கவிதை வனம்
பயணம்
ஆதி நெருப்பை அருகில் கண்டவனை விழுந்த வித்துக்களில் சாதம் சமைத்தவனை நீரையும் சாறையும் மதுவையும் ஆதியில் குப்பியில் அடைத்துக் குடித்தவனை குடிசை அமைத்தவனை கூடை வேய்ந்தவனை பரண் அமைத்தவனை
பாடை செய்தவனை ஆறு கடக்கத் தெப்பம் செய்தவனை காகிதக்கூழ் கண்டறிந்தவனை துளையிட்டுக் காற்றை இசையாக்கி ரசித்தவனை எண்ணியபடி பின்தொடர்கிறேன் நெடுஞ்சாலை மரங்கள் கிளையசைத்து அஞ்சலி செலுத்த முன்னாலொரு கனரக வாகனத்தில் கிடத்தப்பட்டு நகர்கிறது கொலையுண்ட மூங்கில்காடு - ஆன்மன்
கிளி
இறக்கையற்ற கிளியொன்றை வரைந்து மகன் தன் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்தான். நானதன் மூச்சுத் திணறலையுணர்ந்து மிகக் கவனமாக எடுத்து காற்றோட்டமான உப்பரிகைக்குச் சென்று ஒரு திட்டின்மீது வைத்துவிட்டு சற்றே முகம் திருப்பி மகனை அழைத்துத் திரும்பினேன். அதோ பாருங்கள் காற்றில் எத்தனை உயரச் சஞ்சரிக்கின்றது அது. - நெகிழன்
|