நிச்சயம் லவ் மேரேஜ்தான்!



செம கூல் ஆர்யா

‘‘இன்னிக்குத்தான் காட்டுல இருந்து திரும்பினேன். நம்மூரை இப்பத்தான் பார்க்கறேன். ஈவ்னிங் வந்தால் ஒரு டீ குடிச்சிட்டு பேசலாம்’’ என்றார் ஆர்யா. துரத்திக்கொண்டே இருக்காமல் ஒரே ஒரு எஸ்.எம்.எஸ்ஸுக்கு உடனே வந்த பதில் இது. கூல் ஆர்யா. துளியும் பந்தா காட்டாமல் பேசுகிற அழகு. பரபரத்தது உரையாடல்.  

‘‘ஆச்சர்யம் தாங்க முடியலை. ‘கடம்பன்’ ஸ்டில்ஸ் பார்த்தால் நிறைய மாறிட்டீங்க..?’’
‘‘நல்ல படங்களில் நடிச்சு கிராஃபை கொஞ்சம் மாத்திக்கணும்னு தோணுச்சு. ராகவா கதையைச் சொன்னதும் பிடிச்சது. ஒருத்தன் ஊரையே கட்டிக் காப்பாத்துற மாதிரி லைன் போகுது. ஆக அதில் ஒரு கம்பீரம் வேணும். பார்த்தா நம்புகிற மாதிரி இருக்கணும். அஞ்சு ரவுடிகளிடமிருந்து ஒரு பொண்ணைக் காப்பாற்றுவதற்ேக அத்தனை அலப்பறை கொடுப்போம். அப்படியிருக்கும்போது ஊரையே ஒண்ணு திரட்டி போராடுவதாக இருந்தால் சும்மாவா? அதற்கு ஒரு கெத்து வேணாமா? அதுதான் இது.

ஆக்‌ஷனில், யானைகளோடு திரிகிறபோது எப்படியிருக்கணும்! அதுக்காகவும் இந்த உடம்பு. ஆனா இது கஷ்டம். சிக்ஸ் பேக், மஸ்குலர் பாடின்னு சேர்த்துப் பராமரிக்கிறது சாதாரண வேலையில்லை. யாரும் தமிழில் இப்படிச் சேர்த்து வச்சதில்லைன்னு நினைக்கிறேன். ‘கடம்ப’னில் கதையிலேயே ஒரு ஹீரோயிசம் இருக்கும். பெரிசா செலவழிச்சு, அதிரடியாக பண்ணும்போது நாமும் ஒத்துழைக்க வேண்டிய கடமையிருக்கு. எப்பவும் ‘ஃபைட்’டில் ஜனங்களுக்கு பிரியம் அதிகம். இதில் ஃபைட் இயற்கையாக அமைய நிறைய இடங்கள் இருக்கு. ஓங்கி அடிச்சா, எகிறிப் பாஞ்சா இவன் செய்வான்னு நம்பணும். அதற்குத்தான் இந்த உடம்பு!’’

‘‘புது ஃப்ரண்ட் கேத்தரின் தெரஸா கிடைச்சிருக்காங்க போல?’’
‘‘இந்தப் படத்துக்கு தமன்னா மாதிரி செக்கச் செவேல்னு பொண்ணு சரிப்பட்டு வராது. கொஞ்சம் மீடியம் கலர்ல இருக்கணும். தெரஸா ரொம்ப சின்ஸியர். காட்டுக்குள்ளே போனால் ஊர்ப் பக்கம் வர இரண்டு மணி நேரம் ஆகும். இருக்கிற கிராமத்து குட்டி வீடுகள்ல அந்தப் பொண்ணை ஜாக்கிரதையா தங்க வைச்சு, பார்த்துக்கிறதே எங்க யூனிட்டுக்கு பெரிய பொறுப்பு ஆகிடுச்சு. காலை ஆறு மணி ஷூட்டிங்கிற்கு நாலு மணிக்கே தயாராகி நிற்கும்.

‘என்னடியம்மா, இப்படி பண்ணினா நாங்க என்ன பண்றது’ன்னு கேலி பண்ணிக்கிட்டே இருப்போம். சுத்தி பசங்களா இருந்துக்கிட்டு நமக்கு ரொமான்ஸுக்கு நேரம் ஏது? வெறுங்காலோடு ஓடுறதும், காடுகளில் திரிவதும், சண்டை போடுறதுமாக உடம்பு வலி பின்னி எடுக்கும். ஷூட்டிங் வந்தோமா, நடிச்சோமான்னு உடனே தூங்கிடுவேன். காட்டுக்குள்ளே இருக்கும்போது அதன் இயற்கைதான் அதிகம் ஃபீலிங் கொடுக்குது!’’

‘‘யானைகளோடு இருக்கிறது அருமையானது ஆச்சே!’’
‘‘என்னால் யானைகளைப் பத்தி இப்ப பெரிய லெக்சரே கொடுக்க முடியும். அவ்வளவு சாந்தம். பழகிட்டா, நம்மை பிடிச்சுப் போச்சுன்னா பொட்டிப்  பாம்பு மாதிரி அடங்கிப் போயிடுங்க. யானைகளை வெளியே கொண்டு வந்து பணம் வசூலிப்பது அநீதி. அவ்வளவு பிரமாண்டமாக இருந்துக்கிட்டு நம்மகிட்டே அவ்வளவு இயல்பாகப் பழகறதே ரொம்ப வினோதம். தன் பலம் தனக்கே தெரியாத அளவு யானைகள் அப்பாவி. யானைகளுக்கு கோபம் வர்றதெல்லாம் நாம் பண்ற சேட்டைகளால்தான். அவங்க இடத்தில நாம் போய் இடம் போட்டா கோபம் வராதா என்ன?

