தார். இதன் பிறகு தாயின் அரவணைப்பில்தான் தேசிகாச்சாரியும் அவரது தம்பியும் வளர்ந்தனர்.

துணிச்சலான தம்பி

தேசிகாச்சாரியாரின் தம்பி வி.சி.சேஷாச்சாரியார் துணிச்சலான வழக்கறிஞராகத் திகழ்ந்தார். இதற்கு ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்வார்கள். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆங்கிலேயர் சர்.ஆர்தர் காலின்ஸ், இந்திய வக்கீல்கள் மீது பரிவுடன் நடந்து கொண்டவர். நம்மவர்கள் வேட்டி அணிந்து கொண்டு நீதிமன்றம் வருவதற்கு அனுமதி அளித்தவர். இதனால் பல வெள்ளைக்கார நீதிபதிகளுக்கு அவர் மீது வெறுப்பு ஏற்பட்டது.

காலின்ஸ் மறைந்த போது, வழக்கமான மரபுப்படி அவருக்கு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடத்த அப்போதைய தலைமை நீதிபதி விரும்பவில்லை. ஆத்திரமடைந்த சேஷாச்சாரியார், சென்னை வக்கீல்கள் சங்கத்தின் மூலமாக காலின்சுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தினார். அதில் பேசிய சேஷாச்சாரியார், நேரடியாகவே தலைமை நீதிபதியை வெளுத்துக் கட்டினார்.

‘குறைந்தபட்ச நாகரீகம் கூட இல்லாமல் அற்பத்தனமாக நடக்கிறார்’ என குற்றஞ்சாட்டினார். சேஷாச்சாரியாரின் ‘தில்’ அன்றைக்குப் பெரிதும் பேசப்பட்டது. இதோடின்றி ‘தி மெட்ராஸ் லா வீக்லி’யைத் தொடங்கியவரும் இவர்தான். சேஷாச்சாரிக்குப் பிறகு அவரது மகன் வி.சி.வாசுதேவன் புகழ் பெற்ற இந்த சட்ட இதழை நடத்தினார். இப்போது சேஷாச்சாரியாரின் கொள்ளுப்பேரன் வழக்கறிஞர் ஜனார்த்தனம் இதன் ஆசிரியராக இருக்கிறார்.