‘‘இதுக்கு முன்னாடி சில படங்கள் தோல்வி அடைந்தது...’’
‘‘சில விஷயங்கள் நட்புக்காக செய்ய வேண்டியிருந்தது. இந்த விஷயம் எனக்கு சரியாக வராதுன்னு தெரியவரும்போதே, அவங்களுக்கு அதில் ஏற்கனவே நம்பிக்கை வந்திருக்கும். அப்படி ஆனது சில படங்கள். சிலது எதிர்பார்க்காமல் அப்படி ஆகியிருக்கு. சுதாரிச்சு இப்ப தெளிவாகி வெளியே வந்திருக்கிறேன். இதுக்கு யாரும் பொறுப்பு இல்லை. யார்மீதும் வருத்தமில்லை. புகாரும் இல்லை. எனக்கு பணம், பொருளை விட நண்பர்கள் முக்கியம்னு நினைப்பேன். அதுவே என் குணமாகவும் ஆகிப்போச்சு.’’

‘‘உங்க சிநேகிதி நயன்தாரா தொட்டதெல்லாம் பொன்னாகுது... பெரிய இடத்தில இருக்காங்க...’’
‘‘ ‘பாஸ் என்கிற பாஸ்கரனி’ல் நடிக்கும்போதே, ‘நான் சினிமாவை விட்டுப் போகப் போறன்டா. எனக்குப் பிடிக்கலைடா’ன்னு சொன்னா. நான் யாரையும் வற்புறுத்துவதில்லை. ‘சரி, போயிட்டு வா... வாழ்த்துக்கள்’னு சொல்லி அனுப்பிட்டேன். மூணு வருஷம் காணாமல் போயிட்டு திரும்பி வந்து ஒரு இடத்தைப் பிடிக்கிறது இருக்கே... அதுதான் பெரிய விஷயம். அந்த தைரியம் அவளுக்குத்தான் இருக்கு. எங்க இரண்டு பேரையும் இணைச்சு செய்தி வந்தபோதெல்லாம் படிச்சிட்டு சிரிச்சுக்குவோம். அவளுக்குன்னு கொள்கைகள், பிடிவாதங்கள், நேர்த்தினு சில அம்சங்கள் இருக்கு.’’

‘‘அவங்க கல்யாணம் பத்தியெல்லாம் பேசிக்க மாட்டீங்களா?’’
‘‘எதையும் விருப்பப்பட்டு சொன்னாத்தான் கேட்டுக்குவேன். எப்படியிருந்தாலும் அதெல்லாம் பர்சனல். அவ அருமையான பொண்ணு, இல்லைன்னு சொல்லலையே! அவகிட்டே என்ன வேணும்னாலும் மனசு விட்டுப் பேசலாம். எங்களுக்குள்ளே smooth flow of communication இருக்கு. நான் யாருக்கும் இடைஞ்சல் ெகாடுக்கமாட்டேன். இங்கேதான் தொந்தரவு தர்றதையே நிறையப் பேர் தொழிலாக வைச்சுக்கிட்டு இருக்காங்களே! நான் யார்கிட்டேயும் முறையா நடந்துப்பேன். நாம் நினைக்கிறது நம்ம பிஹேவியர்ல தெரிஞ்சிடும். எனக்கும் கூட நடிக்கும் நடிகைகளுக்கும் நல்ல வேவ்லெங்க்த் இருக்கும். இந்த நல்ல குவாலிட்டி என் வீட்டிலிருந்து வந்திருக்கலாம். நல்லவன் மாதிரி ரொம்ப நாள் நடிக்க முடியாது. அவங்க நட்புக்கு உண்மையாக இருக்கிறதுதான் என் வேலை.’’

‘‘உங்க வீட்டில கல்யாணத்துக்கு வற்புறுத்தலையா? சல்மான் கான் மாதிரி இருந்துடப்போறீங்களா?’’
‘‘வீட்ல ‘ஃபாரின் மாதிரி யாராவது ஒரு ஆம்பிளையையாவது கூட்டிட்டு வாடா... கட்டி வைச்சிடுறோம்’னு சொல்றாங்க. அந்த அளவுக்கு ஆகிப் போச்சு. என்ன பண்றது, கல்யாணம்ங்கிற கமிட்மென்ட்டுக்குள் வருகிற பொண்ணை இன்னும் பார்க்கலையே பிரதர்! சல்மான் கான் மாதிரி இருந்துடப்போறேன்னு சொன்னாலே வீட்ல அழுதுடுவாங்க.’’

‘‘அப்போ வீட்டில பார்த்து வைக்கிற கல்யாணம்தானா?’’
‘‘அதுக்காகவா இவ்வளவு நாள் இருந்தோம். லவ் மேரேஜ்தான். இல்லாட்டி எப்பவோ கல்யாணம் ஆகியிருக்குமே! இப்பத்தானே சிட்டிக்குள்ளே இறங்கியிருக்கேன். சீக்கிரம் தேடிடுவோம்!’’

- நா.கதிர்வேலன